Saturday, November 30, 2024

சூதாடும் காட்டேரி (161):

 

தமிழுலகம் போற்றும் கண்ணகி ஒரு எடுத்துக்காட்டான பெண்மணியா? ஆணாதிக்க பெண்ணடிமை சமூகத்தோட எடுத்துக்காட்டான பெண்மணியா தான் கண்ணகிங்குற கதாபாத்திரம் இருந்துச்சே ஒழிய பெண்களுக்கு முன்மாதிரியா இருந்த எடுத்துக்காட்டான பெண்மணியா இருக்கவேயில்ல. பெண்ணடிமைகளின் பிரதிநிதியான கண்ணகிக்கு 1967லேயே சிலை வெச்ச தமிழ்நாட்டின் ஆட்சியாளர்கள் அறிவில் சிறந்த ஔவைக்கு 2017ல தான் சிலை வெச்சுருக்காங்கன்னா அதுக்கு என்னங்க அர்த்தம். பெரியார் வழிவந்த ஆட்சியாளர்கள் பெரியாரோட பெண் விடுதலைக் கொள்கைகளை சரியா கடைபிடிக்காத ஆணாதிக்கவாதிகளா தான் இருந்துருக்காங்கன்னு தான் அர்த்தம். கற்பு என்பது பாலியல் ஒழுக்கம்னா அது உறவுல உள்ள ரெண்டு நபர்களுக்கும் பொதுவானதாக, பரஸ்பரமானதாகத் தான் இருக்கமுடியும். கோவலன் மாதவி கூட இருந்தப்ப எப்புடிங்க கண்ணகிய கற்புக்கரசின்னு சொல்லமுடியும் ஏன்னா அப்பதான் கோவலனுக்கும், கண்ணகிக்கும் எந்த உறவுமே இல்லையே. தமிழ்குலத் தலைவர்கள் பரத்தையர்சேரியில பொழுதைக் கழித்த போது எப்புடிங்க தமிழ்குலப் பெண்கள கற்புக்கரசிகள்னு சொல்லமுடியும். இதுல ஏதாவது தர்க்கப்பொருத்தம் இருக்கா?.

கண்ணகி ஒரு எடுத்துக்காட்டான பெண்மணியா இருந்துருந்தா என்ன செஞ்சிருப்பாங்க, கோவலன்கிட்ட நறுக்குன்னு நாலுவார்த்தை கேட்டுருப்பாங்கல்ல. ஏண்டா கோவலா, இத்தனை வருசம் என்னோட குடும்பம் நடுத்துன பெறகும் கூட ஒன்னால மாதவியோட இருக்கமுடியுதுன்னா, நீ என்னை உண்மையா நேசிக்கலைனு தான அர்த்தம். ஒன் மனசுல உண்மையிலேயே நான் இருந்துருந்தேன்னா, ஒன்னால எப்புடிடா மாதவி கூட சந்தோசமா வாழ்க்கை நடத்தமுடிஞ்சிருக்கும். ஒனக்கு மனசும் இல்ல, மனசாட்சியும் இல்ல. நீ கலாரசிகனா இருந்தா அதுக்கு கலைய ரசிச்சா மட்டும் பத்தாதா? கலைமகளோட படுத்து குடும்பம் வேற நடத்தனுமா? ஒன்ன மாதிரியே நானும் ஒரு மாதவனைத் தேடிப் போறதுக்கு எனக்கு எத்தனை நிமிசம் ஆகப்போகுது, அப்புடி நானும் ஒரு மாதவன் கிட்ட கொஞ்ச காலம் குடும்பம் நடத்திட்ட வந்தா நீ என்ன ஏத்துக்குவியா?  நான் சுயமரியாதை உள்ளவ, இனிமே எனக்கும், ஒனக்கும் ஒத்தேவராது, அதுனால நீ ஒன் வழியப்பாத்துப்போயுக்கோடா, நான் என் வழியப் பாத்துக்குறேன்னு சொல்லியிருப்பாங்க. சிலம்பையும் கொடுத்துருக்க மாட்டாங்க. அதுனால கோவலனும் செத்துப்போயிருந்துக்க மாட்டாரு. மதுரையும் எரிஞ்சுருக்காது. அது சரி தன்னோட சுய இழப்புக்காக, அது அநீதியாவே இருந்தா கூட அதுக்காக ஒரு மாநகரத்தையே அழிக்கிறது அநியாயம் இல்லையா, அப்படிப்பட்ட ஒரு சுயநலத்தை நாம ஆதரிக்கலாமா?. ஒரு பொண்ணு எப்புடி இருக்கக்கூடாது என்பதற்கான ஒரு எடுத்துக்காட்டான பெண்மணியா, எதிர்மறையான ஒரு ஆசானா தான் அந்த கண்ணகி அம்மாளை நம்மாள பார்க்கமுடியுது. அதுனால கற்பு என்பது பாலியல் ஒழுக்கம், உடலுறவு ஒழுக்கம் என்ற பேருல பெண்களை அடிமைப்படுத்துறதுக்கு ரொம்ப வசதியான ஒரு கருவியா தான் பயன்படுத்தப்பட்டுருக்கு. பெண் விடுதலை அடைஞ்சிருக்க வேண்டிய இந்த காலத்துல ஆணாதிக்க அடிமைகளா இருந்த அறிவில்லாத முட்டாள்களை, கற்புக்கரசிகளை கொண்டாடுவது கால வழு. பெண் தனிச்சொத்தாக்கப்படுவதையும், தனிச்சொத்து கற்பு என்ற பேருல பெண்ணுக்கு விலங்கு போட்டு அடிமைப்படுத்துவதையும் நாம அடியோட ஒழிச்சுக்கட்டனும்.

(தொடரும்)

 

பணம் பேசுறேன் (161):

 

முதலாளித்துவத்தோட சந்தை சக்திகள் வீட்டுக்குள்ளயும் நுழைஞ்சு குடும்ப உறவுகளை பரிவர்த்தனை உறவுகளாவும். குடும்ப மதிப்புகளை பரிவர்த்தனை மதிப்புகளாகவும் குறுக்கிடுச்சு. வளர்ந்த முதலாளித்துவ நாடுகளில் இது வெட்ட வெளிச்சமா தெரியுது. அமெரிக்கா, ஐரோப்பா, கனடா, ஆஸ்திரெலியாவுல வயது வந்த பிள்ளைகள் பெற்றோர்கள் கூட சேர்ந்து இருக்கனும்னா வாடகை ஒப்பந்தம் போட்டுக்குறது வழக்கமா இருக்கு.  அது கட்டாயமாக்கப்படலைனாலும் கூட பெற்றோரின் விருப்பம், பொருளாதார நிலையைப் பொறுத்து பெரும்பாலும் இது வழக்கத்துல இருக்கு. பிள்ளைகள் முழு நேரமும் படிக்கிறாங்களா, இல்ல கல்லூரில படிச்சுக்கிட்டே பகுதி நேரம் வேலைக்குப் போறாங்களா, இல்ல முழு நேர வேலையில இருக்காங்களா, என்பத பொறுத்து பிள்ளைகள் மீதான பெற்றோர்களின் எதிர்பார்ப்புகளும், ஒப்பந்தங்களும் மாறுபடலாம். சில பெற்றோர்கள் பிள்ளைகள் கல்லூரிப் படிப்பை முடிக்கிறவரைக்கும், தங்களுக்கு வாடகை கொடுக்காம இலவசமா தங்கிக்கொள்ள அனுமதிக்கிறாங்க. சில பெற்றோர்கள் பிள்ளைகளுக்கு 18 வயதானவுடனே அவங்க வாடகை கொடுத்துத்தான் வீட்டுல இருக்கனும்னு எதிர்பாக்குறாங்க. சில பெற்றோர்கள் பிள்ளைகளுக்கு பொறுப்புணர்வை ஏற்படுத்தனும் என்பதற்காகவே வாடகை ஒப்பந்தம் போட்டுக்குறாங்க. பிள்ளைகள் பகுதி நேர வேலையிலிருந்தா வாடகைய குறைவா வாங்கிக்கிருங்கா, முழு நேர வேலையில இருந்தா கூடுதலா வாங்கிக்கிறாங்க. எப்படியிருந்தாலும் வெளிச்சந்தையில கொடுக்குற வாடகையை விட பெற்றோர்களுக்கு குறைவா கொடுத்தா போதும் என்பதால  பிள்ளைகளும் வாடகை ஒப்பந்தங்களை போட்டுக்குறாங்க. வாடகை ஒப்பந்தத்தை பிள்ளைகள் மீறுனாங்கன்ன அவங்க மேல பெற்றோர்கள் சட்டப்படி வழக்கு தொடுக்க உரிமை உண்டு.

வாடகைக் கொடுக்காம பிள்ளைகள் வீட்டுல தங்கினா அவங்கள வீட்டை காலிபண்ணச்சொல்லி பெற்றோர்கள் வழக்கு போட்ட சம்பவங்களும் நடந்துருக்கு. 2018ல நியூயார்கைச் சேர்ந்த மார்க், கிறிஸ்டினா ரோட்டோண்டோ தம்பதி வேலையில்லாம தங்களோட இருக்கும் 30 வயது  மகனான மைக்கேல் ரோட்டோண்டோ தங்களோட மாடி வீட்டை விட்டு வெளியேத்த நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்கனும்னு வழக்கு தொடர்ந்தாங்க. மைக்கேல் ரோட்டோண்டோ எட்டு வருடங்களாக வாடகை கொடுக்காமலே அவங்களோட அந்த மாடிவீட்டுலயே இருந்துருக்குறார். நியூயார்க் மாகாண உச்ச நீதிமன்ற நீதிபதி பெற்றோருக்கு ஆதரவாகத் தீர்ப்பளிச்சிருந்தாரு, மூணு நாட்களுக்குள்ள மைக்கேல் ரோட்டோண்டோ தன்னொட பொட்டி படுக்கையெல்லாம் மூட்டை கட்டிக்கிட்டு வெளியேறச் சொல்லி மகனுக்கு உத்தரவிட்டிருக்கார். மைக்கேல் ரோட்டோண்டோ, காலி செய்ய ஆறு மாச காலம் அவகாசம் தேவைனு கேட்டுருக்காரு, ஆனால் நீதிபதி அதை ஏத்துக்கல.

அமெரிக்காவுல பிள்ளைகள் தங்களோட பெற்றோரின் வீட்டை விட்டு வெளியேறும் சராசரி வயது 24 லிருந்து 27வரை இருக்கு. ஆஸ்திரேலியாவுல பெற்றோரின் வீட்டை விட்டு வெளியேறும் ஆண்களின் சராசரி வயது சுமார் 24 ஆகவும், பெண்களுக்கு 23 ஆகவும் இருக்கு. ஐரோப்பிய ஒன்றியத்தை பொறுத்தவரைக்கும் தெற்கு, கிழக்கு நாடுகளில் உள்ள இளைஞர்கள், வடக்கு மேற்கு நாடுகளில் உள்ள இளைஞர்களை விட அதிக ஆண்டுகள்  பெற்றோர்களோட தங்கியிருக்குறாங்க.

(தொடரும்)

 

Friday, November 29, 2024

சூதாடும் காட்டேரி (160):

பெண்களுக்கு மட்டுமே விதிக்கப்பட்ட கறாரான பாலியல் ஒழுக்கத்தை, கணவன் ஒருவனோடு மட்டுமே உடலுறவு கொள்ளுற ஒழுக்கத்தை தான் கற்புன்னு சொல்லுறாங்க. ஆனா ஒரு பொண்ணு ‘கற்பை” இழக்குறதுக்கு கணவன் இல்லாத வேறொரு ஆணோட உடலுறவு வெச்சுக்குற அளவுக்குப் போகனும்னு அவசியமே இல்ல. அவ கணவனைத் தவிர வேறொருத்தன பார்த்தாலே போதும், மத்தவங்க தராசுப்பார்வைகளால தொடுக்குற கேள்விக்கணைகளே அவளை சாகடிச்சுடும். அதுக்குத் தான் எதுக்க வர்ற பஸ்ஸோ, ரயிலோ அடிச்சு நீ செத்தாலும் பரவால்ல, மவளே நீ குனிஞ்ச தலை நிமிரவேக்கூடாது ஜாக்கிரதைன்னு கட்டுப்பாடு போட்டுருக்காங்க. கணவனைத் தவிர வேறொருத்தனோட அவ பேசுனா அவ்ளோ தான் பேச்சுக்கே எடமில்ல, கதை முடிஞ்சுச்சு. கல்லானாலும் கணவன், புல்லானாலும் புருசன்னு பதிவிரதைகளா கணவனுக்கு அடிமைகளா மூளையில்லாத முட்டாள்களா இருக்குறவங்க தான் கற்புக்கரசிகளா போற்றப்படுறாங்க. கற்புக்கரசியா போற்றப்படுற கண்ணகிக்கு சிலை வெச்சு, கோவில் கட்டிக் கும்பிடுறாங்க. ஆனால் இந்த கற்புக்கரசிகளை விட உடலுறவு ஒழுக்கத்துல இன்னும் ரொம்ப ஒசத்தியான கற்புக்கரசிகள் இருக்காங்களா? இருக்குறாங்க, கேட்டா நீங்களே ரொம்ப ஆச்சரியப்படுவீங்க.

