Thursday, November 30, 2023

சூதாடும் காட்டேரி (80):

 

வெவ்வேறு விதமான உத்தரவாதங்கள்:

யாக்ஞவல்கியஸ்மிருதியின் (II-53) படி கடன் கொடுக்கும்போது கடனாளியை கொண்டுவந்து நிறுத்தவும், நம்பகத்தன்மைக்கும், கடன் அடைக்காதபட்சத்தில் கடனை அடைப்பதற்கும் உத்தரவாதம் கோரப்படுகிறது. முதல் இருவகை உத்தரவாதங்களில் கடன் அடைக்கப்படாமல் இருந்தால் உத்தரவாதம் அளித்தவர் கடனை அடைக்கவேண்டும். மூன்றாவது வகை உத்தரவாதத்தில் உத்தரவாதம் அளித்தவரும், அவரது வாரிசுகளும் கடனை அடைக்கவேண்டும்.

மேலே கூறப்பட்டுள்ள வழிமுறை யாக்ஞவல்கியஸ்மிருதியில் உள்ள மூன்றுவகையான உத்தரவாதங்களை குறிப்பிடுகிறது. மிதாக்ஷரா மூன்றுவகையான உத்தரவாதங்களை பின்வருமாறு வரையறுத்துள்ளார்.

1. கடன் கொடுத்தவரின் இருப்புநிலைக்கு உத்தரவாதம் (பிரதர்சனா) என்பது தேவைப்படும்போது நான் அவரை கொண்டுவந்து நிறுத்துவேன் என்ற பொருளில் அளிக்கப்படும் உத்தரவாதம்.

2. நம்பிக்கைக்கான உத்தரவாதம் (பிரத்வனா அல்லது விஷ்வாசா) என்பது கடனைக் கொடுங்கள் அவர் உங்களை ஏமாற்றமாட்டார் என்ற பொருளில் அளிக்கப்படும் உத்தரவாதம்.

3. அடைப்பதற்கான உத்தரவாதம் (தனா) என்பது ஒருவேளை அவர் கடனை அடைக்கவில்லையென்றால் அதை நான் அடைப்பேன் என்ற பொருளில் அளிக்கப்படும் உத்தரவாதம்.

யாக்ஞவல்கியஸ்மிருதியில் கூறப்படும் மூன்று வகையான உத்தரவாதங்களையே நாரதரும், பிரஹஸ்பதியும் மேற்கோள்காட்டியுள்ளனர். உறுதிமொழியை எடுப்பதற்கான உத்தரவாதம் பிணையத்தை அளிப்பதற்கான உத்தரவாதம் போன்ற பிறவகையான உத்தரவாதங்களைப் பற்றியும் குறிப்பிட்டுள்ளனர். ஆனபோதிலும் அவை அடிப்படையில் யாக்ஞவல்கியஸ்மிருதியில் கூறப்படும் மூன்று வகையான உத்தரவாதங்களின் கீழே தான் வருகின்றன. தேவைப்படும்போது கடனாளி வராமலிருக்கும்போதோ அல்லது கடனாளி உரியநேரத்திற்குள் கடனை அடைக்காதபோதோ அல்லது உத்தரவாதம் அளித்தவரை கடனை அடைக்குமாறு சொல்லும்போதோ இந்த மூன்று சூழ்நிலைகளிலும்  உத்தரவாதம் அளித்தவரே அவற்றை நிறைவேற்றும் கடமைக்கு பதிலளிக்கக் கடமைப்பட்டுள்ளார். கடனாளியைக் கொண்டுவருவதற்கான உத்தரவாதத்திலும், நம்பிக்கைக்கான உத்தரவாதத்திலும் அப்போது கொடுக்கவேண்டிய கடன் தொகைக்கு உத்தரவாதம் அளித்தவர் கடமைப்பட்டுள்ளார். கடனை அடைப்பதற்கான (தனா) உத்தரவாதத்தில் அவர் உத்தரவாதம் அளித்த உண்மையான கடன் தொகையை அளிக்க கடமைப்பட்டுள்ளார். நாரதாவும், பிரஹஸ்பதியும் இதே போன்ற விதியைப் பரிந்துரைத்துள்ளனர்.

சில சூழ்நிலைகளில் கடப்பாட்டிலிருந்து விதிவிலக்கு:

மேற்கூறப்பட்ட விதிகளை அளித்த காத்யயனா கடனாளியைக் கொண்டு வந்து நிறுத்துவதிலிருந்து ஒரு முக்கியமான விதிவிலக்குக்கான வழியையும் அளித்துள்ளார்.

கடனாளியை கொண்டுவந்து நிறுத்தவேண்டியது கடவுளின் செயலாகவோ அல்லது அரசரின் செயலாகவோ இல்லாதபோது, கடன் கொடுத்தவரின் இருப்புநிலைக்கு ஒப்புக்கொண்ட நேரத்தில் இடத்தில் உத்தரவாதம் அளித்தவர் கடனாளியை கொண்டுவந்து நிறுத்தமுடியாதபோது, அவர்  (உத்தரவாதம் அளித்தவர்) கடன் கொடுத்தவருக்கு நிலுவையிலுள்ள கடன் தொகையை கட்டவேண்டும்.

கடவுளின் செயலால் நோய்வாய்ப்பட்டிருக்கும்போதோ, இறப்பு ஏற்பட்டிருந்தாலோ அல்லது அரசரின் செயலால் அதாவது அரசரின் ஆணையின் படி அவர் சேவையில் ஈடுபட்டிருந்ததால் உத்தரவாதம் அளித்தவரால் கடனாளியை கொண்டு வந்து நிறுத்தமுடியாதபோதோ இந்த விதியின்படி கடன் கொடுத்தவரின் இருப்புநிலைக்கு உத்தரவாதம் அளித்தவருக்கு கடன் தொகையை அடைப்பஅதிலிருந்து விதிவிலக்கு அளிக்கப்படும்.

 (தொடரும்)

 

Wednesday, November 29, 2023

பணம் பேசுறேன் (80):

 

அமைதி வர்த்தகம் என்பது ஒரு விதமான பண்டமாற்று முறைனு (ஊமை பண்டமாற்று முறை) பார்த்திருந்தோம்., ஆனபோதும் அமைதி வர்த்தகத்துல ஆதிப் பணங்களையும் சேர்த்துப் பயன்படுத்தும் பழக்கம் மேற்கு ஆஃப்ரிக்காவில் காணப்பட்டுருக்கு. அது குறித்து கிங்க்ஸ்லி கூறியுள்ள ஒரு எடுத்துக்காட்டையும் ஹிங்ஸ்டன் குய்கின் மேற்கோள் காட்டியிருக்காங்க. அது பின்வருமாறு.

நான் சந்தைத் தெருக்களில் அடிக்கடி பார்த்துருக்கேன். போகும் வழியில் ஒரு சிறியப் பகுதி துப்புறவாக்கப்பட்டு அதில் அழகாக வாழை இலைகள் போடப்பட்டிருக்கும்.அதில் விற்பனைக்கான பல சிறிய பொருட்கள்; கோலா விதைகள்,, புகையிலைகள், உப்புக்கட்டி, சில சோளக்கருதுகள், அல்லது சேனைக்கிழங்கு அல்லது சர்க்கரை வள்ளிக்கிழங்கு குவியல்கள்  எல்லாம் கச்சிதமா அடுக்கப்பட்டிருக்கும். ஒவ்வொரு வகை பொருட்களுக்கும் எதிரே பல கௌரி கிளிஞ்சல்கள் அல்லது விதைகள் வைக்கப்பட்டிருக்கும். மாயமந்திர சக்தியுடையதாக நம்பப்படும் ஒரு சிறிய பொருள் மேலே உள்ள மரக்கிளையில் தொங்கவிடப்பட்டிருக்கும் அல்லது கடையின் மத்தியில் அமைதியாக உட்காரவைக்கப்பட்டிருக்கும். கௌரி கிளிஞ்சல்கள் அல்லது விதைகளின் எண்ணிக்கை பல வகைப் பொருட்களின் குவியலில் ஒவ்வொரு பொருளின் விலையைக் குறிக்கும். யாராவது பொருளுக்கு சரியான விலையை அதன் இடத்தில் வைக்காம இருந்தாலோ அல்லது கல்லாப்பெட்டியில் தலையிட்டாலோ அவங்க வீங்கி வெடிச்சுருவாங்கனு சுட்டிக்காட்டுறதுக்கு தான் அந்த மந்திர சக்தியுடைய சின்ன பொருள் வைக்கப்பட்டுருக்கு. (1899)

நான் பார்த்த வரைக்கும் அமைதி வர்த்தகம் வசதியா இருக்குறதுனால செய்யப்படுது ஒரு நபரே.பெரிய வேலை செலவு இல்லாம பல கடைகள திறந்துவைக்கமுடியும். ஒருவருக்கொருவர் போரில் இருக்கும் பழங்குடியினங்களுக்கிடையில் செய்யக்கூடிய வர்த்தகமுறையா இதை நான் பார்த்திருக்கேன் என்றும் கிங்க்ஸ்லி குறிப்பிட்டுருக்காங்க.

