Wednesday, December 10, 2025

பணம் பேசுறேன் (248)

 

திட்டமிட்டப் பொருளாதாரம் என்றாலே நமக்கு சோசலிச நாடுகள் தான் நினைவுக்கு வரும். ஆனா 1000 ஆண்டுகளுக்கு முன்னாடியே, தொழில்துறை வளர்ச்சியடையுறதுக்கு முன்னாடியே திட்டமிட்ட பொருளாதாரங்கள் இருந்துருக்கு. உதாரணமா தென் அமெரிக்காவுல 13ஆம் நூற்றாண்டில் இருந்த இன்கா பேரரசு ஒரு திட்டமிட்ட பொருளாதாரமா தான் செயல்பட்டுருக்கு. அங்க பணம் மூஞ்சிய காட்டவே இல்ல.  தங்கம், வெள்ளி அபரிதமா கொட்டிக் கிடந்தும் அவையெல்லாம் அலங்காரத்துக்காகத் தான் பயன்படுத்தப்பட்டுருக்கே ஒழிய பணமா பயன்படுத்தப்படல. இன்கா பேரரசின் பணமில்லாத பொருளாதாரத்தைப் பத்தி பால் எயின்சிக் சொல்றதை இப்ப பாப்போம்.

பணமில்லா சமூகங்கள்:

“கூட்டுப் பொருளாதாரக் கொள்கைகளின் அடிப்படையில் முழு அளவில் திட்டமிடப்பட்ட பொருளாதாரம் உள்ள சமூகங்களில், பணத்தின் பயன்பாடு இன்றியமையாதது அல்ல, அதோட சில அறியப்பட்ட சந்தர்ப்பங்களில், பணத்தின் பயன்பாடு இல்லாமல் தான் இருந்துருக்கு. ஒரு சிறந்த ஆரம்பகால உதாரணம் பெருவை ஸ்பானிஷ் கைப்பற்றுவதற்கு முன்பு இருந்த இன்கா பேரரசின் ஆட்சி. பெருவியர்களுக்கு பணத்தைப் பற்றிய அறிவு இல்லை என்பதை நடைமுறையில் அனைத்து அதிகாரிகளும் ஒத்துக்குறாங்க. அந்த நாடு தங்கம், வெள்ளியால் நிறைஞ்சிருந்தாலும், இந்த உலோகங்கள் பரிமாற்ற ஊடகமாகவோ அல்லது மதிப்பைச் சேமிக்கும் ஊடகமாகவோ பயன்படுத்தப்படவில்லை, ஆனால் அலங்கார நோக்கங்களுக்காக மட்டுமே பயன்படுத்தப்பட்டன.

மக்கள்தொகையின் பொருளாதார நடவடிக்கைகளின் ஒவ்வொரு கட்டமும் அரசு அதிகாரத்தால் ஒழுங்குபடுத்தப்பட்டதால, மதிப்பின் தர அளவுகோலின் படி கட்டணம் செலுத்துறதுக்கான ஊடகத்துக்கு தேவையே இல்லை. தொட்டில் முதல் கல்லறை வரை மக்களின் வாழ்க்கை திட்டமிடப்பட்டுருக்கு. தொடர்ந்து சேகரிக்கப்பட்ட புள்ளிவிவரங்களின் அடிப்படையில், கஸ்கோவில் உள்ள மத்திய நிர்வாகம், ஒவ்வொருவரும் என்ன உற்பத்தி செய்ய வேண்டும், அவர்களின் பொருட்கள் எவ்வாறு ஒதுக்கப்பட வேண்டும் என்பதை மிக நுணுக்கமாக நிர்ணயிச்சுருக்கு. பொருட்களின் உற்பத்தியிலும், விநியோகத்திலும் பணம் வரவில்லை. உணவு, துணி போன்றவற்றின் உற்பத்தியாளர்கள், தங்கள் உற்பத்தியில் ஒரு குறிப்பிட்ட பங்கை அரசியல் மற்றும் மத அதிகாரிகளிடம் ஒப்படைக்க வேண்டியிருந்தது, மேலும் உற்பத்தியில் நேரடியாகப் பங்கேற்காதவர்களின் தேவைகளை அரசு நிறைவேற்றியது. இலாப நோக்கமோ தனிப்பட்ட முன்முயற்சியோ இல்லை. ஊதியம், சம்பளம் போன்றவை காணப்படவில்லை. ஏதேனும் ஒரு கெடுவாய்ப்பால் அவங்க வேலை செய்யும் திறனை இழந்திருந்தாலும், அனைவருக்கும் போதுமான அளவு வழங்க உரிமை உண்டு. அவ்வப்போது உடைமைகள் மறுபகிர்வு செய்யப்பட்டன, இதனால் ஒரு தரப்படுத்தப்பட்ட மதிப்பின் சேமிப்பகத்தைப் பயன்படுத்துவதற்குக் கூட வாய்ப்பு இல்லை, இருப்பினும் அலங்காரப் பொருட்கள் உண்மையில் அதை வாங்கக்கூடியவர்களால் சேமிக்கப்பட்டன. குறைந்த அளவு பