Friday, November 15, 2024

பணம் பேசுறேன் (155):

 

 

பரம்பரை பரம்பரையா சாதிக்குள்ளே திருமணம் செய்யும் போது, மூதாதையருக்கு இருந்த ஜீன்-மரபணுக் குறைபாடுகள் அவரோட வாரிசுகளுக்கும் தலைமுறை தலைமுறையா பல்கிக் பெருகும் ஆபத்து இருக்குன்னு பாத்தோம். எது எப்படி இருந்தாலும் சாதிக்குள்ள தான் கல்யாணம் பண்ணுவோம்ம்னு ஒத்தக்கால்ல நின்னிங்கன்னா, கல்யாணத்துக்கப்புறம் கொழந்தையே பெத்துக்காதிங்க. ஏன்னா ஒங்களோட சுயநலத்துக்காக ஒங்க வாரிசோட உடல் நலத்தை பேராபத்துக்கு உள்ளாக்குறதுக்கு ஒங்களுக்கு எந்த உரிமையும் கெடையாது. இந்த ஆபத்துகளை தடுக்குறதுக்கும், சமூகநீதியை  நிலைநாட்டுறதுக்கும் சாதிக்குள்ள திருமணம் செய்யுறத சட்டப்படித் தடை செய்யவேண்டியது ரொம்ப ரொம்ப அவசியம். இது பலருக்கு மனக்கசப்பை ஏற்படுத்தலாம். என்ன பண்ணுறது உண்மை கசக்கத்தான் செய்யும். சட்ட மாற்றம் மட்டுமே சமூக மாற்றத்தை ஏற்படுத்தாது. இந்தியாவுல தீண்டாமை சட்டப்படி குற்றமாக்கப்பட்டுருக்கு. ஆனாலும் இன்னும் கூட தீண்டாமைக் கொடுமைகள் நடந்துக்கிட்டு தான் இருக்கு. தீண்டாமை முழுமையா களையப்படாதபோதும், அந்த குற்றங்களை குறைச்சதுல சட்டத்துக்கு முக்கியப் பங்கு இருக்கு. அதே போல தான் சாதித்திருமணங்களையும் சட்டப்படி குற்றமாக்கனும். ஏன்னா சாதிக்குள்ள கல்யாணம் பண்ணிக்குறதும் அக்கா, தங்கை, அண்ணன், தம்பிகளை கல்யாணம் பண்ணிக்குறதும் ஒன்னு தான். அக்கா, தங்கை, அண்ணன், தம்பிகளை கல்யாணம் பண்ணிக்குறது குற்றமுன்னா, சாதிக்குள்ள கல்யாணம் பண்ணிக்குறதும் குற்றம் தான?. சாதிக்குள்ள திருமணம் செய்யாததால உங்க உறவுகள் எல்லாம் அறுந்துபோயிடுமோன்னு கவலைப்படாதீங்க. கல்யாணம் மட்டும் தான் வேணாம்னு சொல்லுறோம். மத்தபடி ஒங்க உறவினர்களோட அளவளாவுறதுக்கோ, கொஞ்சி குலாவுறதுக்கோ எந்த தடையும் இல்லை.

சாதித் திருமணங்களைத் தடை செஞ்சா ஜல்லிக் கட்டுத் தடைக்குப் பொங்குனதை விட ஜாஸ்தியா மக்கள் பொங்குவாங்க தான். பாரம்பரியம், கலாச்சாரம்குற பேருல கண்மூடித்தனமா எதையும் தடுக்குறதும் தவறு தான், ஆதரிக்குறதும் தவறு தான். ஜல்லிக்கட்டு நிலக்கிழாரிய சாதியடிமை சமூகத்தோட போர்முறை தானே ஒழிய விளையாட்டு கெடையாது. நாம அத கவிநயமா ஏறுதழுவல்னு சொல்றதாலயே அதுல நடக்குற தேவையில்லாத மனித விலங்கு மோதலை, சண்டையை, வன்முறையை, போரை பூசிமொழுக முடியாது. நம்மளோட பண்டைய கலாச்சாரங்கள், பண்பாடுகள்ல உள்ள நல்ல ஆக்கப்பூர்வமான விசயங்களை மட்டும் ஏத்துக்குட்டு அழிவுகரமான விசயங்களை கைவிட்டா தான் நம்ம சமூகம் உருப்படும், முன்னேறும். இல்லைனா காலகாலத்துக்கும் இந்த கேவலங்களை கட்டியழுதுகிட்டு, காட்டுமிராண்டிகள், விலங்குகளை விட கேவலமா குண்டுச்சட்டிக்குள்ளே குதிரை ஓட்டுக்கிட்டு இருக்கவேண்டியது தான். இந்த தமிழ் சமூகத்துக்கு திருக்குறளும், திருவள்ளுவரும் அவசியம்.  ஆனா திருவள்ளுவருக்குக் கொடுக்குற அதே முக்கியத்துவத்தை ராஜராஜ சோழனுக்கும் கொடுக்கனும்னு எந்த அவசியமும் இல்லை. இந்த மக்களாட்சி காலத்துலயும் தமிழ்ப் பல்கலைக்கழகத்த ராஜராஜ சோழன் பல்கலைக்கழகமா மாத்தனும்னு வெக்கிற கோரிக்கையே ரொம்ப அருவருப்பானது. மக்களை அடிமைப்படுத்திய மன்னர்களை கொண்டாடுனது போதுங்க. பொன்னியின் செல்வனை உச்சுக்கொட்டி சிலாகிச்சது போதுங்க.  மக்களுக்கு அவசியமானது முற்போக்கான சமூக மாற்றங்களுக்கு வித்திடும் திரைப்படங்கள் தானே தவிர மன்னர்களைப் பத்திய அடிவருடித்தனமான புனைவுக்கதைகளை போற்றிப்புகழும் திரைப்படங்கள் இல்ல. நம்ம கலாச்சாரத்துல உள்ள ஆக்கப்பூர்வமான விசயங்களை மட்டும் ஆதரிச்சு, அழிவுகரமான விசயங்களை நிராகரிக்கவேண்டியது ரொம்ப ரொம்ப அவசியம். நாம பொங்கல் பண்டிகை வேணாமுன்னு சொல்லல, ஜல்லிக்கட்டு தான் வேணம்னு சொல்லுறோம். உறவுகள் வேணாமுன்னு சொல்லல, சாதித் திருமணங்கள் தான் வேணாமுன்னு சொல்றோம்.

 (தொடரும்)

 

No comments:

Post a Comment

பொம்மைகளின் புரட்சி (123)

  காலையில எல்லாருமே லேட்டா தான் எந்திரிச்சாங்க… இன்னிக்கு தாத்தா தான் பழக்கடைக்கு போகனும், அதுனால யம்மு பாட்டிக்கு உதவி பண்ணிக்கிட்டே   தாத்...