Sunday, December 14, 2025

பொம்மைகளின் புரட்சி (123)

 

காலையில எல்லாருமே லேட்டா தான் எந்திரிச்சாங்க… இன்னிக்கு தாத்தா தான் பழக்கடைக்கு போகனும், அதுனால யம்மு பாட்டிக்கு உதவி பண்ணிக்கிட்டே  தாத்தா வேக வேகமா கெளம்புனாரு…

பெப்போ: இன்னைக்கு லில்லி நம்மள பாக்க வரும் தான…

குக்கு: நானும் அப்புடித் தான் நெனைக்கிறேன்… ஒன்ன மாதிரி தான் நானும் லில்லிய ரொம்ப மிஸ் பண்ணுறேன்…

மஞ்சா: நேத்து லில்லி ஆட்டுக்குட்டி மதியத்துக்கு மேல தான வந்துச்சு… அதுவும் நீ ஆட்டுக்குட்டி மாதிரி கத்துனதுனால தான், இங்க வெளையாடுறதுக்கு ஆட்டுக் குட்டி இருக்குன்னு நெனைச்சுட்டு வந்து பாத்துச்சு… அதுனால இன்னைக்கும் மதியத்துக்கு மேல அதே மாதிரி கத்து…

பெப்போ: உம், கத்துறேன்… நம்ம திரும்பவும் ஒரு பறவைக் கூடு பன்னணும்… எப்புடி பண்ணலாம்…

பிம்பா: இந்த வாட்டி மரப்பெட்டியில பண்ணலாமா…

மஞ்சா: ஒனக்கு தச்சு வேலை செய்யத் தெரிஞ்சுருந்துச்சுண்ணா மரப்பெட்டியிலே பண்ணலாமே…

பிம்பா: எனக்கு தெரியாதுன்னு ஒனக்கு தெரியாதா, சரி அதை நாளைக்கு தாத்தா வீட்டுல இருக்குறப்போ பண்ண சொல்லிக் கேப்போம்….

பெப்போ: அப்டின்னா பறவைங்களுக்கு இரை கொடுக்குற மாதிரி வேற ஏதாவது பண்ணலாமா

பிம்பா: அதை தான் பெர்ட் ஃபீடர், இரை ஊட்டி-னு சொல்றாங்க…

மஞ்சா: அதை எப்புடி பண்ணுறது…

பிம்பா: நம்ம இஷ்டம் தான் எப்புடி வேணும்னாலும் பண்ணலாம், பிளாஸ்டிக் பாட்டில்ல கூட பண்ணலாம்… எப்புடின்னு சொல்லவா… பாட்டிலுக்கு உள்ள எதிரும் புதிருமா ஓட்டை போடனும் அதுல குருவிங்க ஒக்காந்து இருக்குறதுக்கு சின்ன சின்ன கிளை மாதிரி கம்புகளை சொருகனும்… அதுக்கு கொஞ்சம் மேல பறவைகள் இரையைக் கொத்தி சாப்புடுற மாதிரி ஓட்டை போடனும்… அப்புறம் பாட்டிலுக்கு உள்ள தானியங்கள், விதைகளை எல்லாம் போட்டு நெரப்பி அதை மூடி, பாட்டில் கழுத்துல கயித்தைக் கட்டி அதை மரத்துல தொங்க விடனும்… பெர்ட் ஃபீடர் ரெடி…

பெப்போ: ஆனா, இப்புடி செஞ்சா இரையெல்லாம் கீழ சிந்தி வீணாகுமே அதுக்கு என்ன பண்ணுறது…

பிம்பா: அப்டின்னா ஒரு தட்டுக்கு மேல பாட்டில ஒட்டி இதே மாதிரி பண்ணி மரத்துல தொங்க விட்டுடலாம்

பெப்போ: இது நல்ல ஐடியா தான்

குக்கு: இப்ப தான் ஞாபகம் வருது… நான் ஒன்னு சொல்ல மறந்துட்டேன்… நான் வீட்டுல இருந்தப்போ பறவைகள் எல்லாம் என் கூட பேசுனாங்க தெரியுமா…

பிம்பா: என்ன ரீல் சுத்துறியா…

குக்கு: இல்ல நெஜமாவே என் கூட மீன்கொத்தி, வாலாட்டிக் குருவி எல்லாம் பேசிருக்காங்க… பறவைகள் பெரியவங்க கிட்ட தான் பேசமாட்டாங்க… நம்மள மாதிரி  கள்ளம் கபடம் இல்லாத சின்ன குழந்தைகள்கிட்ட பேசுவாங்களாம், அப்புடி தான் என்கிட்ட சொன்னாங்க…  நம்ம மாதிரி சின்ன புள்ளைங்க கிட்ட பறவைகள் ஈஸியா கூட்டாளி ஆயிடுவாங்க…

தாத்தா: கொழந்தைங்களா சாப்புட வாங்க…

மஞ்சா: டிஃபன் என்ன தாத்தா

தாத்தா: கேப்பைக் களியும், கடலைச் சட்னியும்… நீங்க சாப்பிட்டுட்டு சமத்தா விளையாடுங்க… தாத்தா கடைக்கு போறேன்.. பாய்….

குழந்தைகள்: பாய் தாத்தா…

(தொடரும்)

 

 

 

 

 

 

 

 

 

 

 

யம்மு பாட்டி:

 

 (தொடரும்)

Saturday, December 13, 2025

நாகரிகமும், பண்பாடும் (4)

 


ஒரு சமூகம் என்ன வகையான உணவுகளை சாப்பிட்டுச்சு, என்ன வகையான உடைகளை உடுத்துச்சு, என்னென்ன பண்டிகைகளைக் கொண்டாடுனுச்சு, என்னென்ன மதங்களைக் கடைபிடிச்சுச்சு, எந்தெந்த கடவுள்களைக் கும்பிட்டுச்சு, அந்த சமூகத்துக்கு என்னென்ன இலக்கியங்கள் இருந்துச்சு,  அங்க என்னென்ன இசைக் கருவிகளை வாசிச்சாங்க, என்னென்ன வகையான நடனங்களை ஆடுனாங்க… என்னென்ன கலைகள் இருந்துச்சு இதெல்லாம் அந்த சமூகத்தின் முக்கியமான பண்பாட்டுக் கூறுகளா இருக்கு. ஆனா இவை எல்லாத்தையும் விட முக்கியமான விசயம் அந்த சமூகத்துல மனித உறவுகள் எப்படி இருந்துச்சு, அந்த சமூகத்துல எல்லாருமே மனுசங்களா மதிக்கப்பட்டாங்களா, நடத்தப்பட்டாங்களா என்பது தான். சமத்துவமான மனித உறவுகள் தான் ஒரு சமூகத்தின் பண்பட்ட நிலையை நிர்ணயிக்கிற முக்கியமான அம்சமா இருக்கு. வர்க்கங்களைக் கொண்ட சமத்துவமில்லாத சமூகம் எவ்வளவு தொழில்நுட்ப வசதிகளைக் கொண்டிருந்தாலும் பண்படாத சமூகமா தான் இருக்கும். நவின முதலாளித்துவ சமூகத்துல மனித உறவுகள் எப்படி இருக்கு. சமத்துவமில்லாத கூலியடிமை உறவுகளால் கட்டமைக்கப்பட்டு இருக்கு. இதுல அங்கங்கே வெளித் தோற்றத்துக்கு தெரியுற சமத்துவமும் கூட பாசாங்குத் தனமானது தான். கூலியடிமை உறவுகள் எப்படிப்பட்டதா இருக்கு. படிநிலைகளைக் கொண்டதா இருக்கு. ஒரு படி நிலையில் இருப்பவர் தம்மை விட மேல் நிலையில் இருக்குறவங்களுக்கு பணிஞ்சு போகுறதும், தம்மை விட கீழ் நிலையில் உள்ளவங்கள  பணிய வைக்குறதுமாகத் தான் உறவுகள் இருக்கு. மேல உள்ளவனுக்கு அடிமையாகவும், கீழ உள்ளவனுக்கு எஜமானாகவும் இருக்குமாறு நிர்பந்திக்கிற உறவுமுறை தான் முதலாளித்துவத்துல இருக்கு. இந்தியாவின் சாதிய முதலாளித்துவத்துல கூலியடிமை உறவுமுறை சாதியப் படி நிலைகளைக் கொண்டதா இருக்கு.

ஒரு பண்பட்ட நபர் எப்படிப்பட்டவரா இருப்பாரு? அறிவும், இசை, இலக்கியம், கலைகளில் ஆழ்ந்த ஈடுபாடும், நன்னடத்தையும் கொண்டவர்களை பண்பட்ட நபர்கள்னு சொல்றாங்க. இந்த இலக்கணப் படி மிகவும் பண்பட்ட நபரா நிதா அம்பானி அம்மா அறியப்படுறாங்க. இந்த அம்மா நல்லா பரத நாட்டியம் ஆடுவாங்க, இவங்க நீதா முகேஷ் அம்பானி கலாச்சார மையத்தை நடத்துறாங்க. நியூயார்க்கில் உள்ள மெட்ரோபொலிட்டன் கலை அருங்காட்சியகத்தின் நிர்வாகக் குழுவில் கௌரவ அறங்காவலராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் இந்தியர் இவங்க தானாம். இது போலவே கிரண் நாடார், சிவ நாடார், சங்கீதா ஜிண்டால், அஸிம் பிரேம்ஜி, ரத்தன் டாட்டா இவர்களும் பண்பட்ட நபர்களா தான் அறியப்படுறாங்க. மனசாட்சி, குற்றவுணர்ச்சி எதுவுமே இல்லாம நாட்டையே சுரண்டி, ஊரையே வளைச்சுப் போட்டு கூலியடிமை உறவுகளின் பாதுகாவலர்களா இருக்குற இவங்க எப்புடி பண்பட்ட மனிதர்களா இருக்கமுடியும். இந்தியாவின் கலையுலகத்துல பெரும்பாலனவங்களும், முன்னணியில இருப்பவங்களும் உயர்சாதியினரா தான் இருக்காங்க. இவங்க பண்பட்டு இருந்தா என்னடா கலையுலகத்துல மத்தவுங்களுக்கு வாய்ப்பே இல்லாத மாதிரி எல்லா இடத்தையும் நம்ம ஆளுங்களே ஆக்கிரமிச்சுட்டோம்னு யோசிச்சு மத்தவங்களுக்கு வழிவிடுற மாதிரி வேற துறைகளைத் தேர்ந்தெடுத்துருப்பாங்க. பண்பாட்டுக்கு மேம்போக்கான அர்த்தம் கற்பிச்சா இப்படிப்பட்டவங்க தான் பண்பட்ட நபர்களா தெரிவாங்க.

 

கலை, இலக்கியம், தத்துவம் புத்தியிர்ச்சி பெற்றதா போற்றப்படுற இத்தாலியின் பண்பாட்டு மறுமலர்ச்சி காலத்துல மனிதர்களை ஆடு, மாடுகளைப் போல விக்கிற அடிமை  முறை பரவலா இருந்துருக்கு. ஒரு சமூகத்தின் பண்பாட்டை அதன் உள்ளார்ந்த மனித உறவுகளோடு சேர்த்துப் பார்க்கவேண்டியதும், புரிந்து கொள்ளவேண்டியதும் ரொம்ப ரொம்ப அவசியமா இருக்கு.

ஒரு உதாரணத்துக்கு ரெண்டு நாடுகள் இருக்குன்னு வெச்சுக்குவோம் முதல் நாட்டுல உள்ளவங்க இப்புடி சொல்றாங்க, நாங்க எல்லாரையும் மனிதநேயத்தோட தான் நடத்துவோம், பிச்சைக்காரர்களோடயும் இறங்கிப்போய் மனம் விட்டு சிரிச்சுப் பேசுவோம், கைகுலுக்குவோம். இப்ப சொல்லுங்க நாங்க பண்பட்ட மனிதர்கள் தானன்னு கேக்குறாங்க. ரெண்டாவது நாட்டுல உள்ளவங்க இப்படி சொல்றாங்க, நாங்க எல்லாரையும் சமமாகத் தான் நடத்துறோம், ஏண்ணா சமத்துவமின்மைக்கான எல்லா வாய்ப்புகளையும் எங்க நாட்டில் இருந்து நீக்கிட்டோம், எங்க நாட்டுல பிச்சைக்காரர்களே இல்லைன்னு சொல்றாங்க. இந்த ரெண்டு நாட்டுல எந்த நாட்டை பண்பட்ட நாடுன்னு உறுதியா சொல்லமுடியும். நிச்சயமா ரெண்டாவது நாடு தான் இல்லையா. பட்டினியில் வாடுறதை வேடிக்கைப் பார்க்குற, பார்க்க வெச்சுக்கிட்டே விருந்து சாப்பிடுற நாகரிகமான முதலாளித்துவ சமூகங்களை விட பகுத்துண்டு கூட்டுறவோட வாழ்ந்த பழங்குடி சமூகங்கள் பண்பட்ட சமூகங்களாகவே இருந்துருக்குன்னு உறுதியா சொல்லமுடியும். உச்சகட்ட சமத்துவமின்மையைக் கொண்ட முதலாளித்துவ சமூகங்களை விட சமத்துவமான பழங்குடி சமூகங்கள் பண்பட்டவை. முழுமையான பண்பட்ட சமூகங்களை மேம்பட்ட வாழ்க்கைத் தரநிலையுடன் கூடிய சமத்துவத்தை உறுதிசெய்யும் சோசலிசத்தின் மூலமே உருவாக்கமுடியும்.


