Friday, August 22, 2025

சிறையில் பூத்த செம்மலர் (2)


வெகுமக்களுக்கான ஆகச்சிறந்த புரட்சித் தலைமை எப்படி இருக்கவேண்டும். ஜனநாயகப் பண்புகள் உடையதாகவும், கார்ல்மார்க்ஸ், எங்கெல்ஸைப் போல் அறிவியல் அணுகுமுறைக் கொண்டதாகவும், புரட்சியில் எங்கு பதுங்கவேண்டும், எங்கு பாயவேண்டும் என்று அறிந்த லெனினைப் போல தெளிவையும், நிதானத்தையும் கொண்டதாகவும், சே குவேராவைப் போல் அன்பில் தோய்ந்ததாகவும் இருக்கவேண்டும் என்பது எனது கருத்து. இங்கு எங்கு பதுங்கவேண்டும், எங்கு பாயவேண்டும் என்று நான் குறிப்பிடுவது போர்த்தந்திரத்துக்கு மட்டுமல்லாமல், வரலாற்றுச் சூழ்நிலைக்குப் பொருந்தாமல் எல்லா நேரங்களிலும் புரட்சிகர வாய்ச்சவடாலிடுவதைத் தவிர்ப்பதையும் குறிக்கும், அதோடு புரட்சிகரச் சூழலில் மக்கள் எழுச்சிக்குத் தடையாக நிற்காமல் வினையூக்கியாக செயல்படுவதையும் குறிக்கும். நேரடியாக போரில் பங்கேற்ற அனுபவம் கொண்ட எங்கெல்ஸ் போர்க் கலையில் வல்லவர் என்றாலும் கூட பாட்டாளி வர்க்கப் புரட்சியை இறுதிவரை வெற்றிகரமாக நடத்திச் செல்லும் வரலாற்றுச்சூழல் லெனினுக்கே வாய்த்தது, இன்னும் சரியாகச் சொன்னால் அந்த வரலாற்றுக்சூழலை புரட்சியாக மாற்றிய பெருமை லெனினையே சேரும் என்ற அடிப்படையில் தான் புரட்சித் தலைமை லெனினைப் போல் போர்த் தந்திரம் மிக்கதாக இருக்கவேண்டும் என்று சொல்கிறேன்.

நமது ஆயுதத்தைத் தீர்மானிப்பது நமது எதிரி மட்டுமல்ல, வரலாற்றுச் சூழ்நிலைகளே தீர்மானிக்கின்றன. நமது போராட்ட வடிவத்தை அது அமைதிப் போராட்டமா, ஆயுதப் போராட்டமா என்பதையும் எதிரி மட்டும் தீர்மானிப்பதில்லை, வரலாற்றுச் சூழ்நிலைகளே தீர்மானிக்கின்றன. புரட்சியின் எல்லா காலகட்டங்களிலும் ஆயுதப் போராட்டத்தில் ஈடுபடக்கூடாது. அப்படிச் செய்தால் அது இருதரப்பிலும் அளவில்லாத இழப்புகளை ஏற்படுத்தும். புரட்சியின் இறுதிக்கட்டத்தில் ஆயுதப் போராட்டத்தைப் பிரயோகித்தால் மட்டுமே இழப்புகளை ஆகக் குறைந்த அளவாகக் குறைக்கமுடியும். பெருந்திரளான மக்கள் எழுச்சியுற்று புரட்சி வளர்ச்சி அடைந்த இறுதிக் கட்டத்தில் மட்டுமே ஆயுதப் போராட்டம் என்பது தவிர்க்கவியலாததாகிறது.

வரலாற்றுச் சூழ்நிலைகளையும், மக்களின் எழுச்சி நிலையையும் பொறுத்து பொருத்தமான போராட்ட வடிவங்களைக் கையாளவேண்டும் என்றே மார்க்சியம் வழிகாட்டுகிறது. ஒரே போராட்ட வடிவத்தையே எல்லா சூழலிலும் கையாளுவது என்பது சரியான மார்க்சிய அணுகுமுறை கிடையாது. ஆனால் நக்சல் இயக்கத் தலைவரான சாரு மஜும்தர் மக்களின் எழுச்சி நிலையையே கருத்தில் கொள்ளாமல் எல்லா சூழல்களிலும் அழித்தொழிப்பையே ஒரே போராட்ட வடிவமாகவும், சோசலிசத்தை அடைவதற்கான வழிமுறையாகவும் முன்வைக்கிறார். இது மார்க்சிய அனுகுமுறையே கிடையாது.

அழித்தொழிப்பை மட்டுமே வேலைத் திட்டமாகக் கொண்டு செயல்படுபவர்களை வரலாறு பிளாங்கிஸ்டுகளாகவே (blanquist) மதிப்பிடுமே தவிர ஒரு போதும் மார்க்ஸியர்களாக அல்ல.

இதை எதற்காக இப்போது சொல்கிறேன்? எதற்கென்றால் “சிறையில் பூத்த செம்மலர்” என்ற தலைப்பு குறித்து கேள்வி எழுந்தது. “தோழர் தியாகு சிறைக்கு செல்வதற்கு முன்பே செம்மலர் தானே? பிறகு ஏன் தலைப்பில் சிறையில் பூத்த செம்மலர் என்று குறிப்பிடுகிறீர்கள் என்பதே அந்த கேள்வி.

நக்சல் இயக்கத் தோழர்கள் உயிரையே துறக்கும் அளவுக்கு அர்ப்பணிப்பு உடையவர்கள். ஆனால் நக்சல் இயக்கத் தலைவர் சாரு மஜும்தாரின் வழிகாட்டுதல் தவறானது, அது மார்க்சிய வழிமுறையே அல்ல. தியாகு தோழர் கல்லூரி மாணவராக இருக்கும் போது, ஆரம்பத்தில் காங்கிரஸ் இயக்கத் தொண்டராகப் பணியாற்றினார். பிறகு நக்சல்பாரி இயக்கத்தில் இணைந்தார். தியாகு தோழர் சிறைச்சாலையையே அரசியலுக்கான கல்லூரிச்சாலையாக மாற்றிக்கொண்டார். சிறைக்குச் சென்ற பிறகு தான் தியாகு தோழர் சரியான, ஆழமான மார்க்சியப் புரிதலை அடைந்தார் என்பதை அவரது “சுவருக்குள் சித்திரம்”, “கம்பிக்குள் வெளிச்சம் புத்தகங்களின் மூலம் அறிந்ததன் அடிப்படையில் தான் நான் இந்த தொடர்க் கட்டுரைக்கு "சிறையில் பூத்த செம்மலர்" என்று தலைப்பிட்டுள்ளேன்.

(தொடரும்)

 

No comments:

Post a Comment

உலக சமத்துவமின்மை அறிக்கை 2026 (WIR 2026)

  உலக சமத்துவமின்மை ஆய்வகம் 2026ஆம் ஆண்டுக்கான உலக சமத்துவமின்மை அறிக்கையை வெளியிட்டுள்ளது. இதற்கு முன்  2018, 2022லும் உலக சமத்துவமின்மை அற...