Sunday, November 30, 2025

பொம்மைகளின் புரட்சி (121)

 


யம்மு பாட்டி: சிங்கம் தலைய சிலுப்பிக்கிட்டு பார்வையாளர்களைப் பாத்துச்சாம், ஒரே கைதட்டாம்… அடுத்ததா மயில் மேடைக்கு வந்து தோகைய விரிச்சு டான்ஸ் அடுனுச்சாம்… அப்புறம் தொண்டைய கமறிக்கிட்டு பேச ஆரம்பிச்சுச்சாம்…

மயில்: நானும் என் மனசுல பட்டத இப்ப சொல்லப்போறேன், எல்லாருமே என்ன ரொம்ப அழகு, அழகுண்ணு பாராட்டுறாங்க, ஆனா ஏனோ தெரியல என் குரலோ, நான் பாடுற பாட்டோ நெறையா பேருக்கு புடிக்கிறதுல்ல, அவுங்களுக்கு குயிலோட குரலும் பாட்டும் தான் புடிக்குது, ஆனா எனக்கு என் குரலும் புடிச்சிருக்கு…

எனக்கு நான் மட்டும் அழகா தெரியல, கொண்டைக் குலாத்தி, இமாலய மோனல், யாழ் பறவை போல பல பேரு அழகா தெரியுறாங்க… நீல வானப் பின்புலத்துல கிளைகளைப் பரப்பி பச்சை பசேல்னு படர்ந்து கொண்டல் கொண்டலா உயர்ந்து நிக்கும் மரங்கள் அழகா… கரும்பாறைகள்லேருந்து வெண்பட்டுத் தோகைபோல கீழே தவழுற அருவி, நதியாகி கடலாவது அழகா… அந்த கடலிலும், நதியிலும் தன் முகம் பாக்குற நிலாவும் சூரியனும் அழகா…. இவை எல்லாமே பேரழகு தான, உலகத்துல எல்லாருமே ஒரே மாதிரி இருந்தா நல்லாவா இருக்கும்… வாழ்க்கையே போரடிச்சு சலிச்சுப் போயிடும்… அப்படி எல்லாருமே ஒரே மாதிரி இருக்க நாம என்ன ஸெராக்ஸ் காப்பிகளா… இல்ல ரோபோ எந்திரங்களா… நாம எல்லாருமே தனித்துவமான அழகும், அறிவும் உடைய உயிரிகள் ஆச்சே… பல நிறங்கள் சேர்ந்து இருக்குறதுனால தான வானவில்லே அழகா இருக்குது… அதுபோலத் தான் பல வகை உயிரினங்கள் இருக்குறதுனால தான் இந்த உலகமே பேரழகா இருக்கு. அதுல ஒருத்தரை மட்டும் பிரிச்சு தனிமைப்படுத்தி அழகு விருது கொடுக்குறது பேரழகின் பொருளையே அவமதிக்கிறதா இருக்கு, மத்தவங்களயும் சிறுமைப்படுத்துது…

 சில பேரு அழகா இருந்துட்டா போதுமே, அது மட்டுமே போதும்னு அறிவ வளர்த்துக்க எந்த முயற்சியும் பண்ணாம வாழ்க்கைய அழகுக்குள்ளயே சுருக்கிக்கிறாங்க, ஆனாலும் கூட தங்களை ஏதோ பெரிய திறமையாளர்களாகவும், வாழ்க்கையில என்னமோ பெருசா வெட்டிக் கிழிச்ச சாதனையாளர்களாகவும் கற்பனை பண்ணிக்கிறாங்க… இந்தா பாருங்க, இயற்கை கொடுத்த அழகுக்கு யாருமே தனிப்பட்டு உரிமை கொண்டாட முடியாது, உங்க அழகுங்குறது உங்க அம்மா, அப்பாவிடமிருந்து தான் உங்களுக்குக் கெடைச்சிருக்கு. அதுக்கு நீங்க தான் காரணம்னு ஆணவப்படுறது அறியாமை. வாழ்க்கையில சாதிக்கவேண்டிய விசயங்கள் எத்தனையோ இருக்கே, அதுக்கு வேண்டிய அறிவை வளர்த்துக்காம அதான் அழகா பொறந்துட்டோமே, அது போதும், அதை வெச்சே எல்லாத்தையும் சாதிச்சுடலாம்னு கண்ணாடியையே பாத்துக்குட்டு இருந்தா, கண்ணாடியே காறித் துப்புற நேரம் வந்துரும். அதுனால அறிவை வளர்த்துக்குட்டு ஆகுற காரியத்தப் பாருங்க. அழகுப்போட்டிங்குறது நம்ம ஒற்றுமைக்குத் தடையா இருக்குற பிரிவினைவாதத்தைத் தான் வளக்குது. அதுனால இப்புடிப்பட்ட அழகுப்போட்டிகள வெக்குறது இதுவே கடைசி தடவையா இருக்கட்டும்… இனிமே நடத்தாதிங்க… கடைசியா என்றென்றைக்குமான பேரழகு விருதை இயற்கைக்குக் கொடுக்குமாறு நான் முன் மொழிகிறேன்…

நடுவர் குழு: ரொம்ப நல்ல யோசனை, அதை நாங்களும் வழிமொழிகிறோம்… அதன் படி நேற்று, இன்று, நாளை என என்றென்றுக்குமான பேரழகு விருதை இயற்கைக்கு அறிவிக்கிறோம்…

எல்லாரும் ஜோரா கைத்தட்டுனாங்க…

இயற்கை அன்னை மகிழ்ச்சியோட வந்து விருதை வாங்கிக்கிட்டாங்க…

 (தொடரும்)

Thursday, November 27, 2025

சூதாடும் காட்டேரி (223)

 

மத்திய காலத்துல ஐரோப்பாவின் வங்கிமையம் ஃபுளோரன்ஸிலிருந்து ஜெர்மனிக்கு மாத்தப்பட்டுருக்கு. ஃபுளோரன்ஸின் வங்கியமைப்பு எப்புடி வீழ்ச்சியடைஞ்சுச்சுண்ணு ஏற்கெனவே பாத்தோம். புதிய வங்கி மையமா ஜெர்மனி எப்புடி உருவானுச்சு என்பதைப் பத்தியும் கள்ளக் கூட்டு முதலாளித்துவ நிறுவனத்தின் முதல் மாதிரியைப் பத்தியும் இப்ப பாப்போம்.

ஆக்ஸ்பர்க்கின் ஃபக்கர் குடும்பம்:

ஜெர்மனியின் பவேரியாவில் உள்ள ஆக்ஸ்பர்க் நகரத்துல 1367 முதல் வசிச்சு வந்த ஃபக்கர் குடும்பம், நெசவு செஞ்ச துணி, ஆடைகளை வர்த்தகம் செய்யுறதிலிருந்து தான் தொழிலை ஆரம்பிச்சுருக்கு. இந்த குடும்பம் மூணு தலைமுறைகளுக்குள்ள, முன்னணி வணிகக் குடும்பமா வளர்ந்ததோட மட்டுமில்லாம வங்கிக் குடும்பாகவும் வளர்ந்து தேவாலயத்திலும் அரசாங்கத்திலும் முக்கியமான பதவிகளை அடைஞ்ச பிரபுக்களின் குடும்பாகவும் வளர்ந்துருக்கு. இந்த குடும்பம் பதினாறாம் நூற்றாண்டில் ஐரோப்பிய பொருளாதாரத்தின் பெரும்பகுதியைக் கட்டுப்படுத்தி எக்கச்சக்கமான செல்வத்தைக் குவிச்சிருக்கு. இந்த வங்கிக் குடும்பம் மறுமலர்ச்சியின் போது ஐரோப்பா முழுக்க தாக்கம் செலுத்துன மெடிசி குடும்பத்தின் இடத்தைப் பிடிச்சுருச்சு. இந்த குடும்பம் உயர்ந்த ஹாப்ஸ்பர்க் வம்சத்துடன் நெருக்கமாக இருந்ததுடன், அவங்களுக்கு நிதியும் அளிச்சிருக்கு.

ஃபக்கர் குடும்பம் ஆரம்பகால முதலாளித்துவ சகாப்தத்தின் வர்த்தக நிறுவனத்தின் முன்மாதிரியாகக் கருதப்படுது. ஏண்ணா இந்த குடும்பத்தினர் வங்கியையும், வர்த்தகத்தையும் ஒருங்கிணைத்துருக்காங்க, வணிக லாபங்களுக்காக அரசு அதிகாரத்தைப் பயன்படுத்தியிருக்காங்க, அதோட பரந்த, ஒரு சர்வதேச வலையமைப்பையும் நிறுவியிருக்காங்க.

