Friday, August 29, 2025

சிறையில் பூத்த செம்மலர் (8):

 


தியாகுத் தோழரிடமிருந்து நான் எதையெல்லாம் கற்றுக்கொண்டேன் என்பதைப் பற்றி இப்போது சொல்கிறேன். அதற்கு ததேவி இயக்கத்தில் சேர்வதுக்கு முன் நான் எப்படி இருந்தேன் என்பதைப் பற்றியும் சொல்லவேண்டியது அவசியம் எனக் கருதுகிறேன்.

ததேவி இயக்கத்தில் சேர்வதற்கு முன்:

எங்கள் வீடெங்கும் புத்தகங்கள் நிறைந்து இருக்கும். என் அப்பா ஏதெசு கம்யூனிஸ்ட் எழுத்தாளர், என் அம்மா கல்பனா தேவி பெண்ணியம் படித்தவர். நான் பத்தாம் வகுப்பு விடுமுறையின் போதே புரட்சித் தலைவர்கள் கார்ல் மார்க்ஸும், எங்கெல்ஸும் சேர்ந்து எழுதிய “கம்யூனிஸ்ட் கட்சியின் அறிக்கை”யைப் படித்துவிட்டேன்”. அதை படிக்குமாறு அப்பாவோ, அம்மாவோ என்னிடம் சொல்லவில்லை. அதை படித்ததிலிருந்தே என்னை நான் ஒரு கம்யூனிஸ்டாகவும், சர்வதேசியவாதியாகவுமே கருதிக் கொள்வேன். இயக்கத்தில் சேர்வதற்கு முன்பே நான் லெனின், ஸ்டாலின் தொகுப்பு நூல்கள் அனைத்தையும் படித்துவிட்டேன், மூலதனம் உட்பட கார்ல்மார்க்ஸ், எங்கெல்ஸின் முக்கிய படைப்புகளையும், அம்பேத்கரின் முக்கியமான நூல்களையும் படித்துவிட்டேன். பெர்ண்ஸ்டைன், கார்ல் காவுத்ஸ்கியின் வலது பாதையோ, சே குவேராவின் இடது தீவிரப் பாதையோ எனது பாதை இல்லை எனவும், லெனினது இடது மையப் பாதையே எனது பாதை என்ற தெளிவும் எனக்கு இருந்தது. தமிழ்நாட்டின் சுயாட்சி உரிமைகள் மறுக்கப்பட்டது தெரிந்திருந்தும், இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படையில் கூட்டாட்சி சாத்தியமில்லை என தெரிந்திருந்தும் கூட சோசலிசத்தில் கூட்டாட்சி சாத்தியப்படும் என்றே கருதினேன். உடனடி சோசலிசம் என்பதே உவப்பானதாக இருந்தது.

சர்வதேசியவாதியாக என்னைக் கருதிக்கொண்ட நான் தமிழ்த்தேசியத்தை பிற்போக்குத் தனமாகவும் குறுகிய மனப்பான்மையின் வெளிப்பாடாகவுமே பார்த்தேன். பிற இனங்களின் மீதான வெறுப்பின் மீதும், தமிழின அடிப்படைவாதம், தமிழ் மொழி அடிப்படைவாதத்தின் மீதும் கட்டமைக்கப்பட்டதாகவே தமிழ்த்தேசியத்தை நான் கருதினேன்.

தமிழ் மக்களின் உரிமைகளின் அடிப்படையிலும், சமூக நீதியின் அடிப்படையிலும் கட்டமைக்கப்படவேண்டிய தமிழ்த்தேசியத்தை அப்போது நான் அறிந்திருக்கவில்லை.

ஒருவர் தனது கொள்கையின் அடிப்படையில் தான் அரசியல் கட்சியில் சேரவேண்டும். ஆனால் எனது கொள்கையோடு ஒத்து செயல்படும் சிறந்த அரசியல் கட்சியை அப்போது என்னால் கண்டுபிடிக்கமுடியவில்லை. கட்சிக் கோட்பாட்டின் அடிப்படையில் நான் த.தே.வி.இயக்கத்தில் சேரவில்லை. தியாகு தோழர் தமிழ்த்தேசியவாதி என்பதற்காக நான் அவருடன் சேர்ந்து செயல்பட நினைக்கவில்லை. தியாகு தோழர் மார்க்சியர் என்பதால் மட்டுமே அவரது தலைமையில் இயங்கும் த.தே.வி இயக்கத்தில் சேர்ந்து செயல்பட ஆரம்பித்தேன்.

ததேவி இயக்கத்தில் சேர்ந்ததுக்குப் பின்:

ஐரோப்பிய நாடுகளில் நிலப்பிரபுத்துவத்தை முதலாளித்துவம் வீழ்த்தியதிலிருந்தே மொழிவழித் தேசங்கள் உருவாகின. ஆனால் காலானியாதிக்க ஒடுக்குமுறைக்கு எதிராக ஒன்றிணைந்து இந்திய தேசம் உருவானதன் விளைவாக தமிழ்த்தேசம் உருவாவதே மறுக்கப்பட்டுள்ளது. இது எனக்கு முன்னர் உறைக்காமல் இல்லை.  ஆனாலும் கூட இந்தியக் கூட்டாட்சி ஜோதி காணும் கனவில் நான் தமிழ்த் தேசிய இனப்பிரச்சினைக்கு கொடுக்கவேண்டிய முக்கியத்துவத்தைக் கொடுக்கவில்லை என்பதை நான் பின்னர் தான் புரிந்துகொண்டேன்.

