Sunday, October 22, 2023

பொம்மைகளின் புரட்சி (17):

 


குக்குவின் அப்பா: கரடிபொம்மையை ஏன் டெடி பியர்னு கூப்புடுறாங்க…

எத்தனையோ குழந்தைங்க தினசரி டெடி பியரை செல்லம் கொஞ்சி விளையாடுறாங்க… பொம்மைக் கடைகள்ல நூற்றுக்கணக்கான டெடி பியர் பொம்மைகள் காட்சிபடுத்தப்பட்டுருக்கு… ஆனாலும் அந்த குழந்தைகளுக்கோ, பொம்மைக்கடைக்காரர்களுக்கோ தோணாத ஒரு கேள்வி அந்த பொம்மையே இல்லாத, டெடி பியருக்காக ஏங்குற என் செல்லக்குட்டி குக்குவுக்குத் தான் கேட்கனும்னு தோணிருக்கு. ஏன்னா, அவ அறிவுக்குட்டி, சமத்து…  சரி இப்போ நான் ஒனக்கு கரடிபொம்மைக்கு ஏன் டெடி பியர்னு பேர் வந்துச்சுங்குற உண்மைக் கதைய சொல்லப்போறேன் … ஆனா அதை கேட்ட பிறகு நீ எனக்கு டெடி பியரே வேணாம்னு சொன்னாலும் சொல்லுவ, பரவாயில்லையா

குக்கு: என்ன ஆனாலும் சரி, அந்தக் கதைய நான் கேக்காம விடப்போறதுல்ல… அப்டி என்னதான் இருக்கு அந்த கதையில… சீக்கிரம் சொல்லு…

குக்குவின் அப்பா: அந்தக் கதையை நீ சொல்லவேணாம்னு சொன்னா கூடா நான் சொல்லத்தான் போறேன்,  கவனமா கேளு…

அமெரிக்கா, அமெரிக்கானு ஒரு நாடு இருக்குதே தெரியுமா, அந்த நாட்டோட 26வது அதிபர், அதாவது தலைவர் யார் தெரியுமா, தியோடர் ரூஸ்வெல்ட் தான் 1901 ஆம் ஆண்டுல அதிபரா தேர்ந்தெடுக்கப்பட்டார். அவருடைய செல்லப் பெயர் தான் டெடி. அவர் ஒரு இயற்கை ஆர்வலர்னு சொல்லிக்கிறாங்க, அவர் 200 மில்லியன் ஏக்கர் பொது நிலத்தை பாதுகாத்தாராம், அங்க அமெரிக்க வன சேவையை உருவாக்குனாராம், அதோட அவர் அதிபராக இருக்கும் போது ஐந்து தேசிய பூங்காக்களையும் திறந்துவெச்சாராம்.

குக்கு: ஆனா அவருக்கும் கரடி பொம்மைக்கும் என்னப்பா சம்மந்தம்?

குக்குவின் அப்பா: அதைத்தான் இப்பசொல்லப்போறேன் கொஞ்சம் பொறுமையா கேளு… 1902 நவம்பர் மாசத்துல, மிசிசிப்பி ஆளுநர் ஆண்ட்ரூ லாங்கினோ மிசிசிப்பிக்கு வாங்க கரடி வேட்டையாடப்போகலாம்னு டெடி ரூஸ்வெல்டை கூப்புட்டாராம். ரூஸ்வெல்டும் அதுக்கு சம்மதிச்சாராம். அந்தப்பகுதியை நல்லா தெறிஞ்ச ஹோல்ட் கோலியர் என்ற வழிகாட்டியோட அவங்க போயிருக்காங்க. அங்க நெறைய பேரு கரடிகளை வேட்டையாடுனாங்களாம். அந்தப் பயணத்தின் இரண்டாவது நாள்ல ஹோல்ட் கோலியர் தலைமையில ரூஸ்வெல்ட்டின் உதவியாளர்கள் குழு, வேட்டை நாய்களோட ஒரு கருப்பு கரடியை நீண்ட  நேரமா துரத்திப்பிடிச்சு ஒரு வில்லோ மரத்துல அதைக் கட்டிவெச்சாங்களாம். கோலியர் ரூஸ்வெல்டுகிட்ட அந்தக் கரடியை சுடச்சொல்லியிருக்காரு. அதைப் பார்த்து அதிர்ச்சியான ரூஸ்வெல்ட்டு, அப்படி செய்யுறது விளையாட்டுவீரருக்கு அழகு இல்லைனு சுடமறுத்துட்டாராம். ஆனாலும் காயமடைஞ்சிருந்த அந்தக் கரடியை இரக்கத்தின் அடிப்படையில கொல்ல சொல்லிட்டாராம்.

குக்கு: ஏன்பா அப்படி சொன்னாரு, அந்தக் கரடி பாவம் தான… அதுக்கு மருந்து போட்டு காப்பாத்த சொல்லியிருக்கலாம் தான…

குக்குவின் அப்பா: அவங்க கரடியை வேட்டையாடிக் கொல்லத்தான போனாங்க. அவங்க எப்படி காப்பாத்த முன்வருவாங்க குக்கு…

குக்கு: ரூஸ்வெல்டு ஒரு இயற்கை ஆர்வலர்னு சொன்னியே…

குக்குவின் அப்பா: நான் சொல்லல, அப்டி சொல்லிக்கிறாங்க… அவர் உண்மையான இயற்கை ஆர்வலரா இருந்தா மொதல்ல கரடி வேட்டைக்கே போயிருக்கமாட்டாரு தான, என்ன சொல்ற…

(தொடரும்)

 

 

 

No comments:

Post a Comment

பொம்மைகளின் புரட்சி (123)

  காலையில எல்லாருமே லேட்டா தான் எந்திரிச்சாங்க… இன்னிக்கு தாத்தா தான் பழக்கடைக்கு போகனும், அதுனால யம்மு பாட்டிக்கு உதவி பண்ணிக்கிட்டே   தாத்...