இந்த காலத்துல பொருளாதாரத் தடைகள் மூலமாகத் தான் போர்கள் செய்யப்படுது. ஆனா அந்த காலத்துல என்னதான் மோதல் ஒரு ப்க்கம் இருந்தாலும் கொடுக்கல் வாங்கல் பரிமாற்றங்கள் இன்னொரு பக்கம் நடந்துகிட்டுத்தான் இருந்துருக்கு.

அமைதி வர்த்தகத்தில் பணத்தின் பயன்பாடு விலக்கப்படல. தனியுடைமை சிறிதளவுக்கு மட்டுமோ அல்லது பண்டமாற்றுக்கான உடைமை இல்லாமலோ இருக்குற, பரிவர்த்தனைக்கான எந்த அமைப்புமே இல்லாத வேட்டுவ இனங்கள், காய்கனிகள சேகரிக்கும் பழங்குடி இனங்கள் தான் இம்முறையை பயன்படுத்தியுள்ளதாக தெரியவருது.  மக்களிடையே வெவ்வேறு கலாச்சார நிலைகள் இருக்கும் போதும், ஒருவருக்கொருவர் இணக்கமில்லாமல் விரோதத்தில் இருக்கும் போதும், ஒருவருக்கொருவர் புரிதல் இல்லாதபோதும் கையாளப்படும் மிகச்சிறந்த வர்த்தக முறையா இது உண்மையிலேயே இருக்கு என ஹிங்ஸ்டன் குய்கின் சொல்லியிருக்காங்க.

.உலகெங்கிலும் நாகரிகம் அடைந்த சமூகங்களிலும், நாகரிகம் அடையாத சமூகங்களிலும் பரிசு கொடுப்பது அல்லது பரிசுகளைப் பரிமாறிக்கொள்ளும் வழக்கம் ஏறக்குறைய ஒரு சடங்குத்தன்மையுடன் காணப்பட்டுள்ளது. இந்த பரிமாற்றம் பண்டமாற்றிலிருந்து வேறுபடுத்திப் பார்க்கக்கூடியதாகவும் இருக்கலாம். அல்லது பண்டமாற்றில் இணைக்கப்பட்டிருக்கலாம். அல்லது வர்த்தக அமைப்பில் அது ஒரு அத்தியாவசியமான கூறாக இருக்கலாம். அந்த நிகழ்வில் பணம் பரிணமித்திருக்கலாம்.

பூர்விகமா சுற்றோட்ட ஊடகம் இல்லாத அந்தமான் தீவுகள், நியூசிலாந்தையும் இதற்கான உதாரணங்களாக குறிப்பிடலாம். பணம் என்ற கருத்தாக்கம் உருவெடுத்துவரும் ஃபிஜியின் சொலிவு அல்லது வட அமெரிக்க போட்லாச் இதை விவரிப்பதாக உள்ளன. டொரஸ் நீர்சந்தி படகு வணிகத்திலும், நியூ கினியாவின் ஹிரி மற்றும் குலா பயணங்களில் அன்பளிப்பு பணமாக பரிணமிக்கும் நிகழ்வு கண்கூடத்தெரியுது என்று சொல்லியிருக்காங்க. ஹிங்ஸ்டன் குய்கின்.

  (தொடரும்)

 

 

 

 

 

 

Tuesday, November 28, 2023

சூதாடும் காட்டேரி (79):

உத்தரவாதம் குறித்தக் கோட்பாடு:

உத்தரவாதம் அளிக்கும் நபர் பிரதிபு என அழைக்கப்படுகிறார். உத்தரவாதத்திற்கான அல்லது உறுதிச்சான்றுக்கான ஒப்பந்தம் கடன் குறித்த சட்டத்தின் பகுதியாக உருவாக்கப்பட்டுள்ளது. கடன் வழங்குபவர்கள் பிணையம் பெற்ற பிறகு அல்லது நம்பகமான உத்தரவாதத்தை பெற்றபிறகு மட்டுமே முன்பணத்தை வழங்கவேண்டும் என பிரஹஸ்பதி எச்சரித்துள்ளார்.

ஒரு நபருக்கு கடன் தேவைப்படும்போது, கடன் வழங்குபவர் உத்தரவாதம் அல்லது பிணையம் இல்லாமல் கடன் வழங்கமறுத்தால் அத்தகைய சந்தர்ப்பத்தில் கடன் தேவைப்படுபவரிடம் கடனைத் திருப்பிச்செலுத்துவதற்கான பாதுகாப்பாக பிணையம் இல்லாதபோது, அவர் கடன் அளிப்பவருக்கு நம்பிக்கை ஏற்படுத்தும் விதமாக நம்பகத்தன்மையும், செல்வாக்கும் உள்ள ஒருவரை மூன்றாம் தரப்பினராக உத்தரவாதம் அளிக்கச் செய்யவேண்டும். அதேபோல் கடனைத் திருப்பிசெலுத்தாதற்காக கடனாளியை கடன் கொடுத்தவர் சிறையில் அடைத்தால், தேவைப்படும்போது கடனாளி நீதிமன்றத்திற்கு வருவார் என ஒருவரை உத்தரவாதம் அளிக்கச்செய்து அதன்பிறகு சிறையிலிருந்து விடுதலை பெறமுடியும். அவ்வாறு உத்தரவாதம் அளிக்கும் போது கடன் அளித்தவர் கடனாளியை விடுதலை செய்யவேண்டும் என்று காத்யாயனா கூறியுள்ளார்.

உத்தரவாதத்தை பிரதிபவ்யத்தை நிலைநாட்டுவதற்கு, கடன் அளிப்பவர், கடனாளி, உத்தரவாதத்தை அளிப்பவர் ஆகிய மூன்று தரப்பினரின் ஒப்புதலைப் பெறவேண்டும். உத்தரவாதத்தை நிலைநாட்டிய பிறகு, அதன் விளைவாக இரண்டு நபர்கள் கடன் கொடுத்தவருக்குக் கடனைத் திரும்பசெலுத்த கடமைப்பட்டவர்கள், முதலாவது கடனாளி, அவர் கடனைத் திரும்பசெலுத்தாதபோது உத்தரவாதம் அளித்தவர் கடனை அடைக்கக் கடமைப்பட்டுள்ளார்.

கடன் பரிவர்த்தனையின் போது உத்தரவாதம் தவிர ஸ்மிருதிகளில் அளிக்கப்பட்ட பல்வேறு வழிமுறைகளின் படி, தேவைப்படும்போது மூன்றுதரப்பினரும் நீதிமன்றத்திற்கு வருவதற்கும், வழக்கில் நீதிமன்றம் வழங்கும் இறுதி ஆணையை நிறைவேற்றுவதற்கும் மூன்றுதரப்பினரும் நீதிமன்றத்தின் முன் உத்தரவாதம் அளிக்கவேண்டியது அவசியம் எனத் தெரிகிறது.

வாதி, பிரதிவாதி இருவரிடமிருந்துமே நீதிமன்றத் தீர்ப்பினை நிறைவேற்றுவதற்கான உத்தரவாதத்தைப் பெறவேண்டும் என யாக்ஞவல்கியஸ்மிரிதியில் (II 10-2) தெளிவாக பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இந்த முறையில் தீர்ப்பாணையை நிறைவேற்றுவதற்கான உத்தரவாதம் உள்ளது. அரசரின் ஆணையின் மூலமாகவோ, அல்லது கடன் கொடுத்தவர் தானாக முன்வந்து கடனாளியை சிறையில் அடைக்கும்போது, அவரை விடுவிக்க ஒருவர் உத்தரவாதம் அளிக்கவேண்டும் என்பதும் வழக்கமாக இருந்துள்ளது.

