Tuesday, October 31, 2023

சூதாடும் காட்டேரி (68):

 

யாக்ஞவல்கியா, நாரதா, பிரிஹஸ்பதி, காத்யாயனா இவர்கள் அனைவராலும் சொல்லப்படுவது என்னவென்றால் ஒரு ஆண் பெற்றக் கடனை அவருடைய மகன், பேரன், கொள்ளுப்பேரன் ஆகிய மூன்றுதலைமுறை வாரிசுகள் அவர்களுக்கு குடும்ப சொத்துக்கள் இருந்தால் அடைக்கக் கடமைப்பட்டவர்கள். ஆனபோதும் கொள்ளுப்பேரனுக்கு இத்தகைய கடமை உள்ளதா என ஐயம் எழுகிறது. நாரதாவால் உருவாக்கப்பட்ட விதியின்படி தந்தை பெற்றக்கடனை மகன் அடைக்கவில்லையென்றால் பேரன் அந்தக் கடனை அடைக்கவேண்டும். ஆனால் அத்தகைய கடமை நான்காம் தலைமுறையைச் சேர்ந்த வாரிசை சேராது. கடன் பெற்ற நபர் முதல் தலைமுறையைச் சேர்ந்தவர், மகன் இரண்டாம் தலைமுறையைச் சேர்ந்தவர், பேரன் மூன்றாம் தலைமுறையைச் சேர்ந்தவர். ஆகவே நான்காம் தலைமுறையைச் சேர்ந்த கொள்ளுப்பேரன் கடனை அடைக்கக் கடமைப்பட்டவர் அல்ல. நாரதாவிற்கு கொடுக்கப்பட்டுள்ள விளக்கவுரையில் பாடலிபுத்திராவில் (நவீன பாட்னா, பீஹாரின் தலைநகர்) நீதிமன்றத்திற்குக் கொண்டு செல்லப்பட்ட ஒரு சுவாரஷ்யமான சம்பவம் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த வழக்கின் சுருக்கம் பின்வருமாறு:

பாடலிபுத்திராவில் செல்வமிக்க வணிகரா இருந்த ஸ்ரிதரா என்ற பிராமணர் தேவதரா என்ற வணிகருக்கு மாதத்திற்கு 2% வட்டியுடன் 10,000 டிரம்மாக்களை (வெள்ளி நாணயங்களை) கடனாகக் கொடுத்துள்ளார். தேவதரா ஒரு மாதம் ஆனபிறகு 200 டிரம்மாக்களை வட்டியாகக் கொடுத்துள்ளார். இரண்டாவது மாதத்தில் தேவதரா விபத்தில் இறந்துவிடுகிறார். அவரது மகனும் காலராவால் இறந்துபோகிறார். தேவதராவின் கொள்ளுப் பேரனான மஹிதரா மட்டும் தான் உயிர்பிழைக்கிறார். அவர் மிகவும் இளையவர், சூதாட்டம் போன்ற தீய பழக்கங்களுக்கு அடிமையானவர். அவருடைய சொத்துக்கள் அவரது தாய் மாமன்களின் பாதுகாப்பில் இருக்கு. தன்னை ஒரு சிறந்த நீதிமானாகக் கருதிய ஸ்மர்ததுர்தரா என்ற பிராமணர் அவர்களுக்கு பின்வரும் ஆலோசனையை கொடுத்துள்ளார். கடன் கொடுத்த ஸ்ரிதராவுக்கு 1 ரூபாய் கூட கொடுக்காதீங்க, பொருத்தமான உரைகளை மேற்கோள் காட்டி நான் உங்களை பாதுகாக்குறேன் என்று கூறியுள்ளார். அதற்கு மஹிதராவின் தாய் மாமன்கள் நீங்க எங்களை காப்பாத்துனீங்கன்னா ஒங்களுக்கு 1000 டிரம்மாக்களை பரிசாகக் கொடுக்குறோம்னு சொல்லிருக்காங்க. கடன் வாங்குனதிலிருந்து இரண்டாவது மாதம் முடிந்தபிறகு தாய் மாமன்களிடம் இரண்டாவது மாதத்திற்கான வட்டியா 200 டிரம்மாக்களை கொடுங்கன்னு ஸ்ரிதரா கேட்டுள்ளார். அதற்கு அவங்க மஹிதரா கொள்ளுப்பேரனா இருக்குறதால உங்களால அசலைக் கூட திரும்பக் கேட்க முடியாது வட்டியைப்பற்ற சொல்லவே வேண்டியதுல்ல என்று பதில் அளிச்சுருக்காங்க.

தாத்தாவின் கடனை பேரன் அடைக்கவேண்டும், கடனில் அவர்களின் பங்கை அடைக்கவேண்டிய கடமைப்பட்டவர்கள் என்று நாரதா கூறியுள்ளதாகவும், தந்தை நரகத்துக்கு செல்லாதவாறு, கடனிலிருந்து தந்தையை விடுவிக்க எல்லா முயற்சிகளையும் மகன் செய்யவேண்டும் என்று மிதாக்ஷரா கூறியுள்ளதாகவும்,  மேலும் மகன்கள் ஒன்றாக வாழ்ந்து அதில் ஒரு மகன் கர்த்தா-நிர்வாகியாக இருந்தால் அவர் தான் கடனை அடைக்கவேண்டும்,, மகன்கள் பிரிந்து வாழ்ந்தால் அவர்களின் பங்கிற்கேற்ப கடனை அடைக்கவேண்டும் என்றும் மிதாக்ஷரா கூறியுள்ளதாகவும், தாய்மாமன்களின் சட்ட ஆலோசகரான ஸ்மர்ததுர்தரா தெரிவித்துள்ளார்.

 (தொடரும்)

 

Monday, October 30, 2023

பணம் பேசுறேன் (68):

 

பண்டமாற்று பரிவர்த்தனை. செய்யவேண்டிய பொருள்களின் மதிப்புகளுக்கிடையேயான வித்தியாசமும் அல்லது அவற்றின் விநியோகத்திற்கு/ கொடுக்கல் வாங்கலுக்கு இடையே உள்ள கால தாமதமும், பெரியத்தடையாகவோ, பிரச்சினையாகவோ பழங்குடியின மக்கள் கருதவில்லை.  ஒத்திவைக்கப்பட்ட கொடுப்பனவுகளை (deferred payments) ஏற்றுக்கொள்வதன் மூலம் அதை சமாளிக்க முடியும் என்கிறார் பால் எயின்சிக்.

பண்டமாற்றில் ஒத்திவைக்கப்பட்ட கொடுப்பனவுகள் என்றால் என்னன்ன இப்போ பார்ப்போம். உதாரணமாக நீங்க ஒரு படி அரிசியை உங்க பக்கத்து வீட்டுக்காரரிடமிருந்து வாங்குறீங்க, ஆனா அதுக்கு ஈடா கொடுக்குறதுக்கு உங்களிடம் உபரியா பொருள் ஏதும் இல்லை. அதனால அடுத்த வாரம் கொடுக்குறதா சொல்றீங்க, அவரும் ஒத்துக்குறாரு, வாங்குன பொருளுக்கான மதிப்பை உடனடியாக கொடுக்காம காலதாமதமா கொடுக்குறது தான் ஒத்திவைக்கப்பட்ட கொடுப்பனவுகள் (deferred payments) எனப்படுது. அல்லது நீங்க வாங்குன அரிசிக்கு பதிலா ஒரு படி பருப்பைக் கொடுக்குறீங்கன்னு வெச்சுக்குவோம், அரிசியை விட பருப்பின் மதிப்பு அதிகம் இல்லையா, அதுனால அரிசியை விட பருப்பின் மதிப்பு எவ்வளவு கூடுதலா இருக்கோ அவ்வளவு மதிப்புள்ள வேறொரு பொருளை ஒங்க பக்கத்துவீட்டுக்காரர் ஒங்களுக்குக் கொடுக்கனும் அதாவது பருப்புக்கும் அரிசிக்கும் இடையிலான மதிப்பு வித்தியாசத்துக்கு ஈடான பொருளை ஒங்க பக்கத்துவீட்டுக்காரர் ஒங்களுக்குக் கொடுக்கனும். அப்ப தான் அது சமமான பரிவர்த்தனையாக இருக்கும். ஆகையால் இந்த பரிமாற்றத்திலும் பகுதியளவு ஒத்திவைக்கப்பட்ட கொடுப்பனவுகளா (deferred payments)  இருக்கு.

ஆஃப்ரிக்க கிராமங்களில் அறுவடைகளுக்கு இடையிலான காலகட்டத்தில் இரும்புக்கொல்லர்கள் செய்த அனைத்து சேவைகளுக்கும் அறுவடைக்குப் பிறகே ஊதியம் வழங்கப்பட்டிருக்கு என்கிறார் பால் எயின்சிக்.

இதுவரைக்கும் முன்வைத்த காரணங்களால பொருளாதார முன்னேற்றத்தின் ஆரம்ப கட்டத்தில் பண்டமாற்று முட்டாள்தனமான முறையாகக்  குறைக்கப்பட்டது என்று கருதுவது தவறு என்று தோன்றுகிறது. பெரும்பான்மையான சமூகங்களில் தொழில்நுட்ப மற்றும் அறிவார்ந்த வளர்ச்சியின் மூலம் ஏதாவது ஒரு பண அமைப்புக்கு மாறிய பிறகும் கூட பண்டமாற்று நீண்ட காலம் நீடித்து இருந்ததற்கு சாத்தியப்பாடுகள் உள்ளன என்கிறார் பால் எயின்சிக்.