இவங்களோட ஆரம்பகால-முதலாளித்துவ மாதிரியின் முக்கிய அம்சங்கள் பின்வருமாறு:

வங்கி, வர்த்தகத்தின் ஒருங்கிணைப்பு: ஃபக்கர்ஸ் நீண்ட தூர வர்த்தகத்தை (ஜவுளி, வாசனைப் பொருட்கள் போன்றவை) விரிவான நிதி சேவைகளுடன் இணைச்சாங்க, போப்பாண்டவர் நிர்வாகத்துக்கான வங்கி, பணப் பரிமாற்ற சேவைகளை செஞ்சாங்க, நாணயங்களை உற்பத்திசெய்றதுக்கான உரிமையை குத்தகைக்கு எடுத்துருக்காங்க. இந்த பன்முகப்படுத்தப்பட்ட அணுகுமுறையால் அவங்க பெருமளவுக்கு மூலதனத்தை சேமிக்கமுடிஞ்சுது.

தொழில்துறை முதலீடு: உற்பத்தியில அவங்க நேரடியா முதலீடு செஞ்சுருக்காங்க. குறிப்பாக ஆட்சியாளர்களுக்கு கொடுக்குற கடன்களுக்கான பிணையமாக டைரோலியன், ஹங்கேரிய வெள்ளி செப்பு சுரங்கங்களை எடுத்துருக்காங்க. இதன் மூலமா செப்பு சந்தையில கிட்டத்தட்ட ஏகபோக உரிமையையும், மதிப்புமிக்க வளங்களையும், விநியோகச் சங்கிலிகளையும் தங்களோட கட்டுப்பாட்டுக்குள்ள கொண்டுவந்துருக்காங்க.

கள்ளக் கூட்டுக்கான முன்மாதிரி: ஜேக்கப் ஃபக்கர் தனது செல்வத்தை வெச்சு அரசியல் ஆதாயங்களை அடைஞ்சுருக்காரு. அரசு அதிகாரத்திற்கும் தொழில் வர்த்தகத்துக்கும் இடையிலான ஆரம்பகால கள்ளக்கூட்டுக்கு எடுத்துக்காட்டாக சார்லஸ் V ஐ புனித ரோமானிய பேரரசராகத் தேர்ந்தெடுப்பதற்கு நிதியளிச்சுருக்காரு. அதற்கு ஈடாக, ஜேக்கப் ஃபக்கருக்கு சாதகமான சுரங்க உரிமைகளையும், வர்த்தக சலுகைகளையும் (எ.கா., அல்மடனில் உள்ள ஸ்பானிஷ் பாதரச சுரங்கங்களில்) கிடைச்சுருக்கு.

சர்வதேச வலையமைப்பும் உள்கட்டமைப்பும்: இந்த குடும்ப நிறுவனம் வெனிஸ், ஆண்ட்வெர்ப், லிஸ்பன், செவில் உள்ளிட்ட ஐரோப்பா முழுவதும் உள்ள முக்கிய வணிக மையங்களில் பரந்த அளவிலான அலுவலகங்கள், முகவர்களின் வலையமைப்பைக் கொண்டிருந்தது. இது நவீன பன்னாட்டு நிறுவனங்களைப் போலவே சிக்கலான தளவாடங்களை நிர்வகிக்கவும், சந்தை தகவல்களை சேகரிக்கவும், கண்டம் விட்டு கண்டம் செல்லும் பொருட்களின் ஓட்டங்களை எளிதாக்கவும் உதவிருக்கு.

அதிநவீன வணிக நடைமுறைகள்: பாரம்பரிய கில்ட் கட்டமைப்புகளைத் தாண்டி நகர்ந்து, வணிக சாதுர்யம், இடர் மதிப்பீடு, மூலோபாய திட்டமிடல் ஆகியவற்றில் கவனம் செலுத்துற நவீனமான, ஒற்றை குடும்பக் கட்டுப்பாட்டு நிறுவனத்தை உருவாக்குனாங்க.

(தொடரும்)


Wednesday, November 26, 2025

இந்திய சாதிய முதலாளித்துவத்தின் வர்க்கப்பகுப்பாய்வு (78)

 

1.சாதிய முதலாளி வர்க்கம்:

இதுக்கு முன்னாடி நாம பார்த்த ஆய்வுக்கட்டுரைகளில் பெறப்பட்ட முடிவுகளை மேலும் உறுதிப்படுத்துற மாதிரி “ஜெர்னல் ஆஃப் கார்ப்பரேட் ஃபைனான்ஸ்” ஆய்விதழில் 2023ல ஆய்வறிக்கை வெளியிட்டுருக்காங்க.  “நிறுவன வாரியங்களில் சமூக பன்முகத்தன்மையும், நிறுவன முடிவுகளும்” என்பது தான் அந்த ஆய்வுக் கட்டுரையின் தலைப்பு. இந்த ஆய்வுக்கட்டுரை  என்ன சொல்லுதுண்ணா: "நிறுவன இயக்குநர்களிடையேயான சமூக பன்முகத்தன்மை உறுதியான செயல்திறனுடன் எவ்வாறு தொடர்புடையது என்பதை நாங்கள் ஆராய்ந்தோம். இதை நாங்கள் மதம், சாதி -இது இந்தியாவின் இந்து சமூகத்தை நூற்றுக்கணக்கான சமூகங்களாகப் பிரிக்கும் ஒரு ஆழமான வேரூன்றிய நிறுவனமாகும்- சார்ந்த பன்முகத்தன்மையின் அடிப்படையில் ஆராய்ந்தோம்.  இயக்குநர்களின் சமூக அடையாளங்களை இனங் காண, சாதி மத குடும்பப் பெயர்களின் முதல் தரவு சார்ந்த வரைபடங்களை உருவாக்கினோம். 1999–2015 ஆம் ஆண்டில் இந்திய நிறுவன வாரியங்கள் குறிப்பிடத்தக்க வகையில் பன்முகத்தன்மையில்லாமல் ஒரே மாதிரியாக இருப்பதைக் காண்கிறோம். நான்கு கருவி மாறி உத்திகளைப் பயன்படுத்தி, வாரிய ஒருமைப்பாடு நிறுவனத்தின் செயல்திறனுடன் எதிர்மறையாக தொடர்புடையது என்பதையும் காண்கிறோம். வாரிய ஒருமைப்பாட்டின் எதிர்மறையான தாக்கம், சாதியால்-நெருக்கமான இயக்குநர்களின் ஒரே மாதிரியான நோக்குகளும், வலையமைப்புகளும், அவர்களின் கண்காணிப்பு, ஆலோசனைப் பாத்திரங்களை சீர்குலைப்பதன் காரணமாக இருப்பதையும் காண்கிறோம்"ணு சொல்லியிருக்காங்க.

இந்தியாவில் சாதியும், தொழில்முனைவும் என்ற தலைப்புல 2013ல “ஐடியாஸ் ஃபார் இந்தியா” வலைதளத்துல வெளியிடப்பட்ட ஆய்வுக்கட்டுரையில தொழில்முனைவோர்களின் விகிதாச்சாரத்தை சாதி அடிப்படையில பகுப்பாய்வு செஞ்சுருக்காங்க.

தொழில்முனைவில் சாதி வேறுபாடுகளின் பங்கை ஆராய்தல்:

இந்த ஆய்வுக் கட்டுரையில 1990, 1998, 2005ஆம் ஆண்டுகளில் மத்திய புள்ளிவிவர அமைப்பால் நடத்தப்பட்ட இந்திய பொருளாதார கணக்கெடுப்புகளிலிருந்து, நிறுவன உரிமை குறித்த விரிவான தரவுகளைப் பயன்படுத்தி சாதி வேறுபாடுகளின் பங்கை ஆய்வு செஞ்சுருக்காங்க. இந்த கணக்கெடுப்புகள் நாட்டில் உள்ள அனைத்து விவசாயம் அல்லாத நிறுவனங்களின் முழுமையான எண்ணிக்கையை வழங்குது. 2005 கணக்கெடுப்பு 420 லட்சத்துக்கும் அதிகமான நிறுவனங்களை உள்ளடக்கியது, இவற்றில் சுமார் 990 லட்சம் தொழிலாளர்கள் பணியில் இருந்துருக்காங்க. அவங்கள்ல 49% பேர் நகர்ப்புற நிறுவனங்களால் பணியமர்த்தப்பட்டுருக்காங்க. பொருளாதார கணக்கெடுப்புகள் ஒவ்வொரு நிறுவனத்தின் இருப்பிடம், தொழில்துறை வகைப்பாடு, பணியமர்த்தப்பட்ட தொழிலாளர்களின் எண்ணிக்கை, அதில் குடும்பம், கூலித் தொழிலாளர்களின் கலவை பற்றிய விவரங்கள், நிதி ஆதாரங்கள், நிறுவன உரிமையாளரின் சாதி வகை பற்றிய விரிவான தகவல்களை வழங்குகின்றன. பொதுவில் வர்த்தகம் செய்யப்படும் நிறுவனங்கள் அல்லது கூட்டுறவு நிறுவனங்களின் உரிமையை ஒரு குறிப்பிட்ட உரிமையாளரின் சாதியாகக் கருத முடியாது என்பதால், இந்த பகுப்பாய்வு தனியார் நிறுவனங்களின் உரிமையில் மட்டுமே கவனம் செலுத்திருக்கு. இந்தியாவின் 19 பெரிய மாநிலங்களின் தரவுகளில் கவனம் செலுத்திய இந்த ஆய்வுல இந்தியாவின் மக்கள்தொகையில் 96 சதவீதமும், மொத்த நிறுவனங்களில் 95 சதவீதமும் அடங்கும்.

தாழ்த்தப்பட்ட சாதியினரும், தனியார் நிறுவனங்களும்:

இந்த பகுப்பாய்வு மூன்று முக்கிய கண்டுபிடிப்புகளை எடுத்துக்காட்டுது. முதலாவதாக, 2005 ஆம் ஆண்டின் பிற்பகுதியில, தனியார் நிறுவனங்களின் உரிமையிலும், தனியார் நிறுவனங்களால் உருவாக்கப்பட்ட வேலைவாய்ப்பிலும் பட்டியல் சாதியினரும் (SC), பட்டியல் பழங்குடியினரும் (ST) ரொம்ப குறைவாகவே இருந்துருக்காங்க. 2005 ஆம் ஆண்டில் அனைத்து நிறுவனங்களிலும் பட்டியல் சாதியினர் 9.8% நிறுவனங்களை மட்டுமே சொந்தமாக வெச்சிருந்தாங்க, இது மொத்த மக்கள்தொகையில் அவர்களின் 16.4% பங்கை விட ரொம்ப குறைவு. நாட்டின் மக்கள்தொகையில் 7.7% ஆக இருந்த பட்டியல் பழங்குடியினரும், விவசாயம் அல்லாத நிறுவனங்களில் 3.7 சதவீதத்தை மட்டுமே சொந்தமாக வெச்சிருந்தாங்க, விவசாயத்தில் இல்லாத தொழிலாளர்களிலும் பட்டியல் பழங்குடியினருக்கு 3.4% என இதேபோன்ற குறைவான பிரதிநிதித்துவமே காணப்படுது. இதற்கு நேர்மாறாக, பிற பிற்படுத்தப்பட்ட சாதிகளின் (OBC) உறுப்பினர்கள் தொழில் முனைவோர் செயல்பாட்டில் நல்லா பிரதிநிதித்துவப்படுத்தப்படுவது தெரியவந்துருக்கு. 2005 ஆம் ஆண்டில் அனைத்து நிறுவனங்களிலும் 43.5% ஓ.பி.சி உறுப்பினர்களின் உடைமைகளாக இருந்துருக்கு, மேலும் விவசாயம் அல்லாத வேலைவாய்ப்புகளில் 40% இவங்களுடையதாக இருந்துருக்கு. இது ஒட்டுமொத்த மக்கள்தொகையில் அவர்களின் மதிப்பிடப்பட்ட பங்கான 43 சதவீதத்துடன் ஒத்துப்போவதாக இருக்குதுண்ணு சொல்லிருக்காங்க.

(தொடரும்)


Tuesday, November 25, 2025

சூதாடும் காட்டேரி (222)

 


அமைதி விரும்பிகளாகக் கருதப்படுற மதபோதகர்கள் தான் பல போர்களை ஏவிவிட்டுருக்காங்க. அதுக்கு உதாரணமா சிலுவைப்போரை சொல்லியிருந்தோம், உண்மையான கிறித்துவர்களா இருந்த சிலுவைப் போர்வீரர்களான டெம்ப்ளர்களை மத நிந்தனையாளர்களா ஃபிலிப் மன்னன் எரிக்கும் போது போப் தான் அதுக்கு உடந்தையா இருந்தாரு. இன்னொரு போப் ஆட்சியைக் கவுக்க சதி செஞ்சாரு, ஃபுளோரன்ஸுல மெடிசி வங்கிக் குடும்பம் ஆட்சியாளர்களா இருக்கும் போது தான் அது நடந்துச்சு. கீழ வர்ற வரலாற்றுக்கதையில அதுவும் ஒரு பகுதியா இருக்கு என்னண்ணு பாருங்க. 

மத்திய காலத்துல ஐரோப்பாவின் வங்கிமையமா ஃபுளோரன்ஸ் வளர்ந்துச்சுண்ணு பாத்தோம். ஃபுளோரன்ஸின் வங்கியமைப்பு 15ஆம் நூற்றாண்டுல வீழ்ச்சியடைஞ்சுருச்சு. எதுனால தெரியுமா? .

1463ல வெனிஸுக்கும் ஒட்டோமான் பேரரசுக்கும் இடையே போர் வெடிச்சிருக்கு, அதுனால ஆசியாவுடனான வர்த்தகம் துண்டிக்கப்பட்டுருக்கு, போருல பல வெனிஸ் வர்த்தக நிலையங்கள் தீப்பிடிச்சு எரிஞ்சுருச்சு. வணிகர்களும் இறந்துருக்காங்க, பாய்மரக்கப்பல்கள் கடலின் அடியில மூழ்கடிக்கப்பட்டுருக்கு, சரக்குகள் தடுத்து வைக்கப்பட்டுருக்கு. வர்த்தக நிலையங்கள், வணிகர்கள், கப்பல்கள், சரக்குகள் நிதியளிச்ச வெனிஸ் வங்கியாளர்கள், நொடிச்சுப் போயிட்டாங்க, இந்த நெருக்கடியால இத்தாலிய வங்கிகள் மூழ்கியது. இதுனால மெடிசி வங்கிக்கு நேரடி பாதிப்புகள் குறைவாக தான் இருந்துருக்கு. ஆனா நிலுவைக்கடன்களால, வைப்புத்தொகையும் குறைஞ்சுருக்கு. ஃபுளோரன்சில் கடுமையான மந்தநிலை ஏற்பட்டது.

இங்கிலாந்திலிருந்து கம்பளி கிடைக்குறதுல ஏற்பட்ட சரிவுனாலயும் ஃபுளோரன்ஸ் அடி வாங்குனுச்சு. வங்கித் தொழில் மட்டுமில்லாம பட்டு, வெல்வெட், டமாஸ்க், உயர்தர கம்பளி துணிகளின் தயாரிப்பும், வணிகமும் ஃபுளோரண்ஸில் வளர்ந்துருந்துச்சு. கம்பளி தயாரிப்புகளுக்கு அவங்களுக்கு இங்கிலாந்து கம்பளி தேவைப்பட்டுச்சு. ஆனால் இங்கிலாந்து ரோஜாக்களின் போர்களால பேரழிவை சந்திச்சுருந்துச்சு, மூலப்பொருட்களை ஏற்றுமதி செய்யுறதுக்குப் பதிலாக இங்கிலாந்திலேயே துணியை உற்பத்தி செய்வதற்கான ஒரு திட்டமிட்ட கொள்கை அறிமுகப்படுத்தப்பட்டது. இதனால ஃபுளோரன்ஸுக்கு இங்கிலாந்து கம்பளி கிடைப்பது கஷ்டமா போச்சு. அதுனால 15 ஆம் நூற்றாண்டின் இரண்டாம் பாதியில ஃபுளோரன்ஸின் துணி உற்பத்தி குறைஞ்சுருச்சு.

1478 இல் மெடிசியை பதவி நீக்கம் செய்யுறதுக்காக சிஸ்டைன் தேவாலயத்தின் போப் சிக்ஸ்டஸ் IV சதித்திட்டத்தை அரங்கேத்தியிருக்காரு. இருந்தாலும் மெடிசி ஜெயிச்சிட்டாரு, ஆனா போப் அதுக்கப்புறம் மெடிசி வங்கியின் வாடிக்கையாளரா இல்லாம போயிட்டாரு. ரோமானியக் கிளை தான் வங்கி லாபத்துல பாதிக்கும் மேல கொடுத்ததால இது மெடிசி வங்கிக்கு கடுமையான அடியா போச்சு. 

இது மட்டுமில்லாம மெடிஸி வங்கி பிரபுக்களுக்கும், அரசர்களுக்கும் ஏராளமா கடன் கொடுத்துருக்கு, அதையெல்லாம் வசூல் பண்ண முடியல. 1494 ல் ஃபிரெஞ்சு மன்னர் சார்லஸ் VIII இன் இத்தாலி மேல தொடுத்த போரால இத்தாலி கடுமையாக பாதிக்கப்பட்டுச்சு. மெடிசி குடும்பத்தினர் வெளியேத்தப்பட்டாங்க. அவங்க ஃபுளோரன்ஸுக்கு பிரபுக்களாக திரும்புனாலும் கூட வங்கித் தொழில் முடிவுக்கு வந்துடுச்சு.