ஸ்மிரிதிகளில் கொடுக்கப்பட்டுள்ள உத்தரவாதங்களை ஒழுங்குபடுத்தும் விதிகளின் சாரத்தை பின்வருமாறு கூறலாம்:

வெவ்வேறு விதமான உத்தரவாதங்கள்:

யாக்ஞவல்கியஸ்மிருதியின் (II-53) படி கடன் கொடுக்கும்போது கடனாளியை கொண்டுவந்து நிறுத்தவும், நம்பகத்தன்மைக்கும், கடன் அடைக்காதபட்சத்தில் கடனை அடைப்பதற்கும் உத்தரவாதம் கோரப்படுகிறது. முதல் இருவகை உத்தரவாதங்களில் கடன் அடைக்கப்படாமல் இருந்தால் உத்தரவாதம் அளித்தவர் கடனை அடைக்கவேண்டும். மூன்றாவது வகை உத்தரவாதத்தில் உத்தரவாதம் அளித்தவரும், அவரது வாரிசுகளும் கடனை அடைக்கவேண்டும்.

 

 (தொடரும்)

 


Monday, November 27, 2023

பணம் பேசுறேன் (79):

 

நாணயங்கள் சுற்றோட்ட ஊடகமாக பயன்படுத்தப்பட்டதற்கு முந்தைய காலகட்டத்தைப் பற்றியும்,  நாணயங்களால் பதிலீடு செய்யப்பட்ட பொருள்களான ஆதிப்பணங்களை பற்றியும் ஒரு பொதுவான கணக்காய்வு செய்யப்படாமலே இருந்ததால கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பிரிட்டிஷ் மானுடவியலாளரான அலிசன் ஹிங்ஸ்டன் குய்கின் (1874-1971) தானே அதற்கான ஆய்வுகளை மேற்கொண்டு ‘ஆதிப்பணத்தின் கணக்காய்வு சுற்றோட்ட ஊடகத்தின் தொடக்கம்’ (A survey of primitive money – The beginnings of currency’) என்ற முக்கியமான நூலை எழுதியிருக்காங்க. இதில் உலகெங்கும் பல்வேறு இடங்களில் பயன்படுத்தப்பட்ட ஆதிப்பணங்கள் பற்றி விரிவாக தொகுப்பாய்வு செய்யப்பட்டுருக்கு.

சுற்றோட்ட ஊடகம் பயன்பாட்டுக்கு வருவதற்கு முந்தைய காலகட்டத்தை விளக்கும் போது,  பரிசு கொடுப்பதற்கும் பணப்பரிவர்த்தனைகளுக்கும் இடைப்பட்ட காலகட்டத்துல உலகளவில் பரிசு பரிமாற்றங்கள், அமைதி வர்த்தகம் என இரு வழக்கங்கள் பரவிக்காணப்பட்டதாக ஹிங்ஸ்டன் குய்கின் சொல்றாங்க.

அமைதி வர்த்தகம் வடக்கு ஐரோப்பாவிலும், கிழக்கில் இந்தியா, சிலோன், கிழக்கிந்தியத்தீவுகள்லயும், நியூ கினியா, நியூ ஹெபிரிடிஸ் தீவுகள்லயும் செய்யப்பட்டுருக்கு. ஆனாலும் அது ஆஃப்ரிக்காவில் பெரிய அளவில் பரவிக் காணப்பட்டுருந்துச்சாம்.

மானுடவியலாளர் எமில் டோர்டே தன்னுடைய ‘Causeries Congolaises’  நூலில் கொடுத்துள்ள பின்வரும் சம்பவத்தையும் அவங்க மேற்கோள் காட்டியிருக்காங்க.

சின்ன பிக்மி வேட்டைக்காரர் தன் இரையைக் கொன்று பசியாற சாப்பிட்ட பிறகு மிச்சமுள்ள மாமிசத்தை இருண்ட இரவில் கிராமத்தின் முகப்பில் உள்ள ஒரு மரத்தின் கிளையில் கட்டிவிடுவார். காலையில கிராமத்தினர் தங்களுக்கு வேண்டிய மாமிசத்தை வெட்டி எடுத்துக்கொண்டபின்பு  அதற்கு பதிலாக, சம மதிப்புள்ள சோளம், மரவள்ளிக், கிழங்கு அல்லது சேனைக்கிழங்குகளை மரத்தில் கட்டிவிடுவாங்க. இது நேர்மையான முறையில் தான் கணக்கிடப்படுது. ஏன்னா, இரவில் சேரவேண்டியதை எடுக்க வரும் பிக்மி ஏமாறுவதை ஏற்றுக்கொள்ளமாட்டார். அவருடைய விசம் தடவிய அம்புகள் நியாயமான விலையைக் கொடுக்காத கிராமத்தினரை பதம் பார்த்துவிடும்.

வடக்கு ரொடிசீயாவிலிருந்தும் ஒரு உதாரணத்தைக் கொடுத்துருக்காங்க. உடைந்த மலையின் மேற்கே உள்ள பெரிய லுகாங்கா சதுப்பு நிலத்தில் உள்ள அவத்வா இனத்தவர் (அபத்வா) அமைதி வர்த்தகத்தின் மூலம் தங்களோட மீனை தானியத்துக்கு மாத்திக்கிறாங்க.     

மீன் தான் அந்த சதுப்பு நிலத்தோட முக்கிய விளைபொருளா இருக்கு. அதற்கு கரையோரம் கடுமையான கிராக்கி இருக்கு. பகல் பொழுதுல கடற்கரைக்கு அப்பாலுள்ள கிராமத்தை சேர்ந்தவங்க சோளத்தை சதுப்பு நிலத்தின் ஓரத்துல வெச்சுட்டு அவங்க கிராமத்துக்கோ, தூரத்திலிருந்து வந்துருந்தா அவங்க தங்குமிடத்துக்கோ போயிடுவாங்க. அவங்க வருகைய கேள்விப்பட்ட அவத்வா இனத்தவர் இரவு வேளையில் தங்கள் படகுகள்ல கருவாட எடுத்துக்கிட்டு போய் சதுப்பு நிலத்தின் ஓரத்துல சோளத்துக்கு பதிலா வெச்சுடுவாங்க. அவங்க சோளத்தை எடுத்துக்கிட்டு போயுடுவாங்க. கடற்கரைக்கு அப்பாலுள்ள கிராமத்தை சேர்ந்தவங்க திரும்ப வந்து கருவாட எடுத்துக்கிட்டு போயுடுவாங்க. இந்த பரிமாற்றத்துல ஈடுபட்ட இரண்டு தரப்பினருமே ஒருத்தரை ஒருத்தர் பார்த்துக்கல. என்கிறார் மானுடவியலாளர் மௌப்ரே, (1912)

குடியேற்றத்திற்கு முந்தைய பழங்காலத்துல இந்த முறையில தான் வர்த்தகம் செய்யப்பட்டுருக்கு. ஆனால் பிறகு சட்டம் ஒழுங்கு நிலைநாட்டப்பட்ட பிறகு, படையெடுத்து சூரையாடும் பழக்கம் நின்றபிறகு மிகவும் அமைதியான நம்பிக்கையின் அடிப்படையிலான வர்த்தகம் மக்களுக்கிடையே நடைபெற்றதாகவும் மௌப்ரே குறிப்பிட்டுள்ளார்.