இந்தியா என்பது அரசு சமூகமே தவிர தேசிய சமூகம் அல்ல. தேசிய இனங்களின் சிறைக்கூடமே இந்தியா என்பதையும் நான் தியாகு தோழரிடம் கற்றுக்கொண்டேன். இந்தியாவை யுஎஸ்.எஸ்.ஐ ஆக மாற்றலாம் என்று அப்போது நினைந்திருந்தேன். ஆனால் இப்போது நான் இந்தியாவை மியூசியத்தில் வைக்கப்பட்ட பிரஸ்யாவாகவே பார்க்கிறேன்.

வெறுப்பு, இன அடிப்படைவாதம், மொழி அடிப்படைவாதம் இவற்றுக்கு மாறாக தமிழ் மக்களின் உரிமைகளின் அடிப்படையிலும், சமூக நீதியின் அடிப்படையிலும் கட்டமைக்கப்படவேண்டிய தமிழ்த்தேசியத்தை நான் த.தே.வி இயக்கத்தில் சேர்ந்துகொண்ட பிறகே கற்றுக்கொண்டேன்.

என்றுமே நான் ஈழவிடுதலைக்கு ஆதாரவாளர் தான். ஆனாலும் கூட ஈழவிடுதலை குறித்த தெளிவான புரிதல் எனக்கு முன்னர் இல்லை. இங்குள்ள செய்தித்தாள்களில் இலங்கையைப் பற்றிய செய்திகள் எப்போதாவது தான் வரும். அதுவும் தப்பு தப்பாகத் தான் வரும். ஆபேல்  ஈழத்தில் என்ன நடக்கிறது என்பதை ஆபேல் இதழ்கள், செய்தி அரசியல்- ஆபேல் நீதியின் பாதை நிகழ்வுகளின் மூலமாகவே என்னால் தெரிந்துகொள்ள முடிந்தது. ஒரு தேசத்திற்கான முழு இறையாண்மை இல்லாத தமிழ்நாட்டால் ஈழ இன அழிப்பைத் தடுக்கமுடியவில்லை என்பதையும், ஈழவிடுதலைக்கும், தமிழ்த்தேசியத்துக்கும் உள்ள இடையுறவையும் நான் தியாகு தோழரிடமிருந்தே கற்றுக் கொண்டேன். அவர் எழுதிய புத்தகங்களில் எனக்கு மிகவும் பிடித்தது “ஈழம் மெய்ப்படும்” புத்தகம் தான்.

சிறைகளுக்கு வெளியில் நடக்கும் காவல்துறை அக்கிரமங்கள் கண்கூடாகத் தெரிகிறது, ஆனால் சிறைகூடங்களுக்குள்  நடக்கும் காவல்துறை அடக்குமுறைகள் தெரிந்துகொள்ள முடியாத படி மூடிமறைக்கப்படுகிறது. சிறைகளுக்குள் நடக்கும் காவல்துறை அடக்குமுறைகளுக்கு எதிராகப் போராட வேண்டியதன் அவசியத்தையும் நான் தியாகு தோழரிடம் கற்றுக்கொண்டேன்.

முன்னெல்லாம் நான் எழுதும் போது வாக்கியங்களைப் பன்மையில் தொடங்கி ஒருமையில் முடிப்பேன். அந்த பிழையைத் தோழர் தான் எனக்கு சுட்டிக்காட்டினார். உரைநடைத் தமிழையும், பேச்சுவழக்குத் தமிழையும் பிழையின்றி எழுதுவதற்கும் நான் தியாகு தோழரிடம் கற்றுக் கொண்டேன்.

சட்டமன்றங்களில் நம்பிக்கையில்லாத தியாகு தோழர் ஒவ்வொரு ஆண்டும் பன்னாட்டு காணாமற் போனவர்கள் நாளன்று ஐநாவுக்கு மனுக்கொடுக்க யுனிசெப் அலுவலகம் போய் வருவார். நடப்பிலிருக்கும் முதலாளித்துவ அமைப்புகளின் வழியாகவும் மாந்த உரிமைகளுக்காக குரல் கொடுக்க வேண்டியதன் அவசியத்தையும் தியாகுத் தோழரிடம் கற்றுக்கொள்ளலாம்.

 (தொடரும்)


No comments:

Post a Comment

உலக சமத்துவமின்மை அறிக்கை 2026 (WIR 2026)

  உலக சமத்துவமின்மை ஆய்வகம் 2026ஆம் ஆண்டுக்கான உலக சமத்துவமின்மை அறிக்கையை வெளியிட்டுள்ளது. இதற்கு முன்  2018, 2022லும் உலக சமத்துவமின்மை அற...