(தொடரும்)

Monday, November 24, 2025

பணம் பேசுறேன் (244)

 


சமூக அந்தஸ்தைக் கொடுக்குற பொருளே ஆதிப்பணமா மாறுனுச்சுண்ணு பொருளாதார அறிஞர் கெர்லோஃப் முன்வெச்ச கோட்பாட்டை வரம்புக்குட்பட்டு ஆதரிக்கலாம், பொருளாதார மானுடவியலுக்கான கோட்பாடுகளின் தொகுப்புல இந்த கோட்பாட்டையும் சேர்க்கலாம்னு சொல்ற பொருளாதார அறிஞர் பால் எயின்சிக் இறுதியா இந்த கோட்பாட்டைப் பத்தி என்ன சொல்றாருண்ணு இப்ப பாப்போம்.

11. தகுநிலை அடையாளச் செயல்பாடு மூலம் பணத்தின் தோற்றம்:

ஆதிப் பணத்தின் தோற்றமும் பரிணாமமும் சமூகத்துக்கு சமூகம் மாறுபட்டிருக்க வேண்டும், அதுனால ஆதிப்பணத்தின் தோற்றத்தைப் பத்தி பொதுமைப்படுத்துவது எப்போதுமே ஆபத்தானது தான்.

ஒரு எச்சரிக்கையான அறிஞர் யூகத்தின் துறையில இருக்கும்போது எப்போதும் கருத்தில் கொள்ளவேண்டிய சந்தேகங்கள் இல்லாம கெர்லோஃப்பின் எழுத்துக்களில் இந்த விஷயத்தில் பல திட்டவட்டமான அறிக்கைகளா இருக்கு. அறிஞர்கள் ரொம்ப குறைவாகவே உறுதியாகத் தெரிந்துகொள்ள முடியும் என்பதை உணரும் நிலையை,  கெர்லோஃப் ரொம்ப காலத்துக்கு முன்னாடியே எட்டியது ரொம்ப சிறப்புக்குரியது. ஆனால், நாம எல்லாருமே நமக்குப் புடிச்ச கோட்பாடுகளால் மயக்கப்படுறதுக்கு ஏத்தவர்கள் தான், அதுனால நமது மிகைப்படுத்தல்களை சரிசெய்து நமது கோட்பாடுகளை சரியான கண்ணோட்டத்தில் முன்வைப்பது நமது விமர்சகர்களின் பொறுப்பாகும்.

ஒரு வகையில், கெர்லோஃப்பின் கோட்பாடு உண்மையில் தவறானது என்று நிரூபிக்கப்படலாம். பணத்தின் அலங்கார தோற்றம் குறித்த தனது வாதத்தை ஆதரிக்கும் போது, நாணயங்கள் கூட முதலில் மரியாதை மற்றும் கண்ணியத்தின் அடையாளங்களாக இருந்தன, மாறாக தரம் தாழ்ந்த பண்டமாற்று வழிமுறைகளாக இல்ல என்று அவர் வலியுறுத்துறாரு. வரலாற்று சான்றுகள் இந்த சர்ச்சை கருத்திலிருந்து முரண்படுகின்றன. "முந்தைய நாணயங்களின்" ஆரம்பகால வரலாற்று நிகழ்வுகளில் ஒன்றான அசீரிய முத்திரையிடப்பட்ட இங்காட்கள் செல்வமாக வைத்திருப்பதன் மூலம் வழங்கப்பட்டதைத் தவிர வேறு எந்த கௌரவத்தையும் வழங்கியதாகக் குறிக்கும் விதத்தில் எதுவும் இல்லை. லிடியாவின் ரொம்ப அடிப்படையான எலக்ட்ரம் கழிவுகள், ஆரம்பகால அறியப்பட்ட நாணயங்கள் அவை குறைந்தபட்சம் அலங்காரமாக இல்லாதவை, எந்தவொரு அலங்கார நோக்கத்திற்கும் சேவை செய்யாதவை, அல்லது உண்மையில் அவை விலைமதிப்பற்ற உலோகங்களை வைத்திருப்பதன் மூலம், முத்திரையிடப்பட்ட அல்லது வேறுவிதமாக வழங்கியதைத் தாண்டி அவற்றின் உரிமையாளர்களுக்கு எந்த கௌரவத்தையும் வழங்கியிருக்கலாம் என்று நம்புவதற்கு எந்த காரணமும் இல்லை.

இதையெல்லாம் சொன்ன பிறகு, கெர்லோஃப் ஒருதலைப்பட்சமான பிடிவாதக் கொள்கையைக் கொண்டிருந்தாலும், ஆழமாக வேரூன்றிய கிளாசிக்கல் கோட்பாட்டிற்கு மாற்றாக, அதே போல் ஒருதலைப்பட்சமான ஒரு கோட்பாட்டை முன்வைப்பதற்கான சாத்தியத்தை நிரூபிப்பதன் மூலம் ஒரு உண்மையான சேவையைச் செய்துள்ளார் என்பதைச் சேர்க்க வேண்டியதும் அவசியம். அவரது கோட்பாடு, மிகுந்த திறமையுடன் ஆதரிக்கப்பட்டு, பழமையான பணத் துறையில் பிடிவாதத்தின் ஆபத்துகளுக்கு எதிரான எச்சரிக்கையாகச் செயல்பட வேண்டும். மரபுவழி கோட்பாட்டை சரியானதாக எடுத்துக் கொள்ளும் பொருளாதார வல்லுநர்கள், மேலோட்டமாகப் பார்க்கும்போது, ​​சமமாக நம்பத்தகுந்ததாகத் தோன்றக்கூடிய மற்றொரு கோட்பாட்டை உருவாக்கும் சாத்தியத்தை நிரூபிக்கும் இந்த உதாரணத்தின் மூலம் ஒரு நல்ல பாடத்தைக் கற்றுக்கொள்ளலாம்.

கெர்லோஃப்பின் கோட்பாடு பொருளாதார மானுடவியலுக்கான கோட்பாடுகளின் தொகுப்பிற்கு ஒரு மதிப்புமிக்க சேர்க்கையாகக் கருதப்படுவதற்கு போதுமான உண்மையைக் கொண்டுள்ளது. அதன் வரம்புகளுக்குள்ள, அதன் செல்லுபடியாகும் தன்மை, "கேள்விக்குரிய பொருள் (அல்லது அதன் குறிப்பிட்ட பயன்பாடு) இல்லாமல் போனால் என்ன நடக்கும்?" என்ற கேள்வியில் வெளிப்படுத்தப்பட்ட பழக்கமான சூத்திரத்தின் சோதனையைத் தாங்குகிறது. பிராங்க்ளின் ஃப்ரேசரின் கூற்றுப்படி, "நவீன பணம் அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து—ஆஃப்ரிக்காவின் பல்வேறு பகுதிகளில் யார் வேண்டுமானாலும் கால்நடைகளை வாங்கலாம், இதன் விளைவாக கால்நடைகள்—உழைப்பைக் கட்டளையிடும் சக்தியை இழந்தன".

வேறு வார்த்தைகளில் கூறுவதானால், சில வகையான ஆதிப் பணம் ஒரு தகுநிலை-குறியீடாக இருப்பதை நிறுத்தும் தருணத்தில், பிற பணச் செயல்பாடுகளைச் செய்யும் அவற்றின் திறன் குறையத் தொடங்கும், அல்லது முற்றிலுமாக நின்றுவிடும்.

(தொடரும்)

 

வருமா மீண்டும் தங்கத் தரம் (2)

 

1870க்கு பிறகு உலக அளவுல தங்கத் தரத்தின் அடிப்படையிலான நிலையான பரிமாற்ற விகித அமைப்பு நடைமுறைக்கு வந்துச்சு. இதன் படி நாணயங்களுக்கிடயிலான பரிமாற்ற விகிதம், தங்கத் தரத்தின் அடிப்படையில நிலையானதாக இருந்துச்சுண்ணு பாத்தோம். 1971ல நிக்சன் அரசு டாலரை தங்கத்தரத்திலிருந்து நீக்குனதன் விளைவாக உலகெங்கும் மிதக்கும் பரிமாற்ற விகித அமைப்பு நடைமுறைக்கு வந்துச்சு. உலக அளவுல டாலருக்கான கிராக்கி கொறையாம பாத்துக்குறதுக்காக தங்கத் தரத்திலிருந்து நீக்குன டாலரை பெட்ரோலுடன் கோர்த்துவிட்டு பெட்ரோ டாலர் உருவானுச்சுண்ணும் பாத்துட்டோம். இராக், இரான், வெனிசுலா, லிபியா, சிரியா ஆகிய நாடுகள் பொருளாதாரத் தற்சார்பைக் கடைபிடிக்கும் விதமா பெட்ரோலியப் பொருட்களை தங்களோட சொந்த நாணயங்கள்ல வித்ததுனால தான் அமெரிக்கா இந்த நாடுகள் தீவிரவாதத்தை ஆதரிச்சாங்க, பேரழிவு ஆயுதங்களை உற்பத்தி செஞ்சாங்க, மனித உரிமைகளை மீறுனாங்கண்ணு பொய்யான சாக்குபோக்குகளை அடுக்கி இந்த நாடுகள் மீது போர் தொடுத்துச்சு. இவை பெட்ரோ டாலர் போர்கள்ணு அழைக்கப்படுது. டாலரின் மேலாதிக்கத்தால் எண்ணெய் உற்பத்தி நாடுகள், வளரும் நாடுகள்,  அனைத்துமே பாதிக்கப்பட்டுருக்கு.