Friday, December 12, 2025

நாகரிகமும், பண்பாடும் (3)

 


நாகரிகத்தில் மேம்பட்ட முதலாளித்துவ சமூகங்களுக்கும், நாகரிகநிலையை அடையாத பழங்குடி சமூகங்களுக்கும் இடையில காணப்படும் பண்பாட்டு இடைவெளியைப் பத்தி தான் பாத்துட்டு இருக்கோம்.

பழங்குடியின சமூகங்களின் பண்பாடு மனிதர்கள் அனைவரையும் அரவணைப்பதாக, அவர்களுக்குள் ஒற்றுமையையும், கூட்டுறவையும், நாம் என்ற கூட்டுணர்வையும் வளர்ப்பதாகத் தான் இருந்துருக்கு. ஆனா முதலாளித்துவ சமூகங்களின் பண்பாடு ஒற்றுமைக்கு வழியில்லாதபடி மனிதர்களை தனிமைப்படுத்துவதாகவும், நான் மட்டும் தான் என்ற தனிமைப்பட்ட உணர்வையும், அகங்காரத்தையும், நான், அடுத்தவன், மற்றவன் என்ற பிரிவினைவாதத்தையும் வளர்ப்பதாகத் தான் இருக்கு.

பழங்குடியின சமூகங்களின் பண்பாடு உணவிலிருந்து அனைத்தையும், அனைவரும் பகிர்ந்துகொள்ளும் பழக்கத்தையும், பொதுநல அக்கறையையும் வளர்ப்பதாக இருக்கு, அனைவரையும் உள்ளடக்கியதாகவும், அரவணைப்பதாகவும் இருக்கு. ஆனா முதலாளித்துவ பண்பாடு எப்படி இருக்கு, மத்தவன் எக்கேடு கெட்டா எனக்கு என்ன, எனக்கு சாப்பாடு இருக்குல்ல, நான் மட்டும் நல்லா இருந்தா போதும், என் குடும்பம் மட்டும் நல்லா இருந்தா போதும் என்ற சுயநலத்தை மட்டுமே வளர்ப்பதா இருக்கு. பெரும்வாரியான மக்களை உண்ண உணவு இல்லாதவங்களா, உடுத்த உடை இல்லாதவங்களா, தங்குறதுக்கு இடம் இல்லாதவங்களா கையறு நிலையில அனாதைகளா ஒதுக்கி வெச்சிருக்கு. அடுத்தவன் வீடில்லாம இருந்தா எனக்கென்ன கவலை, எனக்கு தான் 3பிஹெச்கே வீடு இருக்கு, நான் ஏசி ரூம்ல ஹாயா படுத்துக்கிட்டே ஹோம் தியேட்டர்ல படம் பாப்பேன், கார்ல சுத்துவேன், ஜாலியா இருப்பேன்னு இருக்குறது தான் முதலாளித்துவ பண்பாடு.

பழங்குடியின சமூகங்களில் உழைப்பின் பண்பாடு எப்படி இருந்துச்சு, கூட்டாக எல்லாரும் சேர்ந்து உழைப்பதாக இருந்துச்சு, உழைச்சவங்களுக்குத் தான் உழைப்பின் பலன் போய்சேர்ந்துச்சு. முதலாளித்துவ சமூகங்கள்ல உழைப்பைச் சுரண்டுவது தான் பண்பாடா இருக்கு. உழைக்குறவங்களோட வேலையை புடுங்குறதுக்காகவே ஏஐ உட்பட எல்லா தொழில்நுட்பங்களையும் வளர்த்து மக்களோட வேலைவாய்ப்பைப் பறிக்குறது தான் முதலாளித்துவப் பண்பாடு. இதுல பெருமுதலாளிகளுக்குத் தான் எல்லாம் கெடைக்குது, உழைச்சவங்களுக்கு உழைப்பின் பலன் கெடைக்கமுடியாதபடி அந்நியமாக்கப்படுறாங்க. கஷ்டமான உடலுழைப்பு வேலைகளுக்கு குறைந்த கூலி கொடுக்குறாங்க, எளிதான நிர்வாக வேலைகளுக்கு அதிக சம்பளம் கொடுக்குறாங்க. மக்களோட உழைப்பார்வத்தை அழிச்சு உழைக்காமலே சொகுசா வாழனும் என்ற மனப்பான்மையைத் தான் முதலாளித்துவப் பண்பாடு வளர்த்துருக்கு.

பழங்குடியின மக்கள் குழந்தைகள் மாதிரி திறந்த மனசோட வெளிப்படையா இருந்தாங்க. அவங்களுக்கு ஏமாத்த தெரியாது. முதலாளித்துவத்துல மக்களோட மனசு தெரிஞ்சுக்கவே முடியாத படி ரகசியமா மாஸ்க் போட்டு மூடிக் கெடக்கு. அதுலயும் பணப்பை பெரிசா ஆக ஆக மனசு சுயநலத்தால சிறுசா சுருங்கிப்போகுது. வாங்குறதுக்கு மனசு வருது, ஆனா கொடுக்குறதுக்கு மட்டும் மனசே இல்ல. ஏமாத்துறதுக்கு மனசு இருக்கு, ஏமாறுவதுக்கு மனசு இல்ல.

அனைவரும் ஒவ்வொருவருக்காக, ஒவ்வொருவரும் அனைவருக்காக, என்பது தான் பழங்குடியின பண்பாடு. கூட்டுறவோட ஒத்துமையா வாழுறது தான் பழங்குடிகளின் பண்பாடு. அவன் 90 மார்க் வாங்குனா நான் 91 மார்க் வாங்கனும், அவனை விட நான் கூட சம்பாதிக்கனும், அவளை விட நான் வசதியா வாழனும். அவன் பைக் வெச்சிருந்தா, நான் கார் வாங்கனும், அவன் ரெண்டு மாடி கட்டுனா நான் மூனு மாடி கட்டனும்னு இப்படி போட்டி போட்டு, பொறாமை பொங்க வாழுறது தான் முதலாளித்துவப் பண்பாடு. இந்த போட்டிப் பொறாமையால நண்பர்களும் பகைவர்களாயிடுறாங்க, உறவுகளும் எதிரிகளாயிடுறாங்க.

பழங்குடியினத்துல சமூகப் பரிமாற்றங்களே பரிசுப் பரிமாற்றங்களா இருந்துச்சு. அவங்களுக்குப் பாசம் தான் பெருசு. ஆனா முதலாளித்துவ சமூகங்கள்ல குடும்பப் பரிவர்த்தனைகளே வர்த்தகப் பரிவர்த்தனைகளா சுருங்கிப் போச்சு. இங்க பாசத்தை விட பணம் தான் பெரிசு. சொந்தக்காரனாவே இருந்தாலும் கூட ஒன்னும் இல்லாதவனை வீட்டு வாசல்படியை கூட மிதிக்க விடாம கேட்டோட வெச்சு அனுப்பிருவாங்க. வசதியானவங்கள மட்டும் தான் வீட்டுக்குள்ள அழைச்சு விருந்து கொடுப்பாங்க.

பழங்குடியினத்துல அரசியல் பண்பாடானது ஜனநாயகமா இருந்துச்சு. முதலாளித்துவத்துல அரசியல் பண்பாடானது முதலாளி நாயகமா இருக்கு. பெருவாரியான மக்கள் அரசியலை அரசியல்வாதிகள் பாத்துக்கட்டும், ஓட்டு போடுறது மட்டும் தான் என் வேலை, மத்தபடி எனக்கும் அரசியலுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை, நான் உண்டு, என் வேலை உண்டு, எனக்கு என் குடும்பம் தான் உலகம்னு முடிச்சுக்கிறது தான் முதலாளித்துவ அரசியல் பண்பாடு.

பழங்குடியின சமூகங்களின் பண்பாடு இயற்கையைப் போற்றிக் கொண்டாடுறதா இருந்துருக்கு. முதலாளித்துவ பண்பாடு இயற்கையை நாசம் செஞ்சு அழிப்பதாகவும், இயற்கையிடமிருந்து மக்களைப் பிரித்து அந்நியப்படுத்தி அவர்களை மன நோயாளிகளாக மாற்றுவதாகவும் தான் இருக்கு.

மொத்தத்துல மனுசனுக்குள்ள நல்ல குணங்கள்சியெல்லாம் சாகடிச்சுட்டு, கெட்ட குணங்களை மட்டும் வளர்க்குறது தான் முதலாளித்துவப் பண்பாடு. இதுல பாச நேசத்தை விட பணம் தான் பெரிசு. சுரண்டுவதும், ஏமாத்திப் பொழைக்கிறதும் தான் போற்றுதலுக்குரிய திறமைகள். ஆதாயம் இல்லாம ஒரு அடி கூட எடுத்து வெக்கக் கூடாது. லாபத்துக்காக என்ன வேணாலும் செய்யலாம். சொத்து சேர்க்குறது மட்டும் தான் வாழ்க்கையோட குறிக்கோள். பணமயம், வர்த்தகமயம், லாபமயம் என்பது தான் முதலாளித்துவப் பண்பாட்டின் மும்மூர்த்திகளா இருக்கு. இந்த முதலாளித்துவ பண்பாட்டுச் சீரழிவை சோசலிச கூட்டுணர்வு, கூட்டுறவின் மூலமா தான் சீரமைக்கமுடியும்.


Thursday, December 11, 2025

நாகரிகமும், பண்பாடும் (2)

 


நாகரிகம், பண்பாடு ஆகிய இரண்டு சொற்களுமே ஒரே பொருளுடையதாக, ஒன்றுக்கொன்று மாற்றத்தக்கதாக பயன்படுத்தப்படுகிறது என்று சொல்லியிருந்தோம். உதாரணமாக ஒருவர் தரக்குறைவான பேச்சு, செயலில் ஈடுபடும் போது  அவை அநாகரிகமானவை என விமர்சசிக்கப்படுவது தானே இயல்பாய் இருக்கிறது. இங்கு அநாகரிகம் என்ற சொல்லானது பண்பாடற்ற அல்லது பண்படாத என்ற பொருளிலேயே பயன்படுத்தப்படுகிறது. அநாகரிகம் என்பதன் பொருள் என்ன என்று தேடும் போது அநாகரிகம் என்பது சமூகத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்ட நல்லொழுக்கங்கள், பண்பாடு, நாகரிக நெறிமுறைகளுக்கு எதிரான, ஒருவரின் நடத்தையையோ, பேச்சையோ, அல்லது படைப்புகளையோ குறிக்கும் ஒரு சொல்லாகும் என்ற விளக்கம் கிடைக்கிறது.  இந்த விளக்கம் நாகரிகம் என்ற சொல் பண்பாடு என்ற பொருளிலும் பயன்படுத்தப்படுவதை உறுதிசெய்கிறது. நாகரிகம், பண்பாட்டை விளக்கி பல பக்கங்களுக்கு கட்டுரை எழுதுவதை விட நடைமுறை எதார்த்தங்களின் அடிப்படையில் நாகரிகத்தில் சிறந்த முதலாளித்துவ சமூகங்களுக்கும், அநாகரிக சமூகங்களுக்கும் இடையில் காணப்படும் பண்பாட்டு இடைவெளியை சுட்டிக் காட்டுவது மேல் என்று கருதுகிறேன்.

ஆதிப் பழங்குடியின சமூகத்தில் வாழும் அனைவருமே ஒருவரை ஒருவர் தெரிந்தவர்களாக, அன்யோன்யமாக பழகியவர்களாகவும் இருந்தனர். நவின முதலாளித்துவ சமூகத்தில் இருக்கும் ஒருவர் அடுத்த வீட்டில் வசிக்கும் நபரைப் பற்றிக் கூட தெரிந்துகொள்வதில்லை. ஏனென்றால் நவின முதலாளித்துவ சமூகத்தின் பண்பாடு எப்படிப்பட்டதாக இருக்கிறது தெரியுமா. மனிதன் சமூக உயிரி என்ற உண்மைநிலையை தலைகீழாக மாற்றி மனிதன் ஒரு தனித்தீவு என்ற பிறழ்ந்த நிலைக்கு சுருக்கியுள்ளது முதலாளித்துவப் பண்பாடு. தன்னை மட்டுமே முன்னிலைப் படுத்தும், தன்னைப் பற்றியே சிந்திக்கும்,  தன்மையமான தனித்தீவு மனிதர்களின்  கூட்டமாக சமூகம் பிறழ்ந்துள்ளது. இந்த தனித்தீவு மனிதர்கள் அலுவலகங்களில் இருக்கும் போதும் சரி, பாத சாலைகளில் போகும் போதாகட்டும், பேருந்து நிலையத்தில் காத்திருக்கும் நேரத்திலாகட்டும், இல்லை பூங்கா, கடற்கரையில் உலாவும் போதாகட்டும், இவர்கள் தன்மைய நிலையிலிருந்து விலகுவதேயில்லை, கூட்டத்தில் நின்று கொண்டிருக்கும் போதும் கூட மற்றவர்களின் இருப்பு இவர்களுக்கு ஒரு பொருட்டே இல்லை. ரத்தமும், சதையும் கொண்ட உயிருள்ள மனிதர்களாக சக மனிதர்கள் அருகில் இருந்தாலும் கூட இவர்களது உலகத்தில் அவர்கள் இல்லவே இல்லை. இவர்களுக்கு சக மனிதர்கள் அனைவருமே தங்களுக்கு சம்மந்தம் இல்லாத, தங்கள் கவனத்துக்கு அவசியம் இல்லாத, முக்கியமற்ற நான்காம் நபர்கள் தான்.

இந்த தனித்தீவு நபர்கள் மற்றவர்களை நேருக்கு நேர் பார்ப்பதையும், பேசுவதையும் தவிர்ப்பவர்களாக, இறுக்கமாக வாயை மூடிக்கொள்கின்றனர். புன்னகையா அய்யய்யோ அது கூடாது, ஆகவே ஆகாது. ஏனென்றால் நண்பர்களிடமே இவர்கள் அளவோடு தான் புன்னகைக்கிறார்கள், காதலர்களிடமே பாசாங்குத் தனத்துடன் தான் பழகுகிறார்கள். ஏமாற்றப்படலாம் என்ற எச்சரிக்கை உணர்வால் பாதிக்கப்பட்ட இவர்கள் யாரிடமும் மனம் திறந்து பேசுவதில்லை. ஏனென்றால் எதுவுமே நிரந்தரமில்லை, நண்பர் துரோகியாகலாம், காதலர் எதிரியாகலாம். பின்னாளில் ஏமாற்றப்பட எப்போதும் வாய்ப்பு இருக்கும் போது இந்நாளில் எதற்கு மனம் திறக்கவேண்டும் என்று மனக் கதவுகளை இறுக்கமாக மூடிக்கொள்கிறார்கள். மனம் விட்டுப் பேசினால் பணம் விட்டுப் போகுமோ என அஞ்சுகிறார்கள்.  சக மனிதர்களை விடுங்கள். இவர்களது குடும்ப உறவுகளும் வர்த்தக உறவுகளாக மாறிவிட்டது. ஏன் அக்கா, தங்கைக்கு செய்த அளவுக்கு எனக்கு செலவு செய்யவில்லை என கணக்கு பார்க்கிறார்கள். சொத்துத் தகராறுக்காக குடும்பத்தினரிடமும், சொந்தங்களுடன் முறித்துக் கொள்கின்றனர். தனித்தீவு மனிதர்கள் இறுதியில் தனிமை நோயால் வாடுகிறார்கள்.

முதலாளித்துவத்தின் போட்டா போட்டி வாழ்க்கைப் பந்தயத்தில் ஓடிக் கொண்டிருக்கும் இந்த தனித்தீவு மனிதர்கள் பரிதாபத்துக்கு உரியவர்கள். அவர்களுக்கு மற்றவரைப் பற்றி சிந்திக்க, செயல்பட நேரமில்லை. தன் மீதே அவநம்பிக்கை கொண்டுள்ள இவர்களால் எப்படி மற்றவர்களை நம்ப முடியும். நண்பனுக்குள்ளும் ஒரு எதிரி இருக்கத்தானே செய்கிறான். ஏனென்றால் நண்பர்களும் இவர்களுக்கு போட்டியாளர்கள் தானே. சுயவெற்றிக் கனவால் கடிவாளமிடப்பட்டவர்களாக இவர்கள் சுயமுன்னேற்றபாதையில் விழுந்தடித்து ஏறிக்கொண்டு இருக்கிறார்கள்.  

(தொடரும்)

Wednesday, December 10, 2025

நாகரிகமும், பண்பாடும்

 


நாகரிகம், பண்பாடு ஆகிய இரண்டு சொற்களுமே ஒரே பொருளுடையதாக, ஒன்றுக்கொன்று மாற்றத்தக்கதாக பயன்படுத்தப்படுகிறது. நாகரிகமும், பண்பாடும் ஒன்றுக்கொன்று தொடர்புடையவை என்ற போதிலும் அவை இரண்டையும் ஒரே பொருள்படும் விதத்தில் பயன்படுத்துவது தவறான புரிதலுக்கே வழி வகுக்கும்.

ஒரு சமூகத்தின் நாகரிகம் என்பது அந்த சமூகத்தின் பொருளாயதக் கட்டமைப்பு, உற்பத்தி- பொருளாக்க நிலை, உள்கட்டமைப்பு, அறிவியல் தொழில் நுட்பம், வணிகமயம், நகரமயம், நவினமயம் ஆகியவற்றின் வளர்ச்சி நிலையைக் குறிப்பிடுவதாக உள்ளது. நாகரிகம் என்பது உற்பத்தி சக்திகளின் வளர்ச்சி நிலையுடன் நேரடித் தொடர்புடையதாக உள்ளது. உற்பத்தி சக்திகள் என்றால் என்ன? ஒரு சமூகம் தனது தேவைகளை உற்பத்தி செய்வதற்குத் தேவையான நிலம், இயற்கைவளங்கள், உற்பத்திக் கருவிகள், எந்திரங்கள், உழைப்புச்சக்தி ஆகியவற்றையே உற்பத்திச் சக்திகள் என்கிறோம்.

பண்பாடு என்பது ஒரு சமூகத்தில் உள்ள மக்களின் உறவுமுறைகளான சமூக உறவுகள், குடும்ப உறவுகள், இயற்கையுடனான உறவுகள், பழக்கவழக்கம், மரபுகள், நம்பிக்கைகள், நன்னெறிகள், மொழி, சமூக ஒழுக்கம் கட்டுப்பாடுகள், ஆகியவற்றின் அடிப்படையில் பெறப்படும் சமூக மதிப்பீடுகள், அகம், புறம் சார்ந்த பகிரப்பட்ட மதிப்பீடுகள், கூட்டு அடையாளங்கள், கூட்டுணர்வுநிலை இவற்றின் வளர்ச்சி நிலையைக் குறிப்பிடுவதாக உள்ளது. பண்பாட்டு வெளிப்பாடுகளான உடை, உணவு, விருந்தோம்பல், கலை வெளிப்பாடுகளான இசை, நடனம் போன்றவை கலாசாரத்தின் கூறுகளாக உள்ளன. பண்பாடு என்பது சமூகத்தின் உற்பத்தி உறவுகளின் கட்டமைப்பின்  அடிப்படையில் பெறப்பட்டவையாக உள்ளன. உற்பத்தி உறவுகள் என்றால் என்ன? சமூகத்துக்கான உற்பத்தி, விநியோகத்தில் ஈடுபடும்போது மனிதர்கள் ஒருவருக்கு ஒருவர் ஏற்கும் உறவுகளையே உற்பத்தி உறவுகள் என்கிறோம். எடுத்துக்காட்டாக ஆதிப் பொதுவுடைமை சமூகத்தில் காணப்பட்ட கூட்டுறவுகள், அடிமை சமூகத்தின் உற்பத்தி உறவுகளான  எஜமானர், அடிமை உறவு, நிலப்பிரபுத்துவ சமூகத்தின் உற்பத்தி உறவுகளான, நிலப்பிரபு, பண்ணையடிமை உறவு, முதலாளித்துவ சமூகத்தின் உற்பத்தி உறவுகளான முதலாளி, தொழிலாளி உறவு ஆகியவற்றையே உற்பத்தி உறவுகள் என்கிறோம்.

