Thursday, December 18, 2025

எது சரக்கு? (1)

 


சரக்குண்ணு சொன்னவுடனே பலருக்கும் பல விசயம் நினைவுக்கு வரும். சரக்குப் பொருட்களை அதிக அளவுல ஏத்திப் போகுற சரக்கு வண்டி, லோடு வண்டி, சரக்குக் கப்பல், சரக்கு ரயில், இதெல்லாம் நினைவுக்கு வரும். மதுப் பிரியர்களுக்கு நாட்டுச் சரக்கு, சீமை சரக்கு நினைவுக்கு வரும். நம்ம புரட்சித் தலைவர் கார்ல் மார்க்ஸோட மூலதனம் நூலை படிச்சவுங்களுக்கு சரக்குண்ணு சொன்னவுடனே மூலதனத்தின் முதல் அத்தியாயம் தான் நினைவுக்கு வரும். சரக்கு தான் முதலாளித்துவத்தின் உயிரணுண்ணு அவுங்களுக்குத் தெரிஞ்சுருக்கும்.

சரக்கு என்ற சொல் மதிப்பு, அறிவு போன்ற பல அர்த்தத்துல பயன்படுத்தப்படுது. கதையில சரக்கே இல்ல, மூளையில சரக்கே இல்லண்ணு சொல்லுறத எல்லாம் கேள்விப்பட்டுருப்போம். சரி இப்ப விசயத்துக்கு வருவோம்.

அரசியல் பொருளாதாரத்துல சரக்குண்ணா என்ன? உலகத்துல எக்கச்சக்கமான பொருட்கள், பண்டங்கள் இருக்கு, அவை எல்லாத்தையும் சரக்குண்ணு சொல்லமுடியுமா? முடியாதே. விற்பனைக்குரிய பொருளை மட்டும் தான் சரக்குண்ணு சொல்லமுடியும். அந்த  பொருளை கடையில வெச்சு வித்தாலும் சரி, கூடையில வெச்சு வித்தாலும் சரி, வீட்டுல வெச்சு வித்தாலும் சரி, தனிப்பட்ட முறையில ஒரு நபர் இன்னொரு நபருக்கு வித்தாலும் சரி, விற்பனைக்குரிய பொருட்கள் எல்லாமே சரக்குகள் தான். காட்டுல வெளையுற பண்டத்தை சரக்குண்ணு சொல்லமுடியுமா? முடியாதே. ஆனா அந்த காட்டுல வெளையுற பண்டத்தையே சந்தையில வித்தா அப்போ அது கடைச் சரக்கா மாறிடுதுல்ல.

எது சரக்கு? எது சரக்கு இல்லைணு கொஞ்சம் வெவரமாத் தான் சொன்னா என்னப்பா? கத்தரிக்காய் முத்துனா  சந்தைக்கு வந்து தானே ஆகனும்ணு சொல்லுவாங்க. ஆனா எல்லா கத்திரிக்காயும் சந்தைக்கு வரவேண்டியது இல்ல. ஒங்களுக்குத் தேவையானதை நீங்க சமைக்குறதுக்கு எடுத்து வெச்சுக்கலாம். ஒங்க வீட்டுல காய்ச்ச கத்திரிக்காய்க்கும், சந்தையில விக்கிற கத்திரிக்காய்க்கும் என்ன வித்தியாசம், அதோட நிறம், மணம், சுவையில உள்ள வித்தியாசத்துக்கும் கூடுதலா முக்கியமான ஒரு வித்தியாசம் இருக்கே. சந்தையில விக்கிற கத்திரிக்காயைக் காசு கொடுத்து தான் வாங்கமுடியும். ஏன் இப்ப ஜிபே பண்ணி வாங்கலாமேண்ணு மொக்கையப் போடாதிங்க. நீங்க ஜிபே பண்ணும் போது கையால காசு கொடுக்கலைணாலும், பணம் கடைக்காரர் அக்கவுண்ட்டுக்கு போகுதுல்ல. ஆனா உங்க வீட்டுல உள்ள கத்திரிச் செடி காசு வாங்கிக்கிட்டு ஒங்களுக்குத் கத்திரிக்காயை விக்கல. நீங்க அதை இயற்கையின் பரிசா, தோட்டத்தின் பரிசா முதலாளித்துவ வார்த்தையில சொல்லனும்னா இனாமா, இலவசமா தான் எடுத்துக்கிட்டீங்க. அந்த கத்திரிக்காயை நீங்க இன்னொருத்தருக்கு காசுக்கு விக்கும் போது அது சரக்கா மாறிடுது.

