Friday, November 24, 2023

பணம் பேசுறேன் (78):

 

அஸ்டெக் கலாச்சாரத்தில் தங்கம் ஒரு புனிதமான, சக்திவாய்ந்த பொருளாக இருந்தது, மேலும் அஸ்டெக்குகள் தங்கத்தை கடவுளின் எச்சம் என்று நமபினர். போர், வேள்வி, அலங்காரங்கள் சம்மந்தப்பட்ட பல்வேறு பொருட்களில் தங்கம் பயன்படுத்தப்பட்டது.: அஸ்டெக்குகள் தங்கத்தை விட மற்ற பொருட்களை மிக அதிகமாக மதிப்பிட்டனர் அவர்கள் பிரகாசமான வண்ண இறகுகளை விரும்பினர், குவெட்சல்கள் அல்லது ஹம்மிங் பறவைகளின் இறகுகளிலிருந்து ஆடைகளையும், தலைக்கவசங்களையும் உருவாக்கினர், மேலும் அதை அணிவது செல்வத்தின் வெளிப்பாடாகக் கருதப்பட்டது. அவர்கள் மாணிக்கம், ரத்தின நகைகளை விரும்பினர். அவர்கள் பருத்தியையும் அதிலிருந்து செய்யப்பட்ட டூனிக்ஸ் போன்ற ஆடைகளையும் அணிவதை அதிகாரத்தின் வெளிப்பாடாகக் கருதினர்.

அமெரிக்காவில் தங்கமும், வெள்ளியும் செழுமியிருந்தபோதும் அதை மீசோஅமெரிக்கர்கள் அலங்காரத்திற்காகவே பயன்படுத்தினர். அவர்களின் பொருளாதாரத் தேவைகளை நிறைவு செய்வதற்கு பண்டமாற்றும் ஆதிப்பணமுமே போதுமானதாக இருந்தது. அவர்கள் தங்கத்தை நாணயமாக, பணமாக பயன்படுத்தவில்லை. அஸ்டெக்குகளின் ஆட்சி பொகா 1325 ஆண்டிலிருந்து 1521வரை நீடித்திருந்தது. அதற்கு பிறகு அமெரிக்காவில் தங்கத்தையும், வெள்ளியையும் கொள்ளையடிப்பதற்காக ஊடுருவிய ஸ்பானியர்கள் அஸ்டெக் பழங்குடியினரை போர் ஆக்கிரமிப்பினால் இன அழிப்பு செய்தனர். பின்னர் காலனிய ஆட்சி நிறுவப்பட்டதால் பழைய அமைப்பு சிதைக்கப்பட்டது.

காலனியாதிக்கத்தின் போது வெள்ளி ரியால்கள், தங்க எஸ்குடோக்கள், பெசோ நாணயங்கள் ஆகியவை பயன்பாட்டில் இருந்தன.  ஒரு தங்க எஸ்குடோவின் மதிப்பு 16 வெள்ளி ரியால் நாணயங்களாக இருந்தது. ஒரு பெசோவின் மதிப்பு எட்டு ரியால் நாணயங்களாக இருந்தது. பெசோ என்ற ஸ்பானிஷ் வார்த்தைக்கு 'எடை' என்று பொருள். 1863 ஆம் ஆண்டு மாக்சிமில்லன் அரசரின் கீழ் இரண்டாம் மெக்சிக பேரரசில் பெசோ நாணயங்கள் 100 சென்டாவோக்களாகப் பிரிக்கப்பட்டன. அது வரை மெக்ஸிகோவில் பெசோ 8 ரியல்களின்  மதிப்பை உடையதாக இருந்துவந்தது.

1970களின் பிற்பகுதியில் ஏற்பட்ட எண்ணெய் நெருக்கடிக்குப் பிறகு, 1982ல் மெக்சிகோ தனது வெளிநாட்டுக் கடனைத் திருப்பி செலுத்தத் தவறியது, இதன் விளைவாக மெக்சிகோவிலிருந்து பெருமளவில் மூலதனம் வெளியேறியது, அதைத் தொடர்ந்து பல ஆண்டுகளாக பணவீக்கம், பணமதிப்பிழப்பால்  பெசோ மதிப்பிழந்தது. இது பெசோ நெருக்கடி என அழைக்கப்படுகிறது. 1993 ஜனவரி 1, இல், மெக்ஸிகோவின் மத்திய வங்கி நியூவோ பெசோ என்ற ஒரு புதிய நாணயத்தை அறிமுகப்படுத்தியது, ஒரு புதிய பெசோவின் மதிப்பு 1,000 பழைய,  பெசோக்களுக்கு சமம்.

பண்டமாற்றிலிருந்து பணத்திற்கு மாறியதற்கான தர்க்கரீதியான வரிசைக்கிரமத்தைப் பின்வருமாறு க்ளின் டேவிஸ் குறிப்பிட்டிருந்தார். பண்டமாற்று -à பண்டமாற்றுடன் ஆதிப் பணம் -à ஆதிப் பணம் -à ஆதிப் பணத்துடன் நவீன பணம் -à பின்னர் கிட்டத்தட்ட முழுக்கமுழுக்க நவீன பணம். இது முற்றிலும் தர்க்கரீதியான வரிசைக்கிரமே தவிர இதே வரிசையில் தான் உலகெங்கும் மாற்றம் நிகழ்ந்தது என்று தவறாக கருதக்கூடாது. மாற்றத்திற்கான இந்த வரிசைக்கிரமம் இடத்திற்கு இடம் மாறுபட்டிருக்கலாம். ஆனபோதும் க்ளின் டேவிஸ் அளித்த தர்க்கரீதியான வரிசைக்கிரமம் சமூகம் பண்டமாற்றிலிருந்து பணத்திற்கு மாறியது குறித்த நமது புரிதலை எளிதாக்கியுள்ளது.

இதைப் புரிந்துகொள்வதற்கான ஒரு உதாரணமாக தான் அஸ்டெக்குகளின் பரிவர்த்தனை அமைப்பை பார்த்தோம். மெக்சிகோவின் வரலாற்றைப் பொறுத்தவரை முதலில் பண்டமாற்றும், பிறகு பண்டமாற்றுடன் ஆதிப்பணமும் பயன்பாட்டில் இருந்துவந்தது பின்னர் காலனியாதிக்கத்தால் பெசோவின் பயன்பாடு வலிந்து திணிக்கப்பட்டுள்ளது. இது போல் லத்தின் அமெரிக்கா, ஆசியா, ஆஃப்ரிக்காவின் பல இடங்களில் காலனியாதிக்கமே நாணயப் பயன்பாட்டையும் நவீன பணத்தின் பயன்பாட்டையும் பலவந்தமாக அறிமுகப்படுத்தியுள்ளது.

 

 (தொடரும்)

 

 

No comments:

Post a Comment

உலக சமத்துவமின்மை அறிக்கை 2026 (WIR 2026)

  உலக சமத்துவமின்மை ஆய்வகம் 2026ஆம் ஆண்டுக்கான உலக சமத்துவமின்மை அறிக்கையை வெளியிட்டுள்ளது. இதற்கு முன்  2018, 2022லும் உலக சமத்துவமின்மை அற...