தன்னோட மேலாதிக்கத்தை ஏத்துக்காத நாடுகள் மேல பொருளாதாரத் தடைகளை விதிப்பது தான் அமெரிக்காவுக்கு வழக்கம். ரஷ்யா, ஈரான், வெனிசுலா, கியூபா, சூடான், ஜிம்பாப்வே, மியான்மர், காங்கோ, வட கொரியா சீனா, பாகிஸ்தான், துருக்கி எனப் பல நாடுகளின் மீது அமெரிக்கா பொருளாதாரத் தடைகளை விதிச்சுருக்கு. இதனால் அந்த நாடுகள் மட்டுமல்லாம அந்நாடுகளுடன் பரிவர்த்தனை செய்து வந்த மத்த நாடுகளும், நிறுவனங்களும் கூட பாதிக்கப்பட்டாங்க. 2022ல ரஷ்யா-உக்ரைன் போருக்குப் பிறகு ஜி7 நாடுகள் நிதித் தடைகளை அதிக அளவுக்கு விதிச்சிருக்கு. ரெண்டாவது முறை ஆட்சிக்கு வந்த டிரம்ப் சகட்டுமேனிக்கு ஒரு சுங்கவரிப் போரை ஏவிருக்காரு. இதனால அமெரிக்காவின் பகை நாடுகள் மட்டுமில்லாம, நட்பு நாடுகளுக்கும் கூட டாலர் ராஜ்யத்தை விட்டு வெளியேறி ஒரு மாற்றுக் கட்டமைப்பை உருவாக்க வேண்டிய அவசியம் உருவாகியிருக்கு.

பிரிக்ஸ் (BRIC) கூட்டமைப்பு. டாலருக்கு பதிலா உறுப்பு நாடுகளின் சொந்த நாணயங்களிலும், டிஜிட்டல் கட்டணங்கள் வழியாகவும் இருதரப்பு வர்த்தகத்தை மேற்கொள்ள ஊக்கிவிக்குது. 2023ல டாலர்நீக்கத்தை ஆதரிக்கும் விதமா பிரிக்ஸ் நாடுகளுக்குப் பொதுவான ஒரு நாணயத்தை உருவாக்குற திட்டம் பரிசீலனையில இருந்துச்சு. அதை தாங்கமுடியுமா அமெரிக்காவால? பிரிக்ஸ் புது நாணயத்தை உருவாக்கமாட்டோம்ணு உறுதிமொழிகொடுக்கனும். வலிமையான டாலருக்கு பதிலாக வேறு நாணயங்களை ஆதரிக்கக்கூடாது. இல்லைணா 100% சுங்கவரி போட்டுருவேண்ணு 2024 நவம்பர்ல மிரட்டல் விட்டாரு டிரம்ப். 2025ல ஆட்சிக்கு வந்த பெறகு ஃபிப்ரவரியில டாலரின் அழிவைப் பத்தி பேசுனா அந்த பிரிக்ஸ் நாட்டுக்கு 150% சுங்கவரி போட்டுருவேன் ஜாக்குரதைணு மறுபடியும் மெரட்டிருக்காரு. புதிய பிரிக்ஸ் நாணயத்தையும், டாலர் நீக்கத்தையும் முன்னாடி ஆதரிச்சுவந்த ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின், நமக்கு எதுக்குடா வம்புண்ணு 2025 பிரிக்ஸ் மாநாட்டுல அதை பத்தி வாயே தொறக்கலை. பிரேசில் அதிபர் லுலா சில்வா மட்டும் தான் பிரிக்ஸ் நாணயத்தைப் பத்தி பேசியிருந்தாரு. ஆனா 2025 பிரிக்ஸ் மாநாட்டின் இறுதி தீர்மானத்துல பிரிக்ஸ் நாடுகளுக்கான புதிய நாணயம் என்ற வார்த்தையே இடம்பெறல.

.டாலர் மீதான நம்பிக்கையின்மையால் நெதர்லாந்து, ஜெர்மனி, ரஷ்யா, சீனா, பெல்ஜியம், ஆஸ்திரியா, துருக்கி, அஸெர்பைஜன் ஆகிய நாடுகள் அமெரிக்காவில் உள்ள தங்களோட தங்கச் சேமிப்புகளை திரும்பப் பெற்றன. அமெரிக்காவுக்குக் கடனளித்த நாடுகளான சீனா, ரஷ்யா, பிரேசில், ஜப்பான், ஐக்கிய முடியரசு, அயர்லாந்து, சுவிட்சர்லாந்து, லக்ஸம்பர்க், கனடா, மெக்சிகோ, துருக்கி ஆகியவை அமெரிக்க பத்திரங்களிலான முதலீடுகளைக் குறைச்சுட்டாங்க.

2022 ரஷ்யா-உக்ரைன் போரைத் தொடர்ந்து ஜி7 நாடுகள் ரஷ்யாவின் அந்நிய செலாவணி இருப்புக்களை முடக்கிட்டாங்க. உக்ரைனின் மறுசீரமைப்பு முயற்சிகளுக்கு நிதியளிக்க முடக்கப்பட்ட ரஷ்ய சொத்துக்களைப் பயன்படுத்த ஜி7 நாடுகள் முடிவு செஞ்சாங்க. இதுனால  உஷாரான மத்திய வங்கிகள் நாடு கடந்து இருக்கும் தங்களோட தங்க இருப்புகளை திரும்பப் பெற்று உள்நாட்டுக்கே கொண்டுவந்துட்டாங்க.  2020கள்ல 50%ஆக இருந்த மத்திய வங்கியின் உள்நாட்டு தங்க இருப்புகள் 2024ல 68%ஆக உயர்ந்துருக்கு. ஆனாலும் கூட உலகளாவிய தங்க இருப்புகள்ல கணிசமான பகுதி இன்னும், அமெரிக்காவின் ஃபெடரல் ரிசர்வ் வங்கியிலும் ஐக்கிய முடியரசின் இங்கிலாந்து வங்கியிலும் தான் சேமிக்கப்படுது.

உலகளாவிய ஏற்றுமதியிலும் உற்பத்தியிலும் அமெரிக்காவின் பங்கு குறைஞ்சுருச்சு. சர்வதேச வர்த்தகத்துல டாலர் இன்னும் ஆதிக்கம் செலுத்துனாலும் அதன் பங்கு குறைஞ்சுவருது என்பதும் குறிப்பிடத்தக்கது.  சர்வதேச கட்டணங்களில் (SWIFT) அமெரிக்க டாலரின் பங்கு 60% ஆக இருக்கு. பத்திர சந்தையில் டாலரின் பங்கும் 50%லிருந்து  2024ல் 30%ஆகக்குறைஞ்சுருக்கு. சுங்கவரித் தடைகளால சரக்குச் சந்தையிலும் டாலரின் பங்கு குறைஞ்சுருக்கு. வர்த்தக விலைப்பட்டியல்களின் டாலரின் பங்கு 40%ஆகவும், எல்லை தாண்டிய கடப்பாடுகளில் டாலரின் பங்கு 48% ஆகவும் வெளிநாட்டு நாணயக் கடன் வழங்கலில் டாலரின் பங்கு 70%ஆகவும் இருக்கு.

 2025 ஆம் ஆண்டு நிலவரப்படி, அந்நியச் செலாவணி (FX) சந்தையில அதிகமாக பரிவர்த்தனை செய்யப்படும் டாலரின் பங்கு 89.2%ஆக இருக்கு. ஆனாலும் கூட உலகளவில் மத்திய வங்கிகளின் அந்நியச் செலவாணி இருப்புகளில் டாலரின் பங்கு 1960களில் 90% இருந்தது 2024ல 58%ஆக கணிசமா குறைஞ்சுருக்கு. அதே நேரத்துல மத்திய வங்கிகளின் தங்க இருப்புகள் கணிசமா அதிகரிச்சுருக்கு.

