பண்டமாற்றின் முட்டாள்தனத்தை விளக்குவதற்கு பொருளாதார வல்லுநர்களால் மேற்கோள் காட்டப்பட்ட உண்மையான நிகழ்வுகள் கூட அவற்றின் உட்பொருளில் தவறாக வழிநடத்துவதாக உள்ளன என்று கூறும் பால் எயின்சிக் அதற்கு உதாரணமாக ஜெவோன்ஸ் குறிப்பிட்ட உண்மை நிகழ்வுகளையும் வேறு சில நிகழ்வுகளையும் மேற்கோள் காட்டியுள்ளார்..
மிகவும் மேற்கோள் காட்டப்பட்ட மற்றொரு நிகழ்வு டாங்கன்யிகாவில் கேமரனுக்கு நிகழ்ந்தது அவசரத் தேவைக்காக அவர் ஒரு படகை வாங்க முயற்சித்தபோது அவர் முதலில் பித்தளை கம்பியை கொடுத்து துணியாக மாற்றவேண்டியிருந்தது, பின்னர் துணியைக் கொடுத்து தந்தம் வாங்கவேண்டியிருந்தது. இறுதியாக தந்தத்தைக் கொடுத்தபின்பே படகை வாங்கமுடிந்தது.
மத்திய ஆஃப்ரிக்காவில் பார்த் தனது வேலையாள் மறைமுக பண்டமாற்று மூலம் தேவையான பொருட்களை வாங்கும் முயற்சியில் முற்றிலுமாக களைத்துவிட்டார் என்று முறையிட்டுள்ளார்.
இவற்றையும்
இதே போன்ற பிற நிகழ்வுகளையும் மேற்கோள் காட்டும், பொருளாதார
வல்லுனர்கள் பண்டமாற்று குறித்து முறையிடும்
சிரமங்கள் உண்மையில் பண்டமாற்று அமைப்பின் உள்ளார்ந்த
ஒன்றாக இல்லை என்பதை
அவர்கள் உணரவேயில்லை. அவை பெரும்பாலும்
வெவ்வேறு நாகரிகங்களைச் சேர்ந்த இருவருக்கிடையிலான திடீர் தொடர்பினால் எழும் முரண்பாடுகளால்
தான், இவை பிரச்சினைகளாகத் தோன்றுகின்றன. சொசைட்டி தீவுகளில் உள்ள ஒரு உள்ளூர் பாடகர் பண்டங்களில் கட்டணம் பெறுவதற்கு சங்கடப்படமாட்டார்.
ஏனெனில் அந்தப்பொருட்களை பண்டமாற்று செய்வதையும், அல்லது எதிர்கால பயன்பாட்டிற்காக
சேமித்து வைப்பதையும் அவர் அறிந்திருப்பதால் அது அவருக்கு ஒரு பிரச்சினையாகவே இருக்காது.
டாங்கனிகாவைச் சேர்ந்த ஒருவருக்கு, அங்கு நிலவும் பண்டமாற்று முறை தெரிந்திருப்பதால்
கேமரனைப் போல சிரமப்பட்டிருக்கமாட்டார். அவருக்கு உள்ளூர் நிலவரங்கள் தெரிந்துள்ளதால்
அவர் அத்தகைய செயலில் ஈடுபடுவதற்கு முன்னே அதன் பிரச்சினைகளை சந்திக்கத் தயாராகஇருப்பார்.
ஒரே ஒரு பரிவர்த்தனை மூலம் தேவையான பொருட்களைப் பெற முடியாது என்பது அவருக்குத் தேவையற்ற
கவலையை ஏற்படுத்தாது.
பல
பழங்குடியின மக்கள் பண்டமாற்றையும், பேரம்
பேசுவதையும் மகிழ்ச்சியுடன் அனுபவிக்கிறார்கள். ஒரு
பரிவர்த்தனைக்குப் பதிலாக மூன்று பரிவர்த்தனைகளைச்
செய்வதில் நேரத்தை கழிப்பது அதிவேகத்தில் வாழும் நவீன மனிதனுக்கும்
குறிப்பாக தனது பயணத்தைத் தொடர அவசரகதியில் உள்ளவருக்கும் வேண்டுமானால் பிரச்சினையாக இருக்கலாம்
ஆனால் பழங்குடிமக்களுக்கு அது ஒரு பொருட்டே அல்ல. கேமரனுக்கு வேண்டுமானால் மூன்று பரிவர்த்தனைகளில் நேரம்
வீணாகியிருக்கலாம். ஆனால் தன்வசம் போதுமான நேரத்தைக் கொண்ட ஒரு உள்ளூர் மனிதர் சந்தை
பற்றிய தனது முழுமையான அறிவுடன் தேவையான பரிமாற்றங்களை நியாயமான
முறையில் செயல்படுத்துவதற்கு அவருக்கு சாதகமான சரியான தருணத்தை தேர்வு செய்திருப்பார். அத்தகைய சாதனங்கள் இல்லாவிட்டாலும்,
பொதுவாக பழங்குடி மனிதனுக்கு தன்னிடம் உள்ளதற்கு இணையான தனக்குத் தேவையான ஒன்றை எங்கே
கண்டுபிடிப்பது என்று தெரிந்திருக்கும் என்கிறார் பால் எயின்சிக்.
(தொடரும்)
No comments:
Post a Comment