Monday, November 20, 2023

பணம் பேசுறேன் (77):

 

சாக்லேட் புடிக்காதவங்க யாருமே கெடையாது. குறிப்பா குழந்தைகள் அத ரொம்ப விரும்பிசாப்பிடுவாங்க… டார்க் சாக்லேட்டுல ஃப்ளேவனால்கள் நெறைய இருக்கு, அது இதயத்துக்கு ரொம்ப நல்லது. ஆனால் ஹெர்சி போன்ற பிரபலமான பல சாக்லேட் தயாரிப்புகள்ல அனுமதிக்கப்பட்டதை விட அதிக அளவு லெட், காட்மியம் ஆகிய உலோகங்கள் காணப்படுது. லெட் எனப்படும் காரியம், காட்மியம் ரெண்டுமே  விசம் தான். அவை பல நரம்பியல் கோளாறுகள், ரத்த அழுத்தம், சிறுநீரகக் கோளாறு போன்ற பல உடல்நலக் கோளாறுகளை ஏற்படுத்தும். கொக்கோ விதையில் காணப்படுவதை விட இறுதி சாக்லேட் தயாரிப்புகளில் லெட். காட்மியம் பல மடங்கு அதிகமா இருக்குறதா ஆய்வுகள்ல தெரியவந்துருக்கு. அதனால அந்த பிரபலமான சாக்லேட்டுகளை வாங்காமல் உங்களுக்கு வேணும்னா நீங்களே கொக்கோ பொடி வெச்சு சாக்லேட் பண்ணி சாப்பிடுங்க, குழந்தைகளுக்கும் கொடுங்க சரியா… கொக்கோவுக்கும் பணத்துக்கும் என்னய்யா சம்மந்தம்னு கேக்குறீங்களா, சாக்லேட் பணமாவும் பயன்படுத்தப்பட்டுருக்கு. அதாவது கொக்கோ பீன் எனப்படும் கொக்கோ விதைகள ஆதிப்பணமா பயன்படுத்தியிருக்காங்க.

மேற்கு அமெரிக்காவின் மெக்சிகோ பகுதியில் வாழ்ந்த அஸ்டெக் இன பழங்குடியினர் முதல்ல பண்டமாற்று முறையில தான் தனக்குத் தேவையானப் பொருட்களை பரிமாற்றத்தின் மூலமா கொடுக்கவும் வாங்கவும் செஞ்சாங்க… நாளடைவுல கொடுக்கல் வாங்கல் பரிமாற்றத்துல் மதிப்புவேறுபாடுகள் இருக்கும் போது மீதமதிப்பை கொடுத்தோ வாங்கியோ சரிசெய்ய அந்தப் பகுதியில அதிகம் விளையும் கொக்கோ விதைகளை ஆதிப்பணமா பயன்படுத்த ஆரம்பிச்சாங்க. இதைப்பற்றி ‘பணத்தின் வரலாறு’ (The History of Money) என்ற புத்தகத்தை எழுதிய ஜேக் வெதர்ஃபோர்ட் என்ன சொல்றாருன்னு இப்போ கேட்போம்.

அஸ்டெக் பணத்தின் அனைத்து வடிவங்களிலும், கொக்கோ மிகவும் பொதுவாகக் கிடைப்பதாகவும், பயன்படுத்த எளிதானதாகவும் இருக்கு. கொக்கோ மரத்தில் பெரிய பச்சை-மஞ்சள் காய்கள் காய்க்கிறது, அவை முலாம்பழங்களைப் போல தோற்றமளிக்கின்றன. பழுத்தவுடன், பழத்தில் ஒரு சதைப்பற்றுள்ள வெள்ளை கூழ் உள்ளது, இது மிகவும் சுவையாக இருக்கும், இருப்பினும் அது சாக்லேட்டைப் போல சுவைக்காது. கொக்கோ விதைகள் சாக்லேட் தயாரிக்க அரைப்பதற்கு முன்பு உலர்த்துதல் வறுத்தெடுப்பதன் மூலம் பாதுகாக்கப்படும் போது  பல மாதங்கள் கெட்டுப்போகாமல் நீடித்திருக்கும்.

கொக்கோ போன்ற சரக்கு பணம் வர்த்தகம் என்பதை விட பண்டமாற்று முறையையே அடிப்படையாகக் கொண்டது. ஒரு அஸ்டெக் ஒரு உடும்பை ஒரு கட்டு விறகுக்கோ அல்லது ஒரு கூடை சோளத்தை மிளகாய் கொத்துக்கு மாற்றுவார், மேலும் பரிமாற்றப்படும் பொருட்களுக்கு துல்லியமாக அதே மதிப்பு இல்லை என்றால், வணிகர்கள் அதை சமன் செய்ய கொக்கோவைப் பயன்படுத்தினர். கொக்கோ விதை மதிப்பைக் கணக்கிடுவதற்கும் பரிமாற்றத்தை முழுமைப்படுத்துவதற்கும் ஒரு ஊடகமாக செயல்பட்டது, ஆனால் அது பரிமாற்றத்திற்கான பிரத்யேக ஊடகமாக செயல்படவில்லை.  அதாவது முழுக்க முழுக்க கொக்கோ விதைகளைக் கொண்டு மட்டுமே பரிமாற்றம் செய்யப்படவில்லை. உதாரணமாக, ஆறு கொக்கோ விதைகளின் மதிப்புள்ள சோளக் கருதிற்கு ஐந்து கொக்கோ விதைகளின் மதிப்புள்ள நோபல் (கற்றாழை) ஒன்றை மாற்ற விரும்பும் விற்பனையாளர், நோபாலை பரிமாற்றி, பின்னர் ஒரு கொக்கோ விதையையும் கொடுத்து வர்த்தகத்தை சமன் செய்வார்.

(தொடரும்)

 

 

 

 

No comments:

Post a Comment

உலக சமத்துவமின்மை அறிக்கை 2026 (WIR 2026)

  உலக சமத்துவமின்மை ஆய்வகம் 2026ஆம் ஆண்டுக்கான உலக சமத்துவமின்மை அறிக்கையை வெளியிட்டுள்ளது. இதற்கு முன்  2018, 2022லும் உலக சமத்துவமின்மை அற...