 பழமையான சமூகங்களில் பண்டமாற்று முறையின் அசௌகரியம் குறித்து பொருளாதார வல்லுநர்கள் அளிக்கும் விளக்கம் மிகைப்படுத்தப்பட்டதாக இருக்கு. பண்டமாற்று முறையின் அசௌகரியங்களை உணர்ந்ததன் மூலமாகத்தான் பணம் அவசியமானதாக உருவானது என்ற பொருளாதாரவியலாளர்களிடையே பொதுவாக, உள்ள அனுமானம் கவனமாக மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று பரிந்துரைக்கிறார் பால் எயின்சிக்.

பால் எயின்சிக் நிரூபிப்பது போல்: பண்டமாற்று முறையின் சகிக்க முடியாத அசௌகரியத்துனால சமூகம் அதை சீர்திருத்தவேண்டிய கட்டாயம் ஏற்பட்டது அதனால் தான் பணம் தோன்றியது என பல தலைமுறைகளாக பொருளாதார வல்லுனர்கள் பயன்படுத்தும் எதிர்மறை அணுகுமுறைக்கும்,  பழைய முறை சகிக்க முடியாததாக மாறுவதற்கு முன்பே, சீர்திருத்தங்களுக்கான தேவை எழுவதற்கு முன்பே, பரிமாற்ற முறை மேம்படுத்தப்பட்டது. என்பதன்படி இங்கு பரிந்துரைக்கப்பட்ட நேர்மறையான அணுகுமுறைக்கும் இடையே அத்தியாவசிய வேறுபாடு உள்ளது என்று க்ளின் டேவிஸ் சுட்டிக்காட்டியுள்ளார்..

 (தொடரும்)

 

 

 

 

 

Sunday, October 29, 2023

பொம்மைகளின் புரட்சி (18):

 

குக்கு: ஆமாம்பா, உண்மையான இயற்கை ஆர்வலர்கள் வேட்டையாடமாட்டாங்க…

குக்குவின் அப்பா: ரூஸ்வெல்ட் கரடியை சுட மறுத்த சம்பவம் அவரின் இரக்கச் செயலாக, செய்தி அமெரிக்கா முழுவதும் காட்டுத்தீ போல் பரவுச்சாம். 1902 நவம்பர் 16இல் தி வாஷிங்டன் போஸ்ட்டில் அரசியல் கார்ட்டூனிஸ்ட் கிளிஃபோர்ட் பெர்ரிமேன், தலையங்கத்துல அந்த நிகழ்வை விளக்கும் விதமா பரபரப்பான கார்ட்டூனைத் தயாரித்து வெளியிட்டுருந்தாராம். அது அனைவரின் கவனத்தையும் பெற்றதாம். சில ஆதாரங்களின்படி, அந்த கார்ட்டூன், ரூஸ்வெல்ட் கரடியை சுட மறுத்ததை மட்டுமல்ல, மிசிசிப்பிக்கும் லூசியானாவிற்கும் இடையிலான எல்லைப் பிரச்சனையைக் கையாண்டதையும் குறிப்பிடும் விதமாக “மிசிசிப்பியில் கோடு வரைதல்" என்று தலைப்பிடப்பட்டதாகக் கூறப்பட்டிருக்கு, மற்ற ஆதாரங்கள் கார்ட்டூன் இன உறவுகளில் அதிபரின் முற்போக்கான நிலைப்பாட்டை சுட்டிக்காட்டுவதாக கூறியிருக்கு. முதலில் கிளிஃபோர்ட் பெர்ரிமேன் பெரிய கரடிய தான் வரைஞ்சிருந்தாராம், அதற்கப்புறம் தான் அழகான குட்டிக் கரடிய வரைஞ்சாராம்.

நியூயார்க்கின் புரூக்ளினில் மிட்டாய் கடை வெச்சிருந்த ரோஸ், மோரிஸ் மிக்டோம் தம்பதியினரும் இதை பார்த்துருக்காங்க. மோரிஸ் மிக்டோம் ரஷ்யாவை சேர்ந்தவராம். ரூஸ்வெல்ட்டின் இரக்கமான செயலை கௌரவிக்கும் வகையில் ஒரு கரடி பொம்மையை உருவாக்கி தங்களின் மிட்டாய் கடையின் ஜன்னலில் காட்சிப்படுத்த அவங்க ரெண்டு பேரும் முடிவு செஞ்சாங்க. அவங்க சில துணி துண்டுகளை வெட்டி இரண்டு பொத்தான்களை கண்களாக வெச்சு தைச்சு அழகான கரடி பொம்மையை செஞ்சாங்க. அந்த பொம்மைக்கு டெடியின் பியர்னு பேரு வெச்சு அவங்களோட மிட்டாய் கடை ஜன்னலில் காட்சிக்கு வெச்சாங்க. அது ஒரே இரவுல எல்லாராலும் விரும்பப்பட்டு வரவேற்பு பெற்றுருக்கு. ரூஸ்வெல்ட்டிடம் கரடி பொம்மைக்கு டெடி என்ற பெயரைப் பயன்படுத்தலாமானு மிட்ச்டோம்ஸ் அனுமதி கேட்டுருக்காரு. ரூஸ்வெல்ட் பெயர் வைக்கலாம்னு ஒப்புதல் கொடுத்தாராம். அதிலிருந்து அவங்க மிட்டாய் கடை, பொம்மைக் கடையா மாறிடுச்சாம். ஆரம்பத்துல அந்த நிறுவனத்துக்கு ஐடியல் நாவெல்ட்டி & டாய் கோ என்று பெயர் வெச்சாங்க. அந்த பொம்மைக்கடைய பிறகு ஐடியல் நாவெல்ட்டி என்ற பேருல 1997 வரைக்கும் அவங்க வெற்றிகரமா நடத்திருக்காங்க. அவங்க மூலமா தான் டெடி பியர் கொஞ்சி விளையாடுற செல்லக்குட்டியா எல்லாரோட வீட்டுக்கும் வந்துச்சு. ரூஸ்வெல்ட்டை கௌரவப்படுத்தும் விதமாகத் தான் கரடிபொம்மைக்கு டெடினு பேர் வெச்சுருக்காங்க. இது மட்டுமில்லாம டெடி நாள் ஒவ்வொரு ஆண்டும் ஃபிப்ரவரி 10 அன்று காதலர் வாரத்தில் கொண்டாடப்படுது. கரடி பொம்மைக்கு டெடி பியர்னு பேரு வந்த கதை இது தான். என்ன குக்கு உனக்கு இந்தக் கதை பிடிச்சுருந்துச்சா…

குக்கு: முடிவு நல்லாருந்துச்சுப்பா, ஆரம்பம் தான் சரியில்லை. அவங்க கரடி வேட்டைக்கு போனது எனக்கு பிடிக்கல… வேட்டையாடுன கரடி தான் டெடி பியரா மாறுனுச்சுங்கறத நெனைக்கும் போது மனசுக்கு ரொம்ப கஷ்டமா இருக்குப்பா… டெடி பியருக்கு பின்னாடி இப்படி ஒரு சோகக் கதை ஒளிஞ்சிருக்கும்னு நான் நெனச்சே பார்க்கல…

குக்குவின் அப்பா: உன் போன்ற குழந்தைகள போல எல்லாரும் விலங்குகள், பறவைகள்கிட்ட அன்பா இருந்தா மட்டும் தான் அவங்களால மகிழ்ச்சியா வாழமுடியும்…

(தொடரும்)

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Saturday, October 28, 2023

சூதாடும் காட்டேரி (67):

 

யாக்ஞவல்கிய ஸ்மிரிதியின் படி (II-45) குடும்பத் தேவைகளுக்காக (குடும்பர்தம்) பிரிந்திராத குடும்ப உறிப்பினர்களால் பெற்றக் கடன், குடும்பத்தின் தலைவர் இறந்துவிட்டாலோ அல்லது வெளிநாடு சென்றிருந்தாலோ குடும்ப பங்காளர்களால் அந்தக் கடன் திரும்பசெலுத்தப்படவேண்டும்.

மனுவாலும், யாக்ஞவல்கியராலும் வலியுறுத்தப்படும் மேலேகுறிப்பிடப்பட்ட விதி இரண்டு அம்சங்களைக் கொண்டுள்ளது.

1. இறந்தவரின் வாரிசுகள் ஒன்றாக சேர்ந்திருந்தாலும் பிரிந்திருந்தாலும், இறந்தவர் பெற்றக் கடனைத் திரும்பசெலுத்தும் பொறுப்பு அவர்களைச் சேரும்.

 2. குடும்பநலனுக்காகக் கடன் பெற்றிருந்தால் மட்டுமே அதைத் திரும்ப செலுத்தவேண்டியக் கடமை அவர்களைச் சேரும். இதுவே கடன் குறித்த இந்துசட்டங்களுக்கு முக்கியமானதாக உள்ள ‘புனிதக்கடமை’க்கு அடிப்படையாக அமைந்துள்ளது.

