Tuesday, November 19, 2024

சூதாடும் காட்டேரி (156):

 

நம்ம நாட்டுல கல்யாணம்குறது பெரும்பாலும் பெத்தவங்களால ஏற்பாடு செஞ்சு வெக்கிற கல்யாணங்களா தான் இருக்கு. வீட்டுல கல்யாணப் பேச்சுன்னு வந்துட்டாலே பெத்தவங்க எத மொதல்ல பாப்பாங்க, சாதிய பாப்பாங்க, சொத்து சொகத்தை பாப்பாங்க. மாப்பிள்ளை வீட்டுக்காரவுங்க பொண்ணு வீட்டுல எவ்வளவு சொத்து இருக்கு, எவ்வளவு வரதட்சணை கொடுப்பாங்க இத தான் மொதல்ல பாப்பாங்க. பொண்ணு வீட்டுக் காரவுங்க மாப்பிள்ளை வீட்டுல எவ்வளவு சொத்து இருக்கு, பையன் நல்லா சம்பாரிக்கிறாரா, நல்லா சம்பாரிக்கிற அளவுக்கு படிச்சிருக்குறாரான்னு பாப்பாங்க. அப்பொறம் தான் அழகு, குணம், நெறம் கருப்பா, செகப்பா, மாநிறமா அது, இது லொட்டு லொஸுக்குன்னு மத்த விசயங்கள பாப்பாங்க. மத்த எதுவுமே ஒத்துவராட்டிக்கூட சொத்து நெறையா இருந்துச்சுன்னா அதுவே அவங்க மனசை மாத்தி ஒத்துக்கவெச்சுடும். பையன் சரியா படிக்காட்டி கூட பத்து தலைமுறைக்கு ஒக்காந்து சாப்புடுற அளவுக்கு சொத்து இருக்கா அப்ப சரி. பையன் நல்லா இல்லை ஆனா சொத்து இருக்கா அப்ப சரி. மாப்புள்ளை வழுக்கையும் தொப்பையுமா இருக்குறாரு ஆனா அமெரிக்கால கிரீன் கார்டோட செட்டில் ஆயிட்டாரா, அப்டின்னா ரொம்ப சரி இப்ப தான் நாத்து நடுற மாதிரி முடியையும் நட்டுக்கலாம்ல.  பையன் கொஞ்சம் முன்கோபி, கொணம் பத்தாது ஆனா சொத்து நெறையா இருக்கு, அட நாளைக்கு புள்ளை குட்டின்னு வந்தா அதெல்லாம் பக்குவம் தானே வந்துரும்ல. பொண்ணு நல்லா இல்ல, ஆனா சொத்து நெறையா கெடைக்குமா, அப்ப சரி, பொண்ணு நெறமா இல்ல, நெறைய வரதட்சணை கிடைக்குமா அப்ப சரி. இங்க தான் ஒரு சாதிக்குள்ள பல படிக்கட்டுகள் இருக்கே. பையன் சாதியில கொஞ்சம் மட்டம் தான் ஆனா சொத்து நெறையா இருக்கு, அப்டின்னா சரி. பொண்ணு கொஞ்சம் சாதியில மட்டம் ஆனா வரதட்சணை நெறையா கொடுப்போம், அப்ப பிரச்சினையில்லை. இந்த மாதிரி எல்லா “குறைகளையும்” இட்டு நெரப்பக்கூடிய சக்தியா கல்யாணத்த தீர்மானிக்குற சக்தியா சொத்துத் தான் இருக்கு. இங்க திருமணம் என்பது பொண்ணு, மாப்புள்ளையோட விருப்பம் சார்ந்ததா இல்லாம, பொருளாதார அடிப்படையிலான, சொத்து, வருமானம் அடிப்படையிலான ஒரு சமூக அமைப்பா இருக்கு. ஒரு பையனோ, பொண்ணோ பெத்தவங்க சொன்னபடிக் கல்யாணம் பண்ணிக்கிட்டா தான் அவங்களோட சொத்துக்கு வாரிசாக முடியும்குற நிர்ப்பந்தத்தின் அடிப்படையில தான் இந்த அமைப்பே கட்டிக்காக்கப்பட்டு வருது. விரும்பி கல்யாணம் செய்யாம சொத்துக்காகத் தான் கல்யாணம் செய்யப்படுது. அம்மா, அப்பாக்கிட்டேருந்து சொத்து வாங்குறதுக்காக கல்யாணம் செய்யப்படுது. இன்னொரு பக்கம் பொண்ணு மாப்பிள்ளை வீட்டுலேருந்தும், மாப்பிள்ளை பொண்ணு வீட்டுலேருந்தும் சொத்து வாங்குறதுக்காகவும் கல்யாணம் செய்யப்படுது. இந்த பழக்கம் ஏதோ இன்னைக்கு நேத்து வந்தது இல்ல. எப்ப இந்த ஒருத்திக்கு ஒருவன் எனப்படுற ஒரு தார மணமுறை திருமணங்கள் நடைமுறைக்கு வந்துச்சோ அப்போதுலேருந்தே இதுதான் வழக்கமா இருந்துவருது. இங்க ஒருத்திக்கு ஒருவன்னு தான் சொல்லிருக்கோமே ஒழிய ஒருவனுக்கு ஒருத்தின்னு சொல்லலை. ஏன்னா ஆணாதிக்க சமூகத்துல ஒரு தாரமணமுறை என்பது பெண்களுக்கு மட்டும் தான் பொருந்தும், ஆண்களுக்கு ஆஸ்திக்கு ஒரு தாரம், செல நேரத்துல அதுலயும் கூட பல தாரம். ஆசைக்கு அதையெல்லாம் வெளில சொல்லலாமா, சொல்லாமலே எல்லாருக்கும் வெளில தெரிஞ்சா கூட கண்டுக்காம இருந்துக்கனும்ல, கண்டுக்கிட்டா கூட பெருசா எடுத்துக்கக்கூடாதுல்ல. ஒரு ஆம்பளைன்னா அப்புடி இப்புடி இருக்குறது எல்லாம் சகஜம் தான. ஆனா பொம்பளை அப்புடி இருக்கலாமா? புருசனைத் தவிர வேற யாரையாவது நிமுந்து பாத்தாக்கூட இல்லை யாருகிட்டயாவது சும்மா பேசுனா கூட அது ஒன்னு பத்தாதா அவள நடத்தை கெட்டவளாக்குறதுக்கு.

(தொடரும்)

 

No comments:

Post a Comment

பொம்மைகளின் புரட்சி (123)

  காலையில எல்லாருமே லேட்டா தான் எந்திரிச்சாங்க… இன்னிக்கு தாத்தா தான் பழக்கடைக்கு போகனும், அதுனால யம்மு பாட்டிக்கு உதவி பண்ணிக்கிட்டே   தாத்...