குக்குவோட அப்பா: அதுக்கு இவ்ளோ சீக்கிரமாவா போவனும், இன்னும் இருட்டா இருக்கு பாரு, இன்னும் கொஞ்ச நேரம் கழிச்சு போகலாம், நீ அதுவரைக்கும் தூங்கிக்கிட்டுரு, நானே எழுப்பிவுடறேன்……
குக்கு: மாட்டேன் போ, சீக்கிரமா போனா தான் நெறைய
பறவைகள பார்க்கலாம்னு நீ தான சொன்ன, இப்ப என்னடான்னா இழுத்து போத்திக்கிட்டு
தூங்கிக்கிட்டு இருக்க…
குக்குவோட அப்பா: அதுக்காகவா இவ்ளோ சீக்கிரம் எழுந்துருச்ச,
இப்ப பறவைகளே தூங்கிக்கிட்டுருக்குமே, அப்புறம் நாம எப்டி பார்க்கமுடியும்…
குக்கு: மணி அஞ்சரை ஆயிருச்சுப்பா,
சீக்கிரமா கெளம்பு,
குக்குவோட
அப்பா: சரி இதோ
எழுந்துருச்சுட்டேன்… சத்த பொறு குக்கு ஒரு அஞ்சு நிமிசத்துல பொறப்படலாம், தண்ணீ
மட்டும் குடிச்சுட்டு போலாம்…
குக்கு: நான் குடிச்சுட்டேனே, சரி
நான் வெளில வெயிட் பண்றேன், வந்துரு சரியா...
குக்கு வேக வேகமா கையில பறவைகளோட படங்களை எடுத்துக்கிட்டு
வெளில ஓடிட்டா...
என்ன பார்க்க நீங்க
ரொம்ப தூரம் போகவேணாம், நானே உங்ககிட்ட வாறேங்குற மாதிரி செடி கொடிகளுக்கிடையே பல
வண்ணங்களோட அழகு கொஞ்சும் பறவை ஒன்னு இரை தேடிக்கிட்டுருந்துச்சு...
ஹா, இவ்வளவு அழகான பறவையா, இது தான் ரெயின்போ பறவையோ,
இதுக்கு பேரு என்னவா இருக்கும், சரி இப்ப படங்கள்ல தேடிப் பார்த்து கண்டுபிடிக்குறதுக்குள்ள
அது பறந்துபோயிடும், அப்புறமா கண்டுபிடிக்கலாம், இப்ப விடாம அந்த பறவைய
பார்ப்போம்னு ஆடாம அசையாம ஒளிவு மறைவா நின்னு குக்கு அத பார்த்துக்கிட்டுருந்தா.
அந்த
பறவையோட நெத்தியிலிருந்து உச்சந்தலை, பின் கழுத்துவரை கரும் நிற பட்டை இருந்துச்சு, அத சுத்தி பறவையோட
முகத்தோட இருபக்கமும் வெளிர்பளுப்பு மஞ்சள் நிறமா இருந்துச்சு, கண்ணு கருப்பு
நிறத்தில் இருந்துச்சு, கண் வளையம் சாம்பல் நிறமா இருந்துது. அதுக்கு கீழ கண்ண
சுத்தி மை போட்ட மாதிரி கரும் நிறப்பட்டை கழுத்து வரைக்கும் நீண்டுருந்துச்சு,
கண்ணோட கரும்பட்டைக்கு கீழ உள்ள வெள்ளை நிறப்பட்டை அழகுக்கு மேலும் அழகு சேர்த்துச்சு,
அந்த பறவையோட அலகு தடிமனா மேல இளஞ்சிவப்பு நிறத்துலயும் நுனி வரைக்கும் அடர்
சாம்பல் நிறத்துலயும் இருந்துச்சு, அலகுக்கு கீழ தொண்டையும், கழுத்தும் வெள்ளையா
இருந்துச்சு… கழுத்துக்கு கீழ மார்பகுதியும், வயிற்றுப் பகுதியும் அழகான மஞ்சள்
நிறத்துல இருந்துச்சு… முதுகுப்பகுதியும் இறக்கையின் மேல் பகுதியும் வெளிர் பச்சை
நிறத்துல இருந்துச்சு, இறக்கையின் கீழ் பகுதி இள நீல நிறமா இருந்துச்சு, அதில்
ஓரிரு இடங்களில் வெள்ளைக் கோடுகள் காணப்பட்டுச்சு, இறக்கையோட நுனிப்பகுதி அடர் சாம்பல்
நிறமா இருந்துச்சு, பறவையோட வால் குட்டியூண்டா கட்டை குட்டையா இருந்துச்சு, அந்த
குட்டி வாலோட மேல் பகுதி கருப்பு நிறமாவும், கீழ்ப்பகுதி நீல நிறமாவும்
இருந்துச்சு, வாலுக்குக்கீழும், அடி
வயிற்றுப்பகுதியும் பிரகாசமான இளஞ்சிவப்பு நிறமா இருந்துச்சு… நீண்டு
மெலிந்திருந்த அதன் கால்கள் வெளிர் இளஞ்சிவப்பு சாம்பல் நிறத்தில் இருந்துச்சு.
இயற்கையின்
கலை வண்ணத்த எடுப்பா எடுத்துக்காட்டும் அந்த பறவை யாருன்னு கண்டுபிடிங்க பாக்கலாம்
(தொடரும்)