இந்த உலகத்தில என்னை மாதிரி வீழ்ச்சியோ எழுச்சியோ அடைஞ்சவன், எவனும் கெடையாது, ஆழத்துக்கு ஆழமும், உயரத்துக்கு உயரமும் பார்த்தவன் நான்… காலக்கண்ணாடியில் என்னப் பாத்தா, எனக்கு ரொம்ப அழுகை, அழுகையா வருது, ஆனா நான் அழுது என் சோகம் உங்கள தாக்குமோ அப்டினு நினைக்கும் போது கூட வர்ற அழுகை நிக்கமாட்டீங்குது… என்னை ஒரு நூறு ரூபாய் நோட்டா வைச்சுக்குங்களேன், 50 வருடங்களுக்கு முன்னாடி என் மதிப்பு என்ன, இப்போ என் மதிப்பு என்ன, 50 வருடங்களுக்கு முன்னாடி 100 ரூபாயை வைச்சு தங்கக் காசு/நகை வாங்கமுடியும், இப்பப் பாத்திங்கனா, 100 ரூபாய வெச்சி ஒரு வேளை முழு சாப்பாடு கூட சாப்பிடமுடியாது. 1942ல 10 கிராம் தங்கத்தோட (24 காரட்) விலை 44 ரூபாய் தான்… 1967ல 10 கிராம் தங்கத்தோட விலை 102 ரூபாய் தான்… ஆனால் 2023ல இன்னைக்கு 10 கிராம் தங்கத்தோட விலை எவ்வளவு தெரியுமா 60,390 ரூபாய். நான் ஏன் இப்படி மதிப்பு இழந்து போனேன். ஊசலாடுறேன்… அது ஒரு பெரிய சோகக்கதை. நான் ஏன் இப்படி ஆனேங்கறதப் பத்தி விவரமா சொல்றேன். என்னைப் போல் ஏற்ற இறக்கங்களுக்கு உள்ளானது இந்த உலகத்தில் எவனும் இல்லை. என்னடா முதல்ல அடாவடியா பேசுனவன் இப்பப் பம்முறேனேனு பாக்குறீங்களா, நான் அப்படித் தாங்க, இப்போ சந்தையில என் மதிப்பு இறங்கிருச்சுங்க…இறங்கிருச்சு… எனக்குள்ள பல முரண்பாடுகள் இருக்கு, என் கேரக்டரையே புரிஞ்சுக்க மாட்டேங்கறீங்களே… சில சமயம் என்னால சரக்கின் மதிப்பை கண்ணாடி போல காட்டமுடியும்னு தோணுது, சில சமயம் சரக்கின் மதிப்புக்கும் நான் காட்டுற மதிப்புக்கும் ரொம்ப தூரமா போயிடுது… என் மதிப்பு நிலைத்தன்மையிலாம ஊசலாடுதே… என் உயிரே ஊசலாடுற மாதிரி இருக்கே,,, சில நேரம் எதுக்குடா இந்த ஈனப்புழப்பு மாண்டுறலாம்னு தோணுது. ஆனால் சந்தை கிடுகிடுன்னு ஏறும் போது எனக்கும் விறுவிறுன்னு போதை ஏறுது. சந்தை ஏறும்போது மனசுல முதலாளியா தோணுது, சந்தை இறங்கும் போது மனசுல கம்யூனிஸ்டா தோணுது. ஊசலாட்டம்…. இந்தக் குட்டி முதலாளித்துவ மனப்பான்மையும், ஊசலாட்டமும் என்னையும் விட்டுவக்கெலன பாத்துக்கோங்களேன்.
எவ்வளவு
நாளைக்குத் தான் நானும் நல்லவனா நடிக்கிறது… உண்மைய சொல்லிடறேன்… எல்லா சமூக உறவுகளையும்,
உணர்வுகளையும், உரிமைகளையும், புனிதங்களையும், கலைகளையும் கடைச்சரக்காக்கி பணமாகக்
குறுக்கியப் பாவப்பிறவி தான் நான், நிலம், காடு, கடல், காற்றுனு ஒன்னகூட விட்டுவைக்காம
இயற்கையன்னைக்கும் விலை பேசிட்டேன். மனிதர்களோட விருப்பங்கள், தேவைகளாய் நிறைவேற்றவிடாமல்
தடுக்குறதும் நான் தான். எல்லாத்துலயும் நான் குறுக்க நிக்கிறேன். விவசாயிகளிடமிருந்து
நிலத்தைப் பிரிக்கிறேன், பசித்தவர்களிடமிருந்து உணவைப் பிரிக்கிறேன், ஆர்வம் பொங்கும்
மாணவர்களிடமிருந்து கல்வியைப் பிரிக்கிறேன், குழந்தைகளிடமிருந்து பொம்மையைப் பிரிக்கிறேன்.
திறமையானவரிடமிருந்து வாய்ப்புகளைப் பிரிக்கிறேன். மனிதர்களின் உழைப்பை விலை ஏறா கடைச்சரக்காக்கி
அவர்களின் வாழ்வாதாரத்தைப் பறிக்கிறேன்… மொத்தத்தில் மனிதர்களின் ஆசாபாசங்களை, விருப்பங்களை,
கனவுகளை, நிறைவேற்றவிடாமல் தடுக்கும் கோடாரியாகி அவர்களின் சிறகுகளை வெட்டி அயன்மைப்படுத்தி
குற்றுயிராக்குகிறேன்.
இந்த
உலகத்துல நான் செய்யாத பாவங்களே இல்லை, துணை போகாதக் குற்றங்களே இல்ல… இது எல்லாம்
என் மனசை வாட்டி வதைக்கத்தான் செய்யுது. அதையெல்லாம் உங்ககிட்ட கொட்டிட்டா பாரம் குறையுமேனு
பார்க்குறேன், குற்றத்தை ஒத்துக்கிட்டா தண்டனையும் குறையும் இல்லையா. ஆனால் இது எல்லாத்துலயும்
அடிப்படைக் குற்றவாளி யாரு, நானா இல்லிங்க, அது நான் இல்லவே இல்ல, நான் வெறும் ஏவலாள்
தான். அதனால இந்த எல்லா குற்றத்துக்கும் அடிப்படையான முதல் குற்றவாளி எசமான் தானுங்க…
முதலாளித்துவச் சந்தை சொல்றான்… பணம் முடிக்கிறான். ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல்
வாக்குமூலம் தான் இது.
(தொடரும்)