Sunday, August 24, 2025

சிறையில் பூத்த செம்மலர் (3)

 

தியாகு தோழருடனான தோழமை எவ்வாறு தொடர்ந்தது என்பதைப் பத்தி இப்போது சொல்கிறேன். தியாகு தோழர்  தான் எழுதிய “மார்க்சியம் அனா ஆவன்னா” நூலைப் படித்துவிட்டு மதிப்பாய்வு அளிக்குமாறு என்னிடம் கேட்டிருந்தாங்க. நான் 2019 ஜுன் 3ஆம் நாள் தோழருக்கு மின்னஞ்சலில் மதிப்புரையை அனுப்பியிருந்தேன். அதற்கு பின் அதே ஜூன் மாதத்தில் 22 ஆம் நாளில் திருவாரூரில் நடைபெற்ற “மார்க்சியம் அனா ஆவன்னா” நூலிற்கான அறிமுகவிழாவில் கலந்துகொண்டு நூலைப் பற்றி பேசுமாறு என்னைக் கேட்டிருந்தார். அப்போது தான் எனக்கும், எனது அக்கா அஜந்தா (எ) வால்காவுக்கும்  தியாகு தோழரை முதன் முதலாக அவரது சொந்த ஊரான திருவாருரில் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. நான் அந்த நூல் அறிமுக நிகழ்வில் “மார்க்சியம் அனா ஆவன்னா” நூல் குறித்து பேசினேன். தோழர் தான் எழுதிய “சுவருக்குள் சித்திரம்” புத்தகத்தை எனக்கு அன்பளிப்பாகக் கொடுத்தாங்க. பிறகு அதே போல் பட்டுக்கோட்டையிலும், திருத்துரைப்பூண்டியிலும், தஞ்சாவூரிலும் நடைபெற்ற அப்போது தான் நூல் அறிமுக நிகழ்வுகளிலும் கலந்து கொண்டு பேசினேன். தியாகு தோழர் எனக்கு “கம்பிக்குள் வெளிச்சம்” புத்தகத்தையும் அன்பளிப்பாகக் கொடுத்தாங்க. இந்த இரண்டு பெரிய புத்தகங்களையும் அன்பளிப்பாகப் பெற்றது உண்மையிலேயே எனக்கு பெரிய இன்ப அதிர்ச்சி தான். அந்த புத்தகங்களைப் படித்த பிறகு நான் தோழரிடம் சொன்னேன் “தோழர்! இப்ப உள்ள இளைஞர்கள் இந்த புத்தகங்களைப் படிச்சா ஒங்களை தமிழ்நாட்டின் சேகுவேராண்ணு சொல்லுவாங்க தோழர்”.

 தியாகு தோழருடன் சேர்ந்து செயல்படவேண்டும் என்ற ஆர்வத்தில நான் தமிழ்த்தேசிய விடுதலை இயக்கத்தின் உறுப்பினராகவும் ஆகிவிட்டேன். தோழர் தியாகுவைப் பொதுச் செயலாளராகக் கொண்டு இயங்கும் தமிழ்த்தேச விடுதலை இயக்கம் அமைப்பின் மாத இதழாக “தமிழ்த் தேசம்” இதழை அச்சிட்டு வெளியிட்டது. அந்த இதழ் அச்சில் வருவது இடையில் நின்று போனதாகவும் அந்த பணியை மீண்டும் தொடரவேண்டும் என்றும் அதை மின்னிதழ் வடிவிலாவது கொண்டுவரவேண்டும் எனவும் என்னிடம் கூறியிருந்தார். தோழர் “ஒரு மொழிக்கொள்கை” பற்றி ஒரு கட்டுரை எழுதுமாறு சொன்னார். நான் தாய்மொழி வழிக் கல்வியை மட்டுமே ஆதரிக்கும் நபர் என்ற அடிப்படையிலேயே  “ஒரு மொழிக்கொள்கை” பற்றிய ஆய்வுக் கட்டுரையை எழுதியிருந்தேன். குழந்தைகளுக்கு தாய்மொழி வழிக்கல்வியே அளிக்கவேண்டும் என்பதும் முதல் மொழியாக தாய் மொழியையும், இரண்டாம் மொழியாக ஆங்கிலந்தையும் பயிலவேண்டும் என்பதுமே அன்றும் இன்றும் கல்வி மொழி குறித்த எனது நிலைப்பாடாக இருந்தது.

“தமிழ்த்தேசம்” மாத இதழின் தொடர்ச்சியாகவே 2019 ஆகஸ்டு மாதத்திலிருந்து “உரிமைத் தமிழ்த்தேசம்” மின்னிதழைக் கொண்டு வந்தோம். தோழர் என்னை “உரிமைத் தமிழ்த்தேசம்” மின்னிதழின் பொறுப்பாசிரியராகப் பணியாற்ற சொன்னாங்க.

2019 ஆகஸ்ட் மாதத்தில் பேரழிவுக்கு எதிரான பேரியக்கத் தலைவர் க.கா.ரா. லெனின் அவர்கள் பட்டுக்கோட்டையில் “பேரழிவை எதிர்ப்போம்” என்ற தலைப்பில் ஒருங்கிணைத்திருந்த பயிற்சி வகுப்புகளில் நான் ஹைட்ரோ கார்பன் திட்டம், நீரழுத்த விரிசலின் தீமைகளைப் பற்றியும், அணு உலை, அணுக் கழிவு சேமிப்பின் அபாயங்கள் குறித்தும் பாடம் எடுத்தேன். தியாகு தோழரும் அரசியல் பாடம் எடுத்தாங்க.

“உரிமைத் தமிழ்த்தேசம்” இதழை மூன்று ஆண்டுகளுக்கு மேல் வெளியிட்டோம். 2023ல் தியாகு தோழர் தாழி மடல் வாயிலாக செய்திகளை பகிர்ந்துகொள்ள ஆரம்பித்தார். 2023 ஜூனிலிருந்து இன்று வரை தொடர்ந்து தினசரி நானும் தாழி மடலுக்காகவே எழுதி வருகிறேன். உரிமைத்தமிழ்த்தேசம்” மின்னிதழுக்காகவும், தாழி மடலுக்காகவும் இதுவரை மொத்தம் 1,500க்கும் மேலான கட்டுரைகளை எழுதியுள்ளேன்.

(தொடரும்)


No comments:

Post a Comment

உலக சமத்துவமின்மை அறிக்கை 2026 (WIR 2026)

  உலக சமத்துவமின்மை ஆய்வகம் 2026ஆம் ஆண்டுக்கான உலக சமத்துவமின்மை அறிக்கையை வெளியிட்டுள்ளது. இதற்கு முன்  2018, 2022லும் உலக சமத்துவமின்மை அற...