Monday, November 24, 2025

வருமா மீண்டும் தங்கத் தரம் (2)

 

1870க்கு பிறகு உலக அளவுல தங்கத் தரத்தின் அடிப்படையிலான நிலையான பரிமாற்ற விகித அமைப்பு நடைமுறைக்கு வந்துச்சு. இதன் படி நாணயங்களுக்கிடயிலான பரிமாற்ற விகிதம், தங்கத் தரத்தின் அடிப்படையில நிலையானதாக இருந்துச்சுண்ணு பாத்தோம். 1971ல நிக்சன் அரசு டாலரை தங்கத்தரத்திலிருந்து நீக்குனதன் விளைவாக உலகெங்கும் மிதக்கும் பரிமாற்ற விகித அமைப்பு நடைமுறைக்கு வந்துச்சு. உலக அளவுல டாலருக்கான கிராக்கி கொறையாம பாத்துக்குறதுக்காக தங்கத் தரத்திலிருந்து நீக்குன டாலரை பெட்ரோலுடன் கோர்த்துவிட்டு பெட்ரோ டாலர் உருவானுச்சுண்ணும் பாத்துட்டோம். இராக், இரான், வெனிசுலா, லிபியா, சிரியா ஆகிய நாடுகள் பொருளாதாரத் தற்சார்பைக் கடைபிடிக்கும் விதமா பெட்ரோலியப் பொருட்களை தங்களோட சொந்த நாணயங்கள்ல வித்ததுனால தான் அமெரிக்கா இந்த நாடுகள் தீவிரவாதத்தை ஆதரிச்சாங்க, பேரழிவு ஆயுதங்களை உற்பத்தி செஞ்சாங்க, மனித உரிமைகளை மீறுனாங்கண்ணு பொய்யான சாக்குபோக்குகளை அடுக்கி இந்த நாடுகள் மீது போர் தொடுத்துச்சு. இவை பெட்ரோ டாலர் போர்கள்ணு அழைக்கப்படுது. டாலரின் மேலாதிக்கத்தால் எண்ணெய் உற்பத்தி நாடுகள், வளரும் நாடுகள்,  அனைத்துமே பாதிக்கப்பட்டுருக்கு.

தன்னோட மேலாதிக்கத்தை ஏத்துக்காத நாடுகள் மேல பொருளாதாரத் தடைகளை விதிப்பது தான் அமெரிக்காவுக்கு வழக்கம். ரஷ்யா, ஈரான், வெனிசுலா, கியூபா, சூடான், ஜிம்பாப்வே, மியான்மர், காங்கோ, வட கொரியா சீனா, பாகிஸ்தான், துருக்கி எனப் பல நாடுகளின் மீது அமெரிக்கா பொருளாதாரத் தடைகளை விதிச்சுருக்கு. இதனால் அந்த நாடுகள் மட்டுமல்லாம அந்நாடுகளுடன் பரிவர்த்தனை செய்து வந்த மத்த நாடுகளும், நிறுவனங்களும் கூட பாதிக்கப்பட்டாங்க. 2022ல ரஷ்யா-உக்ரைன் போருக்குப் பிறகு ஜி7 நாடுகள் நிதித் தடைகளை அதிக அளவுக்கு விதிச்சிருக்கு. ரெண்டாவது முறை ஆட்சிக்கு வந்த டிரம்ப் சகட்டுமேனிக்கு ஒரு சுங்கவரிப் போரை ஏவிருக்காரு. இதனால அமெரிக்காவின் பகை நாடுகள் மட்டுமில்லாம, நட்பு நாடுகளுக்கும் கூட டாலர் ராஜ்யத்தை விட்டு வெளியேறி ஒரு மாற்றுக் கட்டமைப்பை உருவாக்க வேண்டிய அவசியம் உருவாகியிருக்கு.

பிரிக்ஸ் (BRIC) கூட்டமைப்பு. டாலருக்கு பதிலா உறுப்பு நாடுகளின் சொந்த நாணயங்களிலும், டிஜிட்டல் கட்டணங்கள் வழியாகவும் இருதரப்பு வர்த்தகத்தை மேற்கொள்ள ஊக்கிவிக்குது. 2023ல டாலர்நீக்கத்தை ஆதரிக்கும் விதமா பிரிக்ஸ் நாடுகளுக்குப் பொதுவான ஒரு நாணயத்தை உருவாக்குற திட்டம் பரிசீலனையில இருந்துச்சு. அதை தாங்கமுடியுமா அமெரிக்காவால? பிரிக்ஸ் புது நாணயத்தை உருவாக்கமாட்டோம்ணு உறுதிமொழிகொடுக்கனும். வலிமையான டாலருக்கு பதிலாக வேறு நாணயங்களை ஆதரிக்கக்கூடாது. இல்லைணா 100% சுங்கவரி போட்டுருவேண்ணு 2024 நவம்பர்ல மிரட்டல் விட்டாரு டிரம்ப். 2025ல ஆட்சிக்கு வந்த பெறகு ஃபிப்ரவரியில டாலரின் அழிவைப் பத்தி பேசுனா அந்த பிரிக்ஸ் நாட்டுக்கு 150% சுங்கவரி போட்டுருவேன் ஜாக்குரதைணு மறுபடியும் மெரட்டிருக்காரு. புதிய பிரிக்ஸ் நாணயத்தையும், டாலர் நீக்கத்தையும் முன்னாடி ஆதரிச்சுவந்த ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின், நமக்கு எதுக்குடா வம்புண்ணு 2025 பிரிக்ஸ் மாநாட்டுல அதை பத்தி வாயே தொறக்கலை. பிரேசில் அதிபர் லுலா சில்வா மட்டும் தான் பிரிக்ஸ் நாணயத்தைப் பத்தி பேசியிருந்தாரு. ஆனா 2025 பிரிக்ஸ் மாநாட்டின் இறுதி தீர்மானத்துல பிரிக்ஸ் நாடுகளுக்கான புதிய நாணயம் என்ற வார்த்தையே இடம்பெறல.