இறந்தவரின் கடனைத் திரும்பசெலுத்த மகன்கள், பேரன்களுக்கு உள்ள

பொறுப்புகள்:

 யாக்ஞவல்கிய ஸ்மிரிதியின் படி (II-50) தந்தை வெளிநாட்டிற்கு சென்றிருந்தாலோ, இறந்திருந்தாலோ, இல்லை கடுமையாக பாதிக்கப்பட்டிருந்தாலோ அவர் வாங்கிய கடன்களை மகன்களும், பேரன்களும் திரும்பசெலுத்தவேண்டும், தகராறு ஏற்பட்டால் சாட்சிகளால் நிறுவப்படும் படி செலுத்தவேண்டும்.

மூதாதையர்கள் பெற்றக் கடன்களை திரும்பசெலுத்தும் பொறுப்பு அவர்களின் வாரிசுகளில் குறிப்பாக  யாருக்கு உள்ளது என்பதும் விளக்கப்பட்டுள்ளது.

நாரதஸ்மிரிதியின் படி

1. தந்தை இறந்தபின் அவரது கடன்களை செலுத்தக் கடமையுடையவர்களாக மகன்கள் உள்ளனர். அவர்களுக்கிடையே கருத்துவேறுபாடு நிலவுமானால் ஒவ்வொருவரும் அவர் பெற்ற சொத்துப் பங்கிற்கேற்ப கடனைத் திருப்பிசெலுத்தவேண்டும். அவர்களுக்குள் கருத்துவேறுபாடு இல்லையெனில் குடும்பச் சொத்துக்களை நிர்வகிக்கும் மகன் கடனைத் திரும்பசெலுத்தவேண்டும்.

2. சட்டப்படி கடனைத் திரும்பசெலுத்தும் கடமையுடைய மகன்கள் கடனை செலுத்தத் தவறினால் பேரன்கள் தாத்தாவின் கடனைத் திரும்பசெலுத்தவேண்டும். கடனைச் செலுத்தும் கடமை நான்காம் தலைமுறைக்கு வராது.

தந்தை கடன்பெற்றது நிரூபிக்கப்பட்டால் மகன்கள் அதை தன்னுடைய கடனைப் போல திரும்பசெலுத்தவேண்டும். தாத்தாவின் கடன் பேரன்களால் வட்டியில்லாமல் திரும்பசெலுத்தலாம். பேரனின் மகன் திரும்பசெலுத்தவேண்டியதில்லை என்று பிரஹஸ்பதி கூறியுள்ளார்.

மகன் இறந்துவிட்டாலோ, காணாமல் போனாலோ கடனைப் பேரன் செலுத்தவேண்டும். நான்காம் தலைமுறை வாரிசுகள் மூதாதையர் பெற்றக் கடனை செலுத்தவேண்டியதில்லை. நான்காம் தலைமுறை வாரிசுகளுக்கு அந்தக் கடமை இல்லாமல் போகும் என காத்யாயனா கூறியுள்ளார்.

 (தொடரும்)

 

Friday, October 27, 2023

பணம் பேசுறேன் (67):

 

பண்டமாற்றின் முட்டாள்தனத்தை விளக்குவதற்கு பொருளாதார வல்லுநர்களால் மேற்கோள் காட்டப்பட்ட உண்மையான நிகழ்வுகள் கூட அவற்றின் உட்பொருளில் தவறாக வழிநடத்துவதாக உள்ளன என்று கூறும் பால் எயின்சிக் அதற்கு உதாரணமாக ஜெவோன்ஸ் குறிப்பிட்ட உண்மை நிகழ்வுகளையும் வேறு சில நிகழ்வுகளையும் மேற்கோள் காட்டியுள்ளார்..

மிகவும் மேற்கோள் காட்டப்பட்ட மற்றொரு நிகழ்வு டாங்கன்யிகாவில் கேமரனுக்கு நிகழ்ந்தது அவசரத் தேவைக்காக அவர் ஒரு படகை வாங்க முயற்சித்தபோது அவர் முதலில் பித்தளை கம்பியை கொடுத்து துணியாக மாற்றவேண்டியிருந்தது, பின்னர் துணியைக் கொடுத்து தந்தம் வாங்கவேண்டியிருந்தது. இறுதியாக தந்தத்தைக் கொடுத்தபின்பே படகை வாங்கமுடிந்தது.

மத்திய ஆஃப்ரிக்காவில் பார்த் தனது வேலையாள் மறைமுக பண்டமாற்று மூலம் தேவையான பொருட்களை வாங்கும் முயற்சியில் முற்றிலுமாக  களைத்துவிட்டார் என்று முறையிட்டுள்ளார்.

இவற்றையும் இதே போன்ற பிற நிகழ்வுகளையும் மேற்கோள் காட்டும், பொருளாதார வல்லுனர்கள் பண்டமாற்று குறித்து முறையிடும் சிரமங்கள் உண்மையில் பண்டமாற்று அமைப்பின் உள்ளார்ந்த ஒன்றாக  இல்லை என்பதை அவர்கள் உணரவேயில்லை. அவை பெரும்பாலும் வெவ்வேறு நாகரிகங்களைச் சேர்ந்த இருவருக்கிடையிலான திடீர் தொடர்பினால் எழும் முரண்பாடுகளால் தான், இவை பிரச்சினைகளாகத் தோன்றுகின்றன. சொசைட்டி தீவுகளில் உள்ள ஒரு உள்ளூர் பாடகர்  பண்டங்களில் கட்டணம் பெறுவதற்கு சங்கடப்படமாட்டார். ஏனெனில் அந்தப்பொருட்களை பண்டமாற்று செய்வதையும், அல்லது எதிர்கால பயன்பாட்டிற்காக சேமித்து வைப்பதையும் அவர் அறிந்திருப்பதால் அது அவருக்கு ஒரு பிரச்சினையாகவே இருக்காது. டாங்கனிகாவைச் சேர்ந்த ஒருவருக்கு, அங்கு நிலவும் பண்டமாற்று முறை தெரிந்திருப்பதால் கேமரனைப் போல சிரமப்பட்டிருக்கமாட்டார். அவருக்கு உள்ளூர் நிலவரங்கள் தெரிந்துள்ளதால் அவர் அத்தகைய செயலில் ஈடுபடுவதற்கு முன்னே அதன் பிரச்சினைகளை சந்திக்கத் தயாராகஇருப்பார். ஒரே ஒரு பரிவர்த்தனை மூலம் தேவையான பொருட்களைப் பெற முடியாது என்பது அவருக்குத் தேவையற்ற கவலையை ஏற்படுத்தாது.

பல பழங்குடியின மக்கள் பண்டமாற்றையும், பேரம் பேசுவதையும் மகிழ்ச்சியுடன் அனுபவிக்கிறார்கள். ஒரு பரிவர்த்தனைக்குப் பதிலாக மூன்று பரிவர்த்தனைகளைச் செய்வதில் நேரத்தை கழிப்பது அதிவேகத்தில் வாழும் நவீன மனிதனுக்கும் குறிப்பாக தனது பயணத்தைத் தொடர அவசரகதியில் உள்ளவருக்கும் வேண்டுமானால் பிரச்சினையாக இருக்கலாம் ஆனால் பழங்குடிமக்களுக்கு அது ஒரு பொருட்டே அல்ல. கேமரனுக்கு வேண்டுமானால் மூன்று பரிவர்த்தனைகளில்  நேரம் வீணாகியிருக்கலாம். ஆனால் தன்வசம் போதுமான நேரத்தைக் கொண்ட ஒரு உள்ளூர் மனிதர் சந்தை பற்றிய தனது முழுமையான அறிவுடன் தேவையான பரிமாற்றங்களை நியாயமான முறையில் செயல்படுத்துவதற்கு அவருக்கு சாதகமான சரியான தருணத்தை தேர்வு செய்திருப்பார். அத்தகைய சாதனங்கள் இல்லாவிட்டாலும், பொதுவாக பழங்குடி மனிதனுக்கு தன்னிடம் உள்ளதற்கு இணையான தனக்குத் தேவையான ஒன்றை எங்கே கண்டுபிடிப்பது என்று தெரிந்திருக்கும் என்கிறார் பால் எயின்சிக்.

 (தொடரும்)

 

 

 

 

Thursday, October 26, 2023

சூதாடும் காட்டேரி (66):

 

வைப்புத்தொகையாகும் நாளிலிருந்து வட்டி நிறுத்தப்படும்:

யாக்ஞவல்கியஸ்மிருதியின் (II-44) படி கடனாளி பெற்றக் கடனைத் திருப்பிக்கொடுப்பதை கடன் அளித்தவர் ஏற்க மறுத்துவிட்டாரெனில் கடனாளி அதை மூன்றாம் தரப்பினரிடம் வைப்புத்தொகையாக அளிக்கவேண்டும். அன்றிலிருந்து வட்டி சேருவது நிறுத்தப்படும். கௌதமாவும் இதே பரிந்துரையை செய்துள்ளார்.

இந்த விதியில் பொதிந்துள்ள தத்துவம் என்னவென்றால் கடனளித்தவர் கடன் தொகையை திரும்பக்கொடுக்கும்போது வாங்கமறுக்கும் தொகைக்கான வட்டி அந்த நாளிலிருந்து தடைசெய்யப்படும்.