ஒரு பண்பட்ட ஆணுக்கும் சரி, பெண்ணுக்கும் சரி உடலுறவு என்பது மனம் சார்ந்த உளவியலுடன் பிரிக்கமுடியாத காதலோடு இணைந்த ஒன்றாகத் தான் இருக்கு. கற்பு என்பது உண்மையிலேயே உடலுறவு ஒழுக்கமாக இருந்துருந்தா அது தம்பதிகள், கணவன், மனைவி அல்லது காதலர்கள் இருவருக்குமே பரஸ்பரமான ஒன்றாக, பொதுவானதாகத் தான் இருக்கமுடியுமே தவிர அது ஒரு தனி நபருக்கான ஒழுக்கமா இருக்கவே முடியாது. ஏன்னா ரெண்டு நபர்கள், ஒரு ஆணும், பெண்ணும் ஒன்னு சேர்ந்து உடலுறவுல ஈடுபட்டாங்கன்னா அதுல ஈடுபடுற ஆண் பல தாரப் பிரியராகவோ, பல பெண்களை விரும்புறவராகவோ அல்லது ஒரு பொம்பளப் பொறுக்கியாகவோ இருக்கும் போது அவருடன் உடலுறவுல ஈடுபடுற மனைவியால் மட்டும் எப்புடிங்க கற்புக்கரசியா இருக்க முடியும்? ஒன்னு ரெண்டு பேருமே ஒருத்தருக்கொருத்தர் உண்மையுள்ளவர்களாக கற்புள்ளவர்களா இருக்கமுடியும், அப்புடி இல்லைனா கற்பு என்ற கேள்விக்கே இடமில்லை. ஒன்னு ஆமாம் இல்லைனா இல்லை இதுல இடைநிலைக்கு வாய்ப்பே இல்லை.

அது சரி இந்த கற்புக்கரசிகளை விட உடலுறவு ஒழுக்கத்துல இன்னும் ரொம்ப ஒசத்தியான சிறந்த கற்புக்கரசிகள் இருக்காங்கன்னு சொன்னிங்க. ஆனா அது யாருன்னு இன்னும் சொல்லவேயில்லையேன்னு கேக்குறீங்களா? இப்ப சொல்றேன் கேளுங்க, கடலுயிரியான மட்டி (clam), நண்டு, இறாலுடன் நெருங்கிய இனமான கொட்டலசு (Barnacle) இந்த ரெண்டுமே  hermaphrodite” எனப்படும் இருபாலுயிரிகள். இவை ரெண்டுமே கற்பனை செஞ்சு கூட பார்க்கமுடியாத அளவுக்கு ஈடு இணையற்ற கற்புக்கரசிகளா வாழுறாங்க. இந்த கற்புக்கரசிகளோட உடல்ல ஆணுருப்பும் இருக்கு, பெண்ணுருப்பும் இருக்கு. அதுனால இந்த கற்புக்கரசிகள் தன்னினத்தைச் சேர்ந்த இன்னொரு விலங்கோட சேராம இருக்குறதால அவங்களோட இனப்பெருக்க உறுப்புக்கள் அசுத்தமடையாம, தூய்மையை இழக்காம அக்மார்க் தர கற்போடு இருக்குது. இவங்க கற்பை இழக்குறதுக்கு 0.0001% கூட வாய்ப்பே இல்லை. அப்புறம் நம்ம மேரியம்மா  கதையில தான் கன்னித்தாயா ஏசுவை பெத்தெடுத்தாங்க ஆனா உண்மையிலே  “கன்னித் தாய்களாவே கொழந்தை பெத்துக்குற சில வகை விலங்குகள் இருக்குறாங்க.கொமடோ டிராகன் உடும்புகள், சில வகை பல்லிகள், நீர்ப்பூச்சி, அசுவினிப் பூச்சி, குச்சிப் பூச்சி இதுங்க எல்லாம் பரிசுத்தமான கன்னித் தாய்களா புள்ளை பெத்துக்குறாங்க. அதுனால கண்ணகிகளை விட உயர்தனிச் சிறப்புடைய கற்புக்கரசிகள் மட்டியும், கொட்டலசும், அப்புறம் மேல சொன்ன கன்னித்தாய்களும் தாங்க. அதுனால கற்புக்கரசிகளுக்காக சிலை வைக்கனும்னா நீங்க இவுங்களுக்குத்தான் சிலை வைக்கனும்.

(தொடரும்)


Thursday, November 28, 2024

பணம் பேசுறேன் (160):

 

அஞ்சறிவு”ள்ள விலங்குகள் எல்லாம் தங்களோட சொந்தத்துக்குள்ள ஜோடி சேராம வெளில தான் இணையைத் தேடுதுங்கன்னு சொல்லிருந்தேன் இல்லையா. உதாரணத்துக்கு சொல்லனும்னா பெரும்பாலான ஆண் விலங்குகள் நெருங்கிய சொந்தக்காரங்களோட இனச்சேர்க்கை, இனப்பெருக்கம் செய்யுறதைத் தவிர்க்குறதுக்காகவும், ஒரு இணையைத் தேடிக் கண்டுபிடிக்குறதுக்காகவும் பயணம் செய்யுறாங்க. பெரும்பாலான விலங்குகள் வயது வந்தவுடனேயே தன்னோட தாய்க் குழுவை விட்டு பிரிஞ்சு போயிடுறாங்க, வயது வந்த விலங்குகள் பொறந்த இடத்தை விட்டு விலகி ரொம்ப தூரம் தாண்டிப்போய் தான் வசிக்குறதுக்கான எல்லையை உருவாக்குறாங்க. அந்த மாதிரி பிரிஞ்சு போகும் போது பெண் விலங்குகளை விட ஆண் விலங்குகள் தாய்க் குழுவிலிருந்து ரொம்ப தூரம் விலகிப்போயிடுறாங்க. புலி, சிங்கம், ஓநாய் போன்ற விலங்குகள்ல வயது வந்த ஆண் விலங்குகள் அவங்களோட அம்மாவை விட்டுப் பிரிஞ்சுடுறாங்க, தன்னோட தாய்க் குழுவை விட்டு பிரிஞ்சிப் போயிடுறாங்க. அவங்க பிரிஞ்சு போகலைனா அம்மாவோ, அப்பாவோ வெரட்டி அடுச்சிடும். நெருங்கிய உறவினர்களோட வயது வந்த ஆண் விலங்குகள் செய்யுறத தவிர்க்குறதுக்காகத்தான் இந்த ஏற்பாடு இயற்கையாவே உருவாயிருக்கு. ஆனா சிம்பன்சி குரங்கள்ல பெண் சிம்பன்சி குரங்குகள் தான் வயதுவந்தவுடனே  தாய்க் குழுவை விட்டுப் பிரியுறாங்க. இப்படித்தான் பல விலங்குகளோட மரபணுக்களின் பன்மயத்தன்மை பாதுகாக்கப்படுது.

 விலங்குகள்ல தாய்-சேய் பேணல் குறைந்த காலம் தான் நீடிக்குது. அதிகபட்சமா குட்டிகள் பருவ வயது அடையுற வரைக்கும் தான் குட்டிகளை தாய் விலங்குகள் பேணிப் பாதுகாக்கும். ஆனால் மனிதர்கள்ல தாய்ச் சேய் பேணல் நீண்ட காலம் நீடிக்குது, விலங்குகளோட ஒப்பிடும் போது மனித குழந்தைகள் தாமதமா பதின்ம வயதுல தான் பருவம் அடையுறதும் இதுக்கு முக்கியக் காரணமா இருக்கு. மனுசன் தனக்குத் தேவையானத தானே உற்பத்தி செய்யுறதன் மூலமா தான் மத்த விலங்குகளிடமிருந்து முற்றிலுமாக வேறுபட்டுருக்கான், அதன் மூலமா சமூக மனுசனா பரிணமிச்சிருக்கான். அதற்கடுத்தபடியா தாய்-சேய் பேணல் மனிதனை மத்த விலங்குகளிடமிருந்து வேறுபடுத்துது. மனிதர்கள்ல தாய்-சேய் உறவு வாழ்நாள் முழுசுக்கும் நீடிக்குது. வயதான பெற்றோர்களை பாதுகாப்பதன் மூலமா மனுசங்க விலங்குகளிடமிருந்து முற்றிலுமாக வேறுபடுறாங்க. ஏன்னா விலங்குகள்ல வயதான பெற்றோர்களை மகனோ, மகளோ பாத்துக்குறது இயல்பு கெடையாது. அதனால வயதான பெற்றோர்களைப் பாத்துக்காதவங்க மனுசங்களே கெடையாது. மனிதர்கள்ல தான் பெற்றோர்களுக்கும் பிள்ளைகளுக்கும் இடையிலான உறவும் அன்பும், அரவணைப்பும் வாழ்நாள் முழுக்க நீடிக்குது, போற்றப்படுது. அது மனுசங்களோட கலாச்சாரத்தில் பிரிக்கமுடியாதபடி முக்கியப்பங்கு வகிக்குது. உலகளவுல மனித சமூகங்கள்ல பதின்ம வயதை அடையுறவரைக்கும் பிள்ளைகள பெற்றோர்கள் தான் பாத்துக்குறாங்க. இருந்தாலும் பிள்ளைகளுக்கும், பெற்றோர்களுக்கும் இருக்கும் உறவுகள்லயும், அந்த உறவுகள் சார்ந்த பழக்கவழக்கங்கள்லயும் நாட்டுக்கு நாடு வேறுபாடுகள் காணப்படுது. அமெரிக்கா போன்ற மேற்கத்திய நாடுகள்ல 18 வயது ஆனவுடனே பிள்ளைகள் பெற்றோரோட அனுமதியில்லாமலே வீட்டை விட்டு வெளில போய் தன்னிச்சையா வாழுறதுக்கு அவங்களுக்கு உரிமை இருக்கு.  18 வயசுக்கு மேல பிள்ளைகள் சுயசார்பா வாழனும்னு தான் மேற்கத்திய நாடுகள்ல எதிர்பார்க்கப்படுது. 20 வயசுக்கு மேல இருக்குற பிள்ளைகள் பெத்தவங்களோட ஒரே வீட்டுல வசிக்குறதும் வழக்கம் கெடையாது. ஆனா மத்த நாடுகள்ல குறிப்பா கிழக்காசிய நாடுகள்ல பெத்தவங்களோட ஆண் பிள்ளைகள் ஒரே வீட்டுல வசிக்குறது தான் வழக்கமா இருந்துருக்கு.

(தொடரும்)

 

Tuesday, November 26, 2024

சூதாடும் காட்டேரி (159):

 


இருக்குறதை கண்டுபிடிக்கறதை விட்டுட்டு இல்லாததைக் கண்டுபுடிச்சிருக்காக. எதை சொல்லுறீகன்னு கேக்குறீங்களா? அட இந்த ஆணாதிக்க சமூகம் ரொம்ப கஷ்டப்பட்டு கண்டுபுடிச்ச கற்பைப் பத்தி தான் சொல்லுறேன். சரி பொதுவா சொல்லப்படுற அர்த்தத்துலயே கற்புங்குறது உண்மையிலயே கற்பு தானா என்பத இப்ப பாப்போம். கற்புன்னா பெண்களுக்கான, பெண்களுக்கு மட்டுமேயான கறாரான பாலியல் ஒழுக்கம்னு சொல்லப்படுது. திருமணமாகாத பெண் ஆணுடன் உடலுறவு கொள்ளாம இருக்கும் கன்னித் தன்மையையும், திருமணம் ஆன பெண் கணவன் ஒருவனோடு மட்டுமே உடலுறவு கொள்ளுற ஒழுக்கத்தையும் தான் கற்புன்னு சொல்லுறாங்க. இந்த ஆணாதிக்க சமூகம் ஆண்களுக்கு எந்த கறாரான பாலியல் ஒழுக்கத்தையும் கற்பிக்கல. இன்னும் சொல்லப்போனா பாலியல் ஒழுங்கீனம் தான் ஆண்மைக்கு அழகு, காளித்தனம் தான் வீரத்துக்கும் அழகுன்னு ஆராதிக்கப்பட்டுருக்கு. கற்பு எனப்படுறது சங்க இலக்கியங்கள்ல பல அர்த்தத்துலயும் கையாளப்பட்டுருந்தாலும் கூட பொதுவா கற்பு என்பது பெண்களுக்கான உடலுறவு சார்ந்த ஒழுக்கமாகத் தான் புரிந்துகொள்ளப்படுது.