 (தொடரும்)

 

 

Sunday, November 26, 2023

பொம்மைகளின் புரட்சி (22):

 

குக்குவின் அம்மா: வட அரைக்கோளத்துல மிகவும் குறைந்த வெப்பநிலையும் சைபீரியாவுல தான் காணப்படுது. குளிர்காலத்துல அங்க வெப்பநிலை -50 டிகிரி செல்சியஸுக்கு கீழ குறைஞ்சிடும். ரஷ்யாவுல, தான் உலகின் மிகப் பரந்த தைகா காட்டுப்பகுதி பசிபிக் பெருங்கடல்லேருந்து யூரல் மலைகள் வரை சுமார் 5,800 கிலோமீட்டர்கள் வரை நீண்டுக் காணப்படுது. வெப்பமண்டலக் காடுகளை விட இரண்டு மடங்கு அதிக கார்பனை தைகா காடுகளால சேமித்து வெச்சுக்கமுடியும். இன்னும் சரியா சொல்லனும்னா தைகாக் காடுகள் புவியின் வட அரைக்கோளத்தில் தூந்திர பிரதேசத்திற்கும், மிதவெப்பமண்டல இலையுதிர் காடுகளுக்கும் இடைப்பட்ட பகுதியில் அமைஞ்சிருக்கு. தைகாக்காடுகள்ல மண் எப்போதுமே உறைஞ்சிருக்கும் அதை உறைமண்ணுன்னு சொல்றாங்க..  தைகா காடுகள்ல ப்ளூபெர்ரி, கிரான்பெர்ரி போன்ற பெர்ரிபழங்களைக் கொண்ட புதர்ச்செடிகள் காணப்படுது. அவை அங்குள்ள விலங்குகள், பறவைகளுக்கு முக்கியமான உணவா இருக்கு…

குக்கு: அங்க என்னென்ன விலங்குகளெல்லாம் இருக்குமா

குக்குவின் அம்மா: அங்க பல வகையான விலங்குகள் இருக்கு. அங்க ரொம்பக் குளிரா இருக்குறதால குளிருக்கு தகவமைச்சு வாழும் விலங்குகளால தான் அங்க தாக்குப்பிடிக்கமுடியும். விலங்குகள் அங்க அடர்ந்த ரோமங்களோட புஸுபுஸுனு இருக்கும். பாம்பு, ஓணான் போன்ற ஊர்வன வகை விலங்குகள் குளிர் ரத்தப்பிராணிகள், அதுங்களால உடலோட வெப்பத்தை அதிகரிக்கவோ, ஒழுங்குபடுத்தவோ முடியாது. அதனால ஊர்வன வகை விலங்குகள் அங்க ரொம்பக்குறைவா தான் காணப்படுது. பனி முயல், அணில், சிப்மங்க், மர்மொட், லெம்மிங்க் பைகா போன்ற கொரித்து வாழும் சின்ன விலங்குகளும் ரெய்ண்டீர், கரீபௌ, எல்க் மான், காட்டெருமை, காட்டுப்பன்றி, குதிரை, கருங்கரடி, பழுப்பு கரடி, பனிக்கரடி, ஓநாய், ரக்கூன், லிங்க்ஸ், நரி, ஒட்டர், சைபீரியப்புலி, அமுர் வேங்கை,  போன்ற பெரிய விலங்குகளும் அங்க இருக்கு. மூஸ் எனப்படும் உலகின் மிகப்பெரிய மான் வகையும், உலகின் மிகப்பெரிய புலியான, 300-கிலோ எடையுள்ள சைபீரிய புலியும் தைகா காடுகள்ல தான் காணப்படுது. தைகா காடுகள்ல பல வகை குருவிகள், கழுகுகள், பனி ஆந்தைகள், கொம்பு ஆந்தைகள் போன்ற 300 வகை பறவைகள் காணப்படுதாம். குளிர்காலத்துல அங்குள்ள விலங்குகள் எதுவுமே செய்யாம ஹைபர்னேசன் எனப்படும் நீண்ட குளிர்கால உறக்கத்தில் இருப்பதனால தான் குளிர்காலத்த தாக்குப்புடிக்கிறாங்க. தைகாக் காடுகள்ல உள்ள பறவைகள் பொதுவா  குளிர்காலத்துல  தெற்கு நோக்கி  இடம்பெயர்ந்துருங்க.

குக்கு: அப்போ விலங்குகள் குளிர்காலம் முழுக்க தூங்குவாங்களா ஏம்மா அப்படி

குக்குவின் அம்மா: குளிர்காலத்துல அவங்களுக்கு உணவு கெடைக்காது. உடலை ஒறையவைக்கும் குளிரிலிருந்து பாதுகாத்துக்கொள்வதற்கான தகவமைப்புதான் அது…

குக்கு: தைகா விலங்குகள் ஹைபர்னேசன்ல எப்படி வாழ்றாங்கன்னு பார்க்க ஆசையா இருக்கும்மா…

குக்குவின் அம்மா: கட்டாயம் பாக்கலாம் குக்கு. நான் ஒனக்கு வீடியோ காட்டுறேன். இன்னொரு முக்கியமான விசயமும் சொல்லனும் குக்கு. சோவியத் ஒன்றியத்தின் மறைவுக்குப் பிறகு சைபீரியாவின் பெரும்பகுதி தைகாக் காடுகள் அழிக்கப்பட்டு வருது. மனித நடவடிக்கைகளால் ஏற்பட்டுள்ள காலநிலை மாற்றத்தாலயும் தைகா காடுகள் பாதிக்கப்பட்டுருக்கு. புவியின் உயிர்ச்சூழலையும் பன்முகத்தன்மையும் பாதுகாக்க தைகாக் காடுகள பத்திரமா பாதுகாக்க வேண்டிய பொறுப்பு நம்ம எல்லாருக்குமே இருக்கு குக்கு.

 (தொடரும்)

 

 

 

 

 

 

 

Saturday, November 25, 2023

சூதாடும் காட்டேரி (79):

 

கடன்களின் முன்னுரிமை குறித்து  காத்யாயனா அளித்த விதிகள்:

11. ஒருவருக்கு தன்னால் ஏற்பட்ட இழப்பிற்கு பரிசு அளிப்பதாக தந்தை வாக்களித்திருந்ததையும், மத நம்பிக்கையின் அடிப்படையில் கொடுக்கவேண்டிய பரிசுகளையும் மகன் மதித்துநடக்கவேண்டும்(565-566).

12. மது விற்பவர் பெற்றிருந்த கடனை, அவருக்கு சொத்தோ, மகனோ இல்லாதபோது அவரது மனைவியை அடைபவர் அடைக்கவேண்டும் (567).

13. சாராயம் காய்ச்சுபவர்கள், சலவைசெய்பவர்கள், மேய்ப்பர்கள், வேட்டைக்காரர்கள் ஆகியோரின் மனைவிகள் தங்களின் தொழிலில் நெருக்கமாக இணைந்து செயல்படுவதால் அவர்கள் பெற்ற கடன்களை அவர்களின் கணவர்களே அடைக்கவேண்டும், மற்ற நேரங்களில் குடும்பத்தேவைகளுக்காக மனைவியால் வாங்கப்பட்டக் கடன்களையும் அடைக்கவேண்டியது கணவனின் கடமை (568-570).

14. ஒரு கடனாளியான பெண் தகுந்த அளவில் ஷ்ரிதனங்களை பெற்றிருந்து, தன் மகனின் நலன்களுக்கு எதிராக இன்னோருவரை சேர்ந்தால், ஶ்ரிதனங்களின் மீதான அப்பெண்ணின் உரிமையை மகன் இல்லாமலாக்கலாம். (571, 573, 574) ஶ்ரிதனங்களிலிருந்து மகன் கடன்களை அடைக்கலாம்.

15. தவறான காரணங்களுக்காக மகன் பெற்ற கடனை தந்தை அடைக்கவேண்டும் என்ற கடமை இல்லை (572).

16. தொலைதூரப்பயணங்களுக்கு சென்றவர்களின் கடன்களையும், உறவினர் யாருமில்லாதவர்களின் கடன்களும், அறிவிலிகள், மனநிலை பாதிக்கப்பட்டவர்களின் கடன்களையும், அவர்களின் சொத்தையோ, மனைவிகளை அடைபவர் அடைக்கவேண்டும்(575-576).

17. மகனையுடைய ஒரு பெண் இரண்டாவது கணவனை பெற்றிருந்தாலும், அவரது மகன் வசதியான நிலையில் இருந்தால் கடனை அடைக்கவேண்டும். இல்லையெனில் அந்தப் பெண்ணை மனைவியாய் அடைபவர் கடனை அடைக்கவேண்டும் (577).

18. தந்தையோ மகனோ வெளியூர் சென்றிருக்கும்போது தாய் வாங்கிய கடனை மகன் அடைக்கவேண்டும் (578).

