Monday, May 29, 2023

பணம் பேசுறேன் (2) :

 

ஒரு விதத்துல என்னை சமத்துவமானவரா நீங்கக் கருதலாம். ஏன்னா நான், சாதி, மதம், இன வேறுபாடுகளை பார்க்குறதில்ல… ஒரு ரூபாயாக நான் ஏழையிடமும் இருப்பேன், பணக்காரனிடமும் இருப்பேன். யாருகிட்டேயும் குறிப்பா எனக்கு ஒட்டும் இல்ல, ஒறவும் இல்ல. கடவுளுக்கு பூசை செய்யும் பிராமண பூசாரி வைச்சிருக்கிற தட்சணை தட்டில் உள்ள பணம் நேற்று மீன் விற்கிறவர் போட்டதுனு தெரிஞ்சா, அய்யோ தீட்டாய்டுச்சுனு அதை அவர் குப்பைத்தொட்டியில போடப் போறாரா என்ன, இந்துத்துவவெறி  புடிச்ச சங்கி கையிலிருக்கும் பணம் நேற்று இஸ்லாமியரிடமும், அதற்கு முன்னர் சீக்கியரிடமிருந்து தான் வந்தது என்று தெரிஞ்சா அதைப் பயன்படுத்தாமல் தூக்கிவீசப்போறாரா என்ன. நான் சவால் விடுறேன் என் இருப்பை வைத்து என் பிறப்பையோ, நான் கடந்து வந்த பாதையையோ, நான் தங்கியிருந்த நபர்களையோ, நான் போக இருக்கும் பயணத்தைப் பற்றியோ ஒரு போதும் உங்களால் கணிக்கவேமுடியாது.

சரி அது இருக்கட்டும். அடுத்த சவாலுக்குத் தயாரா, நான் மணியோட சட்டைப்பையில் இருக்கிறேன்னு சொன்னேனே. அதை வைச்சு மணி எப்படி என்னை சம்பாதிச்சாரு, அவர் என்ன வேலைசெய்றாரு, அவர் ஒரு வணிகரா, தையல்காரரா, பேராசிரியரா, பாயா விற்பவரா இல்ல மாதாக்கோவிலில் மணியடிப்பவரா, இல்ல கோயில் பூசாரியா இல்ல, சாராயக்கடை நடத்துபவரா, உழைப்பில் ஈடுபடுபவரா இல்லை உழைப்பைச் சுரண்டுபவரா, இல்லை மணி ஒரு திருட்டுப்பயலா என்னைக், கொள்ளையடிச்சாரா, ஒருவேளை கொள்ளையடிச்சாருனா அதை சட்டப்பூர்வமாக அடிச்சாரா, சட்டத்துக்குப் புறம்பாகவா என்பத உங்களால கண்டுபிடிக்கமுடியுமா. என் முன் சட்டம் எல்லாம் தூசின்னு சொல்றீங்களா, அதுவும் உண்மைதான். நான் சாதி மத, பால், இன வேறுபாடுகளை களைபவராக, உழைப்பு, தொழில் வேறுபாடுகளை களைபவராக இருக்கிறேன்கிறது இப்போ தெரியுதா, இதை உங்களால் மறுக்கமுடியுமா, ஆனால் என்னா மாதிரியான சமத்துவம் இது, இணக்கமான முரணில்லாத சமத்துவமா, கிடையவே கிடையாது, பலவந்தமான வன்முறையால் கொண்டுவரப்பட்ட சமத்துவம், உண்மையா சொன்னா வன்முறையின் அடிப்படையிலான முரணுள்ள, பெயரளவிலான சமத்துவம், ஏன், எப்படி என்பது எல்லாம் போகப் போகத் தெரியும். …

பசுத்தோல் போர்த்தியப் புலி தான் நான். சமத்துவமின்மைகள், சமூக ஏற்றத்தாழ்வுகளுக்கு திரைபோட்டு சமத்துவத்தைப் போன்றத் தோற்றத்தை உருவாக்குவதும் நான் தான் என்பதை நீங்க கவனிச்சிருக்கீங்களா. பல சமூக முரண்பாடுகளை வெளித்தெரியாமல் மூடிமறைக்கும் முகமூடியா இருக்கேன், உழைப்புச்சுரண்டலை வெளித்தெரியாமல் தொடரச்செய்யும் போர்வையா இருக்கேன். மூலதன அவதாரத்தில் தொழிலாளர்களை வேட்டையாடும் வேட்டைக்காரனும் நானே தான்…

வில்லாதி வில்லனான நான் தான் முதலாளித்துவத்தின் கதாநாயகன். எப்படி கதாநாயகனானேன். ஒரு கோணத்தில் பார்த்தால் நான் தான் கதாநாயகன், இன்னொருக் கோணத்தில் பார்த்தால் நான் தான் வில்லன். அது நீங்க எந்தக் கோணத்தில் என்னைப் பார்க்கிறீங்கங்கறதப் பொருத்திருக்கு. இந்தப் புது உலகத்துல கடவுளே நான் தான்.

ஆனாலும் என்னால் நான் நிரந்தரமானவன் அழிவதில்லை, எந்த நிலையிலும் எனக்கு மரணமில்லை என்று கண்ணதாசனைப் போலப் பாடமுடியாது, ஏன்னா நான் நிரந்தரமானவன் கிடையாது. எனக்கு ஒரு பிறப்பும் உண்டு, அதனால இறப்பும் உண்டு. நான் நல்லவனா, கெட்டவனா, நான் உங்களோட நண்பனா, பகைவனா, என்னப் பத்தி என்ன நினைக்கிறீங்க. ஹும் சொல்லுங்க.. நண்பனாக நினைத்தால் என்னைப் புரிந்துகொள்ளுங்கள், எதிரியாக நினைத்தால் என் பலத்தைத் தெரிந்துகொள்ளுங்கள். என்னைப் புரிந்துகொள்ளாமல், என் பலத்தைத் தெரிந்துகொள்ளாமல் என்னை அழிக்கநினைத்தால் ஒம் பருப்பு வேகாது கண்ணு, அது நடக்கவே நடக்காது. ஆப்பு உங்களுக்குத்தான், எனக்கில்லை. நான் ஒவ்வொரு கணமும் புதிதாய் பிறக்கிறேன்.

(தொடரும்)

 

 

No comments:

Post a Comment

பொம்மைகளின் புரட்சி (123)

  காலையில எல்லாருமே லேட்டா தான் எந்திரிச்சாங்க… இன்னிக்கு தாத்தா தான் பழக்கடைக்கு போகனும், அதுனால யம்மு பாட்டிக்கு உதவி பண்ணிக்கிட்டே   தாத்...