நாகரிகத்தில் மேம்பட்ட முதலாளித்துவ சமூகங்களுக்கும், நாகரிகநிலையை அடையாத பழங்குடி சமூகங்களுக்கும் இடையில காணப்படும் பண்பாட்டு இடைவெளியைப் பத்தி தான் பாத்துட்டு இருக்கோம்.
பழங்குடியின
சமூகங்களின் பண்பாடு மனிதர்கள் அனைவரையும் அரவணைப்பதாக, அவர்களுக்குள் ஒற்றுமையையும்,
கூட்டுறவையும், நாம் என்ற கூட்டுணர்வையும் வளர்ப்பதாகத் தான் இருந்துருக்கு. ஆனா முதலாளித்துவ
சமூகங்களின் பண்பாடு ஒற்றுமைக்கு வழியில்லாதபடி மனிதர்களை தனிமைப்படுத்துவதாகவும்,
நான் மட்டும் தான் என்ற தனிமைப்பட்ட உணர்வையும், அகங்காரத்தையும், நான், அடுத்தவன்,
மற்றவன் என்ற பிரிவினைவாதத்தையும் வளர்ப்பதாகத் தான் இருக்கு.
பழங்குடியின
சமூகங்களின் பண்பாடு உணவிலிருந்து அனைத்தையும், அனைவரும் பகிர்ந்துகொள்ளும் பழக்கத்தையும்,
பொதுநல அக்கறையையும் வளர்ப்பதாக இருக்கு, அனைவரையும் உள்ளடக்கியதாகவும், அரவணைப்பதாகவும்
இருக்கு. ஆனா முதலாளித்துவ பண்பாடு எப்படி இருக்கு, மத்தவன் எக்கேடு கெட்டா எனக்கு
என்ன, எனக்கு சாப்பாடு இருக்குல்ல, நான் மட்டும் நல்லா இருந்தா போதும், என் குடும்பம்
மட்டும் நல்லா இருந்தா போதும் என்ற சுயநலத்தை மட்டுமே வளர்ப்பதா இருக்கு. பெரும்வாரியான
மக்களை உண்ண உணவு இல்லாதவங்களா, உடுத்த உடை இல்லாதவங்களா, தங்குறதுக்கு இடம் இல்லாதவங்களா
கையறு நிலையில அனாதைகளா ஒதுக்கி வெச்சிருக்கு. அடுத்தவன் வீடில்லாம இருந்தா எனக்கென்ன
கவலை, எனக்கு தான் 3பிஹெச்கே வீடு இருக்கு, நான் ஏசி ரூம்ல ஹாயா படுத்துக்கிட்டே ஹோம்
தியேட்டர்ல படம் பாப்பேன், கார்ல சுத்துவேன், ஜாலியா இருப்பேன்னு இருக்குறது தான் முதலாளித்துவ
பண்பாடு.
பழங்குடியின
சமூகங்களில் உழைப்பின் பண்பாடு எப்படி இருந்துச்சு, கூட்டாக எல்லாரும் சேர்ந்து உழைப்பதாக
இருந்துச்சு, உழைச்சவங்களுக்குத் தான் உழைப்பின் பலன் போய்சேர்ந்துச்சு. முதலாளித்துவ
சமூகங்கள்ல உழைப்பைச் சுரண்டுவது தான் பண்பாடா இருக்கு. உழைக்குறவங்களோட வேலையை புடுங்குறதுக்காகவே
ஏஐ உட்பட எல்லா தொழில்நுட்பங்களையும் வளர்த்து மக்களோட வேலைவாய்ப்பைப் பறிக்குறது தான்
முதலாளித்துவப் பண்பாடு. இதுல பெருமுதலாளிகளுக்குத் தான் எல்லாம் கெடைக்குது, உழைச்சவங்களுக்கு
உழைப்பின் பலன் கெடைக்கமுடியாதபடி அந்நியமாக்கப்படுறாங்க. கஷ்டமான உடலுழைப்பு வேலைகளுக்கு
குறைந்த கூலி கொடுக்குறாங்க, எளிதான நிர்வாக வேலைகளுக்கு அதிக சம்பளம் கொடுக்குறாங்க.
மக்களோட உழைப்பார்வத்தை அழிச்சு உழைக்காமலே சொகுசா வாழனும் என்ற மனப்பான்மையைத் தான்
முதலாளித்துவப் பண்பாடு வளர்த்துருக்கு.
பழங்குடியின
மக்கள் குழந்தைகள் மாதிரி திறந்த மனசோட வெளிப்படையா இருந்தாங்க. அவங்களுக்கு ஏமாத்த
தெரியாது. முதலாளித்துவத்துல மக்களோட மனசு தெரிஞ்சுக்கவே முடியாத படி ரகசியமா மாஸ்க்
போட்டு மூடிக் கெடக்கு. அதுலயும் பணப்பை பெரிசா ஆக ஆக மனசு சுயநலத்தால சிறுசா சுருங்கிப்போகுது.
