ஆசான் மருதமுத்துவைப் பத்தி எழுதிய பிறகு எனது இன்னொரு ஆசானைப் பற்றி எழுதாமல் விட மனம் கேட்கவில்லை. நமது தியாகு தோழர் தான் அந்த இன்னொரு ஆசான். மார்க்சின் “மூலதனம்” நூல் தொகுப்பைத் தமிழில் படித்ததன் மூலமே எனக்கு தியாகு தோழர் முதலில் அறிமுகமானார். பல விசயங்களில் தியாகு தோழர் சொல்வது சரியாக இருக்கும் என்று என் அப்பா தோழர் ஏதெசு சொல்லக் கேட்டிருக்கிறன். ஆனாலும் நான் தியாகு தோழரை நேரில் சந்தித்ததில்லை.
நான் முகநூல் நண்பராக தியாகு தோழரின் சில
பதிவுகளின் பின்னூட்டத்தில் கருத்து தெரிவித்திருந்தேன். 2018 ஏப்ரல் 12ல் நான் தியாகு
தோழரின் முகநூல் நட்பு வட்டத்திலிருந்து தவறுதலாக நீக்கப்பட்டதை அறிந்ததும் வருத்தம்
அடைந்தேன். மீண்டும் அவரது முகநூல் நண்பராகிவிடவேண்டும் என்று தோழருக்கு நான் செய்தி
அனுப்பினேன். பிறகு மீண்டும் நண்பராகியும் விட்டேன். எங்கள் வீட்டில் நெல்சன் மண்டேலாவைப்
பற்றி தியாகு தோழர் எழுதிய “சிறையிலும் வாடாத கறுப்பு மலர்” புத்தகம் இருந்தது. நான்
அதை வாசித்த பின் பாராட்டித் தோழருக்கு வாழ்த்துக்கள் அனுப்பினேன். பிறகு மே தினத்தன்று
தோழருக்கு “சிறையிலும் வாடாத செம்மலருக்கு மேதின வாழ்த்துக்கள்” என்று வாழ்த்து அனுப்பியிருந்தேன்.
அதனால் இந்த தலைப்பு எனக்கு இன்றோ நேற்றோ தோன்றியது அல்ல. ஏழு ஆண்டுகளுக்கு முன் நான்
எழுதியதை செம்மைப் படுத்தி உருவானதே “சிறையில் பூத்த செம்மலர்” என்ற தலைப்பு.
தோழர் தனது “தலித்தியமும் தமிழ்த் தேசியமும்”
என்ற புத்தகத்தைப் பற்றி எழுதிய பதிவில் நூல் வேண்டுவோர் பேசி எண்ணையும், முகவரியும்
அனுப்புமாறு எழுதியிருந்தார். எனக்கும் அந்த புத்தகம் வேண்டும் என்று நான் கேட்டுக்
கொண்டேன்.
2018லும், 2019லும் தஞ்சாவூர் மாவட்டம் முழுவதும் சைக்கிளில் ஸ்பீக்கர் கட்டி அரசியல் விழிப்புணர்வை ஏற்படுத்தும் பயணங்களில் நான் ஈடுபட்டிருந்தேன். 2019 நாடாளுமன்றத் தேர்தலில் சுயேட்சை வேட்பாளராக தஞ்சாவூர் தொகுதியில் ஜன்னல் சின்னத்தில் போட்டியிட்டேன். சுயேட்சையாக நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டது எனக்கு ஒரு அரசியல் பரிட்சையாக அமைந்தது. தேர்தலில் போட்டியிட வேண்டாம் என்று என் அம்மாவும், அப்பாவும் சொன்னாங்க தான், தியாகு தோழரும் சொன்னாங்க தான், நான் தான் கேட்கல, நான் தான் அடம்பிடித்து அம்மாவுக்கு கிட்டத்தட்ட ஒரு லட்சம் ரூபாய்க்கு வீண்செலவு வைத்துவிட்டேன். சிலருக்குப் பட்டால் தான் தெரியும். நேரடி ஜனநாயகத்துகான அரசியல் பரிசோதனையைப் பண்ணி என்ன தான் நடக்குதுண்ணு பாக்கணும்ணு ஒத்தக் கால்ல நின்னேன். 2,643 வாக்குகளுடன் படுதோல்வி அடைந்தேன்.
