தியாகுத் தோழர் அனைவரையும் சமமாகவே மதித்து நடப்பவர். அரசியலில் உனக்கு அனுபவமோ, அறிவோ பத்தாது என்றோ, நான் உன்னை விட சீனியர் -மூத்தவன், நீ நேத்து வந்த கத்துக்குட்டி என்பது போல நேரடியாகவோ, இல்லை குறிப்பால் உணர்த்தியோ, மறைமுகமாகவோ எந்த விதமான “ரேகிங்கையும்” தியாகு தோழர் இதுவரை செய்ததில்லை. பல “தலைவர்கள்” தம்மைச் சுற்றி அதிகாரத்தாலும், இறுமாப்பாலும் கோட்டை கட்டி அனைவரும் எளிதில் அணுகமுடியாத படி உச்சியில் நிற்பர். அவர்கள் அதீத மரியாதைகளையும், கீழ்ப்படிதலையும் எதிர்பார்ப்பவர்களாகவும் இருப்பர். தியாகுத் தோழர் அதற்கு நேர்மாறானவர். யார் வேண்டுமானாலும் அவரை எளிதில் அணுக முடியும், அவரிடம் இயல்பாக பேசவும் முடியும், இயல்பாகப் பழகவும் முடியும். பொதுவாக தனிநபர்களை ஜனநாயகர் என்று குறிப்பிடுவதை நான் தவறாகவே கருதுகிறேன். ஏனெனில் ஜனநாயகம் என்பது தனி நபர் சம்மந்தப்பட்டது அல்ல, தனிநபரால் கட்டமைக்கப்படுவதும் அல்ல. ஒட்டு மொத்த சமூகத்தால் மட்டுமே ஜனநாயகத்தை உருவாக்கமுடியும். ஆனாலும் கூட தியாகு தோழரை எல்லா சிறந்த பண்புகளையும் உடைய ஜனநாயகன் என்று சொன்னாலும் தகும்.
எனது எழுத்துக்களில் அயோக்கியர்களை விமர்சிக்கும்
போது நான் அவனே இவனே என்று கூட திட்டுவதுண்டு, நான் எக்காரணத்தைக் கொண்டும் அதை மாற்றிக்கொள்ளப்
போவதில்லை. ஆனால் தியாகு தோழர் அப்படி கிடையாது. எதிரிகளைக் கூட பெரும்பாலும் அவர்
ஒருமையில் அழைக்கமாட்டார். தனது பேரக்குழந்தைகளைத் தவிர வேறு யாரையும் அவர் ஒருமையில்
அழைத்து நான் பார்த்ததில்லை. யாரையும் அவர் எடுத்தெறிஞ்சு பேசியதையும் நான் பார்த்ததில்லை.
வீட்டிற்கு வெளியே மட்டுமல்ல, வீட்டுக்கு உள்ளேயும் கூட அவர் தன் துணைவியாரை அவங்க
இவங்கண்ணு தான் சொல்லுவார்.
தியாகு தோழரை விமர்சனம் செய்தாலோ, இல்லை
அவரிடம் ஏதாவது புதிய பரிந்துரைகள் செய்தாலோ அவர் முகம் சுளிக்கமாட்டார். முதலில் அதை
காது கொடுத்து கேட்பார். சில சமயங்களில் விவாதங்களால் நேரம் தான் விரயம் எனப்படும்
வேளைகளில் அவர் நமது விமர்சனங்களை “கருதிப் பார்க்கிறேன்”, “கருத்தில் கொள்கிறேன்”
என்று சொல்லும் அளவுக்குப் பண்பாளராய் நடந்து கொள்வார்.
தியாகு தோழர் அபாரமான நினைவாற்றல் கொண்டவர்.
எத்தனையோ ஆண்டுகளுக்கு முன்னால் நடந்த சம்பவங்களையெல்லாம் கூட நேற்று நடந்தது போல விலாவாரியாக
கதை போல சொல்வார். இது போல அவரைப் பற்றி சொல்லிக் கொண்டே போகலாம்.
தியாகு தோழர் வீட்டு வேலைகளை இழிவாகப்
பார்க்க மாட்டார். தோழர் சமையல், பாத்திரம் கழுவுதல் போன்ற வீட்டுவேலைகளை செய்வதையும்
நான் நேரிலே பார்த்துள்ளேன். சிறையில் நிகழ்வுகளை ஒருங்கிணைக்கும் போது சமையல் செய்ய
கற்றுக் கொண்டதாக தோழர் கூறியிருக்கிறார். தியாகு தோழர் கோடம்பாக்கத்தில் இருக்கும்
போது நான் வேலை நிமித்தமாக தோழர் வீட்டுக்கு சென்றிருந்தேன். அப்போது ஈழத் தோழர் ஆறுமுகம்
கோபாலும் தியாகு தோழருடன் தங்கியிருந்தார். ஈழத்தமிழில் அவர் கதைக்கக் கேட்டது இனிமை.
எனக்கு ஈழத்தமிழ் என்றால் ரொம்ப ரொம்ப பிடிக்கும். தியாகு தோழர் சுவையான தக்காளி சாதம்
செய்து எங்கள் இருவருக்கும் அவரே பரிமாறினார்.
அன்று நான் தியாகு தோழரிடம் கேட்டேன். “தோழர் நம்ம நாட்டுல ஏற்கெனவே கம்யூனிசம் வந்துருச்சுண்ணு
வெச்சுக்குவோம், அப்போ நீங்க என்ன வேலை பாப்பீங்க, ஒங்களுக்கு என்ன வேலை பார்க்க விருப்பம்”ணு
கேட்டிருந்தேன். தியாகு தோழர் அதற்கு ஆசிரியர் வேலை பார்ப்பேன்”ணு பதிலளித்தார். இந்த
கேள்வியை எல்லா கம்யூனிஸ்டுகளிடமும் கேட்க எனக்கு ஆசையாய் இருக்கும்.
தியாகு தோழர் சமைத்த சாம்பார் சாதத்தையும்
நான் சாப்பிட்டிருக்கிறேன். தியாகு தோழர் கீழ்க்கட்டளையில் இருந்தபோது அவர் கையாலே
அவித்த சோளக்கருதை சாப்பிடும் வாய்ப்பு கிடைத்ததை என்றுமே மறக்கமுடியாது. எனக்கு சோளத்தட்டையில்
உள்ள சாறும் பிடிக்குமென்பதால் நான் சோளத்தட்டையையும் தின்றுவிட்டேன். சோளக்கருது என்றால்
எனக்கு நிரம்ப பிடிக்கும்.
(தொடரும்)

No comments:
Post a Comment