கொடுக்கவேண்டிய கடன்தொகை வைப்புத்தொகையாக ஆனபின்பும் கூட, அதற்குப் பிறகு கேட்கப்படும் போது கொடுக்கப்படவில்லையென்றால் முன்புபோலவே கடனுக்கு வட்டி சேரும் என மிதாக்ஷரா குறிப்பிட்டுள்ளார். யாக்ஞவல்கியஸ்மிருதி II-44 அடிப்படையான தத்துவம் சொத்து மாற்ற சட்டத்தின் 84வது பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளது. அடமானக்கடனுக்கு கொடுக்கவேண்டியத் தொகையை கடனளித்தவருக்குக் கொடுத்தபிறகு அல்லது நீதிமன்றத்தில் வைப்புத்தொகையாக செலுத்தப்பட்ட பிறகு அத்தொகைக்கு வட்டி சேருவது நிறுத்தப்படும் என்று  அந்தப் பிரிவில் கூறப்பட்டுள்ளது.

சில சமயங்களில் வட்டி செலுத்துவதிலிருந்து விலக்கு:

ஒருவர் நீண்டகாலமாக வேத வேள்விகளில் ஈடுபடும்போதோ, அல்லது நோய்வாய்ப்பட்டிருக்கும் போதோ, அல்லது அவர் குருகுலத்தில் ஆசிரியரிடம் கல்வி கற்கும்போதோ அல்லது அவர் வயதில் சிறியவராக இருக்கும் போதோ அல்லது அவர் வறியவராகும் போ அவர் செலுத்தவேண்டியக் கடன் தொகைக்கு வட்டி சேருவது நிறுத்தப்படும் என்று கௌதமா குறிப்பிட்டுள்ளார். 

வட்டி செலுத்துவதிலிருந்து சிறப்பு விலக்கு அளிக்கும் மேற்குறிப்பிட்ட விதி மனிதநேயத்துடன் யதார்த்த அனுகுமுறையை கொண்டுள்ளதாகவும், பண்டைய காலத்தில் வேத வேள்விகளுக்கும், கல்விக்கும் அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளதை இதிலிருந்து அறியமுடியும் என்று ரமா ஜோய்ஸ் கருத்து தெரிவித்துள்ளார்.

கடனைத் திரும்பசெலுத்தவேண்டிய இந்து கடனாளியின் வாரிசுக்கு உள்ள கடப்பாடு:

தர்மசாஸ்திரங்களிலும், ஸ்மிரிதிகளிலும் மிகவும் விரிவாக விளக்கப்பட்டுள்ள பகுதிகளில் ஒன்றாக கடனைத் திரும்பசெலுத்துவது குறித்த சட்டங்கள் உள்ளன. அதன் படி ஒருவர் தான் பெற்றக் கடனைத் திரும்பசெலுத்தவேண்டும். அவர் திரும்பசெலுத்தத் தவறினால் ஸ்மிரிதிகளில் கூறப்பட்டுள்ளபடி அந்தக் கடனைத் திரும்பசெலுத்த கடமைப்பட்ட மற்றவர்களால் திரும்பசெலுத்தப்படவேண்டும்.

மனுதர்மத்தின் படி (மனு VIII-166) கடனாளி இறந்துவிட்டால், பெற்றக்கடன் குடும்பத்திற்காக செலவு செய்யப்பட்டிருந்தால் அந்தக் கடன் வாரிசுகளால் அவர்களின் நிலபுலன்களிலிருந்து -அவை பிரிக்கப்பட்டிருந்தாலும் கூட -செலுத்தப்படவேண்டும்.

 (தொடரும்)

 

Wednesday, October 25, 2023

பணம் பேசுறேன் (66):

 

பொருளியலாளர் வில்லியம் ஸ்டான்லி ஜெவோன்ஸ் (1835-82) தனது பணம் மற்றும் பரிமாற்றத்தின் பொறிமுறை (1875)  என்ற நூலில் பண்டமாற்று முறை குறைபாடுகளுடையது என்பதற்கான இரண்டு எடுத்துக்காட்டுகளுடனே தனது புத்தகத்தைத் தொடங்கியுள்ளார், பொருளாதார அடிப்படையில் பண்டமாற்று முறை சிரமமானது என்று ஒரு கருத்தை நிலைநிறுத்துவதற்கு இதுவே முக்கியக் காரணமாகக் கூறப்படுது.

முதல் உதாரணமாக, மைல் செலி என்ற பாரிஸில் உள்ள லிரிக் தியேட்டரின் ஓபரா பாடகியின் அனுபவத்தை பகிர்ந்துள்ளார். மைல் செலி உலகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது சொஸைட்டி தீவில் இசை கச்சேரி செய்தார். அந்தக் கச்சேரிக்கான டிக்கெட் கட்டணத்துக்கு  3 பன்றிகள், 23 வான்கோழிகள், 44 கோழிகள், 5,000 தேங்காய்கள் மற்றும் கணிசமான அளவு வாழைப்பழங்களையும், எலுமிச்சைக்ளையும், ஆரஞ்சுகளையும் பெற்றுள்ளார். இது மொத்தக் பாக்ஸ் ஆபிஸ் கட்டண வசூலில் மூன்றில் ஒரு பகுதியைக் குறிக்கும். கால்நடைகளும், காய்கறிகளும் பாரிஸில் சுமார் 4,000 பிராங்குகள் மதிப்புடையதாக இருந்திருக்கும் என்றும் ஆனால் சொசைட்டி தீவுகளில் அவை அவருக்கு  சிறிதளவே பயனளித்தது என்றும் கூறியுள்ளார். அந்த ஓபரா பாடகியால் அதில் ஒரு சிறிய பகுதியை மட்டுமே உட்கொள்ள முடியும், (அவர் உள்ளூர் பழக்கவழக்கத்தில் தேர்ச்சி பெற்றிருந்தால் பொது விருந்துக்கு எற்பாடு செய்திருக்கலாம்) ஆனால் அவர் பன்றிகளுக்கும் கோழிகளுக்குமே அவற்றை இரையாக்கினார். இவ்வாறு. நான்காயிரம் பிராங்குகள் வீணடிக்கப்பட்டன என்று க்ளின் டேவிஸ் குறிப்பிட்டுள்ளார்.

இந்த சம்பவம் வோலோவ்ஸ்கி வெளியிட்ட கடிதத்திலும் மேற்கோள் காட்டப்பட்டுள்ளது அன்றிலிருந்து பொருளாதார வல்லுனர்களால் சலிப்படையச்செய்யும் அளவிற்கு இது மேற்கோள் காட்டப்பட்டுள்ளது என்கிறார் பால் எயின்சிக் .

1854-1862 க்கும் இடைப்பட்ட் காலத்தில் உயிரியலாளர் ஆல்ஃப்ரட் ரஸ்ஸல்  வாலஸ் மலாய் தீவுக்கூட்டத்திற்கு பயணம் செய்தார். அப்போது தான் அவர் தனது புகழ்பெற்ற இயற்கைத் தேர்வின் கோட்பாட்டைத் தோற்றுவித்தார். மலாய் தீவுக்கூட்டத்தில் வாலஸ் எதிர்கொண்ட சிரமங்களை  இரண்டாவது உதாரணமாக ஜெவோன்ஸ் தன் புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார். அங்கே பணம் புழக்கத்தில் இல்லாததால் உணவுநேரங்களுக்கு முன்பு கடுமையாக பேரம் பேசவேண்டியிருந்தது. உணவு விற்பனையாளர்கள் வாலஸிடம் உள்ள பொருட்களை வாங்க விரும்பவில்லையென்றால் அவர் இரவு உணவை சாப்பிடாமலே கடந்துசெல்லவேண்டும். இரவு உணவு விற்பவரின் தேவைக்குப் பொருத்தமாக இருக்கும் வாய்ப்புகளை பெருக்க அவர் பொருட்களை தேர்ந்தெடுத்து  வைத்திருக்க வேண்டியிருந்தது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

மைல் செலி, ரஸ்ஸல்  வாலஸ் ஆகியோரின் விரக்தியை ஏற்படுத்தும் முட்டாள்தனமான அனுபவங்களை எதிர்கொண்ட பிறகு, பல தலைமுறை பொருளாதார வல்லுனர்களையும் அவர்களது மாணவர்களையும் போலவே, ஜெவோன்ஸின் வாசகர்களும் பண்டமாற்று முறை குறித்த அவரின் பேரழிவுகரமான விமர்சனங்களையும் விமர்சனமின்றி ஏற்றுக்கொள்ளத் தயாராக இருந்தனர் என்கிறார் க்ளின் டேவிஸ். அந்த குறிப்பிட்ட பண்டமாற்று முறைகள், அந்த குறிப்பிட்ட சமுதாயத்தின் பூர்வீக பயன்பாட்டிற்கு மிகவும் பொருத்தமானதாக இருந்தனவே ஒழிய், அவை பாரிஸில் உள்ள லிரிக்  தியேட்டருக்கும் சொசைட்டி தீவுவாசிகளுக்கு இடையே சர்வதேச வர்த்தகத்தை நடத்துவதற்காக உருவாக்கப்படவில்லை, அல்லது சந்தேகத்திற்கு இடமின்றி சுவாரஸ்யமான கோட்பாடுகளை மேம்படுத்துவதற்காகவும் அவை வடிவமைக்கப்படவில்லை. எந்த வகையிலும் இதுபோன்ற பொருத்தமற்ற உதாரணங்களை எடுத்துக் கொள்ளக் கூடாது, இதில் பண்டமாற்றின் சாதகமற்ற அம்சங்கள்  நியாயமற்ற முறையில் மிகைப்படுத்தப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

