Saturday, December 30, 2023

சூதாடும் காட்டேரி (93):

 

ஒப்பந்த தேதியிலிருந்து வட்டி சேர்வது நின்றுவிடும்:

ஒப்பந்த தேதியிலிருந்தோ அல்லது பிணையமளித்தவர் கடன் தொகையை கட்டியபிறகோ பிணையத்தைப் பெற்றவர் சொத்தை திருப்பிக்கொடுக்க தவறுவாறெனில் கடன் தொகையைக் கட்டிய தேதியிலிருந்து வட்டி சேருவது நின்றுவிடும் என யாக்ஞவல்கிய ஸ்மிருதியில் (II-63) கூறப்பட்டுள்ளது. கடன் கொடுத்தவர் தன்வசப்படுத்திய சொத்தை சட்டவிரோதமாக வைத்திருப்பதன் மூலம் பலனடையலாம் என்ற நோக்கில் கடனாளியின் பிணைய மீட்பை தாமதப்படுத்தாமல் தடுக்கும் நோக்கில் இந்த விதி சேர்க்கப்பட்டுள்ளது.

சில சந்தர்ப்பங்களில் பிணையம் கொடுத்தவர், பெற்றவரின் உரிமைகள்:

வட்டிவீதம் முன் கூட்டியே நிர்ணயிக்கப்பட்டிருக்கும் போது, வட்டிக்கு பதிலாக பிணையத்தை கடன் கொடுத்தவர் அனுபவிக்குமாறு கொடுத்திருக்கும் சந்தர்ப்பத்தில், கடன் கொடுத்தவர் அசலை போல் இருமடங்கு தொகையை பெற்றபின்பு அவர் பிணையத்திலிருந்து பெற்ற லாபம் வட்டியை விட அதிகமாக இருக்கும் போது அவர் பிணையத்தை கடனாளியிடம் திருப்பிக் கொடுத்துவிடவேண்டும். அதே போல் பிணையத்தில் இருந்து பெற்ற லாபம் குறைவாக வட்டித்தொகையை ஈடுசெய்ய முடியாமல் போகும் போது, அசல் தொகையையும் வட்டியையும் கட்டிய பிறகு மட்டுமே கடனாளியால் பிணையத்தை மீட்கமுடியும்.

பிணையத்தைப் பெற்றவர் அதை பயன்படுத்துவதற்கும், விற்பதற்கும் உள்ள கட்டுப்பாடுகள்:

கடன் கொடுத்தவர் கடனை அடைப்பதற்கான காலக்கெடு முடிவதற்குள் பிணையமாகப் பெற்ற சொத்தை விற்பதும், பிணையமாகக் கொடுப்பதும் தடை செய்யப்பட்டுள்ளது என நாரதஸ்மிருதியிலும், தர்மகோசாவிலும் குறிபிடப்பட்டுள்ளது.

 இதே போன்ற ஒரு விதியை பிரஹஸ்பதியும் அளித்துள்ளார். அதில் வட்டித்தொகை இருமடங்காவதற்கு முன்னோ, கடனை  அடைப்பதற்கு நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவுக்கு முன்னோ பிணையமாக கொடுக்கப்பட்ட பொருளை தவறாக கையாளக்கூடாது, அவ்வாறு செய்ய முயற்சிப்பாரெனில் தடுக்கப்படுவார் என குறிப்பிட்டுள்ளார்.

இவ்விதியின் விளைவாக திரட்டப்படும் வட்டி அசல்தொகைக்கு சமமாகும் காலத்துடன் பிணையத்தை மீட்பதற்கான 10 நாள் கால அவகாசத்திற்கு முன்பு கால வரையறை இல்லாத சாதாரண பிணையத்தை கடன் கொடுத்தவர் விற்கவோ அல்லது பிணையமாக கொடுக்கவோ முடியாது. அதே போல் ஒரு குறிப்பிட்ட கால வரையறையுடன் பிணையம் கொடுக்கப்பட்டுள்ள போது பிணைய மீட்பு தடுக்கப்பட்டுள்ள காலக்கெடு வரை கடன் கொடுத்தவர் பிணையமாகப் பெற்ற சொத்தை விற்கவோ பிணையமாகக் கொடுக்கவோ கூடாது. கடன் கொடுத்தவர் பிணையமாகக் கொடுக்கப்பட்ட சொத்துக்கு உரிமையாளராவதற்கு முன் சொத்தை விற்பாரெனில் சட்டப்படி அவர் பிணையத்தை திருப்பிக்கொடுக்காமல் குற்றமிழைத்ததால் அதற்கான கடப்பாட்டுக்கு உட்பட்டவராவர். பயனுரிமை நல்கும் பிணையமாக இருக்கும் போது பிணையத்தை மீட்பதற்கு எந்த காலக்கெடுவும் இல்லாததால் பிணையமாகக் கொடுக்கப்பட்ட பொருளை விற்பதற்கோ அல்லது பிணையமாகக் கொடுப்பதற்கோ கடன் கொடுத்தவருக்கு உரிமை இல்லை.

(தொடரும்)

No comments:

Post a Comment

பொம்மைகளின் புரட்சி (123)

  காலையில எல்லாருமே லேட்டா தான் எந்திரிச்சாங்க… இன்னிக்கு தாத்தா தான் பழக்கடைக்கு போகனும், அதுனால யம்மு பாட்டிக்கு உதவி பண்ணிக்கிட்டே   தாத்...