Wednesday, November 26, 2025

இந்திய சாதிய முதலாளித்துவத்தின் வர்க்கப்பகுப்பாய்வு (78)

 

1.சாதிய முதலாளி வர்க்கம்:

இதுக்கு முன்னாடி நாம பார்த்த ஆய்வுக்கட்டுரைகளில் பெறப்பட்ட முடிவுகளை மேலும் உறுதிப்படுத்துற மாதிரி “ஜெர்னல் ஆஃப் கார்ப்பரேட் ஃபைனான்ஸ்” ஆய்விதழில் 2023ல ஆய்வறிக்கை வெளியிட்டுருக்காங்க.  “நிறுவன வாரியங்களில் சமூக பன்முகத்தன்மையும், நிறுவன முடிவுகளும்” என்பது தான் அந்த ஆய்வுக் கட்டுரையின் தலைப்பு. இந்த ஆய்வுக்கட்டுரை  என்ன சொல்லுதுண்ணா: "நிறுவன இயக்குநர்களிடையேயான சமூக பன்முகத்தன்மை உறுதியான செயல்திறனுடன் எவ்வாறு தொடர்புடையது என்பதை நாங்கள் ஆராய்ந்தோம். இதை நாங்கள் மதம், சாதி -இது இந்தியாவின் இந்து சமூகத்தை நூற்றுக்கணக்கான சமூகங்களாகப் பிரிக்கும் ஒரு ஆழமான வேரூன்றிய நிறுவனமாகும்- சார்ந்த பன்முகத்தன்மையின் அடிப்படையில் ஆராய்ந்தோம்.  இயக்குநர்களின் சமூக அடையாளங்களை இனங் காண, சாதி மத குடும்பப் பெயர்களின் முதல் தரவு சார்ந்த வரைபடங்களை உருவாக்கினோம். 1999–2015 ஆம் ஆண்டில் இந்திய நிறுவன வாரியங்கள் குறிப்பிடத்தக்க வகையில் பன்முகத்தன்மையில்லாமல் ஒரே மாதிரியாக இருப்பதைக் காண்கிறோம். நான்கு கருவி மாறி உத்திகளைப் பயன்படுத்தி, வாரிய ஒருமைப்பாடு நிறுவனத்தின் செயல்திறனுடன் எதிர்மறையாக தொடர்புடையது என்பதையும் காண்கிறோம். வாரிய ஒருமைப்பாட்டின் எதிர்மறையான தாக்கம், சாதியால்-நெருக்கமான இயக்குநர்களின் ஒரே மாதிரியான நோக்குகளும், வலையமைப்புகளும், அவர்களின் கண்காணிப்பு, ஆலோசனைப் பாத்திரங்களை சீர்குலைப்பதன் காரணமாக இருப்பதையும் காண்கிறோம்"ணு சொல்லியிருக்காங்க.

இந்தியாவில் சாதியும், தொழில்முனைவும் என்ற தலைப்புல 2013ல “ஐடியாஸ் ஃபார் இந்தியா” வலைதளத்துல வெளியிடப்பட்ட ஆய்வுக்கட்டுரையில தொழில்முனைவோர்களின் விகிதாச்சாரத்தை சாதி அடிப்படையில பகுப்பாய்வு செஞ்சுருக்காங்க.

தொழில்முனைவில் சாதி வேறுபாடுகளின் பங்கை ஆராய்தல்:

இந்த ஆய்வுக் கட்டுரையில 1990, 1998, 2005ஆம் ஆண்டுகளில் மத்திய புள்ளிவிவர அமைப்பால் நடத்தப்பட்ட இந்திய பொருளாதார கணக்கெடுப்புகளிலிருந்து, நிறுவன உரிமை குறித்த விரிவான தரவுகளைப் பயன்படுத்தி சாதி வேறுபாடுகளின் பங்கை ஆய்வு செஞ்சுருக்காங்க. இந்த கணக்கெடுப்புகள் நாட்டில் உள்ள அனைத்து விவசாயம் அல்லாத நிறுவனங்களின் முழுமையான எண்ணிக்கையை வழங்குது. 2005 கணக்கெடுப்பு 420 லட்சத்துக்கும் அதிகமான நிறுவனங்களை உள்ளடக்கியது, இவற்றில் சுமார் 990 லட்சம் தொழிலாளர்கள் பணியில் இருந்துருக்காங்க. அவங்கள்ல 49% பேர் நகர்ப்புற நிறுவனங்களால் பணியமர்த்தப்பட்டுருக்காங்க. பொருளாதார கணக்கெடுப்புகள் ஒவ்வொரு நிறுவனத்தின் இருப்பிடம், தொழில்துறை வகைப்பாடு, பணியமர்த்தப்பட்ட தொழிலாளர்களின் எண்ணிக்கை, அதில் குடும்பம், கூலித் தொழிலாளர்களின் கலவை பற்றிய விவரங்கள், நிதி ஆதாரங்கள், நிறுவன உரிமையாளரின் சாதி வகை பற்றிய விரிவான தகவல்களை வழங்குகின்றன. பொதுவில் வர்த்தகம் செய்யப்படும் நிறுவனங்கள் அல்லது கூட்டுறவு நிறுவனங்களின் உரிமையை ஒரு குறிப்பிட்ட உரிமையாளரின் சாதியாகக் கருத முடியாது என்பதால், இந்த பகுப்பாய்வு தனியார் நிறுவனங்களின் உரிமையில் மட்டுமே கவனம் செலுத்திருக்கு. இந்தியாவின் 19 பெரிய மாநிலங்களின் தரவுகளில் கவனம் செலுத்திய இந்த ஆய்வுல இந்தியாவின் மக்கள்தொகையில் 96 சதவீதமும், மொத்த நிறுவனங்களில் 95 சதவீதமும் அடங்கும்.

தாழ்த்தப்பட்ட சாதியினரும், தனியார் நிறுவனங்களும்:

இந்த பகுப்பாய்வு மூன்று முக்கிய கண்டுபிடிப்புகளை எடுத்துக்காட்டுது. முதலாவதாக, 2005 ஆம் ஆண்டின் பிற்பகுதியில, தனியார் நிறுவனங்களின் உரிமையிலும், தனியார் நிறுவனங்களால் உருவாக்கப்பட்ட வேலைவாய்ப்பிலும் பட்டியல் சாதியினரும் (SC), பட்டியல் பழங்குடியினரும் (ST) ரொம்ப குறைவாகவே இருந்துருக்காங்க. 2005 ஆம் ஆண்டில் அனைத்து நிறுவனங்களிலும் பட்டியல் சாதியினர் 9.8% நிறுவனங்களை மட்டுமே சொந்தமாக வெச்சிருந்தாங்க, இது மொத்த மக்கள்தொகையில் அவர்களின் 16.4% பங்கை விட ரொம்ப குறைவு. நாட்டின் மக்கள்தொகையில் 7.7% ஆக இருந்த பட்டியல் பழங்குடியினரும், விவசாயம் அல்லாத நிறுவனங்களில் 3.7 சதவீதத்தை மட்டுமே சொந்தமாக வெச்சிருந்தாங்க, விவசாயத்தில் இல்லாத தொழிலாளர்களிலும் பட்டியல் பழங்குடியினருக்கு 3.4% என இதேபோன்ற குறைவான பிரதிநிதித்துவமே காணப்படுது. இதற்கு நேர்மாறாக, பிற பிற்படுத்தப்பட்ட சாதிகளின் (OBC) உறுப்பினர்கள் தொழில் முனைவோர் செயல்பாட்டில் நல்லா பிரதிநிதித்துவப்படுத்தப்படுவது தெரியவந்துருக்கு. 2005 ஆம் ஆண்டில் அனைத்து நிறுவனங்களிலும் 43.5% ஓ.பி.சி உறுப்பினர்களின் உடைமைகளாக இருந்துருக்கு, மேலும் விவசாயம் அல்லாத வேலைவாய்ப்புகளில் 40% இவங்களுடையதாக இருந்துருக்கு. இது ஒட்டுமொத்த மக்கள்தொகையில் அவர்களின் மதிப்பிடப்பட்ட பங்கான 43 சதவீதத்துடன் ஒத்துப்போவதாக இருக்குதுண்ணு சொல்லிருக்காங்க.

(தொடரும்)


No comments:

Post a Comment

உலக சமத்துவமின்மை அறிக்கை 2026 (WIR 2026)

  உலக சமத்துவமின்மை ஆய்வகம் 2026ஆம் ஆண்டுக்கான உலக சமத்துவமின்மை அறிக்கையை வெளியிட்டுள்ளது. இதற்கு முன்  2018, 2022லும் உலக சமத்துவமின்மை அற...