Wednesday, November 29, 2023

பணம் பேசுறேன் (80):

 

அமைதி வர்த்தகம் என்பது ஒரு விதமான பண்டமாற்று முறைனு (ஊமை பண்டமாற்று முறை) பார்த்திருந்தோம்., ஆனபோதும் அமைதி வர்த்தகத்துல ஆதிப் பணங்களையும் சேர்த்துப் பயன்படுத்தும் பழக்கம் மேற்கு ஆஃப்ரிக்காவில் காணப்பட்டுருக்கு. அது குறித்து கிங்க்ஸ்லி கூறியுள்ள ஒரு எடுத்துக்காட்டையும் ஹிங்ஸ்டன் குய்கின் மேற்கோள் காட்டியிருக்காங்க. அது பின்வருமாறு.

நான் சந்தைத் தெருக்களில் அடிக்கடி பார்த்துருக்கேன். போகும் வழியில் ஒரு சிறியப் பகுதி துப்புறவாக்கப்பட்டு அதில் அழகாக வாழை இலைகள் போடப்பட்டிருக்கும்.அதில் விற்பனைக்கான பல சிறிய பொருட்கள்; கோலா விதைகள்,, புகையிலைகள், உப்புக்கட்டி, சில சோளக்கருதுகள், அல்லது சேனைக்கிழங்கு அல்லது சர்க்கரை வள்ளிக்கிழங்கு குவியல்கள்  எல்லாம் கச்சிதமா அடுக்கப்பட்டிருக்கும். ஒவ்வொரு வகை பொருட்களுக்கும் எதிரே பல கௌரி கிளிஞ்சல்கள் அல்லது விதைகள் வைக்கப்பட்டிருக்கும். மாயமந்திர சக்தியுடையதாக நம்பப்படும் ஒரு சிறிய பொருள் மேலே உள்ள மரக்கிளையில் தொங்கவிடப்பட்டிருக்கும் அல்லது கடையின் மத்தியில் அமைதியாக உட்காரவைக்கப்பட்டிருக்கும். கௌரி கிளிஞ்சல்கள் அல்லது விதைகளின் எண்ணிக்கை பல வகைப் பொருட்களின் குவியலில் ஒவ்வொரு பொருளின் விலையைக் குறிக்கும். யாராவது பொருளுக்கு சரியான விலையை அதன் இடத்தில் வைக்காம இருந்தாலோ அல்லது கல்லாப்பெட்டியில் தலையிட்டாலோ அவங்க வீங்கி வெடிச்சுருவாங்கனு சுட்டிக்காட்டுறதுக்கு தான் அந்த மந்திர சக்தியுடைய சின்ன பொருள் வைக்கப்பட்டுருக்கு. (1899)

நான் பார்த்த வரைக்கும் அமைதி வர்த்தகம் வசதியா இருக்குறதுனால செய்யப்படுது ஒரு நபரே.பெரிய வேலை செலவு இல்லாம பல கடைகள திறந்துவைக்கமுடியும். ஒருவருக்கொருவர் போரில் இருக்கும் பழங்குடியினங்களுக்கிடையில் செய்யக்கூடிய வர்த்தகமுறையா இதை நான் பார்த்திருக்கேன் என்றும் கிங்க்ஸ்லி குறிப்பிட்டுருக்காங்க.

இந்த காலத்துல பொருளாதாரத் தடைகள் மூலமாகத் தான் போர்கள் செய்யப்படுது. ஆனா அந்த காலத்துல என்னதான் மோதல் ஒரு ப்க்கம் இருந்தாலும் கொடுக்கல் வாங்கல் பரிமாற்றங்கள் இன்னொரு பக்கம் நடந்துகிட்டுத்தான் இருந்துருக்கு.

அமைதி வர்த்தகத்தில் பணத்தின் பயன்பாடு விலக்கப்படல. தனியுடைமை சிறிதளவுக்கு மட்டுமோ அல்லது பண்டமாற்றுக்கான உடைமை இல்லாமலோ இருக்குற, பரிவர்த்தனைக்கான எந்த அமைப்புமே இல்லாத வேட்டுவ இனங்கள், காய்கனிகள சேகரிக்கும் பழங்குடி இனங்கள் தான் இம்முறையை பயன்படுத்தியுள்ளதாக தெரியவருது.  மக்களிடையே வெவ்வேறு கலாச்சார நிலைகள் இருக்கும் போதும், ஒருவருக்கொருவர் இணக்கமில்லாமல் விரோதத்தில் இருக்கும் போதும், ஒருவருக்கொருவர் புரிதல் இல்லாதபோதும் கையாளப்படும் மிகச்சிறந்த வர்த்தக முறையா இது உண்மையிலேயே இருக்கு என ஹிங்ஸ்டன் குய்கின் சொல்லியிருக்காங்க.

.உலகெங்கிலும் நாகரிகம் அடைந்த சமூகங்களிலும், நாகரிகம் அடையாத சமூகங்களிலும் பரிசு கொடுப்பது அல்லது பரிசுகளைப் பரிமாறிக்கொள்ளும் வழக்கம் ஏறக்குறைய ஒரு சடங்குத்தன்மையுடன் காணப்பட்டுள்ளது. இந்த பரிமாற்றம் பண்டமாற்றிலிருந்து வேறுபடுத்திப் பார்க்கக்கூடியதாகவும் இருக்கலாம். அல்லது பண்டமாற்றில் இணைக்கப்பட்டிருக்கலாம். அல்லது வர்த்தக அமைப்பில் அது ஒரு அத்தியாவசியமான கூறாக இருக்கலாம். அந்த நிகழ்வில் பணம் பரிணமித்திருக்கலாம்.

பூர்விகமா சுற்றோட்ட ஊடகம் இல்லாத அந்தமான் தீவுகள், நியூசிலாந்தையும் இதற்கான உதாரணங்களாக குறிப்பிடலாம். பணம் என்ற கருத்தாக்கம் உருவெடுத்துவரும் ஃபிஜியின் சொலிவு அல்லது வட அமெரிக்க போட்லாச் இதை விவரிப்பதாக உள்ளன. டொரஸ் நீர்சந்தி படகு வணிகத்திலும், நியூ கினியாவின் ஹிரி மற்றும் குலா பயணங்களில் அன்பளிப்பு பணமாக பரிணமிக்கும் நிகழ்வு கண்கூடத்தெரியுது என்று சொல்லியிருக்காங்க. ஹிங்ஸ்டன் குய்கின்.

  (தொடரும்)

 

 

 

 

 

 

No comments:

Post a Comment

உலக சமத்துவமின்மை அறிக்கை 2026 (WIR 2026)

  உலக சமத்துவமின்மை ஆய்வகம் 2026ஆம் ஆண்டுக்கான உலக சமத்துவமின்மை அறிக்கையை வெளியிட்டுள்ளது. இதற்கு முன்  2018, 2022லும் உலக சமத்துவமின்மை அற...