 சரி மொதல்ல கற்போட முதல் நிலையா இருக்குற கன்னித் தன்மைய பத்தி இப்ப பாப்போம். பெண்களோட பிறப்புருப்பை சுத்தி மூடியிருக்கிற சவ்வுப்படலத்தை ஹைமென்னும் (hymen) தமிழ்ல யோனிச்சவ்வுனும் சொல்லுறாங்க. தவறுதலா இதை கன்னித்திரை, கன்னிச்சவ்வுனும் சொல்லிக்கிறாங்க. இத வெச்சு செய்யுற அக்னிப்பரீட்சைய வெச்சுத்தான் ஒரு பொண்ணு கன்னித்தன்மையோட இருக்காளா, இல்ல கன்னித்தன்மைய இழந்து “கெட்டுப்போயிட்டாளா”ன்னு முடிவுபண்ணுறாங்க. இதை விட முட்டாள் தனமான கோரமான ஈனத்தனமான நகைச்சுவை எங்கயுமே இருக்கமுடியாது. ஏன்னா சில பெண் கொழந்தைகள் யோனிச்சவ்வு இல்லாம தான் பொறக்குறாங்க. அப்டின்னா அந்த கொழந்தைகள் என்ன அம்மா வயித்துலே இருக்கும் போதே கற்பை இழந்து கெட்டுப்போயிட்டாங்களா? இத விட அபத்தமா ஏதாவது இருக்கமுடியுமா? பெண் கொழந்தைங்க சைக்கிள் ஓட்டும் போதும்,  ஜிம்னாஸ்டிக்ஸ், யோகா, உடற்பயிற்சி செய்யும் போதும் கூட இந்த யோனிச்சவ்வு கிழிஞ்சு போயிடும். அப்டின்னா என்ன சைக்கிள் அவங்க கற்ப அழிச்சுடுச்சா இல்ல உடற்பயிற்சி அவங்களோட கற்பை சூரையாடிச்சிடுச்சா? நடனமாடும் போதும், குதிரையில சவாரி செய்யுற போதும், ஏன் ஓடும் போது கூட, சில சமயம் தவறி கீழ விழுந்துட்டா கூட யோனிச்சவ்வு சிதைஞ்சுபோயிடும். அப்புறம் பொண்ணுங்க மாதவிடாய் சுகாதாரத்துக்காக ‘tampons’- பஞ்சுத்தக்கை or ‘menstrual cups’- மாதவிடாய் கோப்பைகள் பயன்படுத்துனாலும் யோனிச்சவ்வு கிழிஞ்சுபோயிடும். பொண்ணுங்கள ஒரு பெண் மருத்துவரே உடல் பரிசோதனை பண்ணிப் பாத்தாக்கூட யோனிச்சவ்வு கிழிஞ்சுபோயிடும். மொத்தத்துல கன்னித்தன்மைக்கு எந்த அறிவியல் அடிப்படையும் கெடையாது. வயசு வந்த ஆண் புள்ளைகளுக்கு மொதல் மொதலா மொளைக்கிற மீசை, தாடிய மழிச்சுட்டா கன்னித்தன்மை போயிடும்னு சொல்லுறது, கற்பு போயிடும்னு சொல்லுறது எவ்வளவு முட்டாள்தனமோ அதைவிட முட்டாள்தனமா தான் யோனிச்சவ்வ வெச்சு பெண்களோட கன்னித்தன்மைய சோதிக்கிறதும், நடத்தையை தீர்மானிக்கிறதும் இருக்கு. அதுனால பெண்களோட சுயமரியாதையை இழிவுபடுத்துற அறிவியலுக்கு எதிரான இந்த அவமானகரமான கேவலமான மூடப்பழக்கவழக்கத்துக்கு முடிவு கட்ட வேண்டியது ரொம்ப ரொம்ப அவசியம்.

(தொடரும்)

 

 

Monday, November 25, 2024

பணம் பேசுறேன் (159):

 

நாட்டோட தலைவர தேர்ந்தெடுக்குற உரிமை இருக்குற ஒங்களுக்கு, ஒங்களோட சொந்த வாழ்க்கைத்துணைய தேர்ந்தெடுக்குற உரிமை கூட இல்லை. இதுலேருந்து என்ன தெரியுது, இந்தியாவோட அரசியலமைப்பை விட இந்திய சமூக அமைப்பு இன்னும் பிற்போக்கானதா இருக்கு. இதுக்கு முழுக்க முழுக்க சாதி தான் காரணம். நம்ம நாட்டுல பையன பெத்தவுக பொண்ணை எடுக்குறதும், பொண்ணை பெத்தவுக பொண்ண கொடுக்குறதும் தான் வழக்கமா இருக்கு. அதுனால ஆண்களுக்கு பொறந்த வீடு மட்டும் தான் புகுந்த வீடு கெடையாது. ஆனா பொண்ணுக கல்யாணத்துக்குப் பெறகு புகுந்தவீட்டுல தான் வாழனும், பொறந்த வீட்டுல வாழமுடியாது. சரி இந்த குடும்பம் நடத்துறதுன்னா என்னங்க? எதுக்கு எல்லாரும் கல்யாணம் பண்ணிக்குறாங்கன்னு எங்க பக்கத்து வீட்டு அக்காளைக் கேட்டேன்? என்னது சண்டை போடுறதுக்காகவா? மாமியா மருமகளோட சண்டை போடுறதுக்காகவும், மருமக மாமியாவோட சண்டை போடுறதுக்காகவும், புருஷன், பொண்டாட்டியோட சண்டை போடுறதுக்காகவும், பொண்டாட்டி, புருஷனோட சண்டை போடுறதுக்காகவும், இதோட ஓர்ப்படியா சண்டை, பங்காளி சண்டைன்னு எல்லா குடும்ப சண்டைகளையும் சேத்துக்கங்களாம், குடும்ப சண்டைகள் போடுறதுக்காகத்தான் கல்யாணம் பண்ணிக்குறாங்க. யாரு நல்லா வரிஞ்சுகட்டிக்கிட்டு சண்டை போடுவான்னு பாத்துதான் மருமகளையே மாமியா தேர்ந்தெடுக்குதாம், மாமியாவை மருமகள் தேர்ந்தெடுக்குதாம் அந்த அக்கா சொல்லுது.. அப்புறம் பொழுதனைக்கும் டிவி சீரியல் பாத்தா இப்புடி சொல்லாம வேறெப்படி சொல்லுவாக. இன்னும் ஒரு வருசத்துக்கு டிவி பக்கமே தலை வெச்சுப் படுக்காதான்னு சொல்லிட்டு வந்துருக்கேன். சரி விசயத்துக்கு வாறேன்.

நம்ம சொத்த பிறத்தியாருக்குக் விடக்கூடாது, நமக்குள்ளே வெச்சுக்கனும்னு சொத்தைப் பாதுகாக்கத்தான் பெரும்பாலானவங்க சாதித் திருமணம் செஞ்சுவைக்கிறாங்க. அப்புறம் சாதி தாண்டுனா சொந்தக்காரங்க மதிக்கமாட்டாங்க, எளக்காரமா பாப்பாங்க, சாதி தாண்டுனா சாமிக்குத்தம் ஆயிடும் இப்புடி அடுக்கடுக்கா மரபு, பாரம்பரியம், சமூக அந்தஸ்து சார்ந்த பல விசயங்கள் அவுங்கள சாதி தாண்ட அனுமதிக்கவே விடாது. அது மட்டுமில்லாம தங்களோட புள்ளைகளுக்கு பொண்ணு, மாப்புள்ளைய தாங்களே தேர்ந்தெடுத்து கல்யாணம் பண்ணிவெச்சாத் தான் புள்ளைகளால பாதுகாப்பா இருக்கமுடியும், சந்தோசமா இருக்கமுடியும்னு தான் இந்தியாவுல உள்ள பெத்தவங்க நெனைக்கிறாங்க. சாதிக்குள்ளே கல்யாணம் பண்ணிட்டா, சொந்தத்துக்குள்ளே கல்யாணம் பண்ணிட்டா பிரச்சினை வராது. வேற சாதில பொண்ணு எடுத்து கல்யாணம் பண்ணா அந்த பொண்ணு குடும்பத்துக்கு அணுசரணையா இருக்காது, அதெல்லாம் நமக்கு ஒத்தே வராது பிரச்சினை தான் வரும், பெறத்தியில பையன் பார்த்து கல்யாணம் பண்ணி வெச்சா நம்ம பொண்ண நல்லா பாத்துக்க மாட்டாங்க, அதுக்கு பாதுகாப்பு இருக்காது, பிரச்சினை தான் வரும்னு நெனைக்கிறாங்க. புள்ளைங்களோட வருங்காலம் என்ன ஆகுமோ, ஏது ஆகுமோங்குற நிச்சயமற்ற தன்மை பத்திய பய உணர்வு இந்திய பெற்றோர்களுக்கு ரொம்ப அதிகமாவே இருக்கு, தெரியாத பேயை விட தெரிந்த பிசாசே மேல் என்பது தான் இந்தியாவுல உள்ள பெத்தவங்களோட “தர்க்கமா” இருக்கு. புள்ளைங்களுக்கு எது புடிக்கும் எது புடிக்காதுன்னு அவங்கள பெத்து வளத்த அம்மா, அப்பாவுக்கு தெரியாதா… அவங்களுக்கு புடிச்ச மாதிரி தான் நாங்க பொண்ணு மாப்பிள்ளையையே தேடுவோம்னு அவங்க சொல்லுவாங்களே தவிர புள்ளைகளோட தேர்வுரிமைய இப்புடி மறுக்குறோமே, பறிக்கிறோமேன்னு அவங்க அத பத்தி நெனச்சுப்பாக்க மாட்டாங்க.

இந்த புள்ளைங்கள்ல பார்த்தா சாதிக்கல்யாணம் பண்ணிக்கிறவங்கள்ல மூணு வகை இருக்காங்க. நம்ம சமூகத்தோட மரபு, பாரம்பரியம், நம்பிக்கைக்குக் கட்டுப்பட்டு வாழுறது தான் மொறை, அப்படி வாழ்ந்தா தான் பிரச்சினையில்லாம வாழமுடியும்னு நெனைக்கிறவுங்க இருக்காங்க. அம்மா, அப்பா சொல்லுற பொண்ணு/ பையனை கட்டிக்கிட்டா தான் அம்மா, அப்பாவோட சொத்து கெடைக்கும், இல்லைனா கெடைக்காது பிரச்சினைனு சொத்துக்காகத்தான் பெரும்பாலானவங்க சாதிக்கல்யாணம் பண்ணிக்கிறாங்க. புள்ளைகளோட கல்யாண நேரத்துல தான், அம்மா, அப்பா மேல அவங்க வெச்சிருக்க பாசத்துக்கு அக்கினிப் பரிட்சை வைக்கப்படுறதையும் பல நேரங்கள்ல நீங்களே பாத்துருப்பீங்க. நான் எங்க அம்மா, அப்பா மேல உயிரே வெச்சுருக்கேன். எங்க அம்மா, அப்பா பேச்ச தட்டமாட்டேன், எங்க அம்மா, அப்பாவுக்கு பிடிக்குறது எல்லாமே எனக்கும் புடிக்கும்னு, எங்க அம்மா அப்பா பாத்து கல்யாணம் பண்ணி வெக்குற பொண்ணு/பையன் எனக்கும் புடிக்கும்குறது இன்னொரு வகை புள்ளைகளோட பாசக்கார“தர்க்கமா” இருக்கு. சாதிக்கல்யாணத்துக்கு முக்கியமான காரணமா இருக்குறது ஒன்னு சொத்து, ரெண்டாவது மரபு, பாரம்பரியம், கலாச்சாரம் சார்ந்த மூட நம்பிக்கைகள். மூணாவது ரத்தபாசம், பாசம் கண்ணை மறைக்குறதுனால தான் இந்த உரிமை மீறல் எதுவுமே கண்ணுக்கேத் தெரியமாட்டீங்குது. அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சுன்னு சொல்லுறது எதுக்கு பொருந்துதோ இல்லையோ இந்தியாவுல உள்ள பெத்தவங்களோட பிள்ளை பாசத்துக்கும், புள்ளைங்களோட அம்மா, அப்பா பாசத்துக்கும் அது ரொம்ப நல்லா பொருந்தும். ஏன்னா சாதிக்கல்யாணங்களோட தீமைகள பாசத்திரைகள் மூடி மறைச்சுடுதே.

(தொடரும்)

 

Sunday, November 24, 2024

பொம்மைகளின் புரட்சி (74):


யம்மு பாட்டி: இந்தாடா குக்கு கிண்ணத்துல உள்ள எல்லா பழங்களுமே ஒனக்கு தான், சாப்புடு…

 குக்கு: நெறையா இருக்கே யம்மு பாட்டி, சரி வாங்க நான் ஒங்களுக்கு ஊட்டிவிடுறேன்… தாத்தா ஒங்களுக்கு செல்லப்பேரு பழத்தாத்தான்னு வெக்கப்போறேன்…

 யம்மு பாட்டி: நான் வேணும்னா ஒனக்கு ஊட்டிவிடட்டுமா...

குக்கு: ஊம் அத தான் நானே கேக்கலாம்னு நெனச்சேன் யம்மு பாட்டீ...

அடைக்கலம் தாத்தா: குக்கு அன்னைக்கு எனக்கு கதை சொன்ன மாதிரி சாப்புட்ட பெறகு யம்மு பாட்டிக்கு கதை சொல்றியா...