19. தந்தையின் ஒப்புதல் அல்லது அங்கீகாரத்துடன் கடன் வாங்கியிருந்தால் மகன் வாங்கிய கடனை தந்தை அடைக்கவேண்டும் (579).

அநீதியின் கரைபடாத எல்லா கடன்களும் அடைக்கப்படவேண்டும் என்பதே சட்டத்தின் வழிமுறையாக உள்ளது.

உத்தரவாதம்:

உத்தரவாதம் (பிரதிபவ்யம்) என்பது நபர்களுக்கிடையே நம்பிக்கை அல்லது நம்பகத்தன்மை ஏற்படுத்தும் நோக்கில் உருவாக்கப்படும் ஒப்பந்தம் என யாக்ஞவல்கியஸ்மிருதியில் கூறப்பட்டுள்ளதாக மிதாக்ஷரா குறிப்பிட்டுள்ளார்.

(தொடரும்)

 

Friday, November 24, 2023

பணம் பேசுறேன் (78):

 

அஸ்டெக் கலாச்சாரத்தில் தங்கம் ஒரு புனிதமான, சக்திவாய்ந்த பொருளாக இருந்தது, மேலும் அஸ்டெக்குகள் தங்கத்தை கடவுளின் எச்சம் என்று நமபினர். போர், வேள்வி, அலங்காரங்கள் சம்மந்தப்பட்ட பல்வேறு பொருட்களில் தங்கம் பயன்படுத்தப்பட்டது.: அஸ்டெக்குகள் தங்கத்தை விட மற்ற பொருட்களை மிக அதிகமாக மதிப்பிட்டனர் அவர்கள் பிரகாசமான வண்ண இறகுகளை விரும்பினர், குவெட்சல்கள் அல்லது ஹம்மிங் பறவைகளின் இறகுகளிலிருந்து ஆடைகளையும், தலைக்கவசங்களையும் உருவாக்கினர், மேலும் அதை அணிவது செல்வத்தின் வெளிப்பாடாகக் கருதப்பட்டது. அவர்கள் மாணிக்கம், ரத்தின நகைகளை விரும்பினர். அவர்கள் பருத்தியையும் அதிலிருந்து செய்யப்பட்ட டூனிக்ஸ் போன்ற ஆடைகளையும் அணிவதை அதிகாரத்தின் வெளிப்பாடாகக் கருதினர்.

அமெரிக்காவில் தங்கமும், வெள்ளியும் செழுமியிருந்தபோதும் அதை மீசோஅமெரிக்கர்கள் அலங்காரத்திற்காகவே பயன்படுத்தினர். அவர்களின் பொருளாதாரத் தேவைகளை நிறைவு செய்வதற்கு பண்டமாற்றும் ஆதிப்பணமுமே போதுமானதாக இருந்தது. அவர்கள் தங்கத்தை நாணயமாக, பணமாக பயன்படுத்தவில்லை. அஸ்டெக்குகளின் ஆட்சி பொகா 1325 ஆண்டிலிருந்து 1521வரை நீடித்திருந்தது. அதற்கு பிறகு அமெரிக்காவில் தங்கத்தையும், வெள்ளியையும் கொள்ளையடிப்பதற்காக ஊடுருவிய ஸ்பானியர்கள் அஸ்டெக் பழங்குடியினரை போர் ஆக்கிரமிப்பினால் இன அழிப்பு செய்தனர். பின்னர் காலனிய ஆட்சி நிறுவப்பட்டதால் பழைய அமைப்பு சிதைக்கப்பட்டது.

காலனியாதிக்கத்தின் போது வெள்ளி ரியால்கள், தங்க எஸ்குடோக்கள், பெசோ நாணயங்கள் ஆகியவை பயன்பாட்டில் இருந்தன.  ஒரு தங்க எஸ்குடோவின் மதிப்பு 16 வெள்ளி ரியால் நாணயங்களாக இருந்தது. ஒரு பெசோவின் மதிப்பு எட்டு ரியால் நாணயங்களாக இருந்தது. பெசோ என்ற ஸ்பானிஷ் வார்த்தைக்கு 'எடை' என்று பொருள். 1863 ஆம் ஆண்டு மாக்சிமில்லன் அரசரின் கீழ் இரண்டாம் மெக்சிக பேரரசில் பெசோ நாணயங்கள் 100 சென்டாவோக்களாகப் பிரிக்கப்பட்டன. அது வரை மெக்ஸிகோவில் பெசோ 8 ரியல்களின்  மதிப்பை உடையதாக இருந்துவந்தது.

1970களின் பிற்பகுதியில் ஏற்பட்ட எண்ணெய் நெருக்கடிக்குப் பிறகு, 1982ல் மெக்சிகோ தனது வெளிநாட்டுக் கடனைத் திருப்பி செலுத்தத் தவறியது, இதன் விளைவாக மெக்சிகோவிலிருந்து பெருமளவில் மூலதனம் வெளியேறியது, அதைத் தொடர்ந்து பல ஆண்டுகளாக பணவீக்கம், பணமதிப்பிழப்பால்  பெசோ மதிப்பிழந்தது. இது பெசோ நெருக்கடி என அழைக்கப்படுகிறது. 1993 ஜனவரி 1, இல், மெக்ஸிகோவின் மத்திய வங்கி நியூவோ பெசோ என்ற ஒரு புதிய நாணயத்தை அறிமுகப்படுத்தியது, ஒரு புதிய பெசோவின் மதிப்பு 1,000 பழைய,  பெசோக்களுக்கு சமம்.

பண்டமாற்றிலிருந்து பணத்திற்கு மாறியதற்கான தர்க்கரீதியான வரிசைக்கிரமத்தைப் பின்வருமாறு க்ளின் டேவிஸ் குறிப்பிட்டிருந்தார். பண்டமாற்று -à பண்டமாற்றுடன் ஆதிப் பணம் -à ஆதிப் பணம் -à ஆதிப் பணத்துடன் நவீன பணம் -à பின்னர் கிட்டத்தட்ட முழுக்கமுழுக்க நவீன பணம். இது முற்றிலும் தர்க்கரீதியான வரிசைக்கிரமே தவிர இதே வரிசையில் தான் உலகெங்கும் மாற்றம் நிகழ்ந்தது என்று தவறாக கருதக்கூடாது. மாற்றத்திற்கான இந்த வரிசைக்கிரமம் இடத்திற்கு இடம் மாறுபட்டிருக்கலாம். ஆனபோதும் க்ளின் டேவிஸ் அளித்த தர்க்கரீதியான வரிசைக்கிரமம் சமூகம் பண்டமாற்றிலிருந்து பணத்திற்கு மாறியது குறித்த நமது புரிதலை எளிதாக்கியுள்ளது.

இதைப் புரிந்துகொள்வதற்கான ஒரு உதாரணமாக தான் அஸ்டெக்குகளின் பரிவர்த்தனை அமைப்பை பார்த்தோம். மெக்சிகோவின் வரலாற்றைப் பொறுத்தவரை முதலில் பண்டமாற்றும், பிறகு பண்டமாற்றுடன் ஆதிப்பணமும் பயன்பாட்டில் இருந்துவந்தது பின்னர் காலனியாதிக்கத்தால் பெசோவின் பயன்பாடு வலிந்து திணிக்கப்பட்டுள்ளது. இது போல் லத்தின் அமெரிக்கா, ஆசியா, ஆஃப்ரிக்காவின் பல இடங்களில் காலனியாதிக்கமே நாணயப் பயன்பாட்டையும் நவீன பணத்தின் பயன்பாட்டையும் பலவந்தமாக அறிமுகப்படுத்தியுள்ளது.

 

 (தொடரும்)

 

 

Thursday, November 23, 2023

சூதாடும் காட்டேரி (78):

 

கடன்களின் முன்னுரிமை குறித்து  காத்யாயனா அளித்த விதிகள்:

ஒரு இந்துவால் வாங்கப்பட்டக் கடனை அடைப்பதற்கு மற்றவர்களுக்கு உள்ள கடமை குறித்து காத்யாயனா 38 உரைகளை அளித்துள்ளார் (542-579). அவற்றில் பலவற்றை ஏற்கெனவே பார்த்துள்ளோம் மற்றவை பின்வருமாறு:

1. பொதுவாக மகன் பெற்ற கடனை தந்தை அடைக்கவேண்டியதில்லை என்றபோதும் தந்தையின் ஒப்புதலுடன் கடன் வாங்கியிருந்தால் அல்லது கடனை அவர் அங்கீகரித்திருந்தால், அதை தந்தை அடைக்கவேண்டும் (544).

