Tuesday, May 30, 2023

சூதாடும் காட்டேரி (2)

 


என்னோட மிகச் சிறந்த கொள்கை பரப்புச் செயலாளர், அதான் என் முகவர் ஒருத்தர் இருக்கார். அவரை எல்லாரும் தேவன், தேவன்னு கூப்பிடுவாங்க, ரொம்பத் தங்கமான மனுசன். அவர் பங்குச்சந்தை தரகரா பெருஞ்சேவை பண்ணிக்கிட்டு வர்றாரு. காலையில எழுந்ததும், திருவாசகம் ஓதுவாரு, கந்தசஷ்டி கவசம், பஜனை பாடுவாரு, வெள்ளிக்கிழமை கோயிலுக்கும் போவார், மசூதிக்கும் போவார். ஞாயிற்றுக்கிழமையானா சர்ச்சு ஜெபக்கூட்டத்துக்கும் போவார், ஒரு கடவுள் பாக்கியில்ல, எம்மதமும் சம்மதம் அவருக்கு… கடவுளுக்கு வாயிருந்தா டேய் போதுண்டா, படவா ஒன் சோலியைப் போய்ப் பாருடானு சொல்ற வர்றைக்கும் சாமியைக் கும்பிட்டுக்கிட்டே இருப்பாருனா பாத்துக்கோங்க, தம்பி வெள்ளை வேட்டி, வெள்ளை சட்டை தான் போடுவாப்ள, சமத்துவப்புறா, நெத்தியில விபூதிஅடிச்சு குங்குமப்பொட்டு வெச்சுருப்பாரு, சிலுவையும் போட்டிருப்பாரு… ஆனா குல்லா அவர் போட்டுக்கமாட்டார், அடுத்தவங்களுக்குத் தான் போடுவாரு, அதோட பட்ட நாமமும் சாத்துவாரு, எப்டினு கேக்கிறீங்களா ஹும் சொல்றேன், அதுக்கு முன்னாடி அவரை நான் ஏன் என்னோட சிறந்த கொ.ப.செவா கருதுறேங்கறதையும் சொல்லிப்புடறேன். ஆனா ஒன்னு தேவன் உண்மையிலே பக்திப்பழமா இல்ல ஆள் புடிக்க ஆக்ட் கொடுக்குறாருன்னு எனக்கே புரியமாட்டிங்குதே…

தேவன் ஒரு யூடியூப் சேனல் வெச்சிருக்கார், தமிழ்நாட்டிலே அதிக சப்ஸ்கிரைபர் அவருக்குத்தான் 1 கோடி சப்ஸ்கிரைபர், நாங்க தொலைக்காட்சி சேனலும் வெச்சுருக்கோம்ல அதப்பத்தி அப்புறம் சொல்றேன்…

இப்பொ தம்பி தேவன் எப்படி கொள்கை பரப்பும் சேவை செய்றார்ங்கிறதுக்கு, ஒரு மாதிரி/சாம்பிள் தர்றேன்…

நண்பர்களே, இந்த உலகத்தில அதிக ஜனநாயகமுள்ள இடம் பங்குச்சந்தை தான்… பங்குச்சந்தை உலகத்த ஜனநாயகப்படுத்துன மாதிரி வேற எதுவுமே ஜனநாயகப்படுத்தல, பங்குச்சந்தையின் மூலம் ஒரு நிறுவனத்தில் யார் வேண்டுமானாலும் பங்குதாரராக ஆகலாம். பங்குதாரராக நீங்கள் கோடிஸ்வரராகவோ, பெரும் பணக்காரராகவோ இருக்கவேண்டிய அவசியமேயில்லை.  கோடித்துணி இல்லாட்டாலும் கூட நீங்க பங்குதாரராகலாம், கோடீஸ்வரராகவும் ஆகலாம்… உலகத்தோட செல்வத்த ஒருத்தருக்கு ஒருத்தர் பகிர்ந்துக்கிறதுக்குத் தான் பங்குச்சந்தையை ஆண்டவன் அனுப்பி வெச்சுருக்கான். உண்மையில பங்குச்சந்தை தான் ஏழைங்கள கோடீஸ்வரராக்கியிருக்கு, ஏழைங்கள மாடி வீட்ல வாழவெச்சுருக்கு… உங்கள் பாக்கெட்டில்/வங்கிக் கணக்கில் ஒரு நூறு ரூபாயோ இல்ல பத்தோ, அம்பதோ, பணம் இருந்தால் போதுங்க. அதவெச்சுக் கொஞ்ச கொஞ்சமா கோடீஸ்வரராகிடலாம். வெறும் பத்து ரூபாயில ஒரு புதிய இடத்துலேயோ, நிலத்துலேயோ, வீட்டிலேயோ, நிறுவனத்துலயோ உரிமை கொண்டாடமுடியுமா, கனவுல கூட அத நெனச்சுப் பாக்கமுடியாது தானா, ஆனா அத இந்த உலகத்துல ஒரே ஒரு இடத்தில மட்டும் தான் சாதிக்கமுடியும் அதுதான் பங்குச்சந்தை, பங்குச்சந்தையத் தவிர வேற எங்கயுமே அது முடியாது. ஏழை, பணக்காரன் வித்தியாசம் இல்லாம, சாதி, மத வேறுபாடு இல்லாம, ஆண், பெண் பாலின பேதம் இல்லாம அனைவரும் சரிசமமா சமத்துவமா பார்க்கப்படற, நடத்தப்படற ஒரே இடம் பங்குச்சந்தை தான்… சாதி, மத இனப் பாகுபாடில்லாமல் அனைவருக்கும் வாய்ப்புகளை அளவில்லாம அள்ளித்தந்துக்கிட்டிருக்கு பங்குச்சந்தை… அதனால இந்த அரிய வாய்ப்ப தவறவிடாதிங்க…  உங்களுக்குத் தெரியுமா, பங்குச்சந்தையில தான் படுத்துக்கிட்டே பணக்காரரா ஆகமுடியும்… ஆமாம் இது  நிஜம் தான் நீங்க தூங்கிக்கிட்டிருக்கும் போதும் கூட உங்கப் பணம் உங்களுக்காக வேலை பாத்துக்கிட்டேயிருக்கும், குட்டிபோட்டுக்கிட்டே இருக்கும்… ஆனா அதுக்கு முதல்ல என்ன பண்ணனும்….கவலைய விடுங்க, அந்த நிதிச்சேவை செய்யத்தான் நான் இருக்குறேன்… படுத்துக்கிட்டே பணக்காரராகிறது எப்படிங்கற வித்தையை நான் உங்களுக்குக் கத்துத் தர்றேன் வாங்க... இந்த வாய்ப்பைத்தவற விட்டிறாதிங்க அப்புறம் பின்னாடி ரொம்ப ஃபீல் பண்ணுவீங்க… உடனே இந்த எண்ணுக்கு அழைங்க…

ஒரு குழந்த பொறந்த அடுத்த நொடிலேயே அதற்கான நிதித்திட்டமிடலை ஆரம்பிச்சுடனும், ஒரு நொடி தாமதமானா கூட வாய்ப்பு அங்க இழக்கப்படுது. இது போன்ற நூத்துக்கு நூறு உண்மையான பல அரிய தகவல்களை தேவன் தம்பி பகிர்ந்துருக்காரு…

இதையெல்லாம் கேட்டு உணர்ச்சிவசப்பட்ட வருத்தப்படாத வாலிப சங்கத்த சேர்ந்த அடைக்கலம் என்கிற பையன் தேவன் அய்யாவுக்கு ஃபோனை போட்டாரு. தேவன் எடுக்கல, ஒரு தேவி தான் எடுத்தாங்க… தான் நிதித்திட்டமிடல தொடங்கப் போரதாகவும், அதுக்கு தேவன் அய்யாவோட ஆலோசனையும் ஆசிர்வாதமும் வேணும்னான் பையன். அப்டினா நேருல வாங்கலேன்னு அலுவலக முகவரி கொடுத்தாங்க அந்த தேவி.

(தொடரும்)

No comments:

Post a Comment

பொம்மைகளின் புரட்சி (123)

  காலையில எல்லாருமே லேட்டா தான் எந்திரிச்சாங்க… இன்னிக்கு தாத்தா தான் பழக்கடைக்கு போகனும், அதுனால யம்மு பாட்டிக்கு உதவி பண்ணிக்கிட்டே   தாத்...