Sunday, November 30, 2025

பொம்மைகளின் புரட்சி (121)

 


யம்மு பாட்டி: சிங்கம் தலைய சிலுப்பிக்கிட்டு பார்வையாளர்களைப் பாத்துச்சாம், ஒரே கைதட்டாம்… அடுத்ததா மயில் மேடைக்கு வந்து தோகைய விரிச்சு டான்ஸ் அடுனுச்சாம்… அப்புறம் தொண்டைய கமறிக்கிட்டு பேச ஆரம்பிச்சுச்சாம்…

மயில்: நானும் என் மனசுல பட்டத இப்ப சொல்லப்போறேன், எல்லாருமே என்ன ரொம்ப அழகு, அழகுண்ணு பாராட்டுறாங்க, ஆனா ஏனோ தெரியல என் குரலோ, நான் பாடுற பாட்டோ நெறையா பேருக்கு புடிக்கிறதுல்ல, அவுங்களுக்கு குயிலோட குரலும் பாட்டும் தான் புடிக்குது, ஆனா எனக்கு என் குரலும் புடிச்சிருக்கு…

எனக்கு நான் மட்டும் அழகா தெரியல, கொண்டைக் குலாத்தி, இமாலய மோனல், யாழ் பறவை போல பல பேரு அழகா தெரியுறாங்க… நீல வானப் பின்புலத்துல கிளைகளைப் பரப்பி பச்சை பசேல்னு படர்ந்து கொண்டல் கொண்டலா உயர்ந்து நிக்கும் மரங்கள் அழகா… கரும்பாறைகள்லேருந்து வெண்பட்டுத் தோகைபோல கீழே தவழுற அருவி, நதியாகி கடலாவது அழகா… அந்த கடலிலும், நதியிலும் தன் முகம் பாக்குற நிலாவும் சூரியனும் அழகா…. இவை எல்லாமே பேரழகு தான, உலகத்துல எல்லாருமே ஒரே மாதிரி இருந்தா நல்லாவா இருக்கும்… வாழ்க்கையே போரடிச்சு சலிச்சுப் போயிடும்… அப்படி எல்லாருமே ஒரே மாதிரி இருக்க நாம என்ன ஸெராக்ஸ் காப்பிகளா… இல்ல ரோபோ எந்திரங்களா… நாம எல்லாருமே தனித்துவமான அழகும், அறிவும் உடைய உயிரிகள் ஆச்சே… பல நிறங்கள் சேர்ந்து இருக்குறதுனால தான வானவில்லே அழகா இருக்குது… அதுபோலத் தான் பல வகை உயிரினங்கள் இருக்குறதுனால தான் இந்த உலகமே பேரழகா இருக்கு. அதுல ஒருத்தரை மட்டும் பிரிச்சு தனிமைப்படுத்தி அழகு விருது கொடுக்குறது பேரழகின் பொருளையே அவமதிக்கிறதா இருக்கு, மத்தவங்களயும் சிறுமைப்படுத்துது…

 சில பேரு அழகா இருந்துட்டா போதுமே, அது மட்டுமே போதும்னு அறிவ வளர்த்துக்க எந்த முயற்சியும் பண்ணாம வாழ்க்கைய அழகுக்குள்ளயே சுருக்கிக்கிறாங்க, ஆனாலும் கூட தங்களை ஏதோ பெரிய திறமையாளர்களாகவும், வாழ்க்கையில என்னமோ பெருசா வெட்டிக் கிழிச்ச சாதனையாளர்களாகவும் கற்பனை பண்ணிக்கிறாங்க… இந்தா பாருங்க, இயற்கை கொடுத்த அழகுக்கு யாருமே தனிப்பட்டு உரிமை கொண்டாட முடியாது, உங்க அழகுங்குறது உங்க அம்மா, அப்பாவிடமிருந்து தான் உங்களுக்குக் கெடைச்சிருக்கு. அதுக்கு நீங்க தான் காரணம்னு ஆணவப்படுறது அறியாமை. வாழ்க்கையில சாதிக்கவேண்டிய விசயங்கள் எத்தனையோ இருக்கே, அதுக்கு வேண்டிய அறிவை வளர்த்துக்காம அதான் அழகா பொறந்துட்டோமே, அது போதும், அதை வெச்சே எல்லாத்தையும் சாதிச்சுடலாம்னு கண்ணாடியையே பாத்துக்குட்டு இருந்தா, கண்ணாடியே காறித் துப்புற நேரம் வந்துரும். அதுனால அறிவை வளர்த்துக்குட்டு ஆகுற காரியத்தப் பாருங்க. அழகுப்போட்டிங்குறது நம்ம ஒற்றுமைக்குத் தடையா இருக்குற பிரிவினைவாதத்தைத் தான் வளக்குது. அதுனால இப்புடிப்பட்ட அழகுப்போட்டிகள வெக்குறது இதுவே கடைசி தடவையா இருக்கட்டும்… இனிமே நடத்தாதிங்க… கடைசியா என்றென்றைக்குமான பேரழகு விருதை இயற்கைக்குக் கொடுக்குமாறு நான் முன் மொழிகிறேன்…

நடுவர் குழு: ரொம்ப நல்ல யோசனை, அதை நாங்களும் வழிமொழிகிறோம்… அதன் படி நேற்று, இன்று, நாளை என என்றென்றுக்குமான பேரழகு விருதை இயற்கைக்கு அறிவிக்கிறோம்…

எல்லாரும் ஜோரா கைத்தட்டுனாங்க…

இயற்கை அன்னை மகிழ்ச்சியோட வந்து விருதை வாங்கிக்கிட்டாங்க…

 (தொடரும்)

No comments:

Post a Comment

உலக சமத்துவமின்மை அறிக்கை 2026 (WIR 2026)

  உலக சமத்துவமின்மை ஆய்வகம் 2026ஆம் ஆண்டுக்கான உலக சமத்துவமின்மை அறிக்கையை வெளியிட்டுள்ளது. இதற்கு முன்  2018, 2022லும் உலக சமத்துவமின்மை அற...