 அப்பா அன்போட சுட்டுத் தந்த வெங்காய தோசை சரக்கா இருக்குறது இல்ல. ஆனா வெங்காய தோசையை நீங்க கையேந்திபவன்லயோ, ஃபைவ் ஸ்டார் ஹோட்டல்லயோ காசு கொடுத்து சாப்பிடும் போது அது சரக்கா தான் இருக்கு. அப்போ காசு கொடுத்து வாங்கவேண்டியப் பொருட்களை எல்லாம் சரக்குண்ணு சொல்லலாமா? நிச்சயமா சொல்லலாம். அது மட்டும் இல்லாம காசுக்கு பதிலா பொருளையோ பண்டத்தையோ கொடுத்து பண்டமாற்று மூலமா வாங்கக்கூடிய பொருட்களும் சரக்குகளா தான் இருக்கு. காசோ, பணமோ மூஞ்சியக் காட்டாத பழங்காலத்து பண்டமாற்று சந்தைகள்ல விக்கப்படுற பொருட்களும் சரக்குகள் தான். விலையை பணத்துல கொடுத்தாலும் சரி, பண்டத்துல கொடுத்தாலும் சரி, மொத்தத்துல விலை கொடுத்து வாங்கவேண்டிய பொருட்கள் எல்லாமே சரக்குகள் தான், அவற்றையெல்லாம் வீட்டுல செஞ்சாலும் சரி, காட்டுல விளைவிச்சாலும் சரி, தொழிற்சாலையில உற்பத்தி பண்ணாலும் சரி அவை விலை வெச்சு விக்கப்படுற பொருட்களாகும் போது அவை எல்லாமே சரக்குகளா மாறிடுது.

நீங்க நெல் சாகுபடி பண்ணதுல ஒங்களுக்கு 8 மூட்டை நெல் கெடைக்குது, அதுல ஒரு மூட்டைய வீட்டுக்கு வெச்சுக்கிட்டு மிச்சம் 7 மூட்டைய சந்தையில வித்துடுறீங்க, வீட்டுல வெச்சுருக்க நெல், சந்தையில வித்த நெல்லு ரெண்டுமே தினசரி சாப்பாட்டுக்கு ஆகும். ரெண்டுமே உணவாப் பயன்பட்டு, சத்து கொடுக்கும் என்ற விதத்துல பயனுடையவையா, மதிப்புவாய்ந்தவையா இருக்கு. இதைத் தான் பயன் மதிப்பு (use value) ண்ணு சொல்றோம். வீட்டுல வெச்சிருக்குற நெல், சந்தையில வித்த நெல் ரெண்டுக்குமே பயன்மதிப்பு இருக்கு. ஆனா வீட்டுல வெச்சிருக்குற நெல்லை நீங்க விக்காததால அதுக்கு விலை இல்ல, சந்தை மதிப்பு அல்லது பரிவர்த்தனை மதிப்பைத் தான் விலைணு சொல்றோம். வீட்டுல வெச்சிருக்குற நெல்லுக்கு சந்தை மதிப்பு இல்லை. அதுனால அது சரக்கும் இல்லை. ஆனா சந்தையில நெல்லை விலைக்கு விக்கும் போது அது சந்தை மதிப்பு உள்ள சரக்காக மாறிடுது.

