தியாகு தோழர் சிறப்பாசிரியராகவும், கனடாவில் வசிக்கும் ஈழத் தோழர் ஆறுமுகம் கோபால் ஆசிரியராகவும் ஒருங்கிணைந்து, 2020 ஜூலை மாதத்திலிருந்து ஈழத்தமிழர்களுக்கான உரிமைக் குரலாக “ஆபேல்” என்ற மின்னிதழை வெளியிட முடிவுசெய்தனர். மாதமிருமுறை வெளிவரும் இருமொழியேடான “ஆபேல்” மின்னிதழின் வடிவமைப்பாளராக நான் பொறுப்பேற்றுக் கொண்டேன். 2022 ஜூலை வரை ஆபேல் மின்னிதழ் எங்களால் வெளியிடப்பட்டது.
சூழலியல் பாதுகாப்புக்காகவும்,
சூழலியல் உரிமைகளுக்காகவும் சிறப்பாக செயல்படும் பூவுலகின் நண்பர்கள் இயக்கம் ஆண்டுதோறும்
ஒருங்கிணைக்கும் கலந்தாய்வுக் கூட்டத்தில் நான் இருமுறை பங்கேற்றுள்ளேன்.
2024 மார்ச் மாதத்தில் தமிழ்நாடு பொதுமேடை சார்பில்
சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் “வாக்குப்பதிவு எந்திரமும், தேர்தல் ஜனநாயகமும்” என்ற
தலைப்பில் ஒருங்கிணைக்கப்பட்டிருந்த தேர்தல் விழிப்புணர்வு கருத்தரங்கில்
கலந்துகொண்டு மின்னணு வாக்கு எந்திரம் (EVM) குறித்து
என் கருத்துக்களை பதிவுசெய்ததோடு ஜனநாயகமான தேர்தலை உறுதிசெய்ய மற்ற நாடுகளைப் போல்
நாமும் வாக்குச்சீட்டு முறைக்குத் திரும்பவேண்டியது மிக மிக அவசியம் எனவும் வலியுறுத்தினேன்.
2024 ஏப்ரல் 5 அல்-குத்ஸ்
தினத்தன்று எஸ்டிபிஐ இயக்கம் வள்ளுவர் கோட்டத்தில் ஒருங்கிணைத்த பாலஸ்தீன ஆதரவு நாள்
நிகழ்வில் நான் கலந்துகொண்டு பேசியது மறக்க முடியாத அனுபவம்.
2024 நாடாளுமன்றத்
தேர்தலில் திமுக-இந்தியாக் கூட்டணிக்கு ஆதரவாக தமிழ்நாடு பொதுமேடை சார்பாக ஒருங்கிணைக்கப்பட்டிருந்த
வாக்கு சேர்க்கும் பரப்புரை இயக்கத்தில் நானும் பங்கேற்றேன். பரப்புரையில் ஈடுபட்ட
தோழர்கள் நாங்கள் பொதுமக்களுக்கு துண்டறிக்கைகள் அளித்தும், உரைகளாற்றியும் திமுகவுக்கு
வாக்குகளைச் சேர்த்தோம்.
2024 நவம்பர் 27 காலை
சேலத்தில் நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் தியாகு தோழர், மகிழன் தோழர், மதியவன்
தோழர், தேவதாஸ் தோழர் ஆகியோருடன் நானும் கலந்து கொண்டேன். நாங்கள் தமிழ் மக்கள் உரிமை முன்னணியை அறிவித்து அறிமுகம் செய்தோம். தமிழ்த் தேசிய விடுதலை
இயக்கம், தமிழ்நாடு பொதுவுடைமை இயக்கம், தமிழத் தேச மார்க்சியக் கழகம் ஆகிய மூன்று
இயக்கங்கள் கூடி உருவானதே தமிழ் மக்கள் உரிமை முன்னணி. தமிழ்நாடு தழுவிய அரசியல் இயக்கமாக
தமிழ் மக்கள் உரிமை முன்னணியை தொடங்கியதாகவும் முன்னணியின் தோழர்கள் நாங்கள் அறிவித்தோம்.
அதே நாள் மாலை கொளத்தூரில் ஒருங்கிணைக்கப்பட்ட
மாவீரர் தின நிகழ்வில் பங்கேற்றதையும் மறக்கவே முடியாது.
2024 டிசம்பர் 25
வெண்மணித் தியாகிகள் தினத்தன்று வெண்மணி சென்று அஞ்சலி செலுத்தியதையும் ஒரு நாளும்
மறக்கவே முடியாது.
நாம் கலந்து கொள்ளும்
நிகழ்வுகளை எல்லாம் உடனுக்குடன் சமூக வலைதளங்களில் புகைப்படங்களுடன் பதிவுசெய்வதை வெறும்
விளம்பரத்துக்காக மட்டுமே செய்வதாகக் கருதவேண்டியதில்லை; அவை ஆவணப்படுத்தலுக்கும்,
பரப்புரைக்கும், கவன ஈர்த்தலுக்கும், மிகவும் அவசியமானவையே என்று தான் நான் கருதுகிறேன்.
ஆனாலும் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளும் போது எனக்கு அந்த நினைப்பே இருக்காது. முதலில்
மொபைலை நான் கையில் வைத்திருக்கவே மாட்டேன். அதனால் நான் கலந்துகொண்ட நிகழ்ச்சிகளையெல்லாம்
படமெடுத்து சமூக வலைதளங்களில் போடும் பழக்கம் இதுவரை எனக்குக் கிடையாது.
(தொடரும்)

No comments:
Post a Comment