நான் பொதுமக்களில் ஒருவராக இந்த விமர்சனங்களை முன்வைக்கவேண்டியுள்ளது, சில கேள்விகளையும் கேட்கவேண்டியுள்ளது. தியாகுத் தோழரை மட்டுமே குறிவைத்து தாக்குவதற்காகவோ, காயப்படுத்துவதற்காகவோ இவற்றை நான் இங்கு முன்வைக்கவில்லை. அரசியல் செயல்பாட்டாளர்களாக இருக்கும் தனித்தமிழ்வாதிகள் அனைவருக்குமே மக்களில் ஒருவராக நான் இந்த விமர்சனங்களை முன்வைக்கிறேன்.
நான் தாய்மொழி-தமிழ்வழிக்கல்வியை
மட்டுமே ஆதரிப்பவர். நானும் ஆங்கிலச் சொற்கள் இல்லாமல் தமிழில் மட்டுமே எழுதவேண்டும்
என்பதை ஆதரிப்பவர் தான். நானும் மணிப்பிரவாள நடையில் எழுத விரும்பவில்லை தான். ஆனாலும்
கூட ஏற்கெனவே மக்களின் பேச்சு மொழியிலும், உரை நடைகளிலும் ஒன்றோடு ஒன்றாகக் கலந்து
விட்ட சில பிறமொழிச் சொற்களை முற்றிலுமாக நீக்கவேண்டியது அவசியம் என்று நான் கருதவில்லை. ஏனெனில்
நகரமயமாக்க சூழலில் மொழிக்கலப்பு என்பதை முற்றிலுமாகத் தவிர்த்துவிடமுடியாது.
தனித்தமிழ் இயக்கங்களுக்கானக்
கருத்து சுதந்திரத்தை நான் மதிக்கிறேன். ஆனாலும் கூட மக்களை அரசியல்வயப்படுத்துவதற்கான
வேலைகளில் ஈடுபடும் போது மொழி அதற்கு தடையாகக் குறுக்கே நிற்பது நல்லதல்ல. அது ஆங்கிலமாக
இருந்தாலும் சரி, சமஸ்கிரதமாக இருந்தாலும் சரி, தனித்தமிழாக இருந்தாலும் சரி. ஏனெனில்
தனித்தமிழ் உரைகளும், உரைநடைகளும் எளிதில் விளங்கிக் கொள்ளும்படியாக இல்லை. அவற்றை
புரிந்துகொள்வதற்கே சிறிது நேரம் தேவைப்படுகிறது. நமது கருத்துக்களையும், உண்மைகளையும்,
உணர்வுகளையும் தங்குதடையின்றி பகிர்வதற்குத்தான் மொழியே தவிர தடைபோடுவதற்கல்ல. எளிய
மக்களின் தடையற்ற புரிதலுக்கு தனித்தமிழ் தடையாகவே உள்ளது. சமூகநீதியின் அடிப்படையில்
தான் தனித்தமிழ்வாதிகள் ஒரு மொழிக்கொள்கையை ஆதரிக்கின்றனர், ஆங்கிலவழிக்கல்வியை எதிர்க்கின்றனர்.
ஆனால் அந்த சமூகநீதிக்கே தனித்தமிழ் ஒரு வகையில் தடையாகவும் உள்ளது. எளிய மக்களைத்
தனித்தமிழ் அந்நியப்படுத்துகிறது. மக்களிடமிருந்து அந்நியப்பட்ட தனித்தமிழ் பிரிவினைவாதத்துக்கும்
வழி வகுக்கிறது. அதீத மொழிப்பற்றால் தனித்தமிழ்வாதிகள் தங்களை அறியாமலே, தங்கள் நோக்கங்களுக்கே
புறம்பாகும் விதத்தில் தனித்தமிழ் மேட்டுமைவாதத்துக்கே (Tamil elitism) வழிவகுக்கின்றனர்.
தூய்மைப்படுத்துகிறோம்
என்ற பேரில் வழக்கில் உள்ள அனைத்தையுமே தனித்தமிழாக மாற்றும் எல்லையற்ற முயற்சி முக்கியமாக அரசியல்
களத்தில் நம் போராட்ட உணர்வை மட்டுப்படுத்தி மலுங்கவைக்கிறது. மொழி என்பது உணர்வு அடிப்படையிலானது,
ஏற்கெனவே புழக்கத்தில் உள்ள சொல்லை ஒரு தனித்தமிழ் சொல்லால் பதிலீடு செய்கிறீர்கள்
என்றால் புதிய சொல்லால் பழைய சொல் தந்த அதே உணர்வை பதிலீடு செய்யமுடியாது. உதாரணமாக
“சமூகம்” என்பதற்கு பதிலாக “குமுகம்” என்ற சொல்லை தனித்தமிழ்வாதிகள் முன்வைக்கிறார்கள்.
“வர்க்கப் போராட்டம்” என்பதற்கு பதிலாக “வகுப்புப் போராட்டத்தை” முன்வைக்கிறார்கள்.