2. குடும்பத்தலைவரின் ஒப்புதல் இல்லாமல் அவர் வெளிநாடு சென்றிருக்கும்போது, அடிமை, மனைவி, மகன்களைப் போன்ற சார்ந்திருப்போரால் கடன் வாங்கப்பட்டிருந்தால் அதை குடும்பத்தலைவர் அடைக்கவேண்டும் (545).

3. ஒரு பெண் தனியாக பெற்றக் கடனையும், கணவன் அல்லது மகனுடன் சேர்ந்துப் பெற்றக் கடனையும் அந்தப் பெண்ணே அடைக்கவேண்டும் ஆனால் மற்றவர்கள் பெற்றக் கடனை அவர் அடைக்கவேண்டியதில்லை (546).

4. இறக்கும் தருவாயிலுள்ள கணவன் கடனை அடைக்குமாறு மனைவியிடம் வேண்டுகோள் விடுத்திருந்தால் அந்த கடனை மனைவி அடைக்கவேண்டும் (547).

5. உயிருடன் இருக்கும் தந்தை பாதிக்கப்பட்டிருந்தாலோ வெளிநாடு சென்றிருந்தாலோ அதை அடைப்பதற்கான மகனின் கடமை அவரது 20வது வயதிலிருந்து தொடங்கும் (548-551).

6. தாத்தாவின் கடன் தந்தையால் அடைக்கப்படாதிருந்தாலும், அந்தக்கடன் அநீதியானக் கடனாக இல்லாதிருந்தாலும் அதை பேரன் அடைக்கவேண்டும். ஆனாலும் பேரன் முதலை மட்டும் அளித்தால்போதும் வட்டியை அளிக்கவேண்டியதில்லை (554-56).

7. மகனால் தந்தையின் சொத்தைப்பராமரிக்கமுடியும், அவரது கடனை அடைக்கமுடியும் என்றால் அரசன் மகனை கடனை அடைக்கச்செய்யவேண்டும். தந்தை இல்லாதபோது மகனும் பேரனும் மூதாதையரின் சொத்திலிருந்து கடனை அடைக்கவேண்டும் (558-9).

8. தந்தை உத்தரவாதம் அளித்திருந்த கடனிற்கான முதலை மட்டும் மகன் அடைக்கவேண்டும். பேரன் முதலைக்கூட அடைக்கவேண்டியதில்லை (561).

9. தந்தையின் சொத்து இருந்தபோதும் அதை மகன் பெறவில்லையென்றால் மகன் வசதியான சூழ்நிலையில் இருக்கும்போதுகூட தந்தையின் கடனை அடைக்கவேண்டியதில்லை (563).

10. தந்தை எதையெல்லாம் அளிப்பதாக வாக்களித்திருந்தாரோ அவற்றை மகன் அளிக்கவேண்டும். ஒருவருக்கு இச்சையின் அடிப்படையில் வாக்களிக்கப்பட்டவற்றைத் தவிர.

(தொடரும்)

 

Wednesday, November 22, 2023

பணம் பேசுறேன் (78):

 

அஸ்டெக் சந்தைகள் பொதுவாக முக்கிய அரசாங்க கட்டிடங்களை ஒட்டி அமைந்திருந்தன, இதனால் அரசாங்க அதிகாரிகளின் நெருக்கமான மேற்பார்வையின் கீழ் பொருட்களின் பரிமாற்றம் நடைபெற்றது. மத்திய டெனொச்டிட்லன் (Tenochtitlân) போன்ற சந்தைகள் ஒரு பெரிய பகுதியை ஆக்கிரமித்தன, (டெனொச்டிட்லன் அஸ்டெக்குகளின் தலைநகரம்) ஆனாலும் அரசாங்கம் அதிகாரப்பூர்வமாக பரிந்துரைக்கப்பட்ட வர்த்தக மண்டலத்திற்கு வெளியே எந்த கொள்முதலையும், விற்பனையையும் தடை செய்தது. அரசாங்க அதிகாரிகள் விலையையும், விற்பனையையும் ஒழுங்குபடுத்தினர், மேலும் அவர்கள் சந்தையின் சட்டத்தை மீறும் எவரையும் தண்டிக்கவும் மரண தண்டனை விதிக்கவும் கூடத் தயாராக இருந்தனர்.

பெரிய கொள்முதல்களுக்கு, வணிகர்கள் சுமார் 24,000 கொக்கோ விதைகளைக் கொண்ட பைகளின் அடிப்படையில் மதிப்புகளைக் கணக்கிட்டனர், ஆனால் அத்தகைய அளவுகள் தினசரி பரிவர்த்தனைகளில் பயன்படுத்த மிகவும் சிக்கலானதாக இருந்தன. பல பழமையான அமைப்புகளைப் போலவே, வர்த்தகத்தில் சில முக்கியமான பொருட்களின் மீது கவனம் செலுத்தப்பட்டது, அஸ்டெக்குகள் பரிமாற்றங்களைத் தரப்படுத்த ஒன்றுக்கு மேற்பட்ட பொருட்களைப் பயன்படுத்தினர். கொக்கோ விதைகளைத் தவிர, அவர்கள் குவாட்லி, எனப்படும் பருத்தி ஆடைகளையும் பயன்படுத்தினர், இதன் மதிப்பு 60 முதல் 300 கொக்கோ விதைகள் வரை மாறுபடும். கொக்கோ விதைகளுள்ள பைகள் மிகவும் பருமனாக இருந்ததால், அடிமைகள் அல்லது பலியிடப்படுபவர்களை வாங்குவது போன்ற பெரிய நிதி பரிமாற்றங்களுக்கு குவாச்ட்லி பருத்தி ஆடை பயன்படுத்தப்பட்டது. (மனிதர்களைப் பலியிடும் வழக்கம் அஸ்டெக்குகளிடம் இருந்தது) மற்ற தரப்படுத்தப்பட்ட பரிமாற்ற பொருட்களில் மணிகள், கிளிஞ்சல்கள் செப்பு மணிகள் ஆகியவை அடங்கும், அவை வடக்கே நவீன மாநிலமான அரிசோனா வரை வர்த்தகம் செய்யப்பட்டன.

சரக்குப் பணமானது நுகர்வுப் பொருளாகவும், பரிவர்த்தனைக்கான ஒரு பொருளாகவும் இருப்பதில் பெரும் நன்மையைக் கொண்டுள்ளது- அஸ்டெக்குகள் தங்கள் கொக்கோ பணத்தை சாக்லேட் பசையாக எளிதில் அரைத்து, பின்னர் அதை ஒரு டம்ளர் தண்ணீரில் கலந்து சுவையான பானத்தை உருவாக்கலாம். அதை அவர்கள் பெரிதும் விரும்பினர். காகிதப் பணம் மற்றும் மலிவான நாணயங்கள், அவற்றின் முக மதிப்பை எளிதில் இழக்க நேரிடும், அவற்றைப் போலல்லாமல் சரக்குப் பணமானது தனக்குள்ளேயே ஒரு மதிப்பைக் கொண்டுள்ளது, இதனால் சந்தையின் நிலை என்னவாக இருந்தாலும் எப்போதும் அது நுகரப்படலாம். சாக்லேட்டிற்கும், மற்ற எல்லா வகையான பணத்தைப் போலவே, கலாச்சார சூழலுக்கு வெளியே உள்ளார்ந்த மதிப்பு இல்லை. அதற்கு மதிப்பு இருக்கவேண்டுமெனில், மக்கள் அதை விரும்ப வேண்டும் மேலும் அதை எவ்வாறு பயன்படுத்துவது என்று தெரிந்து கொள்ள வேண்டும். கொக்கோ விதைகள் ஏற்றப்பட்ட கப்பலைக் கைப்பற்றிய முதல் ஐரோப்பிய கடற்கொள்ளையர்களின் சாக்லேட் மீதான மதிப்புகளுடன், உணவுப் பொருளாகவும், பரிமாற்ற வழிமுறையாகவும் பயன்படும் சாக்லேட் மீதான மீசோஅமெரிக்க காதல் பெரிதும் மாறுபட்டது: கடற்கொள்ளையர்கள் கொக்கோ விதைகளை முயல் சாணம் என்று தவறாகக் கருதி, சரக்கு முழுவதையும் கடலில் கொட்டினர் என்கிறார் ஜேக் வெதர்ஃபோர்ட்..

