ஸ்ரீலங்கா, வங்காளதேசம், நேபாளம் மூன்று நாடுகளையுமே ஒரு நேர்க்கோட்டுத் தொடர்பில் வைத்து, இந்த மூன்று நாடுகளுமே ஒரே முடிவை அடைந்ததாகவும், இந்த நாடுகளின் சீன ஆதரவு நிலையே அவற்றை இந்த நிர்க்கதிக்கு தள்ளியதாகவும் சில பொது ஊடகங்களில் கதையாடல்கள் திரிக்கப்படுகின்றன. எந்த அளவுக்கு என்றால் கே.பி.ஷர்மா ஒலியை, போர்க்குற்றவாளி ராஜபக்சேவின் நிலைக்கு தரம் தாழ்த்தும் அளவுக்கு இந்த கதையாடல் மலிந்துள்ளது. இங்கே ஒரு விசயத்தை தெளிவுப்படுத்தவேண்டியுள்ளது, சீனா மற்ற நாடுகளுக்கு கடன் அளிக்கும் போது அது ஐ.எம்.எஃப், உலக வங்கி போல அந்த நாட்டு பொருளாதாரங்களின் மீது எந்த கட்டமைப்புச் சீர்திருத்தங்களையும் நிர்ப்பந்திப்பதில்லை. சீனா மற்ற நாடுகளுக்கு தனியார்மயத்தையோ, தாராளமயத்தையோ, பணமதிப்பிழப்பையோ, நிதிச்சிக்கனத்தையோ நிதியுதவிக்கான முன்நிபந்தனைகளாக வைப்பதில்லை.
நேபாளத்தில் 1990களிலிருந்து
2006 வரை மன்னராட்சிக்கு எதிராக நேபாள கம்யூனிஸ்டு கட்சி, மாவோயிஸ்ட் கட்சி, நேபாள
காங்கிரஸ் கட்சி தலைமையிலான நீண்ட கால மக்கள் போராட்டத்தின் விளைவாகவே 2008ல் மன்னராட்சி
நீக்கப்பட்டு நேபாளத்தில் ஜனநாயகக் குடியரசு நிறுவப்பட்டது. ஆனாலும் கூட அரச குடும்பத்தின்
சொத்துக்கள் முழுமையாக அரசுடைமையாக்கப்படவில்லை.
நேபாள அரசுக்கும், நேபாள கம்யூனிஸ்டு
கட்சிக்கும் இடையே கையெழுத்தான விரிவான அமைதி ஒப்பந்தம் முழுமையான நிலச்சீர்திருத்தத்தை
நடைமுறைப்படுத்துவோம் என உத்தரவாதம் அளித்திருந்தது. 2015ல் அறிவியல் அடிப்படையில்
நிலச்சீர்திருத்தத்தை மேற்கொள்ள சட்டமும் இயற்றப்பட்டிருந்தது. ஆனாலும் கூட நேபாளத்தில்
முழுமையான நிலச்சீர்திருத்தத்தை செயல்படுத்தவில்லை. முழுமையான நிலச்சீர்திருத்தத்தை கொண்டுவராததாலும், பழமையான
விவசாய உற்பத்தி முறைகளாலும் நேபாளத்தின் விவசாயப் பொருளாதாரமும் பின்தங்கிய நிலையிலே
உள்ளது.
நேபாளத்தின் பொருளாதாரத்தில்
உற்பத்தித்துறை 4.37%ஆக மிகக்குறைந்த பங்கையே கொண்டுள்ளது, பெரும்பாலும் சேவைத்துறையைச்
சார்ந்த பொருளாதாரமாகவே நேபாளம் உள்ளது. 2022 நிலவரப்படி நேபாளத்தின் பொருளாதாரத்தில்
விவசாயத்துறை 24.5%ஆகவும், தொழிற்துறை 13.7%ஆகவும், சேவைத்துறை 61.8%ஆகவும் உள்ளது.
வெளி நாட்டில் வேலைபார்க்கும் நேபாளிகள் அனுப்பும் பணம் மொத்த ஜிடிபியில் 22.56%ஆக
இருந்துள்ளது. நேபாளத்தின் கடனின் அளவு மொத்த ஜிடிபியில் 41.4%ஆக உள்ளது.
