தனித்தமிழ் புதிய அறிவியல் கலைச்சொற்களின் வளர்ச்சிக்கு பெருமளவில் உதவியுள்ளது. ஆனாலும் கூட தமிழறிஞர்களால் மேலிருந்து செய்யப்படும் தூய்மையாக்கத்தால் கீழிலிருந்து உருவாகும் மொழியின் மாற்றங்களை முற்றிலுமாகத் தடுத்து நிறுத்தமுடியாது. மொழிகள் மாறாதவை அல்ல, மொழிகளுக்கும் இயங்கியல் உள்ளது. சங்க காலத்துத் தமிழில் இன்று நாம் பேசுவதில்லை. ஷேக்ஸ்பியர் காலத்து ஆங்கிலத்தை இன்று யாரும் வழக்கில் பயன்படுத்துவதில்லை. இன்று நாம் பேசும் தமிழும் ஆயிரம் ஆண்டுகளுக்கு பின்வரும் வருங்கால சந்ததியினருக்கு முழுவதுமாகப் புரியப்போவதில்லை. தமிழ் மட்டுமல்ல, காலப்போக்கில் எல்லா மொழிகளுமே மாற்றங்களுக்கு உட்படுகிறது. இப்போது வழக்கத்தில் உள்ள தமிழை முற்றிலுமாக தூயத்தமிழாக்கும் முயற்சி அறிஞர்கள் மட்டத்தில் மட்டுமே நிற்குமே தவிர அது மக்கள் மொழியின் மைய நீரோட்டத்தில் கலக்கப்போவதில்லை. இதை ஏற்றுக்கொள்ள மறுப்பதும் இயக்க மறுப்பியல் அணுகுமுறையாகவே இருக்கும்.
முதலாளித்துவ சமூகத்தில்
ஏற்படும் பொருளாதார நெருக்கடியை எப்படி வங்கியாளர்கள் பணவியல் கொள்கையை மாற்றித் தடுக்கமுடியாதோ,
அதே போல் மக்கள் மொழியின் இயங்கியல் போக்கில் ஏற்படும் மாற்றங்களை தனித்தமிழ் அறிஞர்களால்
முற்றிலுமாகத் தடுத்து நிறுத்திவிடமுடியாது.
பல்கலை வல்லுநர்களாக பல
ஆசிரியர்கள் இருக்கிறன்றனர், அவர்கள் தனித்தமிழிலும் வல்லுநராக இருக்கின்றனர், அறிவியல்,
சமூக அறிவியலிலும் வல்லுநர்களாக இருக்கின்றனர். ஆனாலும் கூட இத்தகைய ஆசிரியர்கள் மாணவர்களுக்கு
பாடம் எடுக்கும் போது ஒரே நேரத்தில் தனித்தமிழையும், சமூக அறிவியலையும் கற்பித்தால்
என்ன நடக்கும். மாணவர்களுக்கு தனித்தமிழும் புரியாது, சமூக அறிவியலும் புரியாது. இதே
நிலை தான் தனித்தமிழ் அரசியல் செயல்பாட்டாளர்களாலும் உருவாக்கப்படுகிறது. ஆகவே மொழிப்பாடத்தையும்
அரசியல் பாடத்தையும் ஒரே நேரத்தில் எடுப்பதைத் தவிர்க்கவேண்டும்.
அரசியல் பொருளாதாரம் என்பது
சமூக அறிவியல். பெருவாரியான மக்களை அரசியல்வயப்படுத்துவதற்கு அரசியல் பொருளாதாரத்தை மக்கள் மொழியில் பேசவேண்டியதும்,
எழுதவேண்டியதும் அவசியமாக உள்ளது. அரசியல் செயல்பாட்டாளர்கள் தனித்தமிழை பயன்படுத்தும்
போது அவர்களின் கருத்தியல் மக்களால் உள்வாங்கப்பட்டு பௌதிக சக்தியாக மாறுவதற்கு அதுவே
தடையாக உள்ளது. அரசியல் செயல்பாட்டாளர்களின் வீச்சையும் தனித்தமிழ் குறைக்கிறது.