(தொடரும்)

Sunday, November 23, 2025

பொம்மைகளின் புரட்சி (120)

 


யம்மு பாட்டி: உலக அழகுப் போட்டியில நடுவர் குழு பேசுறதையே கேக்கமுடியாத அளவுக்கு கைதட்டுற சத்தம் பலமா இருந்துச்சு…

நடுவர் குழு: இன்னும் விருது அறிவிப்புகள் முடிவடியல, அது முடிஞ்ச பெறகு இன்னும் நல்லா பலமா கூட தட்டுங்க, ஆனா இப்ப நாங்க சொல்றது எல்லாருக்கும் கேக்கனும், அதுக்கு நீங்க தான் அனுமதிக்கனும்… சரி

நடையழகுக்கான விருது பூனை, குதிரை, கரடி, சிறுத்தை, பென்குயின், மயில், செம்போத்து குழுவுக்கு

சிறகு அழகுக்கான விருது கழுகு, பருந்து, ஆந்தை, ஆல்பட்ரஸ், மக்கா, அன்னம் குழுவுக்கு

கொம்பழகுக்கான விருது காளை, காட்டெருமை, பெருங்கொம்பாடு, கொம்பு மான், சைகா மான், இபெக்ஸ் மான், அடாக்ஸ் மான், காண்டாமிருகம் குழுவுக்கு

ஏற்கெனவே அறிவிச்சதுல விடுபட்டது கண்ணழகுக்கான விருதுக் குழுவுல டிக் டிக் மான், பைகா, தரை நாயும் இருக்காங்க…

 விருதுகளை அறிவிச்சவுடனே எல்லாரும் வந்து விருது வாங்கிட்டாங்க… அறிவிப்பு முடிஞ்சவுடனே ஓண்ணு அழுற சத்தம் கேட்டுச்சு… முதலை கண்ணீர் வடிச்சுக்கிட்டே மேடைக்கு வந்துடுச்சு…

நடுவர் குழு: என்னாச்சு ஏன் அழறீங்க

முதலை: எனக்கு சிரிப்பழகு விருது கெடைக்கும்ணு நெனச்சேன், இப்டி ஏமாத்துவீங்கண்ணு நான் நெனக்கவேயில்ல… நல்லா பல்ல காட்டுறவங்களுக்கு தான புன்னகையரசி பட்டம் கொடுக்குறீங்க, நான் என்ன கொறைச்சலாவா காட்டுறேன்… என்னோட 110 பல்லையும் இல்ல காட்டுறேன், விருது கொடுக்கலைனா வழக்கு போடுவேன்…

நடுவர் குழு: உங்களுக்கு கொடுத்தா சுறா மீனுக்கும் கொடுக்கனும், அவுங்களுக்கு கொஞ்ச நஞ்சம் இல்ல 3000 பல் இருக்கு… பெயர் விடுபட்டுருந்தா மன்னிச்சுக்கங்கண்ணு தான் சொல்லியிருந்தோமே ஏன் புரிஞ்சுக்கமாட்டிங்கிறிங்க…. சரி தன்னோட பல்லழகுல முதலை வெச்சுருக்க நம்பிக்கைய கொறைச்சு மதிப்பிட்டது தப்பு தான் சிரிப்பழகு விருதை முதலை, சுறா இருவருக்குமே அறிவிக்கிறோம்… வாங்க வந்து வாங்கிக்கங்க…

சிங்கம்: நான் ரெண்டு வார்த்தை பேசலாமா…

நடுவர் குழு: நீங்க பேசாட்டி எப்புடி, நல்லா பேசுங்க…

சிங்கம்: என்னோட சிகையழகுக்குக் காரணம் என்னண்ணு நெனைக்கிறீங்க… நானே சொல்லிடுறேன்… ஷாம்பு போடாததுனால தான் என் முடி இவ்வளவு அழகா இருக்கு…

ஆசாமி: அப்டிண்ணா நீங்க சிங்கமார்க் சீயக்காய் போடுறீங்களா

சிங்கம்: இந்த வாய்க் கொழுப்பு தான வேணாங்குறது, நான் சிங்கமார்க்கும் போடல, புளி மார்க்கும் போடல, இந்த மாதிரி கண்டதெல்லாம் போட்டு என்னோட இயற்கை அழகை காலி பண்ணாம அப்டியே ச்சும்மா விட்டுருவேன்… அது தான் என் அழகின் ரகசியம்… நடக்குறதெல்லாம் நானும் பாத்துக்குட்டு தான் இருக்கேன்… லிப்ஸ்டிக் போட்டா தான் உதட்டுக்கு கான்ஃபிடன்ஸ் வரும்ணு சொல்றாங்க… காஜல் போட்டா தான் கண்ணுக்கு கான்ஃபிடன்ஸ் வரும்ணு சொல்றாங்க, ஃபேசியல் பண்ணா தான் மூஞ்சிக்கு கான்ஃபிடன்ஸ் வரும்ணு சொல்றாங்க, ஷாம்பு போட்டா தான் முடிக்கு கான்ஃபிடன்ஸ் வரும்ணு சொல்றாங்க, எப்பா முடியல சத்தியமா சொல்றேன் தாங்கமுடியல… இதையெல்லாம் நம்பி ஏமாந்துறாத கண்ணா… என்ன மாதிரி ஒன்னுமே பண்ணாம இயற்கை அழகோட ச்சும்மா சிங்கம் மாதிரி மாஸ் காட்டுங்க… வரட்டா….

(தொடரும்)


Friday, November 21, 2025

இந்திய சாதிய முதலாளித்துவத்தின் வர்க்கப்பகுப்பாய்வு (77)

 


1.சாதிய முதலாளி வர்க்கம்:

2010ல இந்திய சந்தை மூலதனத்துல 80% பங்கு வகிக்கிற 1000 நிறுவனங்களோட வாரியங்களின்- கார்ப்பரேட் போர்ட் உறுப்பினர்களில் 93%  உயர்சாதியினர் தான் மேலாதிக்கம் செலுத்துறாங்க, வாரிய உறுப்பினர்களில் வெறும் 3.8% பிற்படுத்தப்பட்ட சாதியினரும், வெறும் 3.5% தான் பட்டியலின சாதியினரும், பட்டியலின பழங்குடியினரும் இருக்காங்கண்ணு பாத்தோம். இந்திய நிறுவனங்களோட வாரியங்களைப் பத்தி செய்யப்பட்ட வேறு சில ஆய்வு முடிவுகளையும் இப்ப பாப்போம்.

இந்தியாவின் தொழில்துறையில் மதமும், சாதியும் (The Business of Religion and Caste in India) என்ற தலைப்பில் செமாண்டிக் ஸ்காலர் என்ற ஆய்விதழில் 2017ல வெளியிடப்பட்ட ஆய்வுக்கட்டுரையில என்ன சொல்றாங்கண்ணா: ஒரே மதம், சாதியைச் சேர்ந்த நெருங்கிய உறவினர்களை வாரியங்களின் உறுப்பினர்களாகக் கொண்ட நிறுவனங்கள் சரியாக செயல்படுறதில்லையாம், பலதரப்பட்ட நபர்களை வாரியங்களின் உறுப்பினர்களாகக் கொண்ட நிறுவனங்கள் சிறப்பாக செயல்படுதுண்ணு கண்டுபிடிச்சிருக்காங்க. நீங்களே அதை கேளுங்க:

“பெரிய இந்திய நிறுவனங்களின் இயக்குநர்கள் குழுக்களில் அதிக அளவுல ஒரே மதம் அல்லது சாதியைச் சேர்ந்தவர்களா, கலாச்சார அடிப்படையில நெருங்கியவர்களா தான் இருக்காங்க. 1999-2012 காலகட்டத்தில் வாரியங்களில் கலாச்சார பன்முகத்தன்மை அதிகரித்ததற்கான குறைந்த அறிகுறிகளே காணப்படுகின்றன. சிறப்பாக செயல்படும் நிறுவனங்கள் மிகவும் பன்முகப்பட்ட வாரியங்களைக் கொண்டுள்ளன. அதிக உற்பத்தியைக் கண்ட துறைகளிலும், மாநிலங்களிலும் வாரிய பன்முகத்தன்மை அதிகரித்துள்ளது. வாரியங்களில் பன்முகத்தன்மை இல்லாதது குறைந்த நிறுவன செயல்திறனுடன் தொடர்புடையதாக இருப்பதை இந்த பகுப்பாய்வு நிரூபிக்கிறது”ண்ணு சொல்லிருக்காங்க.

