Friday, December 19, 2025

மக்கள் மொழி பாடிய புரட்சிக் கவிஞர் பாரதி

 


எதையுமே கறுப்பு, வெள்ளையாக மட்டுமே பார்ப்பது, இயங்கியலுக்கு முற்றிலும் புறம்பான இயக்க மறுப்பியல் அனுகுமுறை (metaphysical approach). இதைத் தான் பேச்சுத் தமிழில் வெச்சா குடுமி சிரைச்சா மொட்டைனு சொல்வாங்க, ஒரு நபரை அவரது சமூக பின்புலத்திலிருந்தும், அவர் வாழ்ந்த காலத்திலிருந்தும் பிரித்து விமர்சனம் செய்வதும் மார்க்சிய அனுகுமுறைக்குப் புறம்பானது.

கம்ப்யூட்டர்களுக்கு இரும மொழி மட்டும் தான் புரியும். நாம என்ன கம்ப்யூட்டர்களா? மனுசங்களாச்சே, அப்புறம் ஏன் நாமும் கம்ப்யூட்டர்களைப் போல இரும மொழிக்கான தர்க்கத்தையே (binary logic) விடாப்புடியா புடிச்சிருக்கனும். கம்ப்யூட்டர்களோட இரும மொழியில 0, 1 மட்டும் தான் வரும். ஆனா 0-வுக்கும் 1-க்கும் இடையில எக்கச்சக்கமான எண்கள் இருக்கே. 1ஐ 100 சதவீதமாக அடையாளப்படுத்துனா கூட 0வுக்கும் 1க்கும் இடையில் குறைந்தபட்சம் 99 நிலைகள் இருக்கே. பிறகு ஏன் சாத்தியப்பாடுகளை 0, 1 என குறுக்கனும். அது எதார்த்தத்தை புரிந்துகொள்வதற்கு உதவல, தடையாகதான் இருக்கு. எதார்த்தத்துல எதுவுமே நிலையா இல்ல, எல்லாமே இயக்கத்துல இருக்கு, மாற்றத்துல இருக்கு. எந்த ஒரு பொருளையும், நிகழ்வையும் நிலையானதாகப் பார்ப்பது என்பது அறிவியலுக்கு முரணானது. இரு காலகட்டத்திற்கு இடையில் நடைபெறும் நிகழ்வுகளை நிலைமாறாததாகப் பார்க்காமல் நிலைமாற்றங்களாகப் பார்ப்பது தான் அறிவியல் அடிப்படையிலான இயங்கியல் அனுகுமுறை. இது இயற்கையில உயிரினங்களோட பரிணாம வளர்ச்சி, சமூகத்தின் வரலாற்று வளர்ச்சி, தனிமனிதர்களின் வளர்ச்சி இவை அனைத்திற்குமே பொருந்தும். இவற்றை இயங்கியல் அடிப்படையில பார்த்தா தான் சரியாக புரிஞ்சுக்கமுடியும். இல்லைணா அது தவறான புரிதலுக்குத் தான் வழிவகுக்கும்.

மொதல்ல இயற்கைப் பரிணாமத்தை எடுத்துக்குவோம், பிளாட்டிபஸ் என ஒரு விலங்கு கேள்விப் பட்டுருக்கீங்களா, அது முட்டையிடும், ஆனா குஞ்சுகளுக்கு பாலூட்டும்.  பரிணாம வளர்ச்சி நிலையில அது ஊர்வன வகை விலங்குகளுக்கும் பாலூட்டிகளுக்கு இடைப்பட்ட நிலையில வாழும் விலங்கு.

அடுத்தது சமூக வரலாற்றுக்கு வருவோம், சீனாவை பலபேர் முதலாளித்துவ நாடுன்னு சொல்றாங்க. இன்னும் பலபேர் கம்யூனிச நாடுன்னு சொல்றாங்க. ஆனா உண்மையில சீனா என்னவா இருக்கு. முதலாளித்துவத்துக்கும், கம்யூனிசத்துக்கும் இடைப்பட்ட நிலையில் உள்ள நாடா இருக்கு.