சமூகத்தின் பரிணாமத்தில் உற்பத்திச் சக்திகளின் வளர்ச்சியின் போது சமூகத்தின் சொத்துடைமை அமைப்பிலும் மாற்றம் ஏற்படுகிறது. பொதுவுடைமை சமூகம் வர்க்கப் படி நிலைகளால் பிளவுண்ட தனியுடைமை ஆணாதிக்க சமூகமாக மாறுவதே  நாகரிக சமூகத்தின் தோற்றுவாயாக உள்ளது. பல்வேறு இனக்குழுக்களைச் சேர்ந்த மக்கள் ஒரு மொழி வழி தேசிய இனமாக தங்களை இனங்காண நாகரிக வளர்ச்சி உதவியுள்ளது. ஆனாலும் கூட நாகரிக சமூகத்தின் வளர்ச்சி என்பது தனிச் சொத்துடைமையின் வளர்ச்சியாகவே உள்ளது. சமூக நலன்களுக்கு முரணான விதத்தில் சுயநலன்களுக்கு மட்டுமே முன்னுரிமை அளிக்கும் தனிநபர்களின் கூட்டங்களாகவே நாகரிக சமூகங்கள் வளர்ந்துள்ளன.

 வர்க்கங்களாக பிளவுபட்ட நாகரிக சமூகத்தின் பண்பாடும் பிளவுபட்டதாக பிறழ்ந்த நிலையில் உள்ளது. ஆதிப் பொதுவுடைமை சமூகத்தில் கூட்டுயிரிகளாக வாழ்ந்த மனிதர்களின் கூட்டுணர்வு நிலை என்பது உள்ளார்ந்ததாகவும், முழுமையானதாகவும் உள்ளது. நாகரிகமடையாத காட்டுமிராண்டிகள் வாழ்ந்த ஆதிப் பொதுவுடைமை சமூகங்களில் சிலர் அல்லது பலரை பட்டினி போட்டுவிட்டு பலர் அல்லது சிலர் விருந்தாடும் வழக்கத்தைப் பார்க்கவே முடியாது. கிடைத்ததை அனைவரும் பகிர்ந்துண்ணும் வழக்கம் தான் இருந்தது. ஆனால் நவின நாகரிக சமூகம் அவனவன் பட்டினி கிடப்பது அவனவன் தலைவிதி என்று நலுவி கூட்டுப் பொறுப்பை கைகழுவி மக்கள் பட்டினி கிடப்பதை மனசாட்சியே இல்லாமல் வேடிக்கை பார்க்கிறது, இல்லை மனிதர்களின் தன்மானத்தை கொலை செய்யும் விதமாக பிச்சை போட்டு மனிதர்களை பிச்சைக் காரர்களாக்கி அதை மனித நேயம் என்ற பேரில் வீடியோ எடுத்துபோட்டுக் காட்டி ஈனத்தனமாகக் கொடை வள்ளல் பட்டத்தை வாங்கிக் கொள்கிறது. தனி நபர்களின் தன்னலப் போட்டியின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்ட நவின முதலாளித்துவ சமூகத்தில், பிளவுப்பட்ட வர்க்கங்களின் சமூக உணர்வானது உள்ளார்ந்ததாக இல்லை, மேம்போக்கானதாக வெறும் மேற்பூச்சாக, உள்ளதே ஒழிய முழுமையான கூட்டுணர்வாக இல்லை. நாகரிக முதலாளித்துவத்தை நிலை மறுத்து அதன் வாயிலாக வர்க்கப் பிளவிற்கும், ஆணாதிக்கத்திற்கும்பொது நலனுக்கு இணக்கமான தன்னலத்துடன் கட்டமைக்கப்படும் சோசலிசத்தைக் மூலமே சமூகத்தின் முழுமையான கூட்டணர்விற்கான பண்பாடு மலர்ச்சியடையும். நாகரிகத்தால் சிதைந்த சமூகப் பண்பாட்டை சோசலிசத்தால் செழிப்பாக்குவோம்.

பணம் பேசுறேன் (248)

 

திட்டமிட்டப் பொருளாதாரம் என்றாலே நமக்கு சோசலிச நாடுகள் தான் நினைவுக்கு வரும். ஆனா 1000 ஆண்டுகளுக்கு முன்னாடியே, தொழில்துறை வளர்ச்சியடையுறதுக்கு முன்னாடியே திட்டமிட்ட பொருளாதாரங்கள் இருந்துருக்கு. உதாரணமா தென் அமெரிக்காவுல 13ஆம் நூற்றாண்டில் இருந்த இன்கா பேரரசு ஒரு திட்டமிட்ட பொருளாதாரமா தான் செயல்பட்டுருக்கு. அங்க பணம் மூஞ்சிய காட்டவே இல்ல.  தங்கம், வெள்ளி அபரிதமா கொட்டிக் கிடந்தும் அவையெல்லாம் அலங்காரத்துக்காகத் தான் பயன்படுத்தப்பட்டுருக்கே ஒழிய பணமா பயன்படுத்தப்படல. இன்கா பேரரசின் பணமில்லாத பொருளாதாரத்தைப் பத்தி பால் எயின்சிக் சொல்றதை இப்ப பாப்போம்.