“வாரிய உறுப்பினர் பதவி, தலைமை நிர்வாக அதிகாரி, பிணைப்பில் சாதியின் பங்கு- The role of caste for board membership, CEO, and interlocking” என்ற தலைப்புல 2019ல சையன்ஸ் டேரக்ட் ஆய்விதழில் வெளியிடப்பட்ட ஆய்வுக்கட்டுரையில என்ன சொல்றாங்க தெரியுமா? இந்தியாவின் பெருநிறுவனத் தலைமையின் சாதிப் பிணைப்பை நாங்கள் ஆராய்ந்தோம். பொதுத்துறையை இலக்காகக் கொண்ட உறுதியான நடவடிக்கைக் கொள்கைகள் தனியார் துறைக்குள் பரவவில்லை என்பதைக் காண்கிறோம். இந்திய வாரியங்கள் மிகவும் பன்முகத்தன்மை கொண்டவை அல்ல. அவை பொதுவாக ஒரே சாதியைச் சேர்ந்த இயக்குநர்களால் ஆதிக்கம் செலுத்தப்படுகின்றன. ஒரு சாதியால் ஆதிக்கம் செலுத்தப்படும் வாரியங்களும் அதே சாதியைச் சேர்ந்த தலைமை நிர்வாக அதிகாரியைக் கொண்டுள்ளன. இயக்குநர்களுக்கும் நிர்வாகத்திற்கும் இடையிலான இந்த சமூக வலைப்பின்னல் வாரியத்தின் சுதந்திரமான பாரபட்சமற்ற செயல்பாட்டை கேள்விக்குறியாக்குகிறது. இந்திய இயக்குநர்களில் மூன்றில் ஒரு பங்கிற்கும் அதிகமானோர் பல இயக்குநர் பதவிகளை வகிக்கின்றனர். இவர்கள் தங்களது சொந்த சாதியினரால் ஆதிக்கம் செலுத்தப்படும் நிறுவனங்களுடன் இயக்குநராகப் பிணைப்பில் உள்ளனர். இந்திய நிறுவனத் தலைமை, பலவீனமான சமூக உறவுகளைக் கொண்ட இயக்குநர்களைக் கொண்டிருப்பதன் நன்மைகளைப் பெறத் தவறியுள்ளது. வாரியங்கள், தலைமை நிர்வாக அதிகாரிகளில் சாதிய பன்முகத்தன்மை இல்லாததும், சாதியப் பிணைப்புகளும் இவை அனைத்தும் குறைந்த நிறுவன மதிப்புடன் தொடர்புடையதாக உள்ளது”ண்ணு சொல்லிருக்காங்க.

(தொடரும்)

சூதாடும் காட்டேரி (221)

 


மத்திய காலத்துல பிரபலமான பல வங்கிக் குடும்பங்கள் இருந்துருக்கு. இந்த காலத்துல சர்வதேச ஆடம்பர வர்த்தகத்தின் மையமாக ரோம் இருந்துச்சு. ஐரோப்பாவின் வங்கிமையமா ஃபுளோரன்ஸ் வளர்ந்துச்சு. . 1338 வாக்கில், ஐரோப்பா முழுவதும் செயல்படுற எண்பதுக்கும் மேற்பட்ட வங்கி நிறுவனங்கள் புளோரன்சில் இருந்தன ஏராளமான குடும்பங்கள் வணிகங்களிலும், தொழில்துறைகளிலும் முதலீடு செஞ்சாங்க. பல வங்கிக் குடும்பங்கள் வளர்ந்துச்சு. அதுல ஃப்ளோரன்ஸைச் சேர்ந்த மெடிசி வங்கியமைப்பைப் பத்தி ஏற்கெனவே பாத்துட்டோம். அடுத்ததா அதே ஃப்ளோரன்ஸுல இருந்த பிரபலமான பார்டி, பெருஸ்ஸி வங்கிக் குடும்பங்களைப் பத்தி பாப்போம்.

பார்டி குடும்ப வங்கி:

 பார்டி குடும்பம் 14 ஆம் நூற்றாண்டுல காம்பாக்னியா டீ பார்டி என்ற வங்கியை உருவாக்குனுச்சு. இந்த வங்கி மத்திய தரைக்கடல் பகுதிகளிலும், ஐரோப்பா முழுவதும் செயல்பட்ட ஒரு பெரிய ஐரோப்பிய வணிக சக்தியாக வளர்ந்துருக்கு. இந்த வங்கிக்கு இங்கிலாந்திலும் கிளைகள் இருந்துச்சு. இந்த நிறுவனம் கம்பளி, எண்ணெய், ஒயின் வர்த்தகத்துல ஈடுபட்டுச்சு. இதற்கு போட்டியாளராக இருந்த பெருஸ்ஸி வங்கியை விட பார்டி வங்கி பெருசா இருந்துருக்கு. கிறிஸ்டோபர் கொலம்பஸ், ஜான் கபோட் ஆகியோரின் அமெரிக்க கடல் பயணங்களுக்கான நிதியளிச்சதுல பார்டி வங்கிக் குடும்பம் முக்கிய பங்கு வகிச்சுருக்கு. இங்கிலாந்து மன்னர் எட்வர்ட் III நூறாண்டு போர்ச் செலவுகளுக்காக பார்டி வங்கியில கடன் வாங்கியிருக்காரு. வாங்குன கடனை அவர் திருப்பிச் செலுத்தத் தவறியதால் பார்டி வங்கி திவாலாச்சு. ஆனாலும் கூட பார்டி குடும்பத்தின் செல்வாக்கு கொறையல. குடும்பத்தினர் போப்பின் தூதுவர்களா செயல்பட்டுருக்காங்க.

 பெருஸ்ஸி குடும்ப வங்கி:

ஃபுளோரன்ஸைச் சேர்ந்த இந்த குடும்ப வங்கியும் ஐரோப்பாவின் பெரிய வங்கிகளில் ஒன்றாக இருந்துச்சு. 1330களில், பெருஸ்ஸி வங்கி ஐரோப்பாவின் ரெண்டாவது பெரிய வங்கியா இருந்தது, மத்திய கிழக்கிலிருந்து லண்டன் வரை இந்த வங்கிக்கு பதினைஞ்சு கிளைகள் இருந்துச்சு. ஜவுளி வணிகத்துல பெருஸ்ஸி மூலதனம் குவிக்கப்பட்டது. நைட்ஸ் ஹாஸ்பிட்டலர்ஸுடனான பெருஸ்ஸி தொடர்புகள் ரோட்ஸில் அவர்களுக்கு முக்கியமான உள்ளூர் செல்வாக்கைக் கொடுத்துருக்கு. ரோட்ஸ், ஏஜியனின் (கிரேக்கத்துக்கும், துருக்கிக்கும் இடையிலான பகுதி)  பொருளாதார தலைநகரமாகவும், கிழக்கிலிருந்து பட்டு, மருந்துகள், மசாலாப் பொருட்கள், ஆடம்பரங்களுக்கான கப்பல் துறைமுகமாக இருந்துச்சு. 14 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில், பெருஸ்ஸியின் முக்கிய செயல்பாடு பொருட்களின் மொத்த வணிகத்துக்கு மாறுனுச்சு. சிக்கலான நிதிப் பரிவர்த்தனைகளை சாத்தியமாக்கும் விதமா இத்தாலியில் இரட்டைப் பதிவு கணக்கு வைப்பு நடைமுறைபடுத்தப்பட்டது. பெருஸ்ஸி வங்கியும் இங்கிலாந்து மன்னர் எட்வர்ட் IIIக்கு நூறாண்டு போர்ச்செலவுக்கு கடன் கொடுத்துச்சு. அவர் கடனைத் திருப்பி அடைக்காததால பெருஸ்ஸி வங்கியும் திவாலாச்சு.

பார்டி, பெருஸ்ஸி குடும்ப வங்கிகள் வணிகர்களுக்கு இன்று பரிமாற்ற பில்களை வழங்குவதன் மூலம் வர்த்தகம் எளிதாச்சு. பார்சி, பெருஸ்ஸி வங்கிகள் ரெண்டுமே திவாலானதால் ஃபுளோரன்ஸுல நிதி நெருக்கடி ஏற்பட்டுச்சு. இந்த ரெண்டு வங்கிகளின் வீழ்ச்சிக்குப் பிறகு தான் மெடிசி வங்கி பிரபலமான வங்கியா வளர்ந்துச்சு.

(தொடரும்)

Thursday, November 20, 2025

பணம் பேசுறேன் (243)

 