சரி, ஒங்க நண்பர் ஒங்களுக்கு ஒரு பிறந்த நாள் பரிசு கொடுக்குறாரு, அவர் அதை காசு கொடுத்து கடையில தான் வாங்கிருக்காரு ஆனா அதை உங்களுக்கு -காசு வாங்காம- பரிசா கொடுக்குறாரு. ஒங்க நண்பர் வாங்குன கடைச் சரக்கு பரிசாகும் போது சரக்குத் தன்மைய இழந்துடுது. ஒங்களோட சட்டை ஒங்க நண்பருக்குப் புடிச்சிருக்கு, ஒங்க நண்பர் போட்ட சட்டை ஒங்களுக்கு புடிச்சிருக்கு, ரெண்டு பேரும் சட்டைய மாத்திப் போட்டுக்குறிங்க, இங்க பணமும் மூஞ்சிய காட்டல, நட்புல பரிமாற்றப்பட்ட சட்டைகளோட மதிப்பு சமமா என்ற கேள்விக்கே இடம் இல்லை. அதுனால இங்க நடந்தது பரிசுப் பரிமாற்றம் தான்.

என் ஃப்ரெண்டைப் போல யாரு மச்சான்னு நீங்க பாடும் போது, உங்களுக்குள்ள பாசப்பிணைப்புகள் வலுவா இருக்கும் போது உங்களுக்கு இடையில சந்தைச் சக்திகள் நுழையவே முடியாதுங்க. காதல், குடும்ப உறவுகள்லயும் அப்புடித்தான் பாசப்பிணைப்புகள் வலுவா இருக்கும் போது சந்தைச் சக்திகள் அவ்வளவு எளிதா நுழையவே முடியாதுங்க. இந்த பாச பந்தத்தை சமூகத்துக்கும் விரிவுப்படுத்துவோம், சமூகத்தோட உற்பத்தி உறவுகள் நட்பால், பாச நேசத்தால் அமையும் போது சந்தைசக்திகள் செத்துப் போயிடும். சமூகமே ஒரு பெரிய குடும்பமாயிடும், அது தாங்க கம்யூனிசம்.

இந்த முதலாளித்துவ சந்தை பாச உறவுகளையும், வர்த்தக உறவுகளாக் குறுக்கப் பாக்குது. அதுக்கு நாம அனுமதிக்கவேக் கூடாது. அதுனால தான் நட்பு, காதலுக்குள்ள விலை, லாபம், வட்டி, ஆதாயம் போன்ற சந்தை வார்த்தைகளைப் பயன்படுத்துறதைத் தவிர்க்கனும்னு சொல்றேன்…. நீங்க ஒங்க காதலியப் பாத்து என்ன விலை அழகேண்ணு பாடுனீங்கன்னா அவுங்களோட அழகு முகம் வாடிப் போயிடும். இந்த புன்னகை என்ன விலைணு பாடுனீங்கன்னா அவங்களோட அறிவு முகம் புண்படும், ஒத்தரூபா தாறேன்னு பாடுனீங்கன்னா அவுங்க பத்ரகாளியா மாறிடுவாங்க. அதுனால காதலுக்குள்ள சந்தை சக்திகளை வரவிடாம மார்க்கெட்டை வெளியிலயே பார்க் பண்ணிருங்க. ஒரு வர்ணனைக்காகக் கூட காதலியையோ காதலையோ சரக்காக்கி கேவலப்படுத்தாமப் பாத்துக்கோங்க.

(தொடரும்)

 

 


No comments:

Post a Comment

பொம்மைகளின் புரட்சி (124)

  யம்மு பாட்டி: இன்னைக்கு மதியம் என்ன சாப்புடலாம்னு சொல்லுங்க புள்ளைங்களா… பிம்பா: ஏதாச்சும் பண்ணுங்க பாட்டி, எங்களுக்கு வேலை கெடக்கு, பெர...