குக்கு: ஊம் தாத்தா ஒங்களுக்கு நான் அட்லு தாத்தானு செல்லப்பேரு வெக்கப்போறேன், நல்லாருக்கா

 அட்லு தாத்தா: அட்லு எனக்கு புடிச்சிருக்குடா அப்டியே கூப்புடு, யம்மு இந்த மஞ்சாவும், பிம்பாவும் எங்க போனாங்க…

யம்மு பாட்டி: மொட்டை மாடில வெளையாடிக்கிட்டு இருக்காங்க…

குக்கு: மஞ்சா, பிம்பான்னா யாரு தாத்தா...

அட்லு தாத்தா: லீவுக்கு பேரன் பேத்தி வீட்டுக்கு வந்துருக்காங்கன்னு சொன்னனே அவங்க தான், மஞ்சா என் பேத்தி, பிம்பா என்னோட பேரன்… இந்தா அவங்களே வந்துட்டாங்களே... ஒங்க கூட வெளையாடுறதுக்கு குக்கு வந்துருக்கா பாருங்க... வாங்க இப்புடி ஒக்காருங்க...

பிம்பா: இரு தாத்தா, தண்ணி குடிச்சுட்டு வந்துடுறோம்

மஞ்சா: குக்கு நீ நல்லா கதை சொல்லுவியாமே எங்க இப்ப ஒரு கதை சொல்லு கேப்போம்…

குக்கு: சரி எல்லாரும் கேக்குறீங்க அதுனால சொல்லுறேன்… மஞ்சா, பிம்பா கதைய கேட்டுக்கிட்டே நீங்களும் பழம் சாப்புடுங்க… இந்த கதை என்னோட சொந்த கதை இல்ல, எங்க அம்மா சொன்னது, எனக்கு இது ரொம்ப புடிச்ச கதை…

யம்மு பாட்டி: சொல்லு, குக்கு பாரு மஞ்சாவும், பிம்பாவும் ஒன் கதைய கேக்குறதுக்கு எவ்வளவு ஆர்வமா இருக்காங்கன்னு…

குக்கு: ஊம்… ஒரு ஊர்ல நீரான்னு ஒரு குட்டி பாப்பா இருந்தாளாம்… அம்மா, அப்பா அவளை தெனமும் காலேல ஆத்துக்குக் குளிக்க கூட்டிக்கிட்டு போவாங்களாம், ஆத்துல அம்மா, அப்பா, நீரா மூணு பேரும் மணிக்கணக்குல நீச்சலடிப்பாங்களாம், முங்கி, முங்கி குளிப்பாங்களாம்… ஒரு நாளு அவளுக்கு ஒரு குட்டி மீன் ஃப்ரெண்ட் ஆயிடுச்சாம், அது பேரு லாலியாம். லாலி பக்கத்துல பக்கத்துல வந்து நீந்துச்சாம், துள்ளி துள்ளி குதிச்சுச்சாம், நீராவுக்கு ஒரே சந்தோசமாம், அடுத்த நாளு அவளுக்கு டாலின்னு ஒரு ஆமக்குட்டி ஃப்ரெண்ட் ஆயிடுச்சாம். நீராவுக்கு ஃப்ரெண்டா இருந்ததுனால அந்த லாலியும், டாலியும் அவங்களும் ஒருத்தருக்கொருத்தர் ஃப்ரெண்டா ஆகிட்டாங்களாம்... அடுத்து லில்லின்னு ஒரு தவளையும் அவங்களுக்கு ஃப்ரெண்ட் ஆயிடுச்சாம்… ஒரு நாள் அந்த குட்டி மீன் லாலி காணாமப்போயிடுச்சாம் நீராவுக்கு மனசுக்கு ரொம்ப கஷ்டமா இருந்துச்சாம்…

(தொடரும்)

 

 

 

 

 

 

 

 


Saturday, November 23, 2024

சூதாடும் காட்டேரி (158):

அறிவியல் வளர்ச்சி இல்லாத அந்த காலத்துல தாய்வழி சமூகத்துல கொழந்தையோட அம்மா யாருங்குறத மட்டும் தான் உறுதிப்படுத்தமுடிஞ்சுச்சு. அப்பா யாருங்குறது தெளிவா தெரியல. தாய் வழி சமூகத்துல கணவனிடமிருந்து மனைவியும் எதையும் எடுத்துக்கல, அப்பாவிடமிருந்து குழந்தைகளும் எதுவும் எடுத்துக்கல. அப்பாவோட சொத்துக்களுக்கு அவரோட சகோதரிகளோட குழந்தைகள் தான் வாரிசாகுறாங்க. தனியுடைமைச் சொத்துக்கள் அதிகமான பெறகுதான் தாய்வழிச் சமூகம் தந்தைவழிச் சமூகமா மாறிடுச்சு. தன்னோட சொத்து தனக்கு பிறந்த புள்ளைகளுக்கு மட்டுமே போகனும்னா தனக்கு பிள்ளை பெத்த ஒருத்தி இன்னொருத்தனுக்கு பிள்ளை பெக்க அனுமதிக்கவேக்கூடாது, அதை தடைசெய்யனும். ஒருத்தி ஒருத்தனுக்கு மட்டும் தான் பிள்ளை பெத்துக்கனும் என்பதை உறுதிசெய்யுறதுக்காக உருவாக்கப்பட்டது தான் இந்த ஒருத்திக்கு ஒருவன்குற ஒரு தார மணமுறை. தனிச்சொத்துடைமையைக் கட்டிக் காக்குறதுக்காக உருவானது தான் தந்தைவழிச்சமூகம். தனிச்சொத்துடைமையைக் கட்டிக் காக்குறதுக்காகத் தான் ஒருத்திக்கு ஒருவன்குற ஒரு தார மணமுறையில மனைவியும் கணவோட தனிச்சொத்தா மாத்தப்படுறா. தனிச்சொத்துடையைக் கட்டிக் காக்குறதுக்காகத் தான் கணவனோட தனிச்சொத்தான மனைவி மேல கற்பு என்ற கற்பிதமும் திணிக்கப்படுது. ஒருத்திக்கு ஒருவன்குற ஒரு தார மணமுறை உருவாகுறதுக்கு முன்னாடி ஆண்கள், பெண்கள் எல்லாருக்குமே பலதாரங்கள் இருக்குறது தான் வழக்கமா இருந்துருக்கு. அப்ப எந்த நுண்ணோக்கி வெச்சு பாத்தாலும் “கற்பு” என்ற “அற்புதத்தை” கண்டேபுடிக்கவேமுடியல. அய்யய்யோ, இதை நான் எப்படி சொல்வேன், என் நெஞ்சே வெடிச்சுறும் போலருக்கே, என் மானம், மரியாதை, குடும்ப கௌரவம், அந்தஸ்து எல்லாம் கப்பலேறிடுச்சே, என்  பொண்டாட்டி இன்னொருத்தனோட இருந்ததுனால தூய்மை இழந்துட்டாளே, கற்பை இழந்துட்டாளேன்னு ஒப்பாரி வெக்குற அளவுக்கு அப்ப இருந்த ஆண்கள். பத்தாம்பசலிகளாவும் இல்ல. ஏண்டி ஒனக்கு எவ்வளவு நெஞ்சழுத்தம் இருந்தா இன்னொருத்தன் கூட படுப்ப, ஒன்ன உயிரோட விட்டுவெக்கமாட்டேன்னு அவளை கொன்னுபோடுற அளவுக்கு அப்ப இருந்த ஆண்கள் கொலைகாரர்களாவும் இல்ல.

என்னோட சொத்து இன்னொருத்தனுக்கு பொறந்த புள்ளைக்கு போகக்கூடாது, அதைத் தடுக்கனும்னா என் பொண்டாட்டி எனக்கு மட்டும் தான் புள்ளை பெத்துக்கொடுக்கனும் அதுனால என் பொண்டாட்டி என்னோட அடிமையா என்னோட தனிச்சொத்தா மட்டும் தான் இருக்கனும். இதுக்காகத் தான் கற்பு என்ற கற்பிதத்த படுகேவலமா பெண்களொட யோனியில கொண்டுபோய் வெச்சுருக்கு தந்தைவழியில வந்த ஆணாதிக்க சமூகம்.

(தொடரும்)

 


Friday, November 22, 2024

பணம் பேசுறேன் (158):

 

இந்தியாவுல காதலிக்குறது இயல்பானுச்சுன்னா தான் காதல் ஒன்னையே கடைச் சரக்காக்கி விக்கிற படங்களுக்கான சந்தையும் கொறையும். காதலர்களை பிரிச்சுட்டு, காதலர்களைக் கொன்னுப்புட்டு காதல் திரைப்படங்கள ரசிச்சு, ரசிச்சு பாக்குறவங்கள இங்க மட்டும் தான் பாக்கமுடியும். காதலிச்சவங்களையே கல்யாணம் பண்ணிக்கமுடியாததால எத்தன புள்ளைங்க தற்கொலை பண்ணிருக்காங்க தெரியுமா? எல்லா தடைகளையும் மீறி காதலிச்சு கல்யாணம் பண்ணுனாலும் ஆணவக்கொலை பண்ணிடுறாங்களே, இல்லைனா சமூகமே அவங்களை ஒதுக்கிவைக்குதே. இந்தியாவுல காதலிச்சு கல்யாணம் பண்ணிக்கிட்டா அந்த ஜோடி இங்க அகதி நிலையில தான் வாழமுடியுமே தவிர சுதந்திரமான குடிமக்களா வாழமுடியாது. சொந்த தாய்நாட்டுலே அகதிநிலையில வாழுறது எவ்வளவு பெரிய கொடுமை தெரியுமா?. இந்தியாவுல காதலர்களுக்கு தூக்குக் கயிறா இருக்குறது இந்த சாதி தான். இவ்வளவு நாள் சாதித் திருமணங்களால சமூகத்துக்கு தான் பாதிப்பு, பொது நலத்துக்கு தான் பாதிப்பு, சுயநலத்துக்கு பாதிப்பில்லன்னு நெனச்சுக்கிட்டு இருந்தாங்க. ஆனா அதுலயும் விழுந்துச்சுல்ல ஆப்பு. சாதித்திருமணங்கள் செஞ்சா சாதி நோய்களும் கூடவரும்னு தான் சொல்லியிருந்தேனே மறந்துட்டீங்களா. இயற்கைத் தேர்வு சுயநலத்துலயும் ஆப்பு வெச்சுருச்சுல்ல. சுயநலத்துக்காக சாதித்திருமணங்களை செஞ்சுகிட்டா அது சுய அழிவுக்குத்தான் வழிவகுக்கும். நல்லா கவனிச்சுக்கங்க. இந்த இடத்துல தான் சுயநலமும் பொதுநலமும் ஒன்றுபடுது. சாதி மறுப்பு திருமணங்கள்ல தான் சுயநலமும், பொதுநலமும் எந்த முரண்பாடுகளும் இல்லாம இணக்கமா ஒன்றுபடுது. அதுனால தடா பொடா போடவேண்டியது சாதித்திருமணங்களுக்குத் தான். அது மாதிரி சாதிய வெச்சு கல்லா கட்டுற திருமண மையங்களுக்கும் தடை போடனும்.

இந்த இந்திய நாட்டோட பிரதமரையும், மாநிலத்தோட முதலமைச்சரையும் ஓட்டுப் போட்டு தேர்ந்தெடுக்குற வாக்குரிமை 18 வயசு வந்த எல்லா இந்தியப் புள்ளைகளுக்கும் அரசியல் உரிமையா கொடுக்கப்பட்டுருக்கு. ஒரு நல்ல வலிமையான மூன்றாவது முன்னணி இல்லாததுனால, இது அல்லது அதுக்கு தான் ஓட்டுப்போடனும் வேற வாய்ப்பே இல்லைங்குற நெலைமைக்கு மக்கள் தள்ளப்பட்டதுனால இந்த வாக்குரிமை நல்ல ஆட்சி மாற்றத்துக்குக்கூட ஒதவமாட்டீங்குது. ஏதோ பேரளவுலயாவது எல்லாருக்கும் வாக்குரிமையிருக்கு. ஆனா அந்த பேரளவு உரிமை கூட காதல், கல்யாணத்த பொறுத்தவரைக்கும் இந்தியாவுல உள்ளவங்களுக்கு இல்ல. ஒரு நாட்டோட பிரதமர், முதலமைச்சரை எல்லாம் தேர்ந்தெடுக்குற உரிமை இருக்குற குடிமக்களுக்கு ஆயுசுக்கும் தங்களோட இருக்கப்போற, தங்களோட சொந்த வாழ்க்கைத்துணையை தேர்ந்தெடுக்குற உரிமை கூட இருக்குறது இல்ல. இது எவ்வளவு பெரிய அநியாயம்னு யோசிச்சுப் பாத்தீங்களா. வாழ்க்கைத்துணையை தேர்ந்தெடுக்குற சுதந்திரம் கூட பறிக்கப்பட்டுச்சுன்னா அவங்களால எப்புடி சுதந்திரமா வாழுமுடியும், அடிமைகளா தான் வாழமுடியும். நல்ல படிச்ச புள்ளைகளோட தலைவிதியை பெத்தவங்க ஜோசியக்காரன் கிட்ட ஒப்படைச்சிடுறாங்க. வாழ்க்கைத்துணையைத் தேர்ந்தெடுக்குற உரிமையை கூட பறிச்ச இந்த இந்திய சமூகம் எந்தளவுக்கு ஜனநாயகத்துக்கு விரோதமானதா இருக்குன்னு பாத்தீங்களா. நாம எப்பேர்ப்பட்ட போலியான ஜனநாயகத்துல வாழுறோம்னு கொஞ்சம் யோசிச்சுப் பாருங்க. நம்ம சமூகத்தை உண்மையிலேயே ஜனநாயகப்படுத்தனும்னா ஒங்க புள்ளைகள காதலிக்கவிடுங்க. காதலர்களையும், காதலையும் வாழவிடுங்க. சாதி மறுப்புத் திருமணங்களை ஆதரிங்க.