 (தொடரும்)

 

 

Tuesday, November 21, 2023

சூதாடும் காட்டேரி (77):

 

கடன்களின் முன்னுரிமை குறித்த விதி:

கடன்கள் பலவாக இருக்கும் போது முதலில் பெற்றக் கடனையே முதலில் அடைக்கவேண்டும். ஒரு பிராமணனுக்கு கட்டவேண்டியக் கடனை கொடுத்தபின்பே ஒரு அரசருக்கு (ஷத்ரியனுக்கு) கட்டவேண்டிய கடனை அடைக்கவேண்டும்.

ஒரு கடனாளி தயாரித்த குறிப்பிட்ட ஒரு பொருள் தன்னிடமிருந்து வாங்கிய கடனிலிருந்தே (பொருளிலிருந்தே) உருவாக்கப்பட்டது என்பதை கடனளித்தவர் நிலைநாட்டினால் கடனாளி அந்தப் பொருளை விற்றுபெறும் பணத்தை அதற்கு கடனளித்தவரிடம் மட்டுமே கொடுக்கவேண்டும், வேறுயாருக்கும் அளிக்கக்கூடாது. இவற்றிலிருந்து ஒரே நாளில் கடன்கள் அளிக்கப்பட்டிருந்தால், அனைத்துக் கடன்களும் சமமாக நடத்தப்படுகிறது என்றும், கடன்கள் வெவ்வேறு நாட்களில் அளிக்கப்பட்டிருந்தால் அவை அளிக்கப்பட்ட வரிசைக்கிரமப்படி அடைக்கப்படவேண்டும் என்பதும் தெரியவருகிறது. ஆனபோதும் ஒரு அரசருக்கு அளிக்கப்பட்ட கடனும் அல்லது ஒரு பிராமணனுக்கு அளிக்கப்பட்ட கடனும் அவை பின்னாளில் கொடுக்கப்பட்டிருந்தாலும் வரிசைக்கிரமப்படி முன்னிலை வகிக்கும்.

நவீன சட்டங்களுடன் ஒப்பீடு:

கடன்களின் முன்னுரிமை குறித்த விதி மற்றக் கடன்களை விட அரசுக்கு அளிக்கவேண்டிய கடனுக்கு முன்னுரிமை அளித்தபோதும் அதைக்காட்டிலும் அதிக முன்னுரிமையை பிராமணனுக்கு கொடுக்கவேண்டிய கடனுக்கே அளித்துள்ளது. இந்த சிறப்பு முன்னுரிமையைத் தவிர, கடன் வழங்கியவர்கள்  அனைவரையும் சமநிலையில் நடத்தவேண்டியதன் அவசியம் நவீன சட்டங்களால் அங்கீகரிக்கப்பட்டு அதற்கான வழிமுறை வழங்கப்பட்டுள்ளது. பண்டைய சட்டத்தில் மற்ற கடன் கொடுத்தவர்களைப் பொறுத்தவரை ஒரே நாளில் பல கடன்கள் கடனாளியால் வாங்கப்பட்டிருக்கும்போது  அவை அனைத்தும் சமமாக நடத்தப்படவேண்டும்.

கடனாளியின் சொத்து அனைத்து கடன்களையும் அடைப்பதற்கு போதுமானதாக இல்லாதபோது கடன் வழங்கியவர்களுக்கு விகிதாச்சார அடிப்படையில் அடைக்கவேண்டும் என்று காத்யாயனா பரிந்துரைத்துள்ளார். அதாவது விகிதாச்சார பங்கீடு அளிக்கவேண்டும். கடனாளியிடம் பணம் இல்லாதபோது கடனை அடைக்க அவரது சொத்தை விற்கவேண்டும்.

 நொடிப்புநிலையை அடைந்த கடனாளியின் சொத்துக்களை பங்கிடும்போது கடன்களின் முன்னுரிமையை ஒழுங்குபடுத்தும் மாகாண நொடிப்பு நிலை சட்டம் 1920ன் 16வது பிரிவிலும் இதே அம்சம் காணப்படுகிறது. 16வது பிரிவில் அரசுக்கும், வட்டார அலுவலர்களுக்கும் அளிக்கவேண்டியக் கடனுக்கும், வேலையாட்களுக்குக் கொடுக்கவேண்டிய ஊதியங்களுக்கும் முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது. அதன்பிறகே கடனாளிக்கு சொத்து மீதமிருக்குமானால் மற்ற கடன் வழங்கியவர்கள் அனைவரும் அதில் சமபங்கு பெறுவர், இதில் கடன் பெற்ற தேதி கருத்தில்கொள்ளப்படாது அனைவரும் சமபங்கு பெறுவர். சொத்து மாற்றத்திற்கான சட்டத்தின் 48வது பிரிவு அரசுக்குக் கொடுக்கவேண்டிய கடன்களுக்கு முன்னுரிமை அளிக்கிறது. அரசுக்கு கொடுக்கவேண்டிய பணத்தை திரும்பப்பெறுவதற்கான எல்லா சட்டங்களிலும் நில வருவாய் நிலுவையைப் பெறுவதிலும் இதே வழிமுறையே செயல்படுத்தப்படுகிறது.

(தொடரும்)

 

Monday, November 20, 2023

பணம் பேசுறேன் (77):

 

சாக்லேட் புடிக்காதவங்க யாருமே கெடையாது. குறிப்பா குழந்தைகள் அத ரொம்ப விரும்பிசாப்பிடுவாங்க… டார்க் சாக்லேட்டுல ஃப்ளேவனால்கள் நெறைய இருக்கு, அது இதயத்துக்கு ரொம்ப நல்லது. ஆனால் ஹெர்சி போன்ற பிரபலமான பல சாக்லேட் தயாரிப்புகள்ல அனுமதிக்கப்பட்டதை விட அதிக அளவு லெட், காட்மியம் ஆகிய உலோகங்கள் காணப்படுது. லெட் எனப்படும் காரியம், காட்மியம் ரெண்டுமே  விசம் தான். அவை பல நரம்பியல் கோளாறுகள், ரத்த அழுத்தம், சிறுநீரகக் கோளாறு போன்ற பல உடல்நலக் கோளாறுகளை ஏற்படுத்தும். கொக்கோ விதையில் காணப்படுவதை விட இறுதி சாக்லேட் தயாரிப்புகளில் லெட். காட்மியம் பல மடங்கு அதிகமா இருக்குறதா ஆய்வுகள்ல தெரியவந்துருக்கு. அதனால அந்த பிரபலமான சாக்லேட்டுகளை வாங்காமல் உங்களுக்கு வேணும்னா நீங்களே கொக்கோ பொடி வெச்சு சாக்லேட் பண்ணி சாப்பிடுங்க, குழந்தைகளுக்கும் கொடுங்க சரியா… கொக்கோவுக்கும் பணத்துக்கும் என்னய்யா சம்மந்தம்னு கேக்குறீங்களா, சாக்லேட் பணமாவும் பயன்படுத்தப்பட்டுருக்கு. அதாவது கொக்கோ பீன் எனப்படும் கொக்கோ விதைகள ஆதிப்பணமா பயன்படுத்தியிருக்காங்க.

மேற்கு அமெரிக்காவின் மெக்சிகோ பகுதியில் வாழ்ந்த அஸ்டெக் இன பழங்குடியினர் முதல்ல பண்டமாற்று முறையில தான் தனக்குத் தேவையானப் பொருட்களை பரிமாற்றத்தின் மூலமா கொடுக்கவும் வாங்கவும் செஞ்சாங்க… நாளடைவுல கொடுக்கல் வாங்கல் பரிமாற்றத்துல் மதிப்புவேறுபாடுகள் இருக்கும் போது மீதமதிப்பை கொடுத்தோ வாங்கியோ சரிசெய்ய அந்தப் பகுதியில அதிகம் விளையும் கொக்கோ விதைகளை ஆதிப்பணமா பயன்படுத்த ஆரம்பிச்சாங்க. இதைப்பற்றி ‘பணத்தின் வரலாறு’ (The History of Money) என்ற புத்தகத்தை எழுதிய ஜேக் வெதர்ஃபோர்ட் என்ன சொல்றாருன்னு இப்போ கேட்போம்.