.டாலர் மீதான நம்பிக்கையின்மையால் நெதர்லாந்து, ஜெர்மனி, ரஷ்யா, சீனா, பெல்ஜியம், ஆஸ்திரியா, துருக்கி, அஸெர்பைஜன் ஆகிய நாடுகள் அமெரிக்காவில் உள்ள தங்களோட தங்கச் சேமிப்புகளை திரும்பப் பெற்றன. அமெரிக்காவுக்குக் கடனளித்த நாடுகளான சீனா, ரஷ்யா, பிரேசில், ஜப்பான், ஐக்கிய முடியரசு, அயர்லாந்து, சுவிட்சர்லாந்து, லக்ஸம்பர்க், கனடா, மெக்சிகோ, துருக்கி ஆகியவை அமெரிக்க பத்திரங்களிலான முதலீடுகளைக் குறைச்சுட்டாங்க.

2022 ரஷ்யா-உக்ரைன் போரைத் தொடர்ந்து ஜி7 நாடுகள் ரஷ்யாவின் அந்நிய செலாவணி இருப்புக்களை முடக்கிட்டாங்க. உக்ரைனின் மறுசீரமைப்பு முயற்சிகளுக்கு நிதியளிக்க முடக்கப்பட்ட ரஷ்ய சொத்துக்களைப் பயன்படுத்த ஜி7 நாடுகள் முடிவு செஞ்சாங்க. இதுனால  உஷாரான மத்திய வங்கிகள் நாடு கடந்து இருக்கும் தங்களோட தங்க இருப்புகளை திரும்பப் பெற்று உள்நாட்டுக்கே கொண்டுவந்துட்டாங்க.  2020கள்ல 50%ஆக இருந்த மத்திய வங்கியின் உள்நாட்டு தங்க இருப்புகள் 2024ல 68%ஆக உயர்ந்துருக்கு. ஆனாலும் கூட உலகளாவிய தங்க இருப்புகள்ல கணிசமான பகுதி இன்னும், அமெரிக்காவின் ஃபெடரல் ரிசர்வ் வங்கியிலும் ஐக்கிய முடியரசின் இங்கிலாந்து வங்கியிலும் தான் சேமிக்கப்படுது.

உலகளாவிய ஏற்றுமதியிலும் உற்பத்தியிலும் அமெரிக்காவின் பங்கு குறைஞ்சுருச்சு. சர்வதேச வர்த்தகத்துல டாலர் இன்னும் ஆதிக்கம் செலுத்துனாலும் அதன் பங்கு குறைஞ்சுவருது என்பதும் குறிப்பிடத்தக்கது.  சர்வதேச கட்டணங்களில் (SWIFT) அமெரிக்க டாலரின் பங்கு 60% ஆக இருக்கு. பத்திர சந்தையில் டாலரின் பங்கும் 50%லிருந்து  2024ல் 30%ஆகக்குறைஞ்சுருக்கு. சுங்கவரித் தடைகளால சரக்குச் சந்தையிலும் டாலரின் பங்கு குறைஞ்சுருக்கு. வர்த்தக விலைப்பட்டியல்களின் டாலரின் பங்கு 40%ஆகவும், எல்லை தாண்டிய கடப்பாடுகளில் டாலரின் பங்கு 48% ஆகவும் வெளிநாட்டு நாணயக் கடன் வழங்கலில் டாலரின் பங்கு 70%ஆகவும் இருக்கு.

 2025 ஆம் ஆண்டு நிலவரப்படி, அந்நியச் செலாவணி (FX) சந்தையில அதிகமாக பரிவர்த்தனை செய்யப்படும் டாலரின் பங்கு 89.2%ஆக இருக்கு. ஆனாலும் கூட உலகளவில் மத்திய வங்கிகளின் அந்நியச் செலவாணி இருப்புகளில் டாலரின் பங்கு 1960களில் 90% இருந்தது 2024ல 58%ஆக கணிசமா குறைஞ்சுருக்கு. அதே நேரத்துல மத்திய வங்கிகளின் தங்க இருப்புகள் கணிசமா அதிகரிச்சுருக்கு.

(தொடரும்)

No comments:

Post a Comment

உலக சமத்துவமின்மை அறிக்கை 2026 (WIR 2026)

  உலக சமத்துவமின்மை ஆய்வகம் 2026ஆம் ஆண்டுக்கான உலக சமத்துவமின்மை அறிக்கையை வெளியிட்டுள்ளது. இதற்கு முன்  2018, 2022லும் உலக சமத்துவமின்மை அற...