(தொடரும்)

 

Thursday, November 21, 2024

சூதாடும் காட்டேரி (157):

 

ஒருத்திக்கு ஒருவன்குற ஒரு தாரமுறை நடைமுறைக்கு வந்ததுலேருந்தே சொத்து தான் திருமணத்தை தீர்மானிக்கிற சக்தியா இருந்துவருதுன்னு சொல்லியிருந்தோம் இல்லையா. நம்ம காலத்துல நடக்குற திருமணங்கள்லேருந்து பழைய காலத்து மூல ஆதாரத்துக்கு போனதுனால இங்க விசயங்களை தலைகீழா சொல்லியிருக்குறோம். உண்மையா பாத்தா தனிசொத்துடைமையினால தான் ஒருத்திக்கு ஒருவன்குற ஒரு தாரமுறையே நடைமுறைக்கு வந்துச்சு. இங்க எது காரணமா இருக்கு? எது விளைவா இருக்கு? தனிச்சொத்துடைமை தான் காரணமா இருக்கு. ஒருத்திக்கு ஒருவன்குற ஒரு தாரமுறை அதன் விளைவா இருக்கு. தனிச்சொத்துடைமை எப்ப உருவாகுது. காட்டுமிராண்டி காலத்துல பொதுச்சொத்துடைமை தான் வழக்கமா இருந்துச்சு, எல்லா சொத்துக்களும் குலங்களுக்கு பொதுவா தான் இருந்துச்சு. நாகரிகத்துக்கு முந்தைய காலகட்டத்துல தான் தனிச்சொத்துடைமை உருவாகுது. மனுசன் தனக்கு தேவையான உணவை தானே உற்பத்தி பண்ண ஆரம்பிச்ச பெறகு தான் தனிச்சொத்துடைமை உருவாகுது. விவசாயம் செய்யுற நிலவுடைமை சமூகங்கள்ல தான் தனிச்சொத்துடைமை வளர்ச்சியடையுது.

பொதுச் சொத்துடைமை இருக்குற வரைக்கும் ஆண்களும், பெண்களும் சமத்துவ நிலையில தான் இருந்துருக்காங்க. அதுக்கு பெறகு தனிச்சொத்துடைமை உருவாகும் போது பெண்களின் மீதான ஆண்களின் ஒடுக்குமுறை தொடங்குது. சமூகத்துல வர்க்க ஒடுக்குமுறை உருவாகுறதுக்கு முன்னாடியே பெண்களின் மீதான ஆணாதிக்க ஒடுக்குமுறை தோன்றிடுச்சு. இந்த முரண்பாடுகள் வர்க்கப்பிரிவினையுள்ள விவசாய நிலவுடைமை சமூகத்துல கூர்மையடையுது. தனிச்சொத்துடைமையின் வளர்ச்சியோட பெண்களின் மீதான ஆணாதிக்க ஒடுக்குமுறையும் வளர்ச்சியடையுது. எதுனால இப்புடி நடந்துச்சு? எதுனால பொதுச்சொத்துடைமையிலேருந்து தனிச்சொத்துடைமை உருவானுச்சு? உற்பத்திச் சக்திகள் வளர்ச்சியடையாத காலத்துல சமூகத்துக்குத் தேவையானதை உற்பத்தி செய்யவேண்டிய அவசியம் ஏற்படும் போது தனிச்சொத்துடைமை உருவாகுறது தவிர்க்க இயலாதது மட்டுமில்ல, உற்பத்திசக்திகளோட வளர்ச்சிக்கு அது அவசியமானதாகவும் இருந்துருக்கு. ஏன்னா இன்னைக்கு இருக்குற மாதிரி அப்போ டிராக்டர்கள் இல்லாததுனால பெரிய அளவுல விவசாயம் செய்யுறதுக்கு அன்னைக்கு வாய்ப்பே இல்லாம இருந்துச்சு, அதுனால சிறு, சிறு அளவுல தான் விவசாயத்தையோ, மற்ற உற்பத்தியையோ செய்யமுடிஞ்சுது, ஏன்னா அப்ப தொழிற்சாலைகளோ, எந்திரங்களோ கெடையாது இல்லையா. அந்த சிறிய அளவிலான உற்பத்திமுறைகளுக்கு நிலங்கள் துண்டு துண்டுகளாக்கப்பட்டு விவசாயமும், கால்நடை வளர்ப்பு உட்பட மத்த வேலைகளும் செய்யப்படும் போதுதான் பொதுச்சொத்துடைமை சிதைவடையுது. தனிநபர்கள் கையில சொத்துக்கள் சேருது. தனிச்சொத்துடைமை உருவாகுது. தனிச்சொத்துடைமை வளர வளர சுயநலமும் வளருது. தனக்குப் பின்னாடி அந்த சொத்துக்கள் யாரைச்சேரனும், தன்னோட குலத்துக்கு சேரனுமா தன்னோட சொந்த குழந்தைகளுக்கு சேரனுமாங்குற வாரிசுரிமை கேள்விக்கு அப்போ சுயநலம் மட்டும் தான் பதிலா வருது. தன்னோட சொத்துக்கள் தனக்கு மட்டுமே பொறந்த கொழந்தைகளுக்கு மட்டும் தான் போய்ச்சேரனும்குற சுயநலத்தின் அடிப்படையில தான் இந்த ஒருத்திக்கு ஒருவன்குற ஒரு தாரமுறை வழக்கமாக்கப்படுது.

(தொடரும்)

 

Wednesday, November 20, 2024

பணம் பேசுறேன் (157):

 

ஏற்கெனவே காதலிக்குறத அடிப்படை உரிமையாக்கனும்னு (Right to love) சொல்லியிருந்தேன். அதுலயே காதலுச்சவங்கள கல்யாணம் பண்ணிக்குற உரிமையும் வரனும்குற மாதிரி விரிஞ்ச அர்த்தத்துல தான் சொல்லியிருந்தேன். ஆனா அது பத்தாது. ஏன்னா காதலிக்குதுக்கு மட்டும் தான் உரிமை, காதலிச்சவங்கள கல்யாணம் பண்ணிக்கிறதுக்கு உரிமை இல்லைனு அதை சாதிய உள்நோக்கங்களுக்காக தவறா நடைமுறைப்படுத்துறதுக்கு வாய்ப்புகள் இருக்குறதுனால காதலிச்சவங்கள கல்யாணம் பண்ணிக்குற உரிமையும் அடிப்படை உரிமையாக்கப்படனும் (Right to love marriage). காதலிக்குற உரிமை (Right to love), காதலிச்சவங்களையே கல்யாணம் பண்ணிக்குற உரிமை (Right to love marriage) இந்த ரெண்டுமே அடிப்படை உரிமைகளாக்கப்படனும். இந்தியாவுல காதலிக்குறதுக்கு ஏத்த சூழ்நிலையே இல்ல. நெலைமை இங்க எப்புடி இருக்கு? புள்ளைங்க ரொம்ப பாவம். அப்பா, அம்மாவுக்கு தெரியாம, சொந்தக்காரங்களுக்குத் தெரியாம பயந்து பயந்து, ஒளிஞ்சு, மறைஞ்சு தான் காதலிக்குறாங்க. அவங்களால சுதந்திரமா காதலிக்கமுடியல. எல்லாரும் காதலிக்குறத கொலைக்குற்றம் மாதிரி பாக்குறாங்க. இந்த நெலைமையை மாத்துங்க. காதலிக்குறது மனுசனோட நியாயமான வாழ்வுரிமை. புள்ளைங்க வெளிப்படையா ஒளிவு மறைவில்லாம காதலிக்க அனுமதிங்க.  மத்த நாட்டு சினிமாவுல எல்லாம் காதல்ங்குறது அந்த படத்தோட கதையில் ஒரு பகுதியா மட்டும் தான் இருக்கும். ஆனா பாருங்க நம்ம நாட்டுல மட்டும் தான் காதலிக்குறது மட்டுமே படத்தோட கதையா இருக்கு. இந்த மாதிரி எத்தன ஆயிரம் படம் எடுத்தாலும் இங்க ஓடுது. இந்த அரைச்ச மாவையே அரைச்சு இத்துப்போன ஒரே காதல் கதையையே எத்தனை வாட்டி சினிமாவாக்குனாலும் இந்தியாவுல அதுக்கு சந்தை இருக்குதுன்னா அதுக்கு என்னங்க அர்த்தம். நெஜ வாழ்க்கையில காதலிக்குறது புள்ளைங்களுக்கு கஷ்டமா இருக்குறதுனால தான், காதலிச்சவங்களையே கல்யாணம் பண்ணிக்குறது அதவிட கஷ்டமா இருக்குறதுனால தான் இந்த ஊசிப்போன காதல் படங்களுக்கு இந்தியாவுல கிராக்கி இருக்கு. இந்தியாவுல காதலிக்குறது இயல்பான விசயமா மாறுன பெறகு தான் ஒங்களால திணுசு திணுசா நல்ல திரைக்கதை உள்ள படங்கள எல்லாம் பாக்கமுடியும். இன்னொரு விசயம். மத்த நாட்டு படங்கள்ல பாட்டே இருக்காது. சினிமா தனியா வரும், பாட்டுக்கள் ஆல்பமா தனியா வரும். இந்தியாவுல தான் படத்துக்குள்ளே பாட்டும் வரும். அந்த பாட்டும் சும்மா வராது. அதுல பெரும்பாலும் காதலர்கள் டூயட் பாடி ஆடுற மாதிரி தான் வரும். ஆனா மத்த நாடுகள்ல வெளிவருற ஆல்பங்கள்ல கூட இங்க இருக்குற மாதிரி ஆணும், பெண்ணும் மாத்தி மாத்தி சேர்ந்து பாடி ஆடுற வடிவில இருக்குற பாடல்களைத் தேடித்தான் கண்டுபிடிக்குற மாதிரி இருக்கும். ஏன் இவ்வளவு வித்தியாசம் ஏன் நம்ம நாட்டுல மட்டும் இப்புடி இருக்குன்னு யோசிச்சுப் பாத்திங்களா. மத்த நாடுகள்ல காதலிக்குறது சர்வ சாதாரணமான விசயம். அங்க காதலிக்குறவங்க, காதலிக்காதவங்க யாரு வேணாலும் சேர்ந்து ஆடுறதுக்கு சுதந்திரம் இருக்கு. அங்க காதலிக்குறதுக்கு எல்லா வாய்ப்பு வசதிகளும் இருக்கு. ஆனா இந்தியாவுல சினிமாவுல மட்டும் தான் காதலை ஏத்துக்குறாங்க. சினிமா காதல்னா இனிக்குது, நெஜக் காதல்னா கசக்குது.  இந்தியாவுல எல்லா எடத்துலயும் காதலுக்கு தடா, பொடா போடுறதுனால தான் இங்க காதல் தியேட்டர், டிவி, கம்ப்யூட்டர், மொபைல் ஸ்கிரீன்ல தஞ்சம் அடைஞ்சிருக்கு.