“தேசம்” என்பதற்கு பதிலாக “தேயம்” என்ற சொல்லை முன்வைக்கிறார்கள்.
“சமூக நீதித் தமிழ்த்தேசம்”
என்பது தூயத் தமிழில் “குமுக நீதித் தமிழ்த்தேயம்” என்று மாறலாம். ஆனால் “குமுக நீதித்
தமிழ்த்தேயம்” என்பது எனக்கு எந்த அரசியல் உணர்வையும் கொடுக்கவில்லை. “வர்க்கப் போராட்டம்”
என சொல்லும் போது உருவாகும் அரசியல் உணர்வை “வகுப்புப் போராட்டம்” மந்தப்படுத்துகிறது.
“சமூகம்” என சொல்லும்போது ஏற்படும் உணர்வை “குமுகம்” நீர்த்துப்போக வைக்கிறது.
மக்களில் ஒருவராக இவற்றைக்
கேட்க வேண்டியது அவசியம் என்று நான் நினைக்கிறேன். மக்களுக்காக தேசமா? இல்லை தேசத்திற்காக
மக்களா? என்ற கேள்விக்கு மக்களுக்காகத் தான் தேசம் என்பவர்கள் ஜனநாயகவாதிகளாகவும்,
இடதுசாரிகளாகவும் உள்ளனர். தேசத்திற்காக தான் மக்கள் என்பவர்கள் வலதுசாரிகளாகவும்,
முதலாளி வர்க்கத்தைச் சேர்ந்தவர்களாகவும் உள்ளனர். இதே போல் நம் முன் உள்ள பெரிய கேள்வி
இது தான்? மக்களுக்காக மொழியா? இல்லை மொழிக்காக மக்களா? தலைக்காக குல்லாவா? இல்லை குல்லாவுக்காக
தலையா? காலுக்காக செருப்பா? இல்லை செருப்புக்காக காலா? குல்லா பத்தவில்லை என்பதற்காக
யாரும் தலையை வெட்டிக்கொள்ளமாட்டார்கள். அது போலத்தான் மக்களுக்காகத் தான் மொழியே தவிர
மொழிக்காகவே மக்கள் அல்ல. மக்களுக்காகவே போராடுபவர்களாக இருந்தாலும் கூட, மொழிக்காகத்
தான் மக்கள் என்று கருதுபவர்கள் ஒரு விதத்தில் தேசத்திற்காகத் தான் மக்கள் என்று கருதுபவர்களுடன்
ஒன்றுபடுகிறார்கள். எந்த விதத்தில் ஒன்றுபடுகிறார்கள்? சமூக இயங்கியலை மறுக்கும் விதத்தில்
ஒன்றுபடுகிறார்கள்.
அரசியல் கட்சிகளில் மூன்று
வகைகள் உள்ளன. அவை 1. பிற்போக்கான கட்சிகள்
(reactionary parties) , 2. மாற்றத்தை விரும்பாது இருப்பதைத் தக்கவைத்துக்கொள்ள நினைக்கும்
“கன்சர்வேடிவ்” கட்சிகள் (conservative parties). 3. முற்போக்கான சமூக மாற்றத்துக்காகக்
களமாடும் கட்சிகள் (progressive parties). வருணாசிரம தர்மத்தை மீண்டும் நிலை நிறுத்த
நாசவேலைகளில் ஈடுபடும் பாஜக ஒரு பிற்போக்கான கட்சி. 2. இன்றுள்ள முதலாளித்துவ அமைப்பையும், அரசியலமைப்புச்
சட்டத்தையும் அப்படியே பாதுகாக்க விரும்பும் காங்கிரஸ், திமுக போன்ற கட்சிகள் மாற்றத்தை
விரும்பாத இன்றைய நிலையையே தக்கவைத்துக்கொள்ள விரும்பும் கட்சிகளாக உள்ளன. 3. முற்போக்கான
சமூக மாற்றத்துக்கான இடதுசாரி, தலித், சாதியொழிப்புக் கட்சிகளின் தனித்தியங்கும் கூட்டணியை
இனிமேல் தான் உருவாக்கவேண்டியுள்ளது.
இந்த மூன்றுவிதமான கட்சிகளில்
முதல் இரண்டு வகையானக் கட்சிகளாக உள்ள பிற்போக்கானக் கட்சிகளும், மாற்றத்தை விரும்பாதக்
கட்சிகளும் சமூக இயங்கியலை மறுப்பவையாக உள்ளன. அதே போலத்தான் அதி தீவிர மொழிப்பற்றால் மொழிக்காகவே
மக்கள் என்று தங்களை அறியாமலேயே கருதுபவர்களும் மொழியின் இயங்கியலையும், அதன் வழியாக
சமூக இயங்கியலையும் மறுப்பவர்களாகவே உள்ளனர்.
(தொடரும்)

No comments:
Post a Comment