வாங்குறதுக்கு மனசு வருது, ஆனா கொடுக்குறதுக்கு மட்டும் மனசே இல்ல. ஏமாத்துறதுக்கு
மனசு இருக்கு, ஏமாறுவதுக்கு மனசு இல்ல.
அனைவரும் ஒவ்வொருவருக்காக,
ஒவ்வொருவரும் அனைவருக்காக, என்பது தான் பழங்குடியின பண்பாடு. கூட்டுறவோட ஒத்துமையா
வாழுறது தான் பழங்குடிகளின் பண்பாடு. அவன் 90 மார்க் வாங்குனா நான் 91 மார்க் வாங்கனும்,
அவனை விட நான் கூட சம்பாதிக்கனும், அவளை விட நான் வசதியா வாழனும். அவன் பைக் வெச்சிருந்தா,
நான் கார் வாங்கனும், அவன் ரெண்டு மாடி கட்டுனா நான் மூனு மாடி கட்டனும்னு இப்படி போட்டி
போட்டு, பொறாமை பொங்க வாழுறது தான் முதலாளித்துவப் பண்பாடு. இந்த போட்டிப் பொறாமையால
நண்பர்களும் பகைவர்களாயிடுறாங்க, உறவுகளும் எதிரிகளாயிடுறாங்க.
பழங்குடியினத்துல
சமூகப் பரிமாற்றங்களே பரிசுப் பரிமாற்றங்களா இருந்துச்சு. அவங்களுக்குப் பாசம் தான்
பெருசு. ஆனா முதலாளித்துவ சமூகங்கள்ல குடும்பப் பரிவர்த்தனைகளே வர்த்தகப் பரிவர்த்தனைகளா
சுருங்கிப் போச்சு. இங்க பாசத்தை விட பணம் தான் பெரிசு. சொந்தக்காரனாவே இருந்தாலும்
கூட ஒன்னும் இல்லாதவனை வீட்டு வாசல்படியை கூட மிதிக்க விடாம கேட்டோட வெச்சு அனுப்பிருவாங்க.
வசதியானவங்கள மட்டும் தான் வீட்டுக்குள்ள அழைச்சு விருந்து கொடுப்பாங்க.
பழங்குடியினத்துல
அரசியல் பண்பாடானது ஜனநாயகமா இருந்துச்சு. முதலாளித்துவத்துல அரசியல் பண்பாடானது முதலாளி
நாயகமா இருக்கு. பெருவாரியான மக்கள் அரசியலை அரசியல்வாதிகள் பாத்துக்கட்டும், ஓட்டு
போடுறது மட்டும் தான் என் வேலை, மத்தபடி எனக்கும் அரசியலுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை,
நான் உண்டு, என் வேலை உண்டு, எனக்கு என் குடும்பம் தான் உலகம்னு முடிச்சுக்கிறது தான்
முதலாளித்துவ அரசியல் பண்பாடு.
பழங்குடியின
சமூகங்களின் பண்பாடு இயற்கையைப் போற்றிக் கொண்டாடுறதா இருந்துருக்கு. முதலாளித்துவ
பண்பாடு இயற்கையை நாசம் செஞ்சு அழிப்பதாகவும், இயற்கையிடமிருந்து மக்களைப் பிரித்து
அந்நியப்படுத்தி அவர்களை மன நோயாளிகளாக மாற்றுவதாகவும் தான் இருக்கு.
மொத்தத்துல மனுசனுக்குள்ள நல்ல குணங்கள்சியெல்லாம் சாகடிச்சுட்டு, கெட்ட குணங்களை மட்டும் வளர்க்குறது தான் முதலாளித்துவப் பண்பாடு. இதுல பாச நேசத்தை விட பணம் தான் பெரிசு. சுரண்டுவதும், ஏமாத்திப் பொழைக்கிறதும் தான் போற்றுதலுக்குரிய திறமைகள். ஆதாயம் இல்லாம ஒரு அடி கூட எடுத்து வெக்கக் கூடாது. லாபத்துக்காக என்ன வேணாலும் செய்யலாம். சொத்து சேர்க்குறது மட்டும் தான் வாழ்க்கையோட குறிக்கோள். பணமயம், வர்த்தகமயம், லாபமயம் என்பது தான் முதலாளித்துவப் பண்பாட்டின் மும்மூர்த்திகளா இருக்கு. இந்த முதலாளித்துவ பண்பாட்டுச் சீரழிவை சோசலிச கூட்டுணர்வு, கூட்டுறவின் மூலமா தான் சீரமைக்கமுடியும்.

No comments:
Post a Comment