இந்தியா போன்ற பெரிய சந்தையைக் கொண்ட நாடுகள் எளிதாக அந்நிய முதலீடுகளை ஈர்க்கமுடியும். ஐ.எம்.எஃப் மாடலில் சிக்கித் திணறும் சின்ன நேபாளத்தால் உற்பத்தியைப் பெருக்கும் விதத்தில் போதுமான உள்நாட்டு முதலீடுகளையும் அதிகரிக்கமுடியவில்லை, அந்நிய முதலீடுகளையும் ஈர்க்கமுடியவில்லை என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
நேபாளம் 1976லும், 1985லும்
ஐ.எம்.எஃப்பிடம் குறுகிய கால நிதி ஒப்பந்தங்களை ஏற்படுத்தியுள்ளது. 1987ல் ஐ.எம்.எஃப்பின்
ஆணைப்படி கட்டமைப்பு சீர்திருத்தங்களுக்குக் கட்டுப்பட ஒப்புதல் அளித்துள்ளது. அதன்
பிறகு 1992, 2003ல் நீடித்த கடன் உதவியையும், 2010, 2015, 2020ல் உடனடி கடன் உதவியும்
பெற்றுள்ளது. கொரோனா தொற்றுக்கு பிறகு ஏற்பட்ட பொருளாதார சரிவினால் கடைசியாக 2022லிருந்து
நீடித்த கடன் உதவியையும் பெற்றுவருகிறது. இதன் அடிப்படையில் நடைமுறைப்படுத்தப்பட்ட
இறுக்கமான பணக்கொள்கையின் விளைவாக 2023ல் நேபாளத்தின் ஜிடிபி வீழ்ச்சியடைந்ததும் குறிப்பிடத்தக்கது.
உலகெங்கும் சிறிய நாடுகள்
கடன் நெருக்கடியில் சிக்கித் தவிக்கின்றன. இதற்கு நேபாளமும் விதிவிலக்கு இல்லை. இதுவரை
நேபாளம் மொத்தம் 9 முறை ஐ.எம்.எஃப்பிடம் கடன் உதவி பெற்றுள்ளது. 1990களிலேயே நேபாளத்தில்
ஐ.எம்.எஃப், உலகவங்கி ஆலோசனைகளின் படியான தாராளமயம், தனியார்மயம், கட்டமைப்பு மாற்றத்
திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டிருந்தன. நாணயம் மதிப்பிழக்க செய்யப்பட்டது.
ஐஎம்.எஃப்பிடம் ஏழு முறை கடன் வாங்கிய இந்தியாவின்
நிலையே 1990களுக்கு பிறகு பொருளாதார சீர்திருத்தம் என்ற பேரில் நடைமுறைப்படுத்தப்பட்ட
புதுதாராளமயக் கொள்கைகளாலும், கட்டற்ற தனியார்மயத்தாலும் பொருளாதாரம் சீரழிந்துள்ள
போது, ஒன்பது முறை கடன் பெற்ற நேபாளம் போன்ற ஒரு சிறிய நாட்டின் நிலையை சற்று யோசித்துப்
பாருங்கள்.
2025 மார்ச் 14, அன்று நேபாளத்தின்
காத்மாண்டில் சமூக ஆர்வலர்கள் சர்வதேச நிதி நிறுவனங்களால் நிர்ப்பந்திக்கப்பட்ட கடன்
சுமைக்கு எதிரான ஆர்ப்பாட்டம் நடத்தினர், சர்வதேச நிதி அமைப்புகள் நேபாள நாடு சுமக்கும்
கடன்களை ரத்து செய்ய வேண்டும் என்று கோரி, இந்த கடன் சுமை நியாயமற்றது என்றும் அதை
நீட்டிக்க இயலாது என்றும் அவர்கள் போராடியதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
நேபாளத்தின் பொருளாதாரம் வளர்ச்சியடையாமல்
பின் தங்கியதற்கு முதன்மையான காரணமாக இருப்பது ஐ.எம்.எஃப்பின் ஆணைப்படி அங்கு செயல்படுத்தப்படுகிற
கட்டமைப்புச் சீர்திருத்தங்கள் தான். அரசின் பங்கைக் குறைத்து, ஒழுங்குமுறைகளைத் தளர்த்தும்
தாராளமய, நிதிச் சிக்கன நடவடிக்கைகள், தனியார்மயம் ஆகியவற்றை நிர்ப்பந்திக்கும் ஐ.எம்.எஃப்பின்
கட்டமைப்பு சீர்திருத்தங்களை விலக்கிவிட்டு நேபாளத்தின் இன்றைய பொருளாதார நிலையை மதிப்பிடுவது
நியாயமானதாக இருக்கமுடியாது.
வல்லரசுகளின் பிடியில் சிக்காமல்
மூன்றாம் உலக நாடுகளுக்குள்ளேயே பரஸ்பர நிதியுதவுகளைப் பெறும் வகையில் மாற்று நிதியமைப்பைக்
கொண்டுவரவேண்டியது மிக மிக அவசியமாக உள்ளது.
மோடியை செல்வாக்கு மிக்க தலைவராகப் போற்றும் சுசிலா கார்கியை நேபாளத்தின் இடைக்கால பிரதமராக்கியது, எடுப்பார் கைப்பிள்ளைகளால் பற்றவைக்கப்பட்ட ஜென் இசட் கிளர்ச்சியின் பிற்போக்குத்தனத்தையே பிரதிபலிக்கிறது.

No comments:
Post a Comment