சமூக அந்தஸ்தை பெறுவதற்கான ஆசையே ஆதிமனுசனை வழி நடத்துனதாகவும், சமூக அந்தஸ்தைக் கொடுக்கக்கூடியப் பொருட்களே ஆதிப்பணமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டதாகவும் பொருளாதார அறிஞர் கெர்லோஃப் ஒரு கோட்பாட்டை முன்வெச்சாரு. இதை விமர்சிச்ச பொருளாதார அறிஞர் பால் எயின்சிக் ஆரம்பத்துல உருவான எல்லா பணமும் “வர்க்கப் பணம்” தான் என்று கெர்லஃப் வாதிட்டதாக ஒரு துணைக் கோட்பாட்டையும் உருவாக்கியிருக்காரு.  சில சமூகங்கள்ல உயர் வகுப்பினருக்கு ஒரு பணமும், கீழ் வகுப்பினருக்கு ஒரு பணமும் பயன்பாட்டுல இருந்துருக்குறது உண்மை தான். இந்த சமூகங்களில் பணத்தின் வர்க்கத் தன்மை வெளிப்படையாகவே தெரியுது. ஆனா மத்த சமூகங்கள்ல பணத்தின் வர்க்கத் தன்மை வெளிப்படையாக தெரியாததால பணத்துக்கு வர்க்கத் தன்மை இல்லைணு அர்த்தமா. இதுலேருந்து என்ன தெரியுது? எல்லாருக்கும் பொதுவான ஒரு நடுநிலை ஊடகமா தான் பணத்தை பால் எயின்சிக் பார்க்குறாருண்ணு தெரியுது. ஆனா இது உண்மையா? இல்லவே இல்லை. வர்க்கமே இல்லாத தொன்மையான சமூகத்துக்குள்ள பணத்துக்கு எந்த வேலையும் கெடையாது. வர்க்கமில்லா சமூகத்துக்குள்ள நடந்ததெல்லாம் பரிசுப் பரிமாற்றங்கள் தான். பணத்தை பெத்தெடுத்ததே வர்க்க சமூகம் தாங்க. முதலாளித்துவ சமூகம் தான் பணத்தை சுரண்டல் ஊடகமாக வளர்த்தெடுத்துச்சு. வர்க்க சமூகத்தின் நடுநிலையில்லாத பரிவர்த்தனை ஊடகம் தாங்க பணம். தனியுடைமை சமூகத்தின் பரிவர்த்தனை ஊடகம் தாங்க பணம். வர்க்க சமூகத்தின் அரசியல் பொருளாதாரத்துல வெளித் தோற்றங்கள் எப்போதுமே ஏமாத்துற தோற்றப் பிறழ்ச்சிகள் தான். வெளித்தோற்றங்கள் உண்மையை சொல்ற கண்ணாடிகளா இருந்தா சமூக விஞ்ஞானிகளுக்கு வேலை ரொம்ப சுலபமா இருந்துருக்குமே. தெரிஞ்சோ, தெரியாமலோ எல்லா முதலாளித்துவப் பொருளாதார அறிஞர்களும் இங்க தான் தப்பு பண்ணுறாங்க. பால் எயின்சிக்கும் அதுல விதிவிலக்கு இல்ல. கெர்லோஃபின் கோட்பாடு மேல பால் எயின்சிக் வெச்ச விமர்சனத்தை இப்ப பாப்போம்.

11. தகுநிலை அடையாளச் செயல்பாடு மூலம் பணத்தின் தோற்றம்:

“சமூக முக்கியத்துவத்தை அடையுறதுக்கான லட்சியம் பணப் பொருள்களின் தேர்வை பாதிக்கக்கூடிய மத்த எல்லா காரணிகளையும் மறைச்சுடும் என்ற அனுமானத்திலிருந்து தொடங்கிய, கெர்லோஃப் இந்த மத்த காரணிகளை தனது முன்கூட்டிய முடிவின் கண்ணாடி மூலமா தான் பார்க்குறாரு. உதாரணமாக, அவரைப் பொறுத்தவரை, ஆதிப் பணத்தை மத நோக்கங்களுக்காக - பலியீடுகள், மரண விருந்துகள் போன்றவற்றுக்கு – பயன்படுத்துவது என்பது, ஆதிகால மனிதன் சமூக கௌரவத்தை அடையவும், அந்த நோக்கத்துக்காக அதிக அளவு பணப் பொருள்களைப் பயன்படுத்துவதன் மூலம் சமூகத்தின் மத்தஉறுப்பினர்களை விட சிறப்பாக செயல்படவும் கொண்டிருந்த லட்சியத்திலிருந்து பெறப்பட்டது.

தூண்டுதலாக இருக்கக்கூடிய பல்வேறு நோக்கங்களுக்கு இடையில எல்லைக்கோட்டை வரையறுப்பது நிச்சயமாக கடினம் தான். பல சந்தர்ப்பங்கள்ல ஜெர்லோஃப்பின் கோட்பாடு பொருந்தக்கூடியதாக இருக்கலாம், ஆனால் அது எப்போதுமே அவசியமா பொருந்தக்கூடியது என்று கருதுவதற்கு எந்த நியாயமும் இல்லை. பல சந்தர்ப்பங்கள்ல கௌரவத்தை அடைய வேண்டும் என்ற வேட்கை நிச்சயமாக ஒரு கீழ்நிலைப் பங்கைக் கொண்டிருந்திருக்கனும். ஆதி மனுசன் தன்னால் முடிந்த அளவுக்கு வரம்புகளுக்குட்பட்டு தனது தெய்வத்திற்கு தாராளமான பலியீடுகளைச் செய்வது சமூக லட்சியத்தின் காரணமாக இல்ல, மாறாக தெய்வத்தின் இயற்கைக்கு அப்பாற்பட்ட சக்திகளுக்கு உண்மையிலேயே பயந்து, நல்லெண்ணத்தைப் பெறுவதற்காக அவரை சமாதானப்படுத்த ஆர்வமாக இருந்ததுனால தான்.

இறப்பு விழாக்களில் பணப் பொருட்களை விநியோகிப்பதில் தாராள மனப்பான்மை பல சந்தர்ப்பங்கள்ல சமூக லட்சியத்தால் தூண்டப்படலாம், ஆனால் அது நிச்சயமாக பல பழமையான இனங்களின் தன்மையில் ஆழமாக வேரூன்றிய மூதாதையர் வழிபாடே அதுக்கு ரொம்ப பெரிய அளவில் காரணமா இருந்துருக்கு.

இதேபோல, பல மனைவிகளுக்கு மணமகள் செல்வத்தை செலுத்துவதற்காக பணப் பொருட்களைக் குவிக்கும் விருப்பத்தை, அவர்களின் உடைமை ஒரு பணக்கார கணவருக்கு வழங்கும் சமூக கௌரவத்தின் அடிப்படையில் விளக்க முடியும் என்றாலும், சமூகத்தின் சக உறுப்பினர்களை விட மேலானவராகக் காட்டும் விருப்பத்தை விட மனித இயல்பில் ஆழமாக வேரூன்றிய தூண்டுதலை அங்கீகரிப்பதை அடிப்படையாகக் கொண்ட ஒரு தெளிவான மாற்று விளக்கம் நிச்சயமாக இருக்கு.

பணத்தின் தோற்றத்தை சமூக லட்சியங்களுக்குக் காரணம் காட்டும் கெர்லோஃபின் ஒருதலைப்பட்ச கோட்பாட்டிலிருந்து, சமமாக ஒருதலைப்பட்சமான பிடிவாதமான துணைக் கோட்பாடுகள் இரண்டு உருவாகுது. கௌரவத்தின் ரொம்ப முக்கியமான செல்வாக்கின் காரணமாக, அதை அடையுறதுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட பணப் பொருட்கள் அவசியமாக அலங்காரங்களாக இருந்தன, எனவே ஆபரணங்களின் பணப் பயன்பாடு எப்போதும் அவசியமான பொருட்களுக்கு முன்னதாகவே இருந்தது என்று அவர் கூறுகிறார். அதே காரணத்திற்காக, பணம் எப்போதும் உயர் சமூக வகுப்புகளின் பிரத்தியேக பயன்பாட்டிற்காகவே உருவானது என்றும், ஆரம்பத்தில் அனைத்துப் பணமும் "வர்க்கப் பணமாக" உருவானது என்றும் அவர் வாதிடுகிறார்.

பழமையான பணத்தின் அலங்கார தோற்றம் பற்றிய கேள்வி ஏற்கனவே பாத்துட்டோம். பணத்திற்காக அலங்காரப் பொருட்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட பல சந்தர்ப்பங்கள் இருந்திருக்கனும், ஆனால் பல நிகழ்வுகளில் இது வெளிப்படையாக இல்லை. நிச்சயமாக கால்நடைகள் நாணயத்தின் ஆரம்ப வடிவங்களில் ஒன்றாகும். இருப்பினும் கால்நடைகள் அலங்காரத்தை விட பயனுள்ளதாக இருக்கும். அதோட வர்க்கப் பணத்தின் இருப்பை ஒரு சிறுபான்மை நிகழ்வுகளில் மட்டுமே கண்டறிய முடியும், அவற்றில் பெரும்பாலானவற்றில் ஒரே சமூகத்தில் சமூக தரவரிசை அந்தஸ்து அடிப்படையில் பயன்படுத்தப்பட்ட பிற வகையான பணமும் இருந்தது. உயர் வகுப்பு கிளிஞ்சல்களின் பணப் பயன்பாடு சாதாரண பழங்குடியினரால் பயன்படுத்தப்படும் சாதாரண கிளிஞ்சல்களுக்கு முன்னதாக இருந்தது என்று கருதுவதற்கு எந்த குறிப்பிட்ட காரணமும் இல்லை.”

 (தொடரும்)

பொம்மைகளின் புரட்சி (123)

  காலையில எல்லாருமே லேட்டா தான் எந்திரிச்சாங்க… இன்னிக்கு தாத்தா தான் பழக்கடைக்கு போகனும், அதுனால யம்மு பாட்டிக்கு உதவி பண்ணிக்கிட்டே   தாத்...