Friday, November 22, 2024

பணம் பேசுறேன் (158):

 

இந்தியாவுல காதலிக்குறது இயல்பானுச்சுன்னா தான் காதல் ஒன்னையே கடைச் சரக்காக்கி விக்கிற படங்களுக்கான சந்தையும் கொறையும். காதலர்களை பிரிச்சுட்டு, காதலர்களைக் கொன்னுப்புட்டு காதல் திரைப்படங்கள ரசிச்சு, ரசிச்சு பாக்குறவங்கள இங்க மட்டும் தான் பாக்கமுடியும். காதலிச்சவங்களையே கல்யாணம் பண்ணிக்கமுடியாததால எத்தன புள்ளைங்க தற்கொலை பண்ணிருக்காங்க தெரியுமா? எல்லா தடைகளையும் மீறி காதலிச்சு கல்யாணம் பண்ணுனாலும் ஆணவக்கொலை பண்ணிடுறாங்களே, இல்லைனா சமூகமே அவங்களை ஒதுக்கிவைக்குதே. இந்தியாவுல காதலிச்சு கல்யாணம் பண்ணிக்கிட்டா அந்த ஜோடி இங்க அகதி நிலையில தான் வாழமுடியுமே தவிர சுதந்திரமான குடிமக்களா வாழமுடியாது. சொந்த தாய்நாட்டுலே அகதிநிலையில வாழுறது எவ்வளவு பெரிய கொடுமை தெரியுமா?. இந்தியாவுல காதலர்களுக்கு தூக்குக் கயிறா இருக்குறது இந்த சாதி தான். இவ்வளவு நாள் சாதித் திருமணங்களால சமூகத்துக்கு தான் பாதிப்பு, பொது நலத்துக்கு தான் பாதிப்பு, சுயநலத்துக்கு பாதிப்பில்லன்னு நெனச்சுக்கிட்டு இருந்தாங்க. ஆனா அதுலயும் விழுந்துச்சுல்ல ஆப்பு. சாதித்திருமணங்கள் செஞ்சா சாதி நோய்களும் கூடவரும்னு தான் சொல்லியிருந்தேனே மறந்துட்டீங்களா. இயற்கைத் தேர்வு சுயநலத்துலயும் ஆப்பு வெச்சுருச்சுல்ல. சுயநலத்துக்காக சாதித்திருமணங்களை செஞ்சுகிட்டா அது சுய அழிவுக்குத்தான் வழிவகுக்கும். நல்லா கவனிச்சுக்கங்க. இந்த இடத்துல தான் சுயநலமும் பொதுநலமும் ஒன்றுபடுது. சாதி மறுப்பு திருமணங்கள்ல தான் சுயநலமும், பொதுநலமும் எந்த முரண்பாடுகளும் இல்லாம இணக்கமா ஒன்றுபடுது. அதுனால தடா பொடா போடவேண்டியது சாதித்திருமணங்களுக்குத் தான். அது மாதிரி சாதிய வெச்சு கல்லா கட்டுற திருமண மையங்களுக்கும் தடை போடனும்.

இந்த இந்திய நாட்டோட பிரதமரையும், மாநிலத்தோட முதலமைச்சரையும் ஓட்டுப் போட்டு தேர்ந்தெடுக்குற வாக்குரிமை 18 வயசு வந்த எல்லா இந்தியப் புள்ளைகளுக்கும் அரசியல் உரிமையா கொடுக்கப்பட்டுருக்கு. ஒரு நல்ல வலிமையான மூன்றாவது முன்னணி இல்லாததுனால, இது அல்லது அதுக்கு தான் ஓட்டுப்போடனும் வேற வாய்ப்பே இல்லைங்குற நெலைமைக்கு மக்கள் தள்ளப்பட்டதுனால இந்த வாக்குரிமை நல்ல ஆட்சி மாற்றத்துக்குக்கூட ஒதவமாட்டீங்குது. ஏதோ பேரளவுலயாவது எல்லாருக்கும் வாக்குரிமையிருக்கு. ஆனா அந்த பேரளவு உரிமை கூட காதல், கல்யாணத்த பொறுத்தவரைக்கும் இந்தியாவுல உள்ளவங்களுக்கு இல்ல. ஒரு நாட்டோட பிரதமர், முதலமைச்சரை எல்லாம் தேர்ந்தெடுக்குற உரிமை இருக்குற குடிமக்களுக்கு ஆயுசுக்கும் தங்களோட இருக்கப்போற, தங்களோட சொந்த வாழ்க்கைத்துணையை தேர்ந்தெடுக்குற உரிமை கூட இருக்குறது இல்ல. இது எவ்வளவு பெரிய அநியாயம்னு யோசிச்சுப் பாத்தீங்களா. வாழ்க்கைத்துணையை தேர்ந்தெடுக்குற சுதந்திரம் கூட பறிக்கப்பட்டுச்சுன்னா அவங்களால எப்புடி சுதந்திரமா வாழுமுடியும், அடிமைகளா தான் வாழமுடியும். நல்ல படிச்ச புள்ளைகளோட தலைவிதியை பெத்தவங்க ஜோசியக்காரன் கிட்ட ஒப்படைச்சிடுறாங்க. வாழ்க்கைத்துணையைத் தேர்ந்தெடுக்குற உரிமையை கூட பறிச்ச இந்த இந்திய சமூகம் எந்தளவுக்கு ஜனநாயகத்துக்கு விரோதமானதா இருக்குன்னு பாத்தீங்களா. நாம எப்பேர்ப்பட்ட போலியான ஜனநாயகத்துல வாழுறோம்னு கொஞ்சம் யோசிச்சுப் பாருங்க. நம்ம சமூகத்தை உண்மையிலேயே ஜனநாயகப்படுத்தனும்னா ஒங்க புள்ளைகள காதலிக்கவிடுங்க. காதலர்களையும், காதலையும் வாழவிடுங்க. சாதி மறுப்புத் திருமணங்களை ஆதரிங்க.

(தொடரும்)

 

No comments:

Post a Comment

பொம்மைகளின் புரட்சி (123)

  காலையில எல்லாருமே லேட்டா தான் எந்திரிச்சாங்க… இன்னிக்கு தாத்தா தான் பழக்கடைக்கு போகனும், அதுனால யம்மு பாட்டிக்கு உதவி பண்ணிக்கிட்டே   தாத்...