Monday, December 1, 2025

பணம் பேசுறேன் (245)

 


இதுவரைக்கும் பணத்தின் தோற்றம் பத்தி பொருளாதார அறிஞர் பால் எயின்சிக் முன்வெச்ச 11 கோட்பாடுகளைப் பத்தியும் பாத்துட்டோம். ஆதிப் பணங்களின் தோற்றத்தை முழுமையா புரிஞ்சுக்க பணமில்லா சமூகங்களைப் பத்தி தெரிஞ்சிக்கவேண்டியதும் அவசியமா இருக்கு. ஆதி கால பொதுவுடைமை சமூகங்கள்ல பரிசுப் பரிவர்த்தனைகள் தான் செய்யப்பட்டுருக்கு. ஒரு ஆதிப் பழங்குடி சமூகம், இன்னொரு ஆதிப் பழங்குடி சமூகத்துடன் வெளிப்பர்த்தனைகளில் ஈடுபட்டபோது ஆரம்ப கால வெளிப்பரிவர்த்தனைகள் பரிசுப் பரிமாற்றங்களா தான் இருந்துருக்கு, நாளடைவில் அவை வர்த்தகத் தன்மையுடைய பண்ட மாற்றுப் பரிமாற்றங்களா மாறியிருக்கு. ஒரு ஆதிப் பொதுவுடைமை சமூகத்துக்குள்ள செய்யப்படுற உள் பரிவர்த்தனைகள் பரிசுப் பரிமாற்றங்களா தான் இருந்துருக்கு. தனிச்சொத்துடைமை வளர வளரத் தான் பரிசுப் பரிமாற்றங்கள் வர்த்தகத் தன்மையுடைய பண்டமாற்றுப் பரிமாற்றங்களா மாறிருக்கு. வர்த்தகப் பரிமாற்றங்களுக்கான முன் தேவையா இருக்குறது தனிச் சொத்துடைமை தான். பொதுவான வர்த்தகப் பரிமாற்ற ஊடகமா தான் பணம் தோன்றியிருக்கு. அப்போ பணத்தின் தோற்றத்துக்கும் முன் தேவையா இருக்குறது தனிச் சொத்துடைமை தான். தனிச் சொத்துடைமை சமூகத்தின் பரிமாற்ற ஊடகம் தான் பணம். சமூகம் வர்க்கங்களா பிரிவடைந்ததுக்குக் காரணம் தனிச் சொத்துடைமை தான். ஆகவே வர்க்க சமூகத்தின் பரிமாற்ற ஊடகமா தான் பணம் தோன்றியிருக்கு. வர்க்கமில்லாத பொதுவுடைமைச் சமூகங்கள் பணமில்லாத சமூகங்களா தான் இருந்துருக்கு. சரி இப்ப பணமில்லா சமூகங்களைப் பத்தி பொருளாதார அறிஞர் பால் எயின்சிக் என்ன சொல்றாருண்ணு கேப்போம்.

பணமில்லா சமூகங்கள்:

பொருளாதார வல்லுநர்கள், பொருளாதார வரலாற்றாசிரியர்களால் மட்டுமல்ல, சில மானுடவியலாளர்களாலும் கூட, சில அடிப்படையான பண வடிவங்கள் இல்லாத சமூகங்கள் இன்னும் கண்டுபிடிக்கப்படலை என அடிக்கடி கூறப்படுது. இந்தக் கூற்று, கடந்த கால மற்றும் இன்றைய பழமையான சமூகங்கள் தொடர்பான உண்மைச் சான்றுகளுடன் குறிப்பிடத்தக்க வகையில் முரண்பட்டுள்ளது. சரியாகச் சொன்னா, முன்னேறிய நாகரிகங்களுடன் தொடர்பு கொள்றதுக்கு முன்பு சம்பந்தப்பட்ட சமூகங்கள் எந்தவொரு வகையான பணத்தையும் பயன்படுத்தியதற்கான எந்த ஆதாரத்தையும் இதுவரை கண்டுபிடிக்க முடியாத வரலாற்று , இனவியல் நிகழ்வுகள் உள்ளன. ஒப்புக்கொள்ளத்தக்க வகையில், இந்த சமூகங்களுக்கு பணம் இல்லை என்பதை இது அர்த்தப்படுத்துவதில்லை. இன்னும் முழுமையான விசாரணையானது, இதுவரை நம் கவனத்திலிருந்து தப்பித்த சில அடிப்படை பண வடிவத்தின் இருப்பை வெளிப்படுத்தக்கூடும். ஆனால் இந்த விஷயத்தில் தற்போதைய ஆய்வின் அடிப்படையில், அந்த சமூகங்கள் பணமற்றதாகக் கருதப்பட வேண்டும். பணமில்லாத சமூகங்கள் இருப்பதை மறுக்கும் ஆசிரியர்கள், ஆழ்ந்த விசாரணை வரை இறுதித் தீர்ப்பை நிறுத்தி வைக்க வேண்டும் என்று வலியுறுத்த உரிமை உண்டு என்றாலும், பணமில்லாத சமூகங்கள் ஒருபோதும் கண்டுபிடிக்கப்படலை என்று திட்டவட்டமாக அவங்க கூறுவதுல நிச்சயமாக நியாயமில்ல. இப்போது பணமில்லாததாகக் கூறப்படும் சமூகங்களில் பணம் இருப்பதை நிரூபிக்கும் பொறுப்பு அவர்களிடம் உள்ளது.

நிச்சயமாக, இது பெரும்பாலும் நாம் ஏற்றுக்கொள்ளத் தேர்ந்தெடுக்கும் பணத்தின் வரையறையைப் பொறுத்ததாகவே இருக்கும். தேவையில்லாம கடுமையான வரையறை பயன்படுத்தப்பட்டால், பணமில்லாத சமூகங்களின் மிகப் பெரிய எண்ணிக்கையிலான வரலாற்று, இனவியல் நிகழ்வுகளை மேற்கோள் காட்ட முடியும்.

பொது பரிமாற்ற ஊடகங்களாக இல்லாத, பிரதானமாக ஒருதலைப்பட்சமான கட்டணம் செலுத்தும் ஊடகங்களாகப் பயன்படுத்தப்படும் பொருட்களைத் தவிர்த்துவிட்டு  மாலினோவ்ஸ்கி, ஃபிர்த் போன்ற மானுடவியலாளர்கள் பசிஃபிக் பகுதியில் நடைமுறையில் ஆதி செலவாணி (currency) இல்லை என்ற முடிவுக்கு வந்துருக்காங்க. இன்னொரு தீவிரமான அணுகுமுறையுடைய பொருளாதாரப் பள்ளியும் இருக்கு. இது பணத்துக்குத் தேவையில்லாம தளர்ந்த வரையறையைப் பயன்படுத்துது, இதன் விளைவாக எந்தவொரு விருப்பமான பண்டமாற்று ஊடகமும் சமூகத்தின் நாணயமாகக் கூறப்படுது.

அத்தகைய அடிப்படையில், ஒவ்வொரு கிராமத்திலும் ஒரு ஆதிக் குடியிருப்பாளர் இருப்பதைப் போலவே, ஒவ்வொரு சமூகத்திலும் ஒரு "நாணயம்" காணப்படனும். இருந்தாலும், சில சந்தர்ப்பங்களில், பணமின்மை என்பது தளர்ந்த வரையறையை ஆதரிக்கும் மிகவும் தீவிரமான பள்ளியைத் தவிர மத்த அனைத்தையும் திருப்திப்படுத்தும் அளவுக்கு உறுதியாக நிறுவப்பட்டுள்ளது.

(தொடரும்)

No comments:

Post a Comment

உலக சமத்துவமின்மை அறிக்கை 2026 (WIR 2026) (2)

  பிரதேசங்களுக்கு இடையிலான சமத்துவமின்மை: உலகளாவிய சராசரிகள் பிரதேசங்களுக்கு இடையிலான மிகப்பெரிய பிளவுகளை மறைக்கின்றன . உலகம் தெளிவ...