அஸ்டெக் பணத்தின் அனைத்து வடிவங்களிலும், கொக்கோ மிகவும் பொதுவாகக் கிடைப்பதாகவும், பயன்படுத்த எளிதானதாகவும் இருக்கு. கொக்கோ மரத்தில் பெரிய பச்சை-மஞ்சள் காய்கள் காய்க்கிறது, அவை முலாம்பழங்களைப் போல தோற்றமளிக்கின்றன. பழுத்தவுடன், பழத்தில் ஒரு சதைப்பற்றுள்ள வெள்ளை கூழ் உள்ளது, இது மிகவும் சுவையாக இருக்கும், இருப்பினும் அது சாக்லேட்டைப் போல சுவைக்காது. கொக்கோ விதைகள் சாக்லேட் தயாரிக்க அரைப்பதற்கு முன்பு உலர்த்துதல் வறுத்தெடுப்பதன் மூலம் பாதுகாக்கப்படும் போது  பல மாதங்கள் கெட்டுப்போகாமல் நீடித்திருக்கும்.

கொக்கோ போன்ற சரக்கு பணம் வர்த்தகம் என்பதை விட பண்டமாற்று முறையையே அடிப்படையாகக் கொண்டது. ஒரு அஸ்டெக் ஒரு உடும்பை ஒரு கட்டு விறகுக்கோ அல்லது ஒரு கூடை சோளத்தை மிளகாய் கொத்துக்கு மாற்றுவார், மேலும் பரிமாற்றப்படும் பொருட்களுக்கு துல்லியமாக அதே மதிப்பு இல்லை என்றால், வணிகர்கள் அதை சமன் செய்ய கொக்கோவைப் பயன்படுத்தினர். கொக்கோ விதை மதிப்பைக் கணக்கிடுவதற்கும் பரிமாற்றத்தை முழுமைப்படுத்துவதற்கும் ஒரு ஊடகமாக செயல்பட்டது, ஆனால் அது பரிமாற்றத்திற்கான பிரத்யேக ஊடகமாக செயல்படவில்லை.  அதாவது முழுக்க முழுக்க கொக்கோ விதைகளைக் கொண்டு மட்டுமே பரிமாற்றம் செய்யப்படவில்லை. உதாரணமாக, ஆறு கொக்கோ விதைகளின் மதிப்புள்ள சோளக் கருதிற்கு ஐந்து கொக்கோ விதைகளின் மதிப்புள்ள நோபல் (கற்றாழை) ஒன்றை மாற்ற விரும்பும் விற்பனையாளர், நோபாலை பரிமாற்றி, பின்னர் ஒரு கொக்கோ விதையையும் கொடுத்து வர்த்தகத்தை சமன் செய்வார்.

(தொடரும்)

 

 

 

 

Sunday, November 19, 2023

பொம்மைகளின் புரட்சி (21):

 

குக்குவின் அம்மா: நீ குட்டிப் பாப்பா தான, ஒனக்கு இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக் பத்தியெல்லாம் தெரியாதுனு நெனச்சுட்டோம்…

குக்கு: அது எப்படி எனக்கு எது தெரியும், எது தெரியாது, எது புரியும், எது புரியாதுங்கறத என்ன கேக்காமலே நீங்களே முடிவுபண்ணிக்கிறீங்க…

குக்குவின் அம்மா: தப்பு தான்டா இனிமே அப்படி பண்ணமாட்டோம்…

குக்கு: நீங்க இந்த மாதிரி பண்றது இது மொதல் தடவ கிடையாது, நெறைய வாட்டி இப்டி தான் நடந்துருக்கு…

குக்குவின் அம்மா: சரி கோபப்படாத குக்கும்மா இனிமேல் அப்படி நடக்காது. வால்டேரிமுல்கஹைனென் மட்டும் இல்ல குக்கும்மா, உலகத்துல பல கலைஞர்கள் இந்த மாதிரி அழகழகான சம்பவங்களையெல்லாம் காட்சியாக்கிருக்காங்க… நம்ம தமிழ்நாட்டிலயும் இது மாதிரி நெறைய இயற்கை ஆர்வலர்கள் அழகழகா படம் எடுத்துருக்காங்க… நான் அப்பா வந்ததும் அதையெல்லாம் ஒனக்கு காட்டுறேன் சரியா…

குக்கு: அம்மா தைகா காடுகள்னு ஏதோ சொன்னியே அப்டினா என்ன, அது தமிழ்நாட்டுலயும் இருக்கா…

குக்குவின் அம்மா: தைகாக் காடுகள் பூமியோட வட எல்லையில குளிர்ப்பிரதேசங்கள்ல தான் இருக்கு குக்கு… நம்ம தமிழ்நாட்டுல தைகாக் காடுகள் இல்லடா. தைகா காடுகள் பனிக்காடுகள்னு அழைக்கப்படுது. அங்க குளிர்காலத்துல ரொம்பக் குளிரா பனி ஒரைஞ்சு காணப்படும்… அங்கே ஊசியிலை மரங்கள் தான் அதிகமா காணப்படுது…

குக்கு: அம்மா ஊசியிலை மரங்கள் எப்படி இருக்கும், நம்ம ஊர்ல அது இருக்கா

குக்குவின் அம்மா: நீ கிறிஸ்மஸ் மரம் பார்த்துருக்கீல குக்கு, அது மாதிரிதான் இன்னும் ஒயரமா பெருசா இருக்கும், நம்ம நாட்டுல மலைப்பிரதேசங்கள்ல ஊசியிலை மரங்கள் இருக்கு… அதோட வடிவம் நம்ம நெட்டிலிங்க மரம் இருக்கு பாத்தியா, மேல போகப்போக குறுகலா கூம்பு வடிவத்துல இருக்கும்ல அது மாதிரிதான் இருக்கும்…

குக்கு: நெட்டிலிங்க மரம் எனக்கு ரொம்பப்புடிக்கும்மா, அது மத்த மரங்கள் மாதிரி குண்டா இல்லாம ஒல்லியா இருக்கும்… அம்மா தைகா காட்டுல உள்ள மரங்களோட பேரெல்லாம் சொல்றியா…

குக்குவின் அம்மா: பனிக்காடுகள்ல பைன் மரங்கள், ஸ்புருஸ் மரங்கள், பிர்ச்,லார்ச் போன்ற வகை மரங்கள் அதிகமா காணப்படும் ஓக், மேபிள், எல்ம், ஆல்டர், வில்லோ, பாப்ளார் போன்ற மரங்களும் காணப்படுது. ரஷ்யக் கதைகள்ல பாப்ளார் மரங்கள் அதிகமா பேசப்பட்டுருக்கு…

குக்கு: அம்மா தைகாக்காடுகள் எவ்வளவு பெருசா இருக்கும்…

குக்குவின் அம்மா: தைகாக்காடுகள் ரொம்ப பெருசுடா. ஒலகத்தின் 17% நிலப்பரப்பு முழுவதும் தைகாக் காடுகள் தான் காணப்படுது இதோட பரப்பு 1.7 கோடி சதுர கிலோமீட்டர்  வட அமெரிக்காவின் கனடா, அலாஸ்காவுலேர்ந்து ஜப்பான் வரை தைகாக் காடுகள் பரந்து காணப்படுது. ரஷ்யா, ஸ்வீடன், ஃபின்லாந்து, நார்வே, எஸ்தோனியா, ஐஸ்லாந்து மங்கோலியா, சீனா, கஸகஸ்தான் ஆகிய நாடுகள்ல தைகா காடுகள் காணப்படுது. ரஷ்யாவுல இருக்குற சைபீரியாவின் பெரும்பகுதி தைகாக்காடுகளா தான் இருக்கு.

(தொடரும்)

 

 

 

 

 

 

 

 

 

 

பொம்மைகளின் புரட்சி (123)

  காலையில எல்லாருமே லேட்டா தான் எந்திரிச்சாங்க… இன்னிக்கு தாத்தா தான் பழக்கடைக்கு போகனும், அதுனால யம்மு பாட்டிக்கு உதவி பண்ணிக்கிட்டே   தாத்...