அடுத்தது தனிமனிதர்களுக்கு வருவோம். பலர் நாத்திகர்களாக இருக்காங்க, இன்னும் பலர் ஆத்திகர்களாக இருக்காங்க. சிலர் சில நேரங்களில் நாத்திகர்களாகவும் பல நேரங்களில் ஆத்திகர்களாகவும் இருக்காங்க. சிலர் சில நேரங்களில் ஆத்திகர்களாகவும் பல நேரங்களில் நாத்திகர்களாகவும் இருக்காங்க. இது ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் இருக்குற நிலை தான். காலமாற்றம் நிலை மாற்றத்தை ஏற்படுத்தலாம் நிலை மாற்றம் வளர்ச்சியாகவும் இருக்கலாம், பின்னடைவாகவும் இருக்கலாம். ஒரு பத்து வருசம் கழிச்சு பாக்கும் போதும் மேல சொன்னவங்க எல்லாரும் அப்படியேவா இருப்பாங்க, சிலர் மாறியிருக்கலாம், ஆத்திகர், நாத்திகர் ஆயிருக்கலாம், நாத்திகர், ஆத்திகர் ஆயிருக்கலாம். ஆத்திகர் நாத்திகராக மாறும் போது அது முற்போக்கான மாற்றமாக இருக்கும். நாத்திகர் ஆத்திகர் ஆகும் போது பிற்போக்கான மாற்றமாக இருக்கும். ஒருவரின் ஆழ்ந்த கடவுள் பக்தி என்பது அவரை முரணில்லாத அறிவியல் சார் அனுகுமுறையின் படி செயல்பட அனுமதிக்காது. ஆனாலும் கூட கடவுள் பக்தியுடன் அறிவியல் துறையில் வேலைபார்ப்பவர்கள் எத்தனையோ பேர் இருக்கத்தான் செய்கிறார்கள். இது சமூக அறிவியலுக்கும் பொருந்தும். கிறித்தவ சோசலிஸ்டுகளும், இஸ்லாமிய சோசலிஸ்டுகளும், அது போல இந்து சோசலிஸ்டுகளும் இருக்கத்தான் செய்கின்றனர். ஒரு மனிதர் பல பரிமாணங்களை உடையவராக இருக்கிறார். சில பரிமாணங்களில் பிற்போக்காக இருப்பவர், சில பரிமாணங்களில் முற்போக்காகவும் இருக்கலாம். தேசத்தந்தை என்று அழைக்கப்படுற காந்தியடிகள் ஆத்திகராக ராமராஜ்ஜியத்தை விரும்பும் பிற்போக்குவாதியாகவே இருந்தார். ஆனாலும் தீண்டாமை இல்லாதவாறு இந்து மதத்தை சீர்திருத்தவேண்டும் என்ற அவரது நிலைப்பாடு சனாதான நிலைப்பாட்டிற்கும், அம்பேத்கரின் சாதியொழிப்பு நிலைப்பாட்டிற்கும் இடைநிலையில் உள்ளது என்று பார்ப்பது தான் இயங்கியல் பார்வை. அவர் ஒன்றுபட்ட விடுதலைக்காகப் போராடும் சீர்திருத்தவாதியாக இருந்ததால் தான் ஆர்.எஸ்.எஸ் சங்கிகளால் கொல்லப்பட்டார். அதனால் தான் என்னவோ காந்தியை சங்கி என விமர்சிக்க யாரும் துணியவில்லை.

இப்போது பாரதிக்கு வருவோம். அவர் பரிசுக்காகத் தான் எழுதினார் என்றும், அவரை சங்கி என்றும் இழிவுபடுத்துவது அயோக்கியத்தனம். இந்து மதத்தில் ஆழ்ந்த நம்பிக்கையுடைய பக்தரான பாரதிக்கு அதைத் தாண்டி வேறு பரிமாணங்களே இல்லையா.  பறையருக்கும், இங்கு தீயர் புலையனுக்கும் விடுதலை என அவர் சமத்துவ சமுதாயத்தைத் தான் காணவிரும்பினார். ஃபிப்ரவரிப் புரட்சியைப் பாரதி போற்றினார். கம்யூனிசத்தை தமிழில் பொதுவுடைமை என முதன் முதலில் பாடியவர் பாரதி தான். அதற்கு முன் கம்யூனிசத்தை தமிழில் அபேதவாதம் என்று தான் கூறிவந்தனர். காக்கை, குருவி எங்கள் சாதி என அனைத்து உயிரிகளையும், இயற்கையையும் நேசித்தவர், பெண் விடுதலைக்கு குரல் கொடுத்தவர். இவற்றையெல்லாம் விட்டுவிட்டு அவரை வெறும் இந்துத்துவவாதியாக குறுக்குவது நியாயமல்ல. அவர் புரட்சிக்கவி பாடும் சீர்திருத்தவாதியாகவே இருந்தார். அவரில் முரண்பாடுகள் இருக்கலாம், ஆனால் வரலாற்றின் இடைக்காலத்தில் வாழ்பவர்கள் முரண்பாடுகளைக் கொண்டவர்களாகவே இருந்துள்ளனர்.

பாரதி ஏன் பெரியாராக இல்லை, பாரதி ஏன் அம்பேத்கராக இல்லை என கேள்வியெழுப்புவது அபத்தமானது. பாரதியை அவரது காலகட்டத்தில் அவரது சமூகப் பின்னணியில் வாழ்ந்த பிராமணர்களுடன் ஒப்பிடுவது தான் பொருத்தமாக இருக்கும். அவரது சமூகத்தைச் சார்ந்த பிராமணர்களுடன் ஒப்பிடும் போது பாரதி முற்போக்களாரே. அவரது காலத்தைச் சேர்ந்த பிராமணர்கள் என்ன செய்தார்கள். பாரதி முகமது நபியைப் புகழ்ந்து கவிபாடி அக்ரஹாரத்துக்குள் இஸ்லாமியரை நுழையவிட்டதற்காகவும், கழுதையைக் கொஞ்சியதற்காகவும் அவர் மீது வெறுப்பை உமிழ்ந்தனர். கனகலிங்கத்துக்கு பூனூல் அணுவித்ததற்காக அவர் மீது வெறுப்பை உமிழ்ந்தனர். ஜாதிபிரஷ்டம் செய்து பாரதியை அக்ரஹாரத்தை விட்டே துரத்தினர். அவர் சேரியில் வாழ இடம் கேட்டார். அவர் பார்ப்பன பாரதியாக இருந்திருந்தால் எதற்காக அவர் பிராமணர்களால் அக்ரஹாரத்தில் இருந்து விரட்டப்படவேண்டும்? தான் பார்ப்பனர் என்ற பிறப்பு நிலையை அவர் மறுத்ததால் தானே இது நடந்தது. அவர் வாழும் போது பிராமண சமூகம் அவரை பிராமணராக ஏற்றுக்கொள்ளவில்லை. அவர் 39 வயதில் அகால மரணமடைந்தார், அதுவும் இயற்கையானது அல்ல. அவர் நீண்ட ஆயுளுடன் வாழ்ந்திருந்தால் தனது முரண்களிலிருந்து அவர் நிச்சயமாக வெளிவந்திருப்பார். அவர் பிறப்பால் பார்ப்பனர் என்பதாலேயே இத்தகைய வாய்ப்பை எண்ணிப் பார்ப்பதற்கு கூட அவருக்குத் தர மறுப்பது நியாயமல்ல.

அக்டோபர் புரட்சி பற்றி பாரதி பாடியதை நாம் எப்படி புரிந்துகொள்வது. ஆரம்பத்தில் காந்தியிடமிருந்து பாரதி வேறுபட்டிருந்தாலும் இறுதியில் அவரும் கற்பனாவாத அஹிம்சா சோசலிசத்தையே வலியுறுத்துபவராக இருந்தார். ருஷ்யாவின் தலைசிறந்த எழுத்தாளர்களுள் ஒருவரான மக்சிம் கார்க்கி பல விசயங்களில் லெனினுடன் மாற்றுக் கருத்து கொண்டிருந்தார். அதற்காக மக்சிம் கார்க்கியை எதிர்ப் புரட்சியாளர் என யாரும் முத்திரை குத்தவில்லை என்பதையும் மறந்துவிடக் கூடாது.

இப்போது பாஜக ஏஜெண்டான அயோக்கிய கும்பல் அவரை கையகப்படுத்த முயற்சிக்கிறது. எப்படி வள்ளுவரை காவிமயப்படுத்த அனுமதிக்கமுடியாதோ, அதே போல் மக்கள் மொழியில் பாடிய புரட்சிக் கவிஞர் பாரதியையும் எதிரி முகாம் கையகப்படுத்த அனுமதிக்கவே முடியாது.

No comments:

Post a Comment

மக்கள் மொழி பாடிய புரட்சிக் கவிஞர் பாரதி

  எதையுமே கறுப்பு, வெள்ளையாக மட்டுமே பார்ப்பது, இயங்கியலுக்கு முற்றிலும் புறம்பான இயக்க மறுப்பியல் அனுகுமுறை (metaphysical approach). இதைத் ...