(தொடரும்)

 

Tuesday, November 19, 2024

சூதாடும் காட்டேரி (156):

 

நம்ம நாட்டுல கல்யாணம்குறது பெரும்பாலும் பெத்தவங்களால ஏற்பாடு செஞ்சு வெக்கிற கல்யாணங்களா தான் இருக்கு. வீட்டுல கல்யாணப் பேச்சுன்னு வந்துட்டாலே பெத்தவங்க எத மொதல்ல பாப்பாங்க, சாதிய பாப்பாங்க, சொத்து சொகத்தை பாப்பாங்க. மாப்பிள்ளை வீட்டுக்காரவுங்க பொண்ணு வீட்டுல எவ்வளவு சொத்து இருக்கு, எவ்வளவு வரதட்சணை கொடுப்பாங்க இத தான் மொதல்ல பாப்பாங்க. பொண்ணு வீட்டுக் காரவுங்க மாப்பிள்ளை வீட்டுல எவ்வளவு சொத்து இருக்கு, பையன் நல்லா சம்பாரிக்கிறாரா, நல்லா சம்பாரிக்கிற அளவுக்கு படிச்சிருக்குறாரான்னு பாப்பாங்க. அப்பொறம் தான் அழகு, குணம், நெறம் கருப்பா, செகப்பா, மாநிறமா அது, இது லொட்டு லொஸுக்குன்னு மத்த விசயங்கள பாப்பாங்க. மத்த எதுவுமே ஒத்துவராட்டிக்கூட சொத்து நெறையா இருந்துச்சுன்னா அதுவே அவங்க மனசை மாத்தி ஒத்துக்கவெச்சுடும். பையன் சரியா படிக்காட்டி கூட பத்து தலைமுறைக்கு ஒக்காந்து சாப்புடுற அளவுக்கு சொத்து இருக்கா அப்ப சரி. பையன் நல்லா இல்லை ஆனா சொத்து இருக்கா அப்ப சரி. மாப்புள்ளை வழுக்கையும் தொப்பையுமா இருக்குறாரு ஆனா அமெரிக்கால கிரீன் கார்டோட செட்டில் ஆயிட்டாரா, அப்டின்னா ரொம்ப சரி இப்ப தான் நாத்து நடுற மாதிரி முடியையும் நட்டுக்கலாம்ல.  பையன் கொஞ்சம் முன்கோபி, கொணம் பத்தாது ஆனா சொத்து நெறையா இருக்கு, அட நாளைக்கு புள்ளை குட்டின்னு வந்தா அதெல்லாம் பக்குவம் தானே வந்துரும்ல. பொண்ணு நல்லா இல்ல, ஆனா சொத்து நெறையா கெடைக்குமா, அப்ப சரி, பொண்ணு நெறமா இல்ல, நெறைய வரதட்சணை கிடைக்குமா அப்ப சரி. இங்க தான் ஒரு சாதிக்குள்ள பல படிக்கட்டுகள் இருக்கே. பையன் சாதியில கொஞ்சம் மட்டம் தான் ஆனா சொத்து நெறையா இருக்கு, அப்டின்னா சரி. பொண்ணு கொஞ்சம் சாதியில மட்டம் ஆனா வரதட்சணை நெறையா கொடுப்போம், அப்ப பிரச்சினையில்லை. இந்த மாதிரி எல்லா “குறைகளையும்” இட்டு நெரப்பக்கூடிய சக்தியா கல்யாணத்த தீர்மானிக்குற சக்தியா சொத்துத் தான் இருக்கு. இங்க திருமணம் என்பது பொண்ணு, மாப்புள்ளையோட விருப்பம் சார்ந்ததா இல்லாம, பொருளாதார அடிப்படையிலான, சொத்து, வருமானம் அடிப்படையிலான ஒரு சமூக அமைப்பா இருக்கு. ஒரு பையனோ, பொண்ணோ பெத்தவங்க சொன்னபடிக் கல்யாணம் பண்ணிக்கிட்டா தான் அவங்களோட சொத்துக்கு வாரிசாக முடியும்குற நிர்ப்பந்தத்தின் அடிப்படையில தான் இந்த அமைப்பே கட்டிக்காக்கப்பட்டு வருது. விரும்பி கல்யாணம் செய்யாம சொத்துக்காகத் தான் கல்யாணம் செய்யப்படுது. அம்மா, அப்பாக்கிட்டேருந்து சொத்து வாங்குறதுக்காக கல்யாணம் செய்யப்படுது. இன்னொரு பக்கம் பொண்ணு மாப்பிள்ளை வீட்டுலேருந்தும், மாப்பிள்ளை பொண்ணு வீட்டுலேருந்தும் சொத்து வாங்குறதுக்காகவும் கல்யாணம் செய்யப்படுது. இந்த பழக்கம் ஏதோ இன்னைக்கு நேத்து வந்தது இல்ல. எப்ப இந்த ஒருத்திக்கு ஒருவன் எனப்படுற ஒரு தார மணமுறை திருமணங்கள் நடைமுறைக்கு வந்துச்சோ அப்போதுலேருந்தே இதுதான் வழக்கமா இருந்துவருது. இங்க ஒருத்திக்கு ஒருவன்னு தான் சொல்லிருக்கோமே ஒழிய ஒருவனுக்கு ஒருத்தின்னு சொல்லலை. ஏன்னா ஆணாதிக்க சமூகத்துல ஒரு தாரமணமுறை என்பது பெண்களுக்கு மட்டும் தான் பொருந்தும், ஆண்களுக்கு ஆஸ்திக்கு ஒரு தாரம், செல நேரத்துல அதுலயும் கூட பல தாரம். ஆசைக்கு அதையெல்லாம் வெளில சொல்லலாமா, சொல்லாமலே எல்லாருக்கும் வெளில தெரிஞ்சா கூட கண்டுக்காம இருந்துக்கனும்ல, கண்டுக்கிட்டா கூட பெருசா எடுத்துக்கக்கூடாதுல்ல. ஒரு ஆம்பளைன்னா அப்புடி இப்புடி இருக்குறது எல்லாம் சகஜம் தான. ஆனா பொம்பளை அப்புடி இருக்கலாமா? புருசனைத் தவிர வேற யாரையாவது நிமுந்து பாத்தாக்கூட இல்லை யாருகிட்டயாவது சும்மா பேசுனா கூட அது ஒன்னு பத்தாதா அவள நடத்தை கெட்டவளாக்குறதுக்கு.

(தொடரும்)

 

Monday, November 18, 2024

பணம் பேசுறேன் (156):

  

 “அஞ்சறிவு”ள்ள விலங்குகள் எல்லாம் தங்களோட சொந்தத்துக்குள்ள ஜோடி சேராம வெளில தான் இணையைத் தேடுதுங்க. ஒங்க வீட்டுல இருக்கே எலி அது கூட சொந்தத்துக்குள்ள இணையைத் தேடுறதுல்ல.  எலி, வெள்ளெலி, யானை, சிங்கம், ஓநாய், சிம்பன்சி உட்பட வாலில்லா குரங்குகள் என பல விலங்குகள் சொந்தத்தை விட்டு வெளில தான் இணையைத் தேர்ந்தெடுக்குதுங்க. அந்த “அஞ்சறிவு”ள்ள விலங்குகள் எல்லாம் இயற்கைத் தேர்வின் படி முற்போக்கா செயல்படுறாங்க, பரிணாம வளர்ச்சி அடையுறாங்க. ஆனா ஆறறிவுள்ள மனுசன் இயற்கைத் தேர்வுக்கு புறம்பா படுபிற்போக்கா சாதிக்குள்ளே கல்யாணம் பண்ணிக்குறது எவ்வளவு பெரிய அவமானம். பரிணாம அறிவியலோட தந்தை சார்லஸ் டார்வின் இப்ப உயிரோட இருந்தா நம்மள பாத்து காறித்துப்பமாட்டாரா? ஏண்டா ஒன் வீட்டுல உள்ள எலியே ஒன்ன பாத்து சிரிக்குறமாதிரி இருக்கியே?, வீட்டுல உள்ள எலி, காட்டுல உள்ள சிம்பன்சி எல்லாம் ஒன்னை விட முற்போக்கா இருக்கே, ஒன்னை பார்த்து சிரிக்குதே, இந்த அளவுக்கு கேவலப்பட்டு போயிட்டியே, ஒனக்கு வெக்கமாவே இல்லையா, ஒன்னால மனித இனத்துக்கே அவமானம், ஒன் ஆறாவது அறிவ சாதிக்கிட்ட அடகு வெச்சுட்டியான்னு கேக்கமாட்டாரா? மொதல்ல சாதியை விட்டு வெளில வந்து மனுசனா லட்சணமா வாழ கத்துக்கடான்னு சொல்லமாட்டாரா? இந்த அவமானம் நமக்கு தேவையா? இவ்வளவு கேவலப்பட்டவங்களா நாம இருக்கனுமா? வேணாங்க, வேணவே வேணாம், போதுங்க, நாம அவமானப்பட்டது போதும், நாம திருந்துவோம். நம்மளை மாத்திக்குவோம். சாதிய விட்டு வெளில வந்து மனுசனா சுயமரியாதையோட வாழுவோம்.

சாதித் திருமணங்களால இன்னும் என்னென்ன பிரச்சினையெல்லாம் இருக்கோ? இன்னும் என்னென்ன வியாதியெல்லாம் வருமோ? யாருக்குத் தெரியும்? இந்திய மக்களை முழுமையா ஆய்வு செஞ்சா தான் அதெல்லாம் அம்பலமாகும். இந்தியா, இலங்கை, நேபாளம், பாகிஸ்தான், பங்களாதேஷ் ஆகிய நாடுகளைச் சேர்ந்த 2800க்கும் மேற்பட்ட நபர்களோட மரபணு மாதிரிகளை வெச்சு சிசிஎம்பியைச் சேர்ந்த டாக்டர் கே தங்கராஜ் தலைமையில செஞ்ச ஆய்வு ஒரு சிறு துளி மாதிரி தான். அதுலயே சாதித்திருமணங்களால வரக்கூடிய பாதிப்புகள பத்தி இந்தளவுக்கு தெரியவந்துருக்குன்னா, இந்தியாவுல உள்ள எல்லா சாதியினரையும் ஆய்வு செஞ்சாங்கன்னு இன்னும் எவ்வளவு பிரச்சினைகள் தெரியவரும்னு கொஞ்சம் யோசிச்சுப் பாருங்க?. செய்யவேண்டிய இந்த ஆய்வுகளோட முடிவுகள நாம இப்போதைக்குத் தெரிஞ்சுக்கமுடியாது. இதுவே ஒரு நல்ல மக்கள் நல அரசோட ஆட்சியில நீங்க இருந்தீங்கன்னா அரசே அந்த ஆய்வுகள ஊக்குவிச்சு துரிதப்படுத்திருக்கும். இந்த ஆய்வுகளோட முடிவுகள் எல்லாம் எப்பவோ ஒங்களுக்கு தெரியவந்துருக்கும். ஆனா உயர்சாதிகளோட மேலாதிக்கத்தையே நிரந்தரமாக்குறதுக்காக 13 வருசமா சாதிக் கணக்கெடுப்பையே பண்ணாம, இடஒதுக்கீட்டையே காலிசெய்யப் பாக்குற கேவலப்பட்ட பாஜக ஆட்சிக்கிட்ட இதையெல்லாம் நீங்க எதிர்பாக்கமுடியுமா?. இந்த ஆராய்ச்சி செஞ்சவங்கள எல்லாம் பாஜக அரசு ஜெயில்ல தள்ளாம இருக்குறதே பெரிய அதிசயம் தான். அதுனால இந்த ஆய்வுமுடிவுகள் வரட்டும் அப்புறம் பாத்துக்குவோம்னு விட்டாத்தியா இருந்துடாதிங்க. சாதிக்குள்ளயே மொடங்கிக் கெடக்காம வெளில வந்து சந்தோசமா மூச்ச விடுங்க. கல்யாணம்னு வந்துட்டா சட்டு புட்டுனு சாதி மறுப்பு கல்யாணத்த செஞ்சுக்கங்க. சாதி மறுப்பு கல்யாணத்துக்கு குறுக்க நிக்காம நீங்களே அத செஞ்சுவைங்க.

(தொடரும்)

 

Sunday, November 17, 2024

பொம்மைகளின் புரட்சி (73):

 

அடைக்கலம் தாத்தா: யம்மு யாரு வந்துருக்கான்னு பாரு...

குக்கு: யம்முனா யாரு தாத்தா…

அடைக்கலம் தாத்தா: ஒங்க பாட்டி தான், அவ பேரு யமுனா நாங்க யம்முன்னு கூப்புடுவோம், நீ யம்மு பாட்டினு கூப்புடு சரியா…

குக்கு: யம்மு பாட்டீ... நான் குக்கு வந்துருக்கேன், சீக்கிரம் வாங்க…

யம்மு பாட்டி: அடடா குக்குவா வந்துருக்குறது, வா, வா, வா இப்டி ஒக்காறு, என்ன சாப்புடுற சொல்லு பாட்டி பண்ணித் தாரேன்…

குக்கு: யம்மு பாட்டி ஒங்களை எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு... ஒங்க பேரும் எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு... ஏன் தாத்தா ஒங்களுக்கு மட்டும் பேரு பெருசா வெச்சாங்க, ஒங்களுக்கு செல்லப்பேரு இல்லையா...

 அடைக்கலம் தாத்தா: நீ என்ன தாத்தான்னு கூப்புடுறதே செல்லப்பேரு தான்... நீ வேண்ணா ஒனக்கு புடிச்ச பேர வெச்சுக்கூப்புடு... யம்மு என்ன ஏங்க, ஏங்கன்னு தான் கூப்புடுவா...

குக்கு: அப்ப ஏங்க தான் ஒங்க செல்லப்பேரா... அப்ப நீங்க ஏங்க தாத்தாவா...

அடைக்கலம் தாத்தா: இல்லடா, நீ ஒனக்கு புடிச்ச மாதிரி எப்புடி வேணாலும் கூப்புடு... நீ வாய் நெறையா தாத்தானு கூப்புடுறதே எனக்கு போதும்டா...

யம்மு பாட்டி: குக்கு கண்ணா, யம்மு பாட்டி கேட்டதுக்கு நீ இன்னும் பதிலே சொல்லலையே, என்னடா தங்கம் சாப்புடுற...

குக்கு: என்ன இருந்தாலும் சாப்புடுறேன் யம்மு பாட்டி...  நீங்க எதுவும் புதுசா பண்ணவேணாம்...