இங்கு பெரும்பாலும் விடுதலைக்கான போராட்ட அரசியலில் பங்கேற்கும் இயக்கங்கள் தேர்தலைப் புறக்கணிப்பதையும், தேர்தல் அரசியலில் பங்கேற்கும் இயக்கங்கள் விடுதலைக்கான போராட்ட அரசியலைப் புறக்கணிப்பதையும் நாம் பார்க்கிறோம். குறைந்தபட்சமாக நாட்டில் எஞ்சி இருப்பதைப் பாதுகாத்துக் கொள்வதற்காகவும், ஜனநாயகத் தளத்தை விரிவுபடுத்துவதற்காகவும் இடதுசாரி, ஜனநாயக இயக்கங்கள் தேர்தலைப் புறக்கணிக்கக்கூடாது என்பதே என் நிலைப்பாடு. அதனால் நான் தோழருக்கு “தேர்தலைப் புறக்கணிக்காமல் உங்களது இயக்கத் தோழர்களை தனித்துப் போட்டியிட செய்திருக்கலாம் தோழர்... இந்த வேண்டுகோளை வரும் காலத்தில் தயவு செய்து மறுபரிசீலனை செய்யுங்கள் தோழர். தேர்தலில் பங்கேற்பதற்கு நாம் இந்திய தேசியத்தையோ, இந்திய அரசியலமைப்புச் சட்டத்தையோ அப்படியே ஏற்றுக்கொள்ளவேண்டும் என்ற அவசியம் இல்லை” என்று செய்தி அனுப்பினேன். இதை படித்துவிட்டு நீங்கள் சிரிக்கலாம். ஆனால் இடதுசாரி இயக்கங்கள் தேர்தல் புறக்கணிப்பில் ஈடுபடுவது தவறு என்பதே எனது நிலைப்பாடு. தியாகு தோழர் பொதுச்செயலாளராக உள்ள தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம் நிபந்தனையற்ற தேர்தல் புறக்கணிப்பில் ஈடுபடவில்லை என்பதைப் பின்னர் தெரிந்து கொண்டேன்.
மேலே சொன்னவற்றுடன், “இடதுசாரி இயக்கங்களின்
வலது சந்தர்ப்பவாதத்தாலும், இடது தீவிரவாதத்தாலும், செக்டேரியனிசத்தாலும் திக்கித்து
(திக்கற்று என்று எழுதுவதற்கு பதில் பிழையாக திக்கித்து என்று எழுதிவிட்டேன்) நிற்போர்
பலர். இடதுசாரி இயக்கங்கள் சரியான நிலைப்பாடு எடுக்காததால் உதிரியாய் நிற்போர் பலர்.
அந்த உதிரிகளின் நானும் ஒருவர்” என்றும் அனுப்பியிருந்தேன்.
எனது செய்திக்கு பதிலளித்த தோழர் “தேர்தலில்
பங்கேற்பதால் இந்தியத்தேசியத்தையோ அரசமைப்புச் சட்டத்தையோ ஏற்றுக் கொள்ள வேண்டும் என்ற
தேவை இல்லைதான். ஆனால் இந்த வழியில் அவற்றை வெல்ல முடியாது என்பதுதான் கோட்பாட்டுப்
புரிதலும் பட்டறிவும் ஆகும். தேர்தல் முடிந்த
பிறகு விவாதிப்போம். திக்கித்து நின்று முடிவுகள் எடுக்க முடியாது. வலது சந்தர்ப்பவாதமோ
இடது தீவிரவாதம் செக்டாரியனிசமோ கூடாது. திக்கற்றும்
முடிவெடுக்க வேண்டியதில்லை. தெளிவான திக்கை அறிந்து செயல்படலாம்.” என்று கூறியிருந்தார்.
இப்படித் தான் தியாகு தோழருடனான எனது தோழமை
ஆரம்பித்தது.
(தொடரும்)

No comments:
Post a Comment