பணமில்லா சமூகங்கள்:

“கூட்டுப் பொருளாதாரக் கொள்கைகளின் அடிப்படையில் முழு அளவில் திட்டமிடப்பட்ட பொருளாதாரம் உள்ள சமூகங்களில், பணத்தின் பயன்பாடு இன்றியமையாதது அல்ல, அதோட சில அறியப்பட்ட சந்தர்ப்பங்களில், பணத்தின் பயன்பாடு இல்லாமல் தான் இருந்துருக்கு. ஒரு சிறந்த ஆரம்பகால உதாரணம் பெருவை ஸ்பானிஷ் கைப்பற்றுவதற்கு முன்பு இருந்த இன்கா பேரரசின் ஆட்சி. பெருவியர்களுக்கு பணத்தைப் பற்றிய அறிவு இல்லை என்பதை நடைமுறையில் அனைத்து அதிகாரிகளும் ஒத்துக்குறாங்க. அந்த நாடு தங்கம், வெள்ளியால் நிறைஞ்சிருந்தாலும், இந்த உலோகங்கள் பரிமாற்ற ஊடகமாகவோ அல்லது மதிப்பைச் சேமிக்கும் ஊடகமாகவோ பயன்படுத்தப்படவில்லை, ஆனால் அலங்கார நோக்கங்களுக்காக மட்டுமே பயன்படுத்தப்பட்டன.

மக்கள்தொகையின் பொருளாதார நடவடிக்கைகளின் ஒவ்வொரு கட்டமும் அரசு அதிகாரத்தால் ஒழுங்குபடுத்தப்பட்டதால, மதிப்பின் தர அளவுகோலின் படி கட்டணம் செலுத்துறதுக்கான ஊடகத்துக்கு தேவையே இல்லை. தொட்டில் முதல் கல்லறை வரை மக்களின் வாழ்க்கை திட்டமிடப்பட்டுருக்கு. தொடர்ந்து சேகரிக்கப்பட்ட புள்ளிவிவரங்களின் அடிப்படையில், கஸ்கோவில் உள்ள மத்திய நிர்வாகம், ஒவ்வொருவரும் என்ன உற்பத்தி செய்ய வேண்டும், அவர்களின் பொருட்கள் எவ்வாறு ஒதுக்கப்பட வேண்டும் என்பதை மிக நுணுக்கமாக நிர்ணயிச்சுருக்கு. பொருட்களின் உற்பத்தியிலும், விநியோகத்திலும் பணம் வரவில்லை. உணவு, துணி போன்றவற்றின் உற்பத்தியாளர்கள், தங்கள் உற்பத்தியில் ஒரு குறிப்பிட்ட பங்கை அரசியல் மற்றும் மத அதிகாரிகளிடம் ஒப்படைக்க வேண்டியிருந்தது, மேலும் உற்பத்தியில் நேரடியாகப் பங்கேற்காதவர்களின் தேவைகளை அரசு நிறைவேற்றியது. இலாப நோக்கமோ தனிப்பட்ட முன்முயற்சியோ இல்லை. ஊதியம், சம்பளம் போன்றவை காணப்படவில்லை. ஏதேனும் ஒரு கெடுவாய்ப்பால் அவங்க வேலை செய்யும் திறனை இழந்திருந்தாலும், அனைவருக்கும் போதுமான அளவு வழங்க உரிமை உண்டு. அவ்வப்போது உடைமைகள் மறுபகிர்வு செய்யப்பட்டன, இதனால் ஒரு தரப்படுத்தப்பட்ட மதிப்பின் சேமிப்பகத்தைப் பயன்படுத்துவதற்குக் கூட வாய்ப்பு இல்லை, இருப்பினும் அலங்காரப் பொருட்கள் உண்மையில் அதை வாங்கக்கூடியவர்களால் சேமிக்கப்பட்டன. குறைந்த அளவு பண்டமாற்று இருந்தது. அந்த இந்தியர்களுக்கு "வாங்குவது அல்லது விற்பது பற்றி எதுவும் தெரியாது, பணம் இல்லாததால், அவர்கள் ஒரு உணவை இன்னொரு பொருளுக்கு மாத்துனாங்க.

ஸ்பானிஷ் வெற்றியின் போது இன்கா நாகரிகம் அடைந்த உயர் நிலையைக் கருத்தில் கொண்டு, பணம் இல்லாதது நிச்சயமாக முன்னேற்றத்திற்கு ஒரு தடையாக இருக்கவில்லை. உண்மையில், வெற்றியாளர்களால் கண்டுபிடிக்கப்பட்ட கட்டிடங்கள், சாலைகள், பாலங்கள் போன்றவை பொருளாதார, தொழில்நுட்ப முன்னேற்றத்தின் மிகவும் முன்னேறிய கட்டத்தைக் குறிக்கின்றன. திட்டமிடப்பட்ட பணமில்லா பொருளாதாரம் இதற்கு முன்னோ அல்லது பின்னரோ வேறு எந்த நிகழ்விலும் இவ்வளவு முன்னேறிய நிலைக்கு கொண்டு செல்லப்பட்டதாக அறியப்படவில்லை”

 

 

(தொடரும்)

 

 

 

 

 

 

Sunday, December 7, 2025

பணம் பேசுறேன் (247)

 


ஒண்ணு, ரெண்டுனு எண்ணத் தெரியுற அளவுக்காவது அடிப்படைக் கணிதத் திறன் ஆதி மனுசங்களுக்கு வளர்ச்சியடைஞ்சிருக்கனும்; பொருட்களோட மதிப்புகள் பற்றிய உணர்வும், ஒரு பொருளின் மதிப்புக்கு சமமான  பொருளைக் கண்டறியத் தெரிஞ்சிருக்கனும்,  தனியுடைமை இருக்கனும், இவை தான் பணம் உருவாகுறதுக்கான முன் தேவைகளா இருக்கு, இவை வளர்ச்சியடையலைனா அந்த சமூகம் பணமில்லாத சமூகமா தான் இருக்கும்னு சொல்றாரு பொருளாதார அறிஞர் பால் எயின்சிக். ஆதி சமூகங்களில் காணப்பட்ட சமூக அமைப்பை கம்யூனிசம்னு சொல்ல முடியாதுன்னு பால் எயின்சிக் சொல்றது ஏற்புடையதாக இல்லை. ஆதி சமூகங்களின் முக்கியமான உற்பத்தி சாதனம் நிலம் தான். பால் எயின்சிக் பாலினேசியாவில் உள்ள தீவுகளை எடுத்துக்காட்டி அங்க உற்பத்திச் சாதனங்கள் பொதுவா இல்ல, முறையான பொது வினியோகமும் இல்ல, ஆனாலும் கூட அடிப்படைத் தேவைகள் ஒருவருக்குக் கிடைக்காவிட்டால் அளிக்கப்படும்னு சொல்லியிருக்காரு. ஆனா இன்னொரு இடத்துல பாலினேசியாவுல நிலத்தின் உரிமை தெளிவற்றதா பிரிக்கப்படாம பொதுவாகத் தான் (collectivistic) இருக்குனு சொல்றாரு. அப்படின்னா பாலினேசியாவிலும் உற்பத்தி சாதனங்கள் பொதுவுடைமையா இருக்குறதை அவரே ஒரு இடத்துல சொல்லிட்டு, இன்னொரு இடத்துல முன்னுக்குப் பின் முரணா கருத்து சொல்லியிருக்காருண்ணு தான அர்த்தமாகும். சரி பணமில்லாத சமூகங்களைப் பத்தி பால் எயின்சிக் சொல்றதை நீங்களே கேளுங்க:

பணமில்லா சமூகங்கள்:

“மத்த பழமையான சமூகங்களில், பணத்தைப் பயன்படுத்துவதற்கு அறிவுத்துறையின் தரம் போதுமான அளவு உயர்ந்திருக்கலாம், அதோட பொருளாதார, அரசியல் வளர்ச்சியும் ஒப்பீட்டளவுல மேம்பட்ட கட்டத்தை எட்டியிருக்கலாம், ஆனால் இது இருந்தபோதிலும், மதிப்புகள் பற்றிய போதுமான உணர்வு இல்லாமல் இருந்தால் பணத்துக்கு எந்த வாய்ப்பும் இல்லை. பணத்தைப் பயன்படுத்துவது என்பது சமமானவற்றைக் கண்டறியும் திறனைக் குறிக்கிறது. புறநிலை மதிப்புகள் இல்லாத நிலையில், பரிமாற்றங்கள் அகநிலை மதிப்புகளின் அடிப்படையில் - அதாவது, ஒரு குறிப்பிட்ட பரிமாற்ற பரிவர்த்தனையில் நேரடியாக அக்கறை கொண்ட நபரின் தேவைகளின் ஒப்பீட்டு அவசரத்தின் அடிப்படையில் - செய்யப்படும் கட்டத்தில், பணத்தைப் பயன்படுத்துவதற்கான வாய்ப்பு குறைவாகவே இருக்கும்.

மத்த சந்தர்ப்பங்களில், கொடுக்கப்படும் பொருட்களுக்கு ஈடாக சமமான மதிப்புகளைப் பெறுவதற்கான விருப்பம் இல்லாம இருந்துருக்கு. பல பழமையான சமூகங்களில், பரிசுகளை பரிமாறிக்கொள்ளும்போது அல்லது பண்டமாற்று பரிவர்த்தனைகளில் ஈடுபடும்போது கூட, ஒவ்வொரு தரப்பினரும் மற்றவரை விட அதிகமாகக்  கொடுப்பதுதான் லட்சியம். இதுபோன்ற சூழ்நிலைகளில், மதிப்புகளை அளவிடுவதையும் சமமான பரிமாற்றங்களைச் செயல்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்ட எந்தவொரு கருவியும் தெளிவாக மிதமிஞ்சியதாகும்.

3. பணமின்மைக்கான மற்றொரு காரணம், பொருளாதாரம் பரிணாம வளர்ச்சியின் குறைந்த கட்டத்தில் இருப்பது. சமூகங்களில் அவற்றின் ஆரம்ப கட்டத்தில் முறையான பொருட்களின் பரிமாற்றம் இல்லை, அதோட அவ்வப்போது ஏற்பட்டிருக்கக்கூடிய பரிமாற்றங்கள் பணம் இல்லாமல் செய்யப்படலாம். சமூகத்திற்குள் அல்லது சமூகங்களுக்கு இடையில் சில பரிசுப் பரிமாற்றங்கள் இருந்திருக்கலாம், ஆனால் பொருட்களின் அத்தகைய பரிமாற்றங்களுக்கு பணத்தின் பயன்பாடு தேவைப்படவில்லை.

4. பரிணாம வளர்ச்சியின் ஆரம்ப கட்டத்தில், எந்தவொரு தரப்படுத்தப்பட்ட கட்டண முறையையும் ஏற்றுக்கொள்ள அழைப்பு விடுக்கும் அளவுக்கு வணிம் சாராத கொடுப்பனவுகள் போதுமான அளவு உருவாக்கப்படவில்லை. மத பலிகள் அல்லது மணமகள் பணம் இன்னும் தரப்படுத்தப்படவில்லை. அதேபோல, ஒருதலைப்பட்ச கொடுப்பனவுகளையோ அல்லது வர்த்தகத்திலிருந்து எழும் உரிமைகோரல்களைத் தீர்ப்பதற்கான வழிமுறைகளையோ ஒழுங்குபடுத்தும் அரசியல் அதிகாரத்துக்கான தலைமையும் அப்போது இல்லை.

5. பணவியல் அமைப்பின் பரிணாம வளர்ச்சிக்கு மற்றொரு தடையாக இருப்பது, பொருட்களை உடைமையாக வைத்திருக்கும் எந்த அமைப்பும் இல்லாதது. இத்தகைய சமூகங்கள்  தளர்வான அனுகுமுறையில் கம்யூனிசமாக விவரிக்கப்பட்டன, ஆனால் அவை அப்படி இருக்க வேண்டிய அவசியமில்லை.

உதாரணமாக, பாலினீசியாவில் உள்ள பல தீவுகளில், உற்பத்தி சாதனங்களின் பொதுவுடைமை என்ற அர்த்தத்தில் கம்யூனிசம் இல்லை, அல்லது உற்பத்தி செய்யப்படும் பொருட்களின் முறையான சமமான விநியோகமும் இல்லை; ஆனால் இந்த சமூகங்களின் உறுப்பினர்கள், அந்நியர்கள் கூட அவர்களின் அடிப்படைத் தேவைகளுக்குப் போதுமானவை இல்லாவிட்டால் கொடுக்கப்படுவதற்கு உரிமை உண்டு. மேலும், யாருடைய சொத்தையும் பரிசாகக் கேட்க எவருக்கும் உரிமை உண்டு, அதை கடுமையான  நன்னடத்தை மீறல் இல்லாமல் மறுக்க முடியாது. சில சமூகங்களின் உறுப்பினர்கள் உரிமையாளர்களின் அறிவு அல்லது அனுமதியின்றி தாங்கள் விரும்பும் எதையும் பயன்படுத்திக் கொள்வது பொதுவான வழக்கம். இத்தகைய அமைப்புகள் பணத்தைப் பயன்படுத்துவதற்கு நல்ல வாய்ப்பை வழங்குவதில்லை.”

 (தொடரும்)

 

பொம்மைகளின் புரட்சி (123)

  காலையில எல்லாருமே லேட்டா தான் எந்திரிச்சாங்க… இன்னிக்கு தாத்தா தான் பழக்கடைக்கு போகனும், அதுனால யம்மு பாட்டிக்கு உதவி பண்ணிக்கிட்டே   தாத்...