யம்மு பாட்டி ஒரு தட்டுல சாக்லேட், பிஸ்கெட், கேக் எல்லாம் வெச்சுக் கொண்டுவந்து குக்குவுக்கு குடுத்தாங்க...

குக்கு: யம்மு பாட்டி நான் இந்த மாதுரி கடையில வாங்குனதெல்லாம்  சாப்புடமாட்டேனே, இப்ப என்ன பண்ணுறது?

யம்மு பாட்டி: பரவாயில்லயே, இவ கூட ரெண்டு நாள் இருந்தா நம்ம புள்ளைங்களே மாறிடுவாங்க போலருக்கே... ஆமா இதையெல்லாம் ஏன் சாப்புடமாட்ட...

குக்கு: இதெல்லாம் பாக்கத்தான் அழகா இருக்கும், ஆனா ஒடம்புக்கு நல்லதே கெடையாது... வெசம் மாதிரி தான்னு அம்மா தான் சொல்லிக்கொடுத்தாங்க...

யம்மு பாட்டி: என்ன சமத்து பாருங்க, அப்ப இதையெல்லாம் நீ சாப்புட்டதே இல்லையா...

குக்கு: ஒரு ரெண்டு மூனு வாட்டி சாப்புட்டுருக்கேன்... அப்பாவோட ஃப்ரெண்ட்ஸ் தான் ஊட்டிவிட்டாங்க... ஆனா அம்மாவுக்கு தெரியாது... எனக்கு இதையெல்லாம் விட நல்லா இனிச்சுக் கெடக்குற பழங்கள் தான் ரொம்ப புடிக்கும்…

யம்மு பாட்டி:, பழக்கடை தாத்தா கிட்ட இல்லாத பழங்களா, ஒரே ஒரு நிமிசம் பொறு நான் ஒனக்கு இனிச்சுக் கெடக்குற பழங்களை கொண்டு வந்து தாறேன்...

(தொடரும்)

 

 

 

 

 

 

 

 

Saturday, November 16, 2024

சூதாடும் காட்டேரி (155):

 

உலக அளவுல ஆதிகால சமூகங்கள் தாய்வழிச்சமூகங்களா இருந்ததை பல மானுடவியலாளர்கள் அங்கீகரிக்க மறுக்குறாங்க. தாய்வழிச் சமூகங்கள் எங்குமே இருந்ததுல்ல, இயற்கையில மனித சமூகங்கள் எப்பவுமே தந்தைவழி சமூகங்களா தான் இருந்துருக்குன்னு வரலாற்றைத் திரிக்கிறாங்க. அட பாவிகளா நிகழ்காலத்துல தான் ஒங்களால பெண்களோட சமூக முக்கியத்துவத்தை ஏத்துக்க முடியலைனு பாத்தா, பெண்களோட வரலாற்றுப் பங்களிப்பைக் கூட இருட்டடிப்பு செய்யுற அளவுக்கா ஆணாதிக்கவாதிகளா இருப்பீங்க!. பெண்களோட சமத்துவமற்ற சமூகநிலையையும், ஆணாதிக்கத்தையும், வர்க்கப் பிரிவினைகளையும் இயற்கையானதாக நியாயப்படுத்தக்கூடிய இந்த கணவான்கள் விட்டா ஆதிகாலத்துல ஆண்கள் தான் கொழந்தை பெத்தாங்கன்னு கதைகட்ட கூட தயங்கமாட்டாங்க. இவங்க மார்கனோட வரலாற்றுச் சிறப்புமிக்க கண்டுபிடிப்புகளையும் அங்கீகரிக்க மறுக்குறாங்க.

வர்க்க பிரிவினையில்லாத சமத்துவமான ஆதிப்பொதுவுடைமை சமூகங்கள் தான் பிற்காலத்துல வர்க்கப் பிரிவினையுடைய சமத்துவமற்ற சமூகங்களா மாறியிருக்கு என்பதை சான்றாதாரங்களோட விளக்கும் மார்கனின் பண்டைய சமூகம் வருங்காலம் சோஷலிசத்துக்கானது என்பதை பறைசாற்றுவதா இருந்துச்சு. மார்கனின் படைப்பை அங்கீகரிச்சு ஊக்குவிச்சா சோசலிச சிந்தனைகளும், நடைமுறைகளும் காட்டுத்தீ போல பரவிடுமேன்னு எச்சரிக்கையடைஞ்ச முதலாளித்துவ ஆதரவாளர்கள் மார்கனோட வரலாற்றுச் சிறப்புமிக்க கண்டுபிடிப்புகளை அங்கீகரிக்காம அன்றிலிருந்து இன்றுவரைக்கும் இருட்டடிப்பு செஞ்சிருக்காங்க.

ஆரம்பகால சமூகங்களைப் பற்றி ஆய்வு செஞ்சு மார்கன் கண்டடைஞ்ச முடிவுகள், மார்க்ஸ் வரலாற்றுப்பொருள்முதல்வாதத்தின் மூலமா சமூக பரிணாமம் பற்றி கொடுத்த தத்துவார்த்த முடிவுகளுடன் ஒன்றுபட்டதா இருந்துருக்கு. மார்கனின் ஆராய்ச்சியும், விஞ்ஞானக் கண்ணோட்டமும் பரிணாம உயிரியலில் டார்வினின் பணியைப் போலவே மானுடவியலில் ஒரு புரட்சியை உருவாக்குனுச்சு.

"ஏன்னா, நாற்பது ஆண்டுகளுக்கு முன்னாடி மார்க்ஸ் கண்டுபிச்ச வரலாற்றின் பொருள்முதல்வாதக் கருத்தாக்கத்தை அமெரிக்காவுல தனது வழியில் புதுசா கண்டுபிடிச்சார் மார்கன், அதோட காட்டுமிராண்டித்தனத்தையும், நாகரீகத்தையும் ஒப்பிடும்போது அது அவரை முக்கிய கருத்துக்கள்ல மார்க்சின் அதே முடிவுகளுக்கு இட்டுச் சென்றது"ன்னு எங்கெல்ஸ் சொல்லியிருக்காரு.

அமெரிக்க மானுடவியலாளர் மார்கனின் பணியால் கார்ல்மார்க்ஸ் பெரிதும் ஈர்க்கப்பட்டாராம், 1880-1881 காலகட்டத்துல மார்க்ஸ் தன்னோட குறிப்பேடுகள்ல மார்கனின் பண்டைய சமூகத்தை சுருக்கமான குறிப்புகளா எடுத்துவெச்சுருந்தார், பின்னாடி கார்ல்மார்க்ஸின் இனவியல் குறிப்பேடுகளாக அது வெளியிடப்பட்டுச்சு. மார்கனின் கண்டுபிடிப்புகளோட முழு முக்கியத்துவத்தையும் வெளிப்படுத்தும் விதமா அதைப்பத்தி எழுதனும்னு தான் மார்க்ஸ் நெனச்சிருந்தார், ஆனால் மூலதனம் எழுதும் பணியே அவரை முழு நேரமும் ஆக்கிரமிச்சிச்சுடுச்சு, உடல்நலக்குறைவும் ஏற்பட்டுச்சு, அதுனால தான் நெனைச்சதை செய்யமுடியாமலே 1883ல் அவர் இறந்ததுனால, அவர் விட்டுச்சென்ற பணி உயிர் தோழர் எங்கெல்ஸால திறம்பட செஞ்சு முடிக்கப்பட்டுச்சு. மார்க்ஸ் இறந்த ஒரு வருசத்துக்குள்ள 1884ல “குடும்பம், தனிச் சொத்து மற்றும் அரசின் தோற்றம்” என்ற அந்த வரலாற்றுச்சிறப்பு மிக்க புத்தகம் எங்கெல்ஸால வெளியிடப்பட்டுச்சு.

(தொடரும்)

Friday, November 15, 2024

பணம் பேசுறேன் (155):

 

 

பரம்பரை பரம்பரையா சாதிக்குள்ளே திருமணம் செய்யும் போது, மூதாதையருக்கு இருந்த ஜீன்-மரபணுக் குறைபாடுகள் அவரோட வாரிசுகளுக்கும் தலைமுறை தலைமுறையா பல்கிக் பெருகும் ஆபத்து இருக்குன்னு பாத்தோம். எது எப்படி இருந்தாலும் சாதிக்குள்ள தான் கல்யாணம் பண்ணுவோம்ம்னு ஒத்தக்கால்ல நின்னிங்கன்னா, கல்யாணத்துக்கப்புறம் கொழந்தையே பெத்துக்காதிங்க. ஏன்னா ஒங்களோட சுயநலத்துக்காக ஒங்க வாரிசோட உடல் நலத்தை பேராபத்துக்கு உள்ளாக்குறதுக்கு ஒங்களுக்கு எந்த உரிமையும் கெடையாது. இந்த ஆபத்துகளை தடுக்குறதுக்கும், சமூகநீதியை  நிலைநாட்டுறதுக்கும் சாதிக்குள்ள திருமணம் செய்யுறத சட்டப்படித் தடை செய்யவேண்டியது ரொம்ப ரொம்ப அவசியம். இது பலருக்கு மனக்கசப்பை ஏற்படுத்தலாம். என்ன பண்ணுறது உண்மை கசக்கத்தான் செய்யும். சட்ட மாற்றம் மட்டுமே சமூக மாற்றத்தை ஏற்படுத்தாது. இந்தியாவுல தீண்டாமை சட்டப்படி குற்றமாக்கப்பட்டுருக்கு. ஆனாலும் இன்னும் கூட தீண்டாமைக் கொடுமைகள் நடந்துக்கிட்டு தான் இருக்கு. தீண்டாமை முழுமையா களையப்படாதபோதும், அந்த குற்றங்களை குறைச்சதுல சட்டத்துக்கு முக்கியப் பங்கு இருக்கு. அதே போல தான் சாதித்திருமணங்களையும் சட்டப்படி குற்றமாக்கனும். ஏன்னா சாதிக்குள்ள கல்யாணம் பண்ணிக்குறதும் அக்கா, தங்கை, அண்ணன், தம்பிகளை கல்யாணம் பண்ணிக்குறதும் ஒன்னு தான். அக்கா, தங்கை, அண்ணன், தம்பிகளை கல்யாணம் பண்ணிக்குறது குற்றமுன்னா, சாதிக்குள்ள கல்யாணம் பண்ணிக்குறதும் குற்றம் தான?. சாதிக்குள்ள திருமணம் செய்யாததால உங்க உறவுகள் எல்லாம் அறுந்துபோயிடுமோன்னு கவலைப்படாதீங்க. கல்யாணம் மட்டும் தான் வேணாம்னு சொல்லுறோம். மத்தபடி ஒங்க உறவினர்களோட அளவளாவுறதுக்கோ, கொஞ்சி குலாவுறதுக்கோ எந்த தடையும் இல்லை.

சாதித் திருமணங்களைத் தடை செஞ்சா ஜல்லிக் கட்டுத் தடைக்குப் பொங்குனதை விட ஜாஸ்தியா மக்கள் பொங்குவாங்க தான். பாரம்பரியம், கலாச்சாரம்குற பேருல கண்மூடித்தனமா எதையும் தடுக்குறதும் தவறு தான், ஆதரிக்குறதும் தவறு தான். ஜல்லிக்கட்டு நிலக்கிழாரிய சாதியடிமை சமூகத்தோட போர்முறை தானே ஒழிய விளையாட்டு கெடையாது. நாம அத கவிநயமா ஏறுதழுவல்னு சொல்றதாலயே அதுல நடக்குற தேவையில்லாத மனித விலங்கு மோதலை, சண்டையை, வன்முறையை, போரை பூசிமொழுக முடியாது. நம்மளோட பண்டைய கலாச்சாரங்கள், பண்பாடுகள்ல உள்ள நல்ல ஆக்கப்பூர்வமான விசயங்களை மட்டும் ஏத்துக்குட்டு அழிவுகரமான விசயங்களை கைவிட்டா தான் நம்ம சமூகம் உருப்படும், முன்னேறும். இல்லைனா காலகாலத்துக்கும் இந்த கேவலங்களை கட்டியழுதுகிட்டு, காட்டுமிராண்டிகள், விலங்குகளை விட கேவலமா குண்டுச்சட்டிக்குள்ளே குதிரை ஓட்டுக்கிட்டு இருக்கவேண்டியது தான். இந்த தமிழ் சமூகத்துக்கு திருக்குறளும், திருவள்ளுவரும் அவசியம்.  ஆனா திருவள்ளுவருக்குக் கொடுக்குற அதே முக்கியத்துவத்தை ராஜராஜ சோழனுக்கும் கொடுக்கனும்னு எந்த அவசியமும் இல்லை. இந்த மக்களாட்சி காலத்துலயும் தமிழ்ப் பல்கலைக்கழகத்த ராஜராஜ சோழன் பல்கலைக்கழகமா மாத்தனும்னு வெக்கிற கோரிக்கையே ரொம்ப அருவருப்பானது. மக்களை அடிமைப்படுத்திய மன்னர்களை கொண்டாடுனது போதுங்க. பொன்னியின் செல்வனை உச்சுக்கொட்டி சிலாகிச்சது போதுங்க.  மக்களுக்கு அவசியமானது முற்போக்கான சமூக மாற்றங்களுக்கு வித்திடும் திரைப்படங்கள் தானே தவிர மன்னர்களைப் பத்திய அடிவருடித்தனமான புனைவுக்கதைகளை போற்றிப்புகழும் திரைப்படங்கள் இல்ல. நம்ம கலாச்சாரத்துல உள்ள ஆக்கப்பூர்வமான விசயங்களை மட்டும் ஆதரிச்சு, அழிவுகரமான விசயங்களை நிராகரிக்கவேண்டியது ரொம்ப ரொம்ப அவசியம். நாம பொங்கல் பண்டிகை வேணாமுன்னு சொல்லல, ஜல்லிக்கட்டு தான் வேணம்னு சொல்லுறோம். உறவுகள் வேணாமுன்னு சொல்லல, சாதித் திருமணங்கள் தான் வேணாமுன்னு சொல்றோம்.