(தொடரும்)

 

 

 

 

Tuesday, October 24, 2023

சூதாடும் காட்டேரி (65):

 

த்வைகுன்யா அல்லது தம்துபட் விதி:

கடனை எப்பொழுது திரும்ப செலுத்தவேண்டும் என்ற தேதி விவரங்கள் குறிப்பிடப்படாதபோது, வட்டியின் மொத்தத் தொகை அசலுக்கு சமமாகும் தேதி கடனைத் திரும்ப செலுத்தவேண்டிய நாளாக எடுத்துக்கொள்ளப்படும். இது  தம்துபட் விதியின் அடிப்படையில் கொண்டுவரப்பட்டது. கடன் அளித்தவர் அந்த தேதிக்குப்பின் வட்டியை வசூலிக்கமுடியாது என்பதால் அவர் கடனை வசூலிப்பதற்கான முயற்சிகளில் ஈடுபடலாம்.

சொத்து மாற்ற சட்டம் 1929ல் திருத்தப்படுவதற்கு முன் அடமானம் வைப்பது குறித்தவை கூட இந்து சட்டத்தில் த்வைகுன்யா அல்லது தம்துபட் என்ற இதே தத்துவத்தின் அடிப்படையில் தான் உருவாக்கப்பட்டுருக்கு. நவின சட்ட அமைப்புகளில் கொண்டுவரப்பட்ட பல சட்டங்களிலும் இந்த விதிதான் கடைபிடிக்கப்பட்டுள்ளதாக ரமா ஜோய்ஸ் விளக்கியுள்ளார்.

சுவாரசியமாக பண்டைய எகிப்திலும் முதல் தொகை இரண்டு மடங்கானபிறகு வட்டி சேருவது நின்றுவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.

த்வைகுன்யா அல்லது தம்துபட் விதி குறித்து மேலவை உட்பட பல உயர்நீதிமன்றங்கள் பல்வேறு தீர்மானங்களைக் கொண்டிருந்தன. இந்து சட்டத்தின் பகுதியான த்வைகுன்யா அல்லது தம்துபட் விதி இந்திய அரசியலமைப்புச்சட்டம் நடைமுறைப்படுத்துவதற்கு முன்பே கடைபிடிக்கப்பட்டது. அதற்குப்பின்னும் அரசியலமைப்புச்சட்டத்தின் 372வது பிரிவின்படி நடைமுறையில் உள்ளது. இந்த விதி ராஜஸ்தான் உயர்நீதிமன்றத்தின் 14வது பிரிவை மீறுவதாக உள்ளதால் அந்த மாநிலத்தில் இவ்விதி கடைபிடிக்கப்படுவதில்லை. ஆனால் நாட்டின் மற்ற சில பகுதிகளில் இது சட்டமாக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிடுள்ளார்.

பொது விதி ‘த்வைகுன்யா’விலிருந்து விதிவிலக்குகள்:

தானியம், பழம், கம்பளி, பால், பால் பொருட்கள் போன்ற பண்டங்களில் கொடுக்கப்படும் கடனுக்கு ‘த்வைகுன்யா’ விதி பொருந்தாது. ஆனபோதும் மனுதர்மத்தின் படி (மனு VIII- 151) மொத்தத்தொகை கடன் கொடுத்தப் பண்டத்தின் மதிப்பில் ஐந்துமடங்குக்கு மேல் அதிகமாகக்கூடாது.

நகைகள், முத்து, தங்கம், வெள்ளி, பட்டு, பட்டுத்துணி, கம்பளிகள், பவளம், பழங்கள் போன்றவற்றில் கொடுக்கப்பட்ட கடனுக்கான வட்டி பொதுவான விகிதத்தின் இரண்டுமடங்குவரை அனுமதிக்கப்படும் என கட்யாயனா (510-512) கூறியுள்ளார். எண்ணெய், மது, நெய், சர்க்கரை, உப்பு ஆகியவற்றைக் கடனாகக் கொடுக்கும் போது வட்டியுடன் வசூலிக்கப்படும் மொத்தத்தொகை அதிகபட்சமாக கடனாகக் கொடுத்த பண்டத்தின் மதிப்பில் எட்டுமடங்கு வரை அனுமதிக்கப்பட்டுள்ளது. தங்கம், வெள்ளியைத் தவிர மற்ற உலோகங்களை கடனாகக் கொடுக்கும் போது வட்டியுடன் வசூலிக்கப்படும் மொத்தத்தொகை அதிகபட்சமாக கடனாகக் கொடுத்த உலோகத்தின் மதிப்பில் ஐந்துமடங்கு வரை இருக்கலாம். பணத்தையோ, தங்கத்தையோ கடனாகக் கொடுக்கும்போது அதிகபட்ச வட்டித்தொகை அசலை விட அதிகமாக இருக்கக்கூடாது என்பதில் அனைத்து உரைகளுமே ஒத்தக் கருத்தைத் தெரிவித்துள்ளன.

(தொடரும்)

 

Monday, October 23, 2023

பணம் பேசுறேன் (65):

 

பண்டைய காலங்களிலிருந்து இன்றுவரை பணத்தின் வரலாறு (A History of Money From Ancient Times to the Present Day -GLYN DAVIES) என்ற புத்தகத்தை எழுதிய பொருளாதார அறிஞர் க்ளின் டேவிஸ் பண்டமாற்றை பற்றி என்ன சொல்றாருன்னு கேட்போமா: பண்டமாற்று மலைகளைப் போல் பழமையானது. பண்டமாற்று வரலாறு பழமையானது, உண்மையில் ஒரு விதத்தில் மனிதனின் பதிவு செய்யப்பட்ட வரலாற்றை விட மிகவும் பழமையானது. தாவரங்கள், பூச்சிகள் மற்றும் விலங்குகளுக்கு இடையே உள்ள கூட்டுவாழ்வு உறவுகளில் பரஸ்பர நன்மைக்காக சேவைகள் மற்றும் வளங்களை நேரடியாக பரிமாற்றம் செய்துகொள்வது உள்ளார்ந்ததாக காணப்படுது, இதனால் பண்டமாற்று மனிதனைப் போலவே பழமையானது என்பதில் ஆச்சரியமில்லை.

ஆரம்பகால பண்டமாற்று முறையின் மிகவும் சுவாரஸ்யமான வடிவங்களில் ஒன்று பரிசுப் பரிமாற்றம் ஆகும், இது குடும்பத்திற்குள் பரிவர்த்தனையை விட அன்பளிப்புகளின் வடிவிலே அதிகமாகப்  பரிமாறப்பெற்றது, ஆனால் அதற்கு அப்பால், உதாரணமாக வெவ்வேறு பழங்குடியினரிடையே அன்பளிப்பை விட கொடுத்து வாங்கும் பரிமாற்றத்தின் தன்மை தான் அதிகமாக இருந்தது என்றும் க்ளின் டேவிஸ் குறிப்பிட்டுள்ளார்.

அமைதியான அல்லது ஊமை பண்டமாற்று பங்கேற்பாளர்களால் வேண்டுமென்றே நேரடி மற்றும் சாத்தியமான அபாயகரமான தொடர்பை தவிர்த்து நடைபெற்றது. அதில் ஒரு குறிப்பிட்ட பண்டம், மற்ற தரப்பினர் பரிமாற்றத்திற்கு அடிக்கடி செல்லும் வசதியான இடத்தில் விடப்படும், மறு தரப்பினர் வழங்கிய பொருட்களை எடுத்துக்கொண்டு, அதற்கு சமமானதாக அவர்கள் கருதியதை அங்கே வைப்பார்கள். வெளிப்படையான பரிசோதனைக்குப் பிறகு, இவை போதுமானதாகக் கருதப்படாவிட்டால், முதலில் வழங்கப்பட்ட தொகை அதிகரிக்கப்படும் வரை அவை எடுக்கப்படாமலே இருக்கும். இந்த வழியில் பண்டமாற்று முறை, அமைதியாக இருந்த போதிலும், கடினமான பேரம் பேசும் ஒரு பயனுள்ள, போட்டி வடிவமாக இருந்தது என்கிறார் க்ளின் டேவிஸ்.

பொகாமு 950 காலகட்டத்தில் எகிப்து ராணி ஷேபாவுக்கும், மன்னன் சாலமோனுக்கும் இடையே நடந்த பரிசுப் பரிமாற்றங்களையும் அவர் உதாரணமாக குறிப்பிட்டிருக்கார். பரிசு பரிமாற்றங்கள்ல சிறப்பான பரிசுகளை அளிப்பதில் ஒருவரையொருவர் மிஞ்சும் முயற்சியும் காணப்பட்டுருக்கு என்றும் க்ளின் டேவிஸ் குறிப்பிட்டுள்ளார்..