தனித்தமிழ்வாதிகள் பிற
மொழிச்சொற்களை மட்டுமல்லாது பெயர்கள், ஊர்கள் என விதிவிலக்கில்லாது அனைத்தையுமே தூயத்தமிழாக்கம்
செய்கின்றனர். உதாரணமாக நியூயார்க், நியூ ஹாம்ப்ஸையர் ஆகியவற்றை புதுயார்க், புதுஹாம்ப்சையர் என்றே குறிப்பிடுகின்றனர். இவ்வாறு தொடர்ந்தால் கிரீன்லாந்தை, பச்சை நிலம் என்றும்,
ஐஸ்லாந்தை பனி நிலம் என்றும் தமிழாக்கம் செய்ய நேரிடும் அவை குழப்பத்திற்கே வழிவகுக்கும்.
டிராவிட் என்பதை திராவிடர் என்றும், ஷேக்ஸ்பியர் என்பதை உலகாட்டி என்றும் மொழிபெயர்க்க
நேரிடும். அறிவியல் அலகுகளான கிலோகிராம், மீட்டர் ஆகியவற்றை எப்படி நாம் அப்படியே பயன்படுத்துகிறோமோ
அது போலவே பிற மொழி பெயர்களையும், இடங்களையும் பயன்படுத்துவதே சரியாக இருக்கும்.
தொல்காப்பியத்தில் உள்ள
விதிகள் நன்னூலில் மாற்றப்படவில்லையா, அதே போல் தேவை ஏற்பட்டால் விதிகளில் மாற்றம்
கொண்டுவர வேண்டும். இலாபம், உரொட்டி என சொல்லின் முதலில் லகரம், ரகரம் வந்தால் முன்னால்
உயிரெழுத்து சேர்க்கும் விதிமுறையை இன்றைக்கும் பயன்படுத்தவேண்டுமா?. அறிவியல் அலகான
லிட்டர் என்பதை லிட்டர் என்றே பயன்படுத்துகிறோமே தவிர இலிட்டர் என்று பயன்படுத்துவதில்லையே.
கிரந்த எழுத்துக்களின் பயன்பாட்டை பெரும்பாலான தனித்தமிழ்வாதிகள் அறவே தவிர்க்கின்றனர். "ஸ, ஜ, ஹ, ஷ, க்ஷ, ஸ்ரீ" போன்ற கிரந்த எழுத்துக்களைப் பயன்படுத்துவதால் தமிழின் ஒலி அமைதி மீறப்படுவதாகக் கருதுகின்றனர். இதனால் ஹூண்டாயை ஊண்டாய் என்றும், ஹாங்காங்கை ஆங்காங்க் என்றும் ஜூலையை யூலை என்றும் எழுதுகின்றனர். ஹைட்ரஜனை அய்டுரசன் என்றும், ஹீலியத்தை ஈலியம் என்றும் அழைப்பது தவறு தான். மொழியின் ஒலி அமைதியைப் பற்றி எல்லாம் இவ்வளவு கவலை அடைந்தால் தமிழ்மொழி அறிவியல் மொழியாவதற்கு அது தடையாகவே இருக்கும்.
நாம் புரட்சியாளர்கள்.
முற்போக்கான சமூக மாற்றத்தை ஏற்றுக்கொள்கிறோம், சமூகத்தின் அரசியல் பொருளாதரத்தையே
புரட்டிப் போட முயற்சிக்கிறோம். ஆனால் மொழி என்று வந்துவிட்டால் மட்டும் பின் வாங்குகிறோம்.
மொழியில் இயல்பாக உருவாகும் சிறு மாற்றத்தைக் கூட நம்மால் தாங்கிக்கொள்ள இயலவில்லை.
மாற்றம் ஒன்றே மாறாதது என இயங்கியல் சொல்கிறது. மற்ற எல்லாவற்றிலும் நாங்கள் இடதுபக்கம்,
ஆனால் மொழியில் மட்டும் வலதுபக்கம் என்பது போலத்தான் இருக்கிறது மொழியின் இயங்கியலை
ஏற்க மறுக்கும் தனித்தமிழ் அரசியல் செயல்பாட்டாளர்களின் இறுக்கமான நிலைப்பாடும்.