 (தொடரும்)

 

சூதாடும் காட்டேரி (154):

 

உலக அளவுல புரட்சிக்கு வித்திட்ட பெருமை கார்ல்மார்க்ஸையும், எங்கெல்சையும் சேரும். இதுல ஹென்றி மார்கனையும் சேர்க்கனும், ஏன்னா அவரது கண்டுபிடிப்புகள் அந்த அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்தவையா இருந்துருக்கு, இருக்கு, என்றும் இருக்கும். பண்டைய காலத்துல வர்க்கமில்லாத ஆதிச்சமூகங்கள் எப்படி வர்க்க சமூகங்களா மாறுனுச்சு என்பதற்கான சான்றாதரங்களைத் தொகுத்து வழங்கியவர் மார்கன் மட்டும் தான். பழங்குடியினரோட வாழ்க்கை நடைமுறைகள சுவைபட பதிவுசெய்யுறதோட விட்டுவிடாம, வரலாற்று அடிப்படையிலான ஒருங்கிணைந்த முழுமையான புரிதலோட அவற்றை உற்று நோக்கி, அவற்றுக்குள்ள வரலாற்றுப் பங்கினை அங்கீகரிச்சு சமூக பரிணாம வளர்ச்சியில் சரியான இடத்துல அவற்றைப் பொறுத்திக்காட்டி மனித வரலாற்றுல நடந்த சமூக மாற்றங்களை, அமைப்பு மாற்றங்களை இயங்கியல் கருத்துச் சித்திரமாக மார்கன் காட்சிப்படுத்தியது ஈடு இணையற்ற சாதனை. அதுல தான் அவர் மத்த மானுடவியலாளர்களிடமிருந்து வேறுபட்டு உயர்ந்து நிக்கிறாரு.

ஹென்றி மார்கன் அடிப்படையில ஒரு வழக்கறிஞர். அவரே எதிர்பார்க்காத ஒரு இனிமையான திருப்புமுனையினால தான் அவர் மானுடவியலராக உருவெடுத்தாரு. 1840களில் ஏற்பட்ட வணிக மந்த நிலையின் போது அவருக்கு கெடைச்ச ஓய்வு நேரத்துல கோர்டியன் நாட் என்ற பேருல இளைஞர்களால உருவாக்கப்பட்ட ஒரு இலக்கியக் கழகத்துல மார்கன் சேர்ந்துருக்காரு. அந்த கழகம் கொஞ்ச நாள்ல இந்திய சமூகமா, இரோகுயிஸின் மாபெரும் ஒழுங்காக மாற்றப்படுது. இந்தியர் மீது கனிவான உணர்வை ஊக்குவிக்கவும், அவங்களோட பிரச்சினைகளுக்கு உதவும் நோக்கத்துடனும் அந்த அமைப்பு உருவாக்கப்பட்டுச்சு. மார்கனும் அந்தமைப்பைச் சேர்ந்த மத்தவங்களும் தங்களோட ஒழுங்கமைப்பு இரோகுயிஸின் கூட்டமைப்பின் உண்மையான பிரதியாக இருக்கனும்னு விரும்புனாங்க. அதுக்காக அவங்க இந்தியர்களோட கூட்டமைப்பைத் தீவிரமாக ஆராய்ச்சி செய்ய ஆரம்பிச்சாங்க. அந்த ஆய்வுகள்ல மேலும் மேலும் ஆர்வம் மேலிட்டதுனால தான், அந்த ஆய்வுகள் தான் மார்கனை மானுடவியலாளராக ஆக்கிடுச்சு.

மானுடவியலுக்கும், அதன் மூலமா சமூக அறிவியலுக்கும் புரட்சிகரமான பொருளாயத அடித்தளத்தை உருவாக்கித்தந்த பெருமை ஹென்றி மார்கனையே சேரும். அதே போல தாய்வழிச்சமூகத்தோட வரலாற்றுப் பங்கினை உலகுக்கு உணார்த்திய சிறப்பும் மார்கனையே சேரும். எல்லா காலத்துலயும் தந்தைவழி சமூகங்கள் தான் நிரந்தரமா இருந்ததா தான் பொதுவா கருதப்பட்டுருந்துச்சு. ஆனா உலகெங்கும் மனித சமூகங்கள் ஆரம்பத்துல தாய்வழி சமூகங்களா தான் இருந்துருக்கு, தாய் வழிச்சமூகங்கள்ல பெண்கள் ரொம்ப மதிப்பு மரியாதையோட சமமா நடத்தப்பட்டுருக்காங்க. தாய் வழிச்சமூகங்களின் சிதைவிலிருந்து தான் தந்தைவழிசமூகங்கள் உருவானுச்சு. தந்தைவழிச் சமூகத்துல பெண்கள் சமமா நடத்தப்படாம ஒடுக்கப்பட்டாங்க என்பதையெல்லாம் மார்கன் வெளிச்சம் போட்டுக்காட்டியிருந்தாரு. அதுனால வரலாற்று அடிப்படையில பெண்ணியத்திற்கும் தனது சான்றாதரங்களின் மூலமா அடித்தளம் அமைத்துக் கொடுத்த பெருமையும் மார்கனையே சேரும்.

(தொடரும்)

 

Wednesday, November 13, 2024

பணம் பேசுறேன் (154):

 

சாதிக்குள்ள திருமணம் பண்ணும் போது ஒடுங்கு நிலை நோய்கள், மரபணு குறைபாடுகள், "நீர்த்துப்போகாமல்அடுத்த தலைமுறைகளுக்கு  அனுப்பப்படும் ஆபத்து அதிகம் இருப்பதாக ஆய்வுகள் எச்சரிக்குது.

மரபியலில், ஒரு சிறிய எண்ணிக்கையிலான முன்னோர்கள் பல வழித்தோன்றல்களை உருவாக்கும் நிகழ்வு "தோற்றுனர் நிகழ்வு (founder event) அல்லது மக்கள்தொகை இடையூறு (population bottleneck) என அழைக்கப்படுது. தெற்காசியாவிலிருந்து ஆய்வுசெய்யப்பட்ட 263 தனித்துவமான மக்கள் குழுக்கள்ல 81 குழுக்கள், பத்து லட்சத்துக்கும் அதிகமான நபர்களைக் கொண்ட 14 குழுக்கள் உட்பட, வலுவான தோற்றுனர் நிகழ்வைக் கொண்டிருப்பதாக கண்டுபுடுச்சிருக்காங்க. பத்து லட்சத்துக்கும் அதிகமான நபர்களைக் கொண்ட அந்த 14 குழுக்கள் இவைதான். குஜ்ஜார் (ஜம்மு & காஷ்மீர்), பனியாஸ் (உ.பி.), பட்டாபு கபு (ஏபி), வத்தே (ஆபி), யாதவ் (புதுச்சேரி), காஷ்ட்ரிய அக்னிகுலா (ஆபி), நாகா (நாகாலாந்து), கும்ஹர் (உ.பி) , ரெட்டி (தெலுங்கானா), கள்ளர் (தமிழ்நாடு), பிராமண மணிப்பூரி (மணிப்பூர்), அருந்ததியர் (தமிழ்நாடு), வைஸ்யா (தெலுங்கானா) பிராமின் நேபாள் (நேபாளம்). இந்த  14 சாதியினரோட வம்சாவளியின் அடையாள மதிப்பெண் (IBD)  அஷ்கெனாசி யூதர்களை விட அதிகமாக இருந்துருக்கு.

வம்சாவளியின் அடையாள மதிப்பெண் (IBD) என்பது ஒரு மக்கள்தொகை எந்த அளவுக்கு ஒடுங்கு நிலை நோய்களுக்கு பாதிக்கப்படக்கூடிய வாய்ப்புகள் இருக்கு என்பதை கண்டுபிடிக்க உதவுது. நெருங்கிய சமூகங்களுக்குள்ள திருமணம் செஞ்சுக்குறதுக்கு பெயர் போன அஷ்கெனாசி யூதர்கள் மத்தியில் ஒடுங்குநிலை நோய்கள் அதிகமாக இருப்பது நிரூபிக்கப்பட்டுருக்கு. இந்தியாவின் குஜ்ஜார் சாதியினரோட வம்சாவளியின் அடையாள மதிப்பெண் (IBD)  அஷ்கெனாசி யூதர்களை விட 11.6 மடங்கு அதிகமாக இருந்துருக்கு. பனியா சாதியினரோட வம்சாவளியின் அடையாள மதிப்பெண் (IBD)  அஷ்கெனாசி யூதர்களை விட 9.6 மடங்கு அதிகமாக இருந்துருக்கு, யாதவ் சாதியினரோட வம்சாவளியின் அடையாள மதிப்பெண் (IBD)  அஷ்கெனாசி யூதர்களை விட 4.4 மடங்கு அதிகமாக இருந்துருக்கு. நாகா சமூகத்தினரோட வம்சாவளியின் அடையாள மதிப்பெண் (IBD) அஷ்கெனாசி யூதர்களை விட 2.3 மடங்கு அதிகமாக இருந்துருக்கு, கும்ஹர் சாதியினரோட வம்சாவளியின் அடையாள மதிப்பெண் (IBD) அஷ்கெனாசி யூதர்களை விட 2.3 மடங்கு அதிகமாக இருந்துருக்கு, பிராமின் நேபாள் சாதியினரோட வம்சாவளியின் அடையாள மதிப்பெண் (IBD)  அஷ்கெனாசி யூதர்களை விட 1.9 மடங்கு அதிகமாக இருந்துருக்கு, தமிழ்நாட்டின் கள்ளர் சாதியினரோட வம்சாவளியின் அடையாள மதிப்பெண் (IBD) அஷ்கெனாசி யூதர்களை விட 1.7 மடங்கு அதிகமாக இருந்துருக்கு. ரெட்டி சாதியினரோட வம்சாவளியின் அடையாள மதிப்பெண் (IBD) அஷ்கெனாசி யூதர்களை விட 2 மடங்கு அதிகமாக இருந்துருக்கு. வைஷ்ய சாதியினரோட வம்சாவளியின் அடையாள மதிப்பெண் (IBD)  அஷ்கெனாசி யூதர்களை விட 1.2 மடங்கு அதிகமாக இருந்துருக்கு. ஆந்திரப் பிரதேசத்தின் பட்டாபு கபு சாதியினரோட வம்சாவளியின் அடையாள மதிப்பெண் அஷ்கெனாசி யூதர்களை விட 9.5 மடங்கு அதிகமா இருந்துருக்கு, வத்தே சாதியினரோட வம்சாவளியின் அடையாள மதிப்பெண் அஷ்கெனாசி யூதர்களை விட 9.2 மடங்கு அதிகமா இருந்துருக்கு. க்ஷத்ரிய அக்னிகுல சாதியினரோட வம்சாவளியின் அடையாள மதிப்பெண் (IBD)  அஷ்கெனாசி யூதர்களை விட மதிப்பெண் 2.4 மடங்கு அதிகமாக இருந்துருக்கு.

30 லட்சத்துக்கும் அதிகமான மக்கள்தொகையோட இருக்குற வைஸ்யா சாதி மக்களை உதாரணப்படுத்தி ஆராய்ச்சியாளர்கள் சிக்கலை முன்னிலைப்படுத்திருக்காங்க. மத்த மக்கள்குழுக்களுடன் ஒப்பிடும்போது, ​​வைஸ்யாக்களுக்கு வளர்சிதை மாற்றக் கோளாறான பியூட்டில்கோலினெஸ்டெரேஸ் (BChE) குறைபாடு 100 மடங்கு அதிகமா இருக்கு. அறுவை சிகிச்சைக்கு முன்னாடி கொடுக்கப்படுற மயக்க மருந்துக்கு இவங்க அதிக உணர்திறன் உடையவர்களா இருக்குறதுனால ஒவ்வாமை ஏற்படுது.

(தொடரும்)

 

பொம்மைகளின் புரட்சி (123)

  காலையில எல்லாருமே லேட்டா தான் எந்திரிச்சாங்க… இன்னிக்கு தாத்தா தான் பழக்கடைக்கு போகனும், அதுனால யம்மு பாட்டிக்கு உதவி பண்ணிக்கிட்டே   தாத்...