பண்டமாற்று மிகவும் சிக்கலானது, வசதிக்குறைவானதுன்னு பொதுவாக கருதப்பட்டாலும். பழங்காலத்துல பண்டமாற்று முறையில தான் பெரும்பாலான பரிமாற்றங்கள் நடந்துருக்கு இதற்கு பால் எயின்சிக் என்ன விளக்கம் கொடுக்குறாருனு பார்ப்போம். ஒரு பழமையான சமூகத்தில் பண்டமாற்று என்பது அது நவீன கண்களுக்குத் தோன்றும் அளவுக்கு கடினமானதாக இல்லை.. பொருளாதார வல்லுநர்கள் அதிலுள்ள சிரமத்தை பெரிதுபடுத்த முனைகிறார்கள். ஏனென்றால் அவர்கள் அதை நவீன மனிதனின் கண்ணோட்டத்தில் பார்க்கிறார்கள். அவர்கள் மேற்கோள் காட்டும் உண்மையான அல்லது கற்பனையான நிகழ்வுகள் தங்கள் வாசகர்களை திகைக்கவைக்கும் நோக்கத்திலே எழுதப்படுகின்றன. பண்டமாற்றின் முட்டாள்தனத்தை விளக்குவதற்கு பொருளாதார வல்லுநர்களால் மேற்கோள் காட்டப்பட்ட உண்மையான நிகழ்வுகள் கூட அவற்றின் உட்பொருளில் தவறாக வழிநடத்துவதாக உள்ளன.

 (தொடரும்)

 

 

 

 

Sunday, October 22, 2023

பொம்மைகளின் புரட்சி (17):

 


குக்குவின் அப்பா: கரடிபொம்மையை ஏன் டெடி பியர்னு கூப்புடுறாங்க…

எத்தனையோ குழந்தைங்க தினசரி டெடி பியரை செல்லம் கொஞ்சி விளையாடுறாங்க… பொம்மைக் கடைகள்ல நூற்றுக்கணக்கான டெடி பியர் பொம்மைகள் காட்சிபடுத்தப்பட்டுருக்கு… ஆனாலும் அந்த குழந்தைகளுக்கோ, பொம்மைக்கடைக்காரர்களுக்கோ தோணாத ஒரு கேள்வி அந்த பொம்மையே இல்லாத, டெடி பியருக்காக ஏங்குற என் செல்லக்குட்டி குக்குவுக்குத் தான் கேட்கனும்னு தோணிருக்கு. ஏன்னா, அவ அறிவுக்குட்டி, சமத்து…  சரி இப்போ நான் ஒனக்கு கரடிபொம்மைக்கு ஏன் டெடி பியர்னு பேர் வந்துச்சுங்குற உண்மைக் கதைய சொல்லப்போறேன் … ஆனா அதை கேட்ட பிறகு நீ எனக்கு டெடி பியரே வேணாம்னு சொன்னாலும் சொல்லுவ, பரவாயில்லையா

குக்கு: என்ன ஆனாலும் சரி, அந்தக் கதைய நான் கேக்காம விடப்போறதுல்ல… அப்டி என்னதான் இருக்கு அந்த கதையில… சீக்கிரம் சொல்லு…

குக்குவின் அப்பா: அந்தக் கதையை நீ சொல்லவேணாம்னு சொன்னா கூடா நான் சொல்லத்தான் போறேன்,  கவனமா கேளு…

அமெரிக்கா, அமெரிக்கானு ஒரு நாடு இருக்குதே தெரியுமா, அந்த நாட்டோட 26வது அதிபர், அதாவது தலைவர் யார் தெரியுமா, தியோடர் ரூஸ்வெல்ட் தான் 1901 ஆம் ஆண்டுல அதிபரா தேர்ந்தெடுக்கப்பட்டார். அவருடைய செல்லப் பெயர் தான் டெடி. அவர் ஒரு இயற்கை ஆர்வலர்னு சொல்லிக்கிறாங்க, அவர் 200 மில்லியன் ஏக்கர் பொது நிலத்தை பாதுகாத்தாராம், அங்க அமெரிக்க வன சேவையை உருவாக்குனாராம், அதோட அவர் அதிபராக இருக்கும் போது ஐந்து தேசிய பூங்காக்களையும் திறந்துவெச்சாராம்.

குக்கு: ஆனா அவருக்கும் கரடி பொம்மைக்கும் என்னப்பா சம்மந்தம்?

குக்குவின் அப்பா: அதைத்தான் இப்பசொல்லப்போறேன் கொஞ்சம் பொறுமையா கேளு… 1902 நவம்பர் மாசத்துல, மிசிசிப்பி ஆளுநர் ஆண்ட்ரூ லாங்கினோ மிசிசிப்பிக்கு வாங்க கரடி வேட்டையாடப்போகலாம்னு டெடி ரூஸ்வெல்டை கூப்புட்டாராம். ரூஸ்வெல்டும் அதுக்கு சம்மதிச்சாராம். அந்தப்பகுதியை நல்லா தெறிஞ்ச ஹோல்ட் கோலியர் என்ற வழிகாட்டியோட அவங்க போயிருக்காங்க. அங்க நெறைய பேரு கரடிகளை வேட்டையாடுனாங்களாம். அந்தப் பயணத்தின் இரண்டாவது நாள்ல ஹோல்ட் கோலியர் தலைமையில ரூஸ்வெல்ட்டின் உதவியாளர்கள் குழு, வேட்டை நாய்களோட ஒரு கருப்பு கரடியை நீண்ட  நேரமா துரத்திப்பிடிச்சு ஒரு வில்லோ மரத்துல அதைக் கட்டிவெச்சாங்களாம். கோலியர் ரூஸ்வெல்டுகிட்ட அந்தக் கரடியை சுடச்சொல்லியிருக்காரு. அதைப் பார்த்து அதிர்ச்சியான ரூஸ்வெல்ட்டு, அப்படி செய்யுறது விளையாட்டுவீரருக்கு அழகு இல்லைனு சுடமறுத்துட்டாராம். ஆனாலும் காயமடைஞ்சிருந்த அந்தக் கரடியை இரக்கத்தின் அடிப்படையில கொல்ல சொல்லிட்டாராம்.

குக்கு: ஏன்பா அப்படி சொன்னாரு, அந்தக் கரடி பாவம் தான… அதுக்கு மருந்து போட்டு காப்பாத்த சொல்லியிருக்கலாம் தான…

குக்குவின் அப்பா: அவங்க கரடியை வேட்டையாடிக் கொல்லத்தான போனாங்க. அவங்க எப்படி காப்பாத்த முன்வருவாங்க குக்கு…

குக்கு: ரூஸ்வெல்டு ஒரு இயற்கை ஆர்வலர்னு சொன்னியே…

குக்குவின் அப்பா: நான் சொல்லல, அப்டி சொல்லிக்கிறாங்க… அவர் உண்மையான இயற்கை ஆர்வலரா இருந்தா மொதல்ல கரடி வேட்டைக்கே போயிருக்கமாட்டாரு தான, என்ன சொல்ற…

(தொடரும்)

 

 

 

Saturday, October 21, 2023

சூதாடும் காட்டேரி (64):

சூதாடும் காட்டேரி (64):

இயல்பான வட்டி விகிதம் மாதத்திற்கு 1 ¼ சதவிகிதமாக இருக்கவேண்டும் என்றும், வர்த்தகப் பரிவர்த்தனைகளுக்கு அதாவது வணிகர்களின் தொழில்வணிகத்திற்காக பணம் கொடுக்கும் போது மட்டும் மாதத்திற்கு 5% வட்டி அனுமதிக்கப்படும் என்று கௌதமா பரிந்துரைத்துள்ளார். சாதிகளின் அடிப்படையிலான பாகுபாடான விதிமுறையை அவர் பரிந்துரைக்கவில்லை.

காடுகளின் வழியாக பயணம் செய்பவர்கள் 10% வட்டி செலுத்தவேண்டும். கடல்வழியே பயணம் செய்பவர்கள் 20% வட்டி செலுத்தவேண்டும் என யாக்ஞவல்கியஸ்மிருதியில் சொல்லப்பட்டுருக்கு.

வட்டிக்கு கடன் வாங்குபவர்கள் காடுகள் வழியே செல்லும்போது அவர்களது உயிருக்கும், சொத்துக்கும் ஆபத்து நேரிடும் அதனால் மாதத்திற்கு 10% வட்டி செலுத்தவேண்டும், கடல் வழியே செல்பவர்களுக்கும் முதலை இழக்கும் ஆபத்து உள்ளதால் மாதத்திற்கு 20% வட்டி செலுத்தவேண்டும். இந்த விதிமுறை ஆபத்து அதிகமுள்ள தொழில்வணிகங்களுக்குக் கடன் வழங்கும் போது அதிக வட்டிபெறுவதை அனுமதிக்கிறது என்று இது குறித்து விளக்கம் அளிக்கப்படுது.

கடல் பயணங்களில் நிபுணத்துவம் உள்ளவர்களால் இடம், நேரம், சம்மந்தப்பட்ட பொருட்கள் அடிப்படையில் அதில் கிடைக்கும் லாபத்தைக் கணக்கிடமுடியும் அவர்களால் நிர்ணயிக்கப்படும் வட்டிவிகிதம் சட்டப்படி நடைமுறைப்படுத்தப்படும் என்று மனு கூறியிருக்கார்.

 

த்வைகுன்யா அல்லது தம்துபட் விதி:

கடனாளியிடமிருந்து கடனளித்தவர் ஒரு நேரத்தில் வாங்க அனுமதிக்கப்படும் அதிகபட்ச வட்டிவிகிதம் குறித்த விதிமுறைகள் ஸ்மிரிதிகளில் கூறப்பட்டுள்ளன.

மனுஸ்மிருதியில் (மனு VIII-151) பணப் பரிவர்த்தனைகளில் ஒருமுறை அளிக்கப்படும் வட்டி ஒருபோதும் முதலை விட அதிகமாக இருக்கக்கூடாது (கட்டவேண்டிய நேரத்தில் அவ்வபோது அளிக்கப்படும் கட்டணங்கள் இதற்குப் பொருந்தாது) எனக் கூறப்பட்டிருக்கு.

இந்த விதி ஒரே மாதிரியாகத்தான் எல்லா ஸ்மிருதிகளிலும், தர்மசாஸ்திரங்களிலும் விதிக்கப்பட்டுள்ளது. இந்த விதி பழைய சட்ட உரைகளில் பொதுவாக த்வைகுன்யா விதி என்று அழைக்கப்படுகிறது. பேச்சுவழக்கில் தம்துபட் என அழைக்கப்படுகிறது. இந்த விதி இன்று வரை கடன் சார்ந்த இந்துசட்டங்களின்படி நடைமுறையில் உள்ளதாக  ரமா ஜோய்ஸ் கூறுகிறார்.

பணம் அல்லது தங்கத்தில் அளிக்கப்படும் கடன்களுக்கே மேற்கூறிய விதிமுறைகள் பொருந்தும். பொருட்களில் அளிக்கப்படும் கடன்களுக்கு  வெவ்வேறு உயர்ந்தபட்ச விகிதங்கள் விதிக்கப்பட்டுள்ளன. த்வைகுன்யா விதி முதன்மையானதாகவும் முக்கியமான ஒன்றாகவும் இருந்துள்ளது. இவ்விதி எதைக் குறிக்கிறது என்றால் ஒரே நேரத்தில் மொத்தமாக வசூலிக்கப்படும் வட்டித்தொகை அசல் தொகையை விட அதிகமாக இருக்கக்கூடாது. இந்த விதி நடைமுறையாகும் போது வட்டி தொடர்ச்சியாக வசூலிக்கப்படாவிடில் எந்தத்தேதியில் அது அசலுக்கு சமமாகிறதோ அன்றிலிருந்து அசலுக்கு வட்டிசேருவது நின்றுவிடும். இந்தவிதி சேர்ந்த வட்டித்தொகைகளுக்கு மட்டுமே பொருந்தும். புதிய கடன் பத்திரத்தின் மூலம் முதலையும், வட்டியையும் சேர்த்து புதிய முதலாக ஆக்கப்படும் சந்தர்ப்பங்களுக்கு இது பொருந்தாது.

 (தொடரும்)


Friday, October 20, 2023

பணம் பேசுறேன் (64):

 

பொருளாதார அறிஞர் பால் எயின்சிக் பண்ட மாற்றுமுறை பற்றி மேலும் என்ன சொல்றாருன்னு கேப்போம்.

சமீபத்திய ஆண்டுகளில் (1940களில்)  ஆஃப்ரிக்கா மற்றும் ஓசியானியாவில் உள்ள பயணிகள் எதிர்கொள்ளும் நிலையான பண்டமாற்று விகிதங்களின் கட்டணங்கள் கூட பண்டமாற்று பரிணாம வளர்ச்சியில் ஒரு உயர் கட்டத்தை குறிக்கிறது.

சந்தைகளின் உருவாக்கம் பண்டமாற்று முறையின் முன்னேற்றத்திற்கு பங்களித்தது. இந்தச் சந்தைகளில் தனக்குத் தேவையான பொருட்களை எங்கே கண்டுபிடிப்பது என்பதும், பொருட்கள் தேவைப்படும் நபர்களை எங்கே கண்டுபிடிப்பது என்பதும் அனைவருக்கும் தெரியும். அதோடு விநியோகம் மற்றும் தேவையை பொருத்துவதற்கான வாய்ப்புகள் ஒப்பீட்டளவில் அதிகமாக இருந்தன. ஆஃப்ரிக்கா மற்றும் பிற இடங்களில் உள்ள சில பழமையான சந்தைகளில் பொருட்களை பரிமாறிக்கொள்வதற்கும் இருதரப்பினரின் நலன்களைப் பாதுகாப்பதற்கும் குறிப்பிடத்தக்க வகையில் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

தூய பண்டமாற்றுமுறையின் இருப்பு நாகரிகத்தின் மிகவும் பழமையான வடிவத்தைக் குறிக்க வேண்டும் என்ற அவசியமில்லை. பெரும்பாலும் இந்த அமைப்பு சமூகத்தில் மற்ற விஷயங்களில் கணிசமாக முன்னேறிய பிறகும் நீண்ட காலம் நீடித்துள்ளது.  இது பழமைவாதத்தின் காரணமாக இருக்கலாம்.

பழங்குடி மக்கள் மிகவும் வசதியான முறைகளைப் பின்பற்றுவதற்கு போதுமான புத்திசாலித்தனத்துடன் மேம்பட்டவர்களாக இருந்தபோதிலும் தங்கள் வர்த்தக முறைகளை மாற்றத் தயங்குகின்றனர். சில சந்தர்ப்பங்களில் பணவியல் பொருளாதாரத்தை ஏற்றுக்கொள்வதற்கு எதிராக பாரபட்சமான அனுகுமுறை உள்ளது, அத்தகைய தப்பெண்ணம் ஆதிப்பணங்களை பயன்படுத்துவதற்கு எதிராக அல்லாமல் பணத்திற்கு எதிராக. பொதுவாக நாணயங்களைப் பயன்படுத்துவதற்கு எதிராக இயக்கப்படுகிறது. பல சந்தர்ப்பங்களில் பணத்தின் சில வடிவங்களை ஏற்றுக்கொண்ட பிறகும் சுற்றோட்டத்திற்குப் போதுமான பணம் இல்லை என்ற ஒரு எளிய காரணத்தினால் நீண்ட காலத்திற்கு பண்டமாற்றே முதன்மையான வர்த்தகம் செய்யும் முறையாகத் தொடர்கிறது. பண விநியோகத்தில்  ஏற்படும் சரிவும் அடிக்கடி பண்டமாற்று முறைக்கு மாறுவதற்குக் காரணமாகிறது. பணத்தின் மீதான அவநம்பிக்கையும் பண்டமாற்று முறைக்கு மாற காரணமாக இருந்தது  அத்தகைய அவநம்பிக்கை பணமதிப்பிழப்பு அல்லது பணவீக்கம் காரணமாக. இருந்திருக்கலாம்

எண்ணற்ற சந்தர்ப்பங்களில், பழங்குடி சமூகங்கள் சில வகையான பணவியல் அமைப்பைக் கொண்டிருந்தாலும் கூட, கிட்டத்தட்ட முழு வர்த்தகமும் அல்லது அதில் பெரும்பகுதி பண்டமாற்று முறை மூலமே பரிவர்த்தனை செய்யப்பட்டது. தேவையின் அடிப்படையில் அல்லாது தேர்வின் படி இதுபோன்ற சமயங்களில் சரக்குகள் பரஸ்பரம் பரிமாறிக் கொள்ளப்பட்டது. சேவைகளுக்கான கொடுப்பனவுகள் பொருட்களில் அளிக்கப்பட்டது.

(தொடரும்)

 

 

 

 

Thursday, October 19, 2023

சூதாடும் காட்டேரி (63):

ஆய்வுக் கட்டுரையின் முடிவுரையில் ஃபரிதா பகிர்ந்துள்ளவை பின்வருமாறு:

பல நூற்றாண்டுகளில் வட்டி மீதான சமூக அணுகுமுறை வியத்தகு முறையில் மாறிவிட்டது. முந்தைய காலங்களில், கடுவட்டி என்பது ஒரு தீய செயலாகவே கருதப்பட்டது. இருப்பினும், தற்போதைய சூழ்நிலையில், அங்கும் இங்கும் சில விதிவிலக்குகளுடன் கடுவட்டி ஏற்றுக்கொள்ளப்படுகிறது. வட்டி விகிதத்தை விட அதிக வட்டி விகிதத்தை கோருவதன் மீது இன்றைய விமர்சனம் திசைதிருப்பப்படுகிறது. கடுவட்டி மீதான இந்த மாறிவரும் அணுகுமுறையால், கடுவட்டியின் வரையறையே மாறிவிட்டது. வட்டி வாங்குவதற்கு எதிரான பல ஆரம்ப பிரகடனங்கள் ஏழைகளின் அவலநிலையை வலியுறுத்தின, ஆனால் அதற்கு முரணாக, நவீன சமுதாயத்தில் ஏழைகள் தான் அதிக வட்டி விகிதத்தை செலுத்துகிறார்கள். கடுவட்டி மீது உலகளாவிய முறையீடு இருந்தபோதிலும், சில மத அமைப்புகள் வட்டியில் ஈடுபடுவதையும் வட்டி வாங்குவதையும் அல்லது கொடுப்பதையும் தவிர்க்கும் வழிகளை கடைபிடிக்கின்றன. இஸ்லாம் மற்றும் யூத மதம் ஆகிய இரண்டின் புராதன கிளைகள் பல நூற்றாண்டுகளாக தற்போது வரையும் வட்டி மீதான தடையை பராமரித்து வருகின்றன. 

எந்தவொரு வணிகப் பொருளாதார நடவடிக்கைகளையும் ஏற்றுக்கொள்வதற்கு பணபலம் அவசியம். போர் போன்ற பொருளாதாரம் அல்லாத அமைப்புகளில் கூட பெருமளவில் பணம் தேவைப்படுகிறது. எனவே, பணப் புழக்கம் இன்றியமையாதது மற்றும் முறையான வழியில் பணத்தின் சுற்றோட்டம் இல்லாமல் அதை அடைய முடியாது. நவீன காலங்களில், நமது பொருளாதாரம் மிகவும் அதிநவீன கடன் கட்டமைப்புகளைக் கொண்டுள்ளதால் அதனுடன் பழைய கட்டமைப்பை ஒப்பிடமுடியாது. ஆனால் பண்டைய காலங்களில் கடன் அமைப்பு பெயருக்கு தகுதியானது என்பது முற்றிலும் தவறானது. தனிப்பட்ட பணக்கடன் கொடுப்பவர்களைத் தவிர, பண்டைய இந்தியாவில் கில்டுகள், கோயில்கள், கிராம சபைகள் மற்றும் அரசுகள் கூட பணக்கடன் வழங்கும் நிறுவனங்களாக இருந்தன. நிலையான வைப்புத்தொகையாக பெரும் தொகைகள் எடுக்கப்பட்டு, நிரந்தரமாக கிடைக்கக்கூடிய நிர்ணயிக்கப்பட்ட வட்டி விகிதத்திற்குத் திருப்பி அளிக்கப்பட்டன. கடன் என்பது வரையறுக்கப்பட்ட அளவில் வணிகம் மற்றும் தொழில்துறை மூலதனத்தை அதிகரிப்பதற்கான ஒரு சாதனமாக பயன்படுத்தப்பட்டது. 

மேலும் அபாயகரமான வணிகக் கடன்களுக்கான மிக உயர்ந்த வட்டி விகிதமானது, அத்தகைய நிறுவனங்களின் அதிக லாபத்தைப் பகிர்ந்து கொள்வதற்கான உத்தரவாதத்தின் அடிப்படையில் மூலதனத்தை பெறும் முறையை குறிக்கிறது. கௌடில்யரின் அர்த்தசாஸ்திரத்தில் குறிப்பிடப்படும் ஆதேசா மற்றும் லேகாபத்தாதி போன்ற உரையில் ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு பெரிய தொகையை மாற்றுவதற்காக குறிப்பிடப்படும் ஹுண்டிகா ஆகியவை மூலம் இத்தகைய சாதனங்கள் பயன்படுத்தப்பட்டது தெளிவாக அறியப்படுகிறது. பணத்தின் உண்மையான பரிவர்த்தனைகள் இல்லாமல் கடன் குறிப்புகள் மூலம் பணம் மாற்றப்பட்டது. பண்டைய இந்தியப் பொருளாதாரத்தில் பணக்கடன் ஒரு இன்றியமையாத அங்கமாக இருந்தது என்பதும், பணத்தின் பரவல் அதிகமாக அதிகமாக கடனின் முக்கியத்துவமும் அதிகரித்தது என்பதும் தெளிவாகிறது.

 (தொடரும்)


Wednesday, October 18, 2023

பணம் பேசுறேன் (63):

 

வடிவத்தில் மிகவும் பழமையானது என்றாலும், அமைதியான பண்டமாற்று சாரத்தில் பரிசுகளை பரிமாறிக்கொள்வதை விட மிகவும் மேம்பட்டது என்கிறார் பால் எயின்சிக்.. ஏனெனில்  இது கடுமையான (அமைதியான) பேரத்தின் விளைவான கொடுக்கல் வாங்கல் என்ற கறாரான கொள்கையை அடிப்படையாகக் கொண்டது. பண்டமாற்றுமுறையின் பரிணாம வளர்ச்சியில் அமைதியான பண்டமாற்று ஒரு அவசியமான கட்டமாகும் என்று ஒருபோதும் கருதப்படவில்லை

அடிக்கடி இத்தகைய அமைதி பண்டமாற்று நிகழ்வுகள் நடந்துள்ளதால், இது ஒரு வினோதமான நிகழ்வு என்பதை விட மேம்பட்ட ஒன்றாக இருக்கும் என்றே கருத வேண்டும். ஒவ்வொரு சமூகத்திலும், அல்லது பெரும்பாலான நிகழ்வுகளில் பரிசுப் பரிமாற்றம் என்பது பண்டமாற்றுக்கு முந்தியதாக இருந்திருக்க வேண்டும் என்று கூற முடியாது. உண்மையில், , "வணிகம் போன்ற" பொருட்களின் பரிமாற்ற வடிவமானது, சில காலத்திற்குப் பிறகு இரு தரப்பினருக்கும் இடையே நெருக்கமான நட்புறவுகளை நிறுவியதன் விளைவாக பரிசுகளின் பரிமாற்றமாக வளர்ந்த நிகழ்வுகள் உள்ளன.

இருப்பினும், பண்டமாற்று முறை காலவரிசைப்படி  பொதுவாக, பரிசுப் பரிமாற்றமும், அமைதியான வர்த்தகமும் இறுதியில் சாதாரண பண்டமாற்று முறைக்கு வழிவகுத்தது என்று சொல்வது உண்மையாக இருக்கும்.

  சில அறியப்பட்ட நிகழ்வுகளில் பணத்தை ஏற்றுக்கொண்ட பிறகும் அமைதியான வர்த்தகம் தொடர்ந்தது. அமைதியான வர்த்தகம் பொருட்களின் பரிமாற்றத்துடன் மட்டுப்படுத்தப்படவில்லை. வேலண்டின் ஸ்மித்தியின் பிரபலமான புராணக்கதையில் கூறியபடி சவாரி செய்பவர்கள் அல்லது பயிற்சியாளர்கள் தங்கள் குதிரைகளையும் அவற்றிற்கு லாடம் அடிப்பதற்கான தொகையையும் ஒரு குறிப்பிட்ட இடத்தில் விட்டுவிட்டுச்  சென்றனர். அவர்கள் பிறகு திரும்பும் போது குதிரைகளுக்கு லாடம் அடிக்கப்பட்டதையும், பணம் இல்லாமல் போனதையும் கண்டனர். இந்த புராணக்கதையின் பல்வேறு வடிவங்களை பல நாடுகளில் காணலாம். சேவைகளில் அமைதியான வர்த்தகத்தின் சாத்தியமான இருப்பை அவை சுட்டிக்காட்டுகின்றன.

பரிசுகளின் பரிமாற்றத்தை  மீண்டும் கடைபிடித்ததற்கான உதாரணம் ரோஸ்மேரி ஃபிர்த் ஆல் மேற்கோள் காட்டப்பட்டுள்ளது, மலாயா விவசாயிகளிடையே வீட்டு பராமரிப்பு {லண்டன் ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸ் மோனோகிராஃப்ஸ் சமூக மானுடவியல், தொகுதி. vn, லண்டன், 1943). அடிப்படையில் பேரம் பேசுவதன் மூலம் பெறப்படும் விலைகளுடன் செய்யப்படும் பண்டமாற்று முறை, பாரம்பரிய அல்லது பழங்குடி சட்டத்தால் நிர்ணயிக்கப்பட்ட விலைகளின் அடிப்படையிலான பண்டமாற்றைவிட உயர்ந்த கட்டத்தைக் குறிக்கிறதா என்ற கேள்விக்கு திட்டவட்டமாக பதிலளிப்பது எளிதானது அல்ல. அவை சம்பந்தப்பட்ட சமூகத்தின் குணநலன்களையே பெரிதும் பொறுத்தது. இஸ்டப்படி பேரம் பேசுவது தனிமனிதப்பண்புகளைக் குறிப்பதால்,  பொருட்களுக்கு இடையேயான நிலையான விகிதங்கள் ஏற்ற இறக்கமான விகிதங்கள். தோன்றுவதற்கு முந்தியிருக்க வாய்ப்புகள் உள்ளன என்று வாதமிடலாம். எவ்வாறாயினும், பண்டைய எகிப்து போன்ற ஒரு சர்வாதிகார அரசாட்சியில் கூட பண்டமாற்று கட்டற்ற பேரத்தின் மூலம் ஏற்ற இறக்க விகிதங்களின் அடிப்படையில் செய்யப்பட்டது என்பதை மனதில் கொள்ள வேண்டும்.

 (தொடரும்)

 

 

பொம்மைகளின் புரட்சி (123)

  காலையில எல்லாருமே லேட்டா தான் எந்திரிச்சாங்க… இன்னிக்கு தாத்தா தான் பழக்கடைக்கு போகனும், அதுனால யம்மு பாட்டிக்கு உதவி பண்ணிக்கிட்டே   தாத்...