வணக்கம், என்ன தெரியல! நான் தான் சூரி பேசுறேன்,
என்னது என்ன யாருனு தெரியலயா… அட கஷ்ட காலமே, சரி என் பழைய பேர சொல்றேன்… நிதி தான்
என்னோட பழைய பேரு… இப்ப உங்களுக்கு என்ன ரொம்ப நல்லா தெரிஞ்சுருக்கும்னு நினைக்கிறேன்…
நான் தான் இந்த புதினத்தின் கதாநாயகன். என்ன? ஓ, கதாநாயகி யாருன்னா கேக்குறிங்க… ஒன்னா ரெண்டா
சொல்றதுக்கு, நிலையில்லாம நொடிக்கு ஒன்னுன்னா பாத்துக்கோங்களேன், அதனால அதப்பத்திலாம்
கேட்டுறாதிங்க… சொல்றதுக்கு எனக்கும் பொறுமையில்ல, கேட்கறதுக்கு உங்களுக்கும் நேரமில்ல…
எனக்கு எப்டி சூரி-ங்கற பேரு வந்துச்சுனு கேட்குறீங்கலா,
அது ரொம்பக் கேவலமானக் கதைங்க… என் முதல் பெயர் காட்டேரி. ஏன் இப்படி ஒரு கொடூரமான
பேரு, அப்டி என்ன கொலை பாதகத்தை நான் செஞ்சுட்டேன். செத்த பிணம் பேயாகி மனுசங்களோட
ரத்தத்தைக் குடிச்சுட்டு அலையறத தான் காட்டேரி…ரத்தக்காட்டேரினு சொல்லுவாங்க, அது நெஜம்
கிடையாது ஒரு மாயை, பொய்யான புனைவு, நான் பொய் கிடையாதுங்க… முழுக்க முழுக்க நெஜமான
பேர்வளி, அதுசரி எனக்கும் அந்தக் காட்டேரிக்கும் என்னங்க சம்மந்தம்? அவங்க என்ன தெரியுமா
சொல்றாங்க, நிதிங்கறது, மூலதனம்ங்கறது அதாவது நிதி மூலதனம்கிறது, பழைய சுரண்டப்பட்ட
உழைப்போட திரண்ட வடிவமாம், அதாவது அது இறந்த உழைப்பாம், இறந்த உழைப்பின் திரண்ட வடிவமாக
இருக்குற நிதி மூலதனமான நான் உயிருள்ள உழைப்பை ஸ்ட்ரா போட்டு குடிக்கிறேனாம். அதனால
எனக்கு காட்டேரினு பேராம். என்ன அநியாயம் பாத்தீங்களா, சரி அடுத்த கொடுமைய கேளுங்க,
என்னோட ரெண்டாம் பேரு சூதாடியாம், அது ஏன் அப்டி வெச்சாங்க… எனக்கு ஏன் அந்த பேருனு
பாத்தீங்கனா நான் உதிரியா உள்ள ஒன்னும் தெரியாத அப்பாவி சில்லறை முதலீட்டாளர்களோட நிதியை
சூதாடுறேனாம்… இதுக்கு என்ன ஆதாரம் இருக்குனு அவங்கள கேளுங்க, அதுக்கான முறையான ஆதாரத்தைக்
காட்டச்சொல்லுங்க பாப்போம். என்னத்த சொல்றது, என்னோட முதல் பேரு சகிக்கல, ரெண்டாவது
பேரும் படு ஒழிசலா இருக்கு அதான் முதல் பெயரில் உள்ள ‘ரி’யையும், ரெண்டாவது பேரில்
உள்ள ‘சூ’வையும் ஒன்னா சேர்த்து சின்னதா அழகா சூரி-னு வெச்சுக்கிட்டேன். எப்டி? கெத்தா
இருக்குல…
என்னை காட்டேரினு சொல்றாங்க, ஒட்டுண்ணினும் வையறாங்க,
நான் எத்தனை பேரை வாழவெச்சுருக்கேன் தெரியுமா… அடுத்தவன் காசுல எப்படிடா வயித்தை வளர்க்கறது,
அடுத்தவன் பணத்துல எப்படிய்யா அதிபதி ஆகுறது… சில பேர் அத சுலபம்குறான், சிலபேர் அத
ரொம்ப கஷ்டம்கிறான். அதுக்கு ரொம்ப திறமையும், சாதுர்யமும் வேணுமோ, அப்டி தான சொல்லிக்கிறாங்க
அது உண்மையானு குழம்பிப்போய் கஷ்டப்பட்டுக்கிட்டு இருந்தவங்களுக்கு நான் தானே வழி காட்டுனேன்,
வாழ்க்கை கொடுத்தேன்.
எத்தனை பேர் என்னை நம்பி பிஸினஸ் பண்றாங்க தெரியுமா…
வியர்வையோ, ரத்தமோ சிந்தாம, கஷ்டப்படமா, திறமை, சாதுர்யத்தால பணம் பாக்குறாங்க, அதெல்லாம்
என்ன சும்மாவா? அதுக்கெல்லாம் கொடுத்து வெச்சுருக்கணும்ல… என்னை நம்பி உள்ளவங்களையும்
அவங்க சாறுண்ணிகள்னு தான் சொல்றாங்க… சரி, நான் கேட்குறேன்… ஒட்டுண்ணியாவோ, சாறுண்ணியாவோ
இருக்கறதுல என்னங்க தப்பு இருக்கு, இயற்கையிலே ஆயிரக் கணக்கான உயிர்கள் ஒட்டுண்ணியாவும்,
சாறுண்ணியாவும் தான இருந்து அருமையா வாழ்க்கை நடத்துது, அப்போ இயற்கையே அத அனுமதிச்சுருக்குனு
தானங்க அர்த்தமாகும், அப்போ அவங்களுக்கு ஒரு நியாயம், நமக்கு ஒரு நியாயம்னா அது சரிபடுங்கலா
நீங்களே சொல்லுங்க…
சரி நான் பண்றதையெல்லாம் சொல்லிப்புடுறேன், நல்லதா,
கெட்டதானு நீங்களே முடிவு பண்ணிக்கோங்க ஆமா சொல்லிப்புட்டேன்.
எனக்கு கீழ ஆயிரக்கணக்கான முகவர்கள் சேவைசெய்றாங்க…
என்ன சேவை? நிதிச்சேவை தான்… அவங்க மொழில சொல்லனும்னா தரகுவேலை பார்க்குறாங்க… சரி
நான் சமீபத்தில் நடந்த ஒரு சம்பவத்தை சொல்றேன்…
(தொடரும்)
No comments:
Post a Comment