Wednesday, May 24, 2023

பணம் பேசுறேன் (1)

 


எல்லோருக்கும் வணக்கம், எப்படி இருக்கீங்க. நான் தான் மணியோட சட்டைப் பையில இருக்குறப் பணம் பேசுறேன். பேரைக் கேட்டாலே சும்மா அதிருதுல்ல, என்ன திகைச்சுப் போயிட்டீங்க. அப்டீனா, உங்களுக்கு என்னோட சக்தி தெரியல போல, சரி தெரியவைக்கிறேன்… சட்டைப் பையில இருக்குறதால நான் வெறும் 10ரூபாயாவோ, 100 ரூபாயாவோ தான் இருப்பேன்னு ரொம்ப கம்மியா எடை போட்டுடாதிங்க.   பன்னிங்க தான் கூட்டமா வரும், சிங்கம் எப்பவுமே சிங்குளா தான் வரும்… ஹே ஹே இந்தப் பணம் ஒரு நோட்டா இருந்தாலும் நூறு வாட்டி சுத்துனா, நூறு நோட்டுக்கு சமம்…

நான் மணியோட சட்டப்பையில இருக்குற மொபைல் வேலட்டுல உள்ள டிஜிட்டல் பணமாக் கூட இருக்கலாம் இல்லயா, இதெப்டி இருக்கு… அதனால அவசரப்பட்டு என்னைப் பற்றி சரியா தெரிஞ்சுக்காமா குறைச்சு மதிப்பிட்டுறாதிங்க. நிதானமா என்னைப் பத்தி நெனச்சுப் பாருங்க… சரி, அப்படியே அளவு அடிப்படையில நீங்க என்னைக் குறைச்சு மதிப்பிட்டாலும் பண்பு அடிப்படையில என்னப் பத்தி யோசிச்சுப் பாருங்க. அது முடிவிலாத முடிவிலி... என்னால சாதிக்கமுடியாதது இந்த உலகத்துல எதுவுமே கிடையாது. என்னால உங்களைக்கூட விலைக்கு வாங்க முடியும், ஏன் இந்த பூமியையே விலைக்கு வங்கமுடியும். நான் ஏழையைப் பணக்காரனாக்குவேன், பணக்காரனை ஏழையா ஆக்குவேன், இழிவானதையும் புனிதப்படுத்துவேன், புனிதமானதையும் விலைக்கு வாங்குவேன், இந்த உலகில் பட்டம், பதவி, புகழ், அறிவு, உயர்வாக, புனிதமானதாகக் கருதப்படற தாய்மை, நேசம், பாச பந்தம், காதலையும், சுருக்கமா சொன்னா எல்லா மனித உறவுகளையும், மனித உணர்வுகளையும் என்னால, என்னால மட்டும் தான் விலைக்கு வாங்கமுடியும்.

கண்ணு, உனக்கு உள்ளே உள்ள கல்வி, அறிவு, ஆற்றல், தேர்ச்சி, தொழில் வல்லமை, பண்புநலன் இதுக்கெல்லாம் இந்த சமுதாயத்தில மதிப்பு இருக்கா, இல்லையா என்பதை உனக்கு வெளியே இருக்கிற பணமாகிய -நான் தான்- என் இருப்பும், இல்லாமையும் தான் தீர்மானிக்குது. நான் தான் உங்களின் சமூக அந்தஸ்தையும் ,சமூக உறவுகளையும் நிர்ணயிக்கிறேன்னு தெரியுமா உங்களுக்கு. என்னைக் கொண்டிருப்பது உங்களுக்கு வேண்டுமானால் பெருமையாக இருக்கலாம், அதனால் எனக்கு எந்தப் பெருமையும் இல்லை. நான் எதனுடனும் ஒட்டிக்கொள்வதில்லை. என்னடா இவ்ளோ திமிராப் பேசுறேன்னு பாக்குறீங்கலா. அது பிறப்பிலேயே வந்தது, பிறவிகுணத்தை மாத்தமுடியாது பாருங்க. நான் இவ்ளோ தூரம் இறங்கிவந்து உங்கக்கிட்டப் பேசுறதே பெரிய விசயம்னு நெனச்சுக்குங்க. நான் ரத்தக்கறையோட தான் பிறந்தேன், வளர்ந்தேன். சரி, எல்லோரும் எப்படி இருக்கீங்கனு கேட்டதுக்கு பதிலையே காணோம். நான் உங்கக் கைவசம் இருந்தா நல்லா தான் இருப்பீங்க. இல்லினா ரொம்ப மோசமான நிலையில இருப்பீங்க… என்ன, ஒத்துக்குறீங்களா.

அது சரி இங்கு நான் யாராகப் பேசுறேன்னு என்னைப் பத்தி நீங்க நினைச்சுக்கிட்டு இருக்கீங்க? மணி என்பவரின் உடைமையாகவா, ரூபாய் நோட்டாகவா, அப்ப என்ன இந்தியாவின் குடிமகனாக, பிரதிநிதியாகப் பேசுறேன்னு நினைக்கிறீங்களா, இல்லவே இல்லை, நான் பண உலகின் பிரதிநிதியாக, மூலதனத்தின் உயிரணுவாக, சரக்குலகை ஆட்டிப்படைப்பவனாக, உங்களோடு பேசுறேன். ரூபாய், யெண், பெசோ, யுவான், டாலர் என்று எங்களுக்குள் பல வேறுபாடுகள், உயர்வு, தாழ்வு, ஏற்ற, இறக்கங்கள், ஏற்றத்தாழ்வுகள் இருக்கலாம், ஆனால் அடிப்படையில் நாங்கள் ஒரே பண்புநலன்களைத் தான் கொண்டிருக்கிறோம். அதனால் எங்களை பாசபந்தமுள்ள சகோதர சகோதரிகளாக குறுக்கிவிட முடியாதுங்கோ. போட்டி, பொறாமை பொங்குற பங்காளிகள் நாங்க.

(தொடரும்)

 

No comments:

Post a Comment

பொம்மைகளின் புரட்சி (123)

  காலையில எல்லாருமே லேட்டா தான் எந்திரிச்சாங்க… இன்னிக்கு தாத்தா தான் பழக்கடைக்கு போகனும், அதுனால யம்மு பாட்டிக்கு உதவி பண்ணிக்கிட்டே   தாத்...