Tuesday, November 26, 2024

சூதாடும் காட்டேரி (159):

 


இருக்குறதை கண்டுபிடிக்கறதை விட்டுட்டு இல்லாததைக் கண்டுபுடிச்சிருக்காக. எதை சொல்லுறீகன்னு கேக்குறீங்களா? அட இந்த ஆணாதிக்க சமூகம் ரொம்ப கஷ்டப்பட்டு கண்டுபுடிச்ச கற்பைப் பத்தி தான் சொல்லுறேன். சரி பொதுவா சொல்லப்படுற அர்த்தத்துலயே கற்புங்குறது உண்மையிலயே கற்பு தானா என்பத இப்ப பாப்போம். கற்புன்னா பெண்களுக்கான, பெண்களுக்கு மட்டுமேயான கறாரான பாலியல் ஒழுக்கம்னு சொல்லப்படுது. திருமணமாகாத பெண் ஆணுடன் உடலுறவு கொள்ளாம இருக்கும் கன்னித் தன்மையையும், திருமணம் ஆன பெண் கணவன் ஒருவனோடு மட்டுமே உடலுறவு கொள்ளுற ஒழுக்கத்தையும் தான் கற்புன்னு சொல்லுறாங்க. இந்த ஆணாதிக்க சமூகம் ஆண்களுக்கு எந்த கறாரான பாலியல் ஒழுக்கத்தையும் கற்பிக்கல. இன்னும் சொல்லப்போனா பாலியல் ஒழுங்கீனம் தான் ஆண்மைக்கு அழகு, காளித்தனம் தான் வீரத்துக்கும் அழகுன்னு ஆராதிக்கப்பட்டுருக்கு. கற்பு எனப்படுறது சங்க இலக்கியங்கள்ல பல அர்த்தத்துலயும் கையாளப்பட்டுருந்தாலும் கூட பொதுவா கற்பு என்பது பெண்களுக்கான உடலுறவு சார்ந்த ஒழுக்கமாகத் தான் புரிந்துகொள்ளப்படுது.

 சரி மொதல்ல கற்போட முதல் நிலையா இருக்குற கன்னித் தன்மைய பத்தி இப்ப பாப்போம். பெண்களோட பிறப்புருப்பை சுத்தி மூடியிருக்கிற சவ்வுப்படலத்தை ஹைமென்னும் (hymen) தமிழ்ல யோனிச்சவ்வுனும் சொல்லுறாங்க. தவறுதலா இதை கன்னித்திரை, கன்னிச்சவ்வுனும் சொல்லிக்கிறாங்க. இத வெச்சு செய்யுற அக்னிப்பரீட்சைய வெச்சுத்தான் ஒரு பொண்ணு கன்னித்தன்மையோட இருக்காளா, இல்ல கன்னித்தன்மைய இழந்து “கெட்டுப்போயிட்டாளா”ன்னு முடிவுபண்ணுறாங்க. இதை விட முட்டாள் தனமான கோரமான ஈனத்தனமான நகைச்சுவை எங்கயுமே இருக்கமுடியாது. ஏன்னா சில பெண் கொழந்தைகள் யோனிச்சவ்வு இல்லாம தான் பொறக்குறாங்க. அப்டின்னா அந்த கொழந்தைகள் என்ன அம்மா வயித்துலே இருக்கும் போதே கற்பை இழந்து கெட்டுப்போயிட்டாங்களா? இத விட அபத்தமா ஏதாவது இருக்கமுடியுமா? பெண் கொழந்தைங்க சைக்கிள் ஓட்டும் போதும்,  ஜிம்னாஸ்டிக்ஸ், யோகா, உடற்பயிற்சி செய்யும் போதும் கூட இந்த யோனிச்சவ்வு கிழிஞ்சு போயிடும். அப்டின்னா என்ன சைக்கிள் அவங்க கற்ப அழிச்சுடுச்சா இல்ல உடற்பயிற்சி அவங்களோட கற்பை சூரையாடிச்சிடுச்சா? நடனமாடும் போதும், குதிரையில சவாரி செய்யுற போதும், ஏன் ஓடும் போது கூட, சில சமயம் தவறி கீழ விழுந்துட்டா கூட யோனிச்சவ்வு சிதைஞ்சுபோயிடும். அப்புறம் பொண்ணுங்க மாதவிடாய் சுகாதாரத்துக்காக ‘tampons’- பஞ்சுத்தக்கை or ‘menstrual cups’- மாதவிடாய் கோப்பைகள் பயன்படுத்துனாலும் யோனிச்சவ்வு கிழிஞ்சுபோயிடும். பொண்ணுங்கள ஒரு பெண் மருத்துவரே உடல் பரிசோதனை பண்ணிப் பாத்தாக்கூட யோனிச்சவ்வு கிழிஞ்சுபோயிடும். மொத்தத்துல கன்னித்தன்மைக்கு எந்த அறிவியல் அடிப்படையும் கெடையாது. வயசு வந்த ஆண் புள்ளைகளுக்கு மொதல் மொதலா மொளைக்கிற மீசை, தாடிய மழிச்சுட்டா கன்னித்தன்மை போயிடும்னு சொல்லுறது, கற்பு போயிடும்னு சொல்லுறது எவ்வளவு முட்டாள்தனமோ அதைவிட முட்டாள்தனமா தான் யோனிச்சவ்வ வெச்சு பெண்களோட கன்னித்தன்மைய சோதிக்கிறதும், நடத்தையை தீர்மானிக்கிறதும் இருக்கு. அதுனால பெண்களோட சுயமரியாதையை இழிவுபடுத்துற அறிவியலுக்கு எதிரான இந்த அவமானகரமான கேவலமான மூடப்பழக்கவழக்கத்துக்கு முடிவு கட்ட வேண்டியது ரொம்ப ரொம்ப அவசியம்.

(தொடரும்)

 

 

No comments:

Post a Comment

பொம்மைகளின் புரட்சி (123)

  காலையில எல்லாருமே லேட்டா தான் எந்திரிச்சாங்க… இன்னிக்கு தாத்தா தான் பழக்கடைக்கு போகனும், அதுனால யம்மு பாட்டிக்கு உதவி பண்ணிக்கிட்டே   தாத்...