Wednesday, September 10, 2025

நேபாளத்தில் ஆட்சிக் கவிழ்ப்பு (1)


நேபாளத்தில் தன்னெழுச்சியாக ஒரு புரட்சி வெடித்துள்ளதாக ஆர்ப்பரிப்பதை ஆங்காங்கே காணமுடிகிறது. 2023லும், 2025லும் நேபாளம் முடியாட்சிக்குத் திரும்பவேண்டும் என்றும் நேபாளத்தை ஹிந்து நாடாக அறிவிக்கவேண்டும் என்றும் பிற்போக்குவாதிகள் ஆயிரக்கணக்கான மக்களைத் திரட்டி புஷ்ப கமல் தஹால், கே.பி.ஷர்மா ஒலி தலைமையிலான கூட்டணி ஆட்சிக்கு எதிராக கிளர்ச்சி செய்தபோது அது எதிர்ப்புரட்சிக்கான கிளர்ச்சி என்பது வெளிப்படையாகவே தெரிந்தது. ஆனால் 2025 செப்டம்பரில் நடந்ததாக கூறப்படும் “ஜென் இசட் புரட்சி” உண்மையிலேயே புரட்சியா, எதிர்ப்புரட்சியா என்பதை நேரடியாக இனங்காணுவதில் சிக்கல் உள்ளது. ஏனெனில் பெரும்பாலான ஊடகங்கள் வழக்கம் போல் ஒரு தலைப்பட்சமாக இந்த கிளர்ச்சியை தன்னெழுச்சியாக நடந்த ஜென் இசட் புரட்சி என்றே சித்தரிக்கின்றன.

1997க்கும் 2012க்கும் இடையில் பிறந்த 13 முதல் 28 வயதுடைய புதிய தலைமுறையைச் சேர்ந்த இளைஞர்கள் ஆங்கிலத்தில் “gen z” இளைஞர்கள் என்றே அழைக்கப்படுகின்றனர்.

நேபாளத்தில் செப்டம்பர் கிளர்ச்சியை ஒருங்கிணைத்த என்.ஜி.ஒ அமைப்பான “ஹமி நேபாள்” போராட்டத்தில் கலந்து கொள்பவர்களுக்கென வயது வரம்பை நிர்ணயித்துள்ளது. அதனால் தான் நேபாளத்தின் நாளைய தலைவராக கணிக்கப்படும் பாலேந்திர ஷா இந்த போராட்டத்தை ஆதரித்த போதும் கூட வயது வரம்பின் காரணமாக போராட்டத்தில் நேரடியாக கலந்துகொள்ளமுடியவில்லை என எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்தார். “ஹமி நேபாள்” என்.ஜி.ஒ அமைப்பின் நிறுவனரான சூடான் குருங்க் போராடுவது எப்படி? தேவைப்பட்டால் வன்முறையில் ஈடுபடுவது குறித்து இன்ஸ்டாகிராமில் வீடியோ வெளியிட்டுள்ளார். இந்த அமைப்பு பெட்ரோல் குண்டு தயாரிப்பது குறித்தும் மாணவர்களுக்கு விளக்கம் அளித்துள்ளது. சமூக வலைத்தளங்களில் கசிந்த அரட்டை-சேட் விவரங்களிலிருந்து வங்காளத்தேசத்தில் நடந்ததைப் போலவே நேபாளத்திலும் ஒரு ஆட்சிக்கவிழ்ப்பு குறித்த விவாதங்களுக்கு சர்வதேச ஊடகங்களுக்கு அழைப்புகள் விடப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.

2015ல் ஆரம்பிக்கப்பட்டு 2020ல் பதிவுசெய்யப்பட்ட இந்த “ஹமி நேபாள்” என்ற என்.ஜி.ஒ அமைப்பு பல வெளிநாட்டு நிறுவனங்களிடமிருந்தும் நன்கொடை பெறுகிறது. கோகோ கோலா, வைபர், கோல்ட்ஸ்டார், மல்பெரி ஹோட்டல்கள் போன்ற வெளிநாட்டு நிறுவனங்களிடமிருந்து 200 மில்லியன் நேபாள ரூபாய் நிதியைப் பெற்றுள்ளது.

நேபாளத்தில் நடந்த 2025 செப்டம்பர் “ஜென் இசட் புரட்சி” இளைஞர்களால் தன்னெழுச்சியால் உருவான கிளர்ச்சி அல்ல. ஆளும் அரசுக்கு எதிரான இளைஞர்களின் உணர்வுநிலையை கிளர்ச்சியாகவும், ஆட்சிக்கவிழ்ப்பாகவும் மாற்றவைத்ததன் பின்னணியில் இரண்டு முக்கிய நபர்கள் உள்ளனர். ஒருவர் “ஹமி நேபாள்” என்.ஜி.ஒ அமைப்பின் நிறுவனர் சூடான் குருங்க், இன்னொருவர் காத்மண்ட் நகரின் மேயராக உள்ள பாலேந்திர ஷா.

ராப் பாடகராக இருந்து அரசியல்வாதியாக மாறிய இந்த பாலேந்திர ஷா தான் நேபாளத்தின் நாளைய தலைவராக அடையாளப்படுத்தப்பட்டுள்ளார். இவர் சர்வதேச அளவில் தொடர்புகளைக் கொண்டவர். அமெரிக்காவின் டைம்ஸ் இதழ், நியூயார்க் டைம்ஸின் கவனத்தையும் பெற்றுள்ளார். டைம்ஸ் இதழின் சிறந்த 100 தலைவர்களின் (2023) பட்டியலில் பாலேந்திர ஷா இடம்பெற்றுள்ளார்.  தி நியூயார்க் டைம்ஸ் பாலேந்திர ஷாவை பாராட்டி கட்டுரை வெளியிட்டுள்ளது. பாலேந்திர ஷா நேபாளத்தில் உள்ள அமெரிக்க தூதரகத்துடன் பலமுறை தொடர்புகளைக் கொண்டிருந்தார் – 2022, 2024 இல் அமெரிக்க தூதர் ஆர். தாம்சனை சந்தித்துள்ளார். 2024 இல் அமெரிக்காவிற்கு வருகை தருமாறு அழைக்கப்பட்டுள்ளார். 2024 ஃபிரான்ஸில் நட்ந்த கேன்ஸ் திரைப்பட விழாவில் பாலேந்திர ஷா கலந்துகொண்டார். மூன்று நாட்கள் ஃபிரான்சில் தங்கியிருந்த பாலேந்திர ஷா பல உலகத் தலைவர்களுடனும், திரைப்படத் தயாரிப்பாளர்களுடனும் கலந்துரையாடியுள்ளார். பாலேந்திர ஷா எந்த அரசியல் இயக்கத்தையும் கட்டமைக்கவில்லை. அவரது அரசியல் கொள்கைகளும் குப்பை மேலாண்மையைத் தாண்டி வளர்ச்சி பெறவில்லை. தெருவோர வியாபரிகளை அப்புறப்படுத்த முயற்சித்ததற்காகவும், அதற்காக காவல்துறை அடக்குமுறையை ஏவியதற்காகவும் இவர் கடுமையாக விமர்சிக்கப்பட்டிருந்தார்.

“ஊழல் ஒழிப்பு” என்ற முழக்கத்தை முன்வைப்பவர்கள் அனைவரையுமே சரியான அரசியல் வழிகாட்டிகளாகக் கருதமுடியாது. அரசியல் தெளிவற்ற விஜய் கூட ஊழல் ஒழிப்பைத் தான் முதன்மைப்படுத்துகிறார். ஊழலில் புரளும் பாஜகவும் மாநிலங்களில் ஊழலை ஒழிக்க தங்களது ஆட்சியைக் கொண்டுவரவேண்டும் என்ற பசப்பு பிரச்சாரங்களில் ஈடுபடுகிறது. வலதுசாரி அரசியலில் ஈடுபடுபவர்கள் தான் பெரும்பாலும் “மனித உரிமைகள்”, “ஊழல் ஒழிப்பு” போராட்டங்களில் ஈடுபடுபவர்களாக உள்ளனர்.

வல்லரசுகள், பன்னாட்டு நிறுவனங்களின் கைக்கூலியாக செயல்படும் “ஹமி நேபாள்” என்.ஜி.ஒ அமைப்பால் கச்சிதமாக நேபாளத்தில் அரங்கேற்றப்பட்ட இந்த ஆட்சி கவிழ்ப்பு நேபாள அரசியலில் பின்னடைவுக்கே வழிவகுக்கும் ஒரு எதிர்ப்புரட்சி மட்டுமே ஆகும். நாளை நேபாளத்திற்கு அமெரிக்கக் கைப்பாவையான பாலேந்திர ஷா தலைமைப் பதவியேற்கவே அதிக வாய்ப்புகள் உள்ளன. இந்த எதிர்ப்புரட்சி புரட்சிகரமான அமைப்புமாற்றத்துக்கு வழிவகுக்கும் என நம்புவர்களுக்கு ஏமாற்றம் மட்டுமே மிஞ்சும்.

 


No comments:

Post a Comment

பொம்மைகளின் புரட்சி (123)

  காலையில எல்லாருமே லேட்டா தான் எந்திரிச்சாங்க… இன்னிக்கு தாத்தா தான் பழக்கடைக்கு போகனும், அதுனால யம்மு பாட்டிக்கு உதவி பண்ணிக்கிட்டே   தாத்...