Monday, November 25, 2024

பணம் பேசுறேன் (159):

 

நாட்டோட தலைவர தேர்ந்தெடுக்குற உரிமை இருக்குற ஒங்களுக்கு, ஒங்களோட சொந்த வாழ்க்கைத்துணைய தேர்ந்தெடுக்குற உரிமை கூட இல்லை. இதுலேருந்து என்ன தெரியுது, இந்தியாவோட அரசியலமைப்பை விட இந்திய சமூக அமைப்பு இன்னும் பிற்போக்கானதா இருக்கு. இதுக்கு முழுக்க முழுக்க சாதி தான் காரணம். நம்ம நாட்டுல பையன பெத்தவுக பொண்ணை எடுக்குறதும், பொண்ணை பெத்தவுக பொண்ண கொடுக்குறதும் தான் வழக்கமா இருக்கு. அதுனால ஆண்களுக்கு பொறந்த வீடு மட்டும் தான் புகுந்த வீடு கெடையாது. ஆனா பொண்ணுக கல்யாணத்துக்குப் பெறகு புகுந்தவீட்டுல தான் வாழனும், பொறந்த வீட்டுல வாழமுடியாது. சரி இந்த குடும்பம் நடத்துறதுன்னா என்னங்க? எதுக்கு எல்லாரும் கல்யாணம் பண்ணிக்குறாங்கன்னு எங்க பக்கத்து வீட்டு அக்காளைக் கேட்டேன்? என்னது சண்டை போடுறதுக்காகவா? மாமியா மருமகளோட சண்டை போடுறதுக்காகவும், மருமக மாமியாவோட சண்டை போடுறதுக்காகவும், புருஷன், பொண்டாட்டியோட சண்டை போடுறதுக்காகவும், பொண்டாட்டி, புருஷனோட சண்டை போடுறதுக்காகவும், இதோட ஓர்ப்படியா சண்டை, பங்காளி சண்டைன்னு எல்லா குடும்ப சண்டைகளையும் சேத்துக்கங்களாம், குடும்ப சண்டைகள் போடுறதுக்காகத்தான் கல்யாணம் பண்ணிக்குறாங்க. யாரு நல்லா வரிஞ்சுகட்டிக்கிட்டு சண்டை போடுவான்னு பாத்துதான் மருமகளையே மாமியா தேர்ந்தெடுக்குதாம், மாமியாவை மருமகள் தேர்ந்தெடுக்குதாம் அந்த அக்கா சொல்லுது.. அப்புறம் பொழுதனைக்கும் டிவி சீரியல் பாத்தா இப்புடி சொல்லாம வேறெப்படி சொல்லுவாக. இன்னும் ஒரு வருசத்துக்கு டிவி பக்கமே தலை வெச்சுப் படுக்காதான்னு சொல்லிட்டு வந்துருக்கேன். சரி விசயத்துக்கு வாறேன்.

நம்ம சொத்த பிறத்தியாருக்குக் விடக்கூடாது, நமக்குள்ளே வெச்சுக்கனும்னு சொத்தைப் பாதுகாக்கத்தான் பெரும்பாலானவங்க சாதித் திருமணம் செஞ்சுவைக்கிறாங்க. அப்புறம் சாதி தாண்டுனா சொந்தக்காரங்க மதிக்கமாட்டாங்க, எளக்காரமா பாப்பாங்க, சாதி தாண்டுனா சாமிக்குத்தம் ஆயிடும் இப்புடி அடுக்கடுக்கா மரபு, பாரம்பரியம், சமூக அந்தஸ்து சார்ந்த பல விசயங்கள் அவுங்கள சாதி தாண்ட அனுமதிக்கவே விடாது. அது மட்டுமில்லாம தங்களோட புள்ளைகளுக்கு பொண்ணு, மாப்புள்ளைய தாங்களே தேர்ந்தெடுத்து கல்யாணம் பண்ணிவெச்சாத் தான் புள்ளைகளால பாதுகாப்பா இருக்கமுடியும், சந்தோசமா இருக்கமுடியும்னு தான் இந்தியாவுல உள்ள பெத்தவங்க நெனைக்கிறாங்க. சாதிக்குள்ளே கல்யாணம் பண்ணிட்டா, சொந்தத்துக்குள்ளே கல்யாணம் பண்ணிட்டா பிரச்சினை வராது. வேற சாதில பொண்ணு எடுத்து கல்யாணம் பண்ணா அந்த பொண்ணு குடும்பத்துக்கு அணுசரணையா இருக்காது, அதெல்லாம் நமக்கு ஒத்தே வராது பிரச்சினை தான் வரும், பெறத்தியில பையன் பார்த்து கல்யாணம் பண்ணி வெச்சா நம்ம பொண்ண நல்லா பாத்துக்க மாட்டாங்க, அதுக்கு பாதுகாப்பு இருக்காது, பிரச்சினை தான் வரும்னு நெனைக்கிறாங்க. புள்ளைங்களோட வருங்காலம் என்ன ஆகுமோ, ஏது ஆகுமோங்குற நிச்சயமற்ற தன்மை பத்திய பய உணர்வு இந்திய பெற்றோர்களுக்கு ரொம்ப அதிகமாவே இருக்கு, தெரியாத பேயை விட தெரிந்த பிசாசே மேல் என்பது தான் இந்தியாவுல உள்ள பெத்தவங்களோட “தர்க்கமா” இருக்கு. புள்ளைங்களுக்கு எது புடிக்கும் எது புடிக்காதுன்னு அவங்கள பெத்து வளத்த அம்மா, அப்பாவுக்கு தெரியாதா… அவங்களுக்கு புடிச்ச மாதிரி தான் நாங்க பொண்ணு மாப்பிள்ளையையே தேடுவோம்னு அவங்க சொல்லுவாங்களே தவிர புள்ளைகளோட தேர்வுரிமைய இப்புடி மறுக்குறோமே, பறிக்கிறோமேன்னு அவங்க அத பத்தி நெனச்சுப்பாக்க மாட்டாங்க.

இந்த புள்ளைங்கள்ல பார்த்தா சாதிக்கல்யாணம் பண்ணிக்கிறவங்கள்ல மூணு வகை இருக்காங்க. நம்ம சமூகத்தோட மரபு, பாரம்பரியம், நம்பிக்கைக்குக் கட்டுப்பட்டு வாழுறது தான் மொறை, அப்படி வாழ்ந்தா தான் பிரச்சினையில்லாம வாழமுடியும்னு நெனைக்கிறவுங்க இருக்காங்க. அம்மா, அப்பா சொல்லுற பொண்ணு/ பையனை கட்டிக்கிட்டா தான் அம்மா, அப்பாவோட சொத்து கெடைக்கும், இல்லைனா கெடைக்காது பிரச்சினைனு சொத்துக்காகத்தான் பெரும்பாலானவங்க சாதிக்கல்யாணம் பண்ணிக்கிறாங்க. புள்ளைகளோட கல்யாண நேரத்துல தான், அம்மா, அப்பா மேல அவங்க வெச்சிருக்க பாசத்துக்கு அக்கினிப் பரிட்சை வைக்கப்படுறதையும் பல நேரங்கள்ல நீங்களே பாத்துருப்பீங்க. நான் எங்க அம்மா, அப்பா மேல உயிரே வெச்சுருக்கேன். எங்க அம்மா, அப்பா பேச்ச தட்டமாட்டேன், எங்க அம்மா, அப்பாவுக்கு பிடிக்குறது எல்லாமே எனக்கும் புடிக்கும்னு, எங்க அம்மா அப்பா பாத்து கல்யாணம் பண்ணி வெக்குற பொண்ணு/பையன் எனக்கும் புடிக்கும்குறது இன்னொரு வகை புள்ளைகளோட பாசக்கார“தர்க்கமா” இருக்கு. சாதிக்கல்யாணத்துக்கு முக்கியமான காரணமா இருக்குறது ஒன்னு சொத்து, ரெண்டாவது மரபு, பாரம்பரியம், கலாச்சாரம் சார்ந்த மூட நம்பிக்கைகள். மூணாவது ரத்தபாசம், பாசம் கண்ணை மறைக்குறதுனால தான் இந்த உரிமை மீறல் எதுவுமே கண்ணுக்கேத் தெரியமாட்டீங்குது. அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சுன்னு சொல்லுறது எதுக்கு பொருந்துதோ இல்லையோ இந்தியாவுல உள்ள பெத்தவங்களோட பிள்ளை பாசத்துக்கும், புள்ளைங்களோட அம்மா, அப்பா பாசத்துக்கும் அது ரொம்ப நல்லா பொருந்தும். ஏன்னா சாதிக்கல்யாணங்களோட தீமைகள பாசத்திரைகள் மூடி மறைச்சுடுதே.

(தொடரும்)

 

No comments:

Post a Comment

பொம்மைகளின் புரட்சி (123)

  காலையில எல்லாருமே லேட்டா தான் எந்திரிச்சாங்க… இன்னிக்கு தாத்தா தான் பழக்கடைக்கு போகனும், அதுனால யம்மு பாட்டிக்கு உதவி பண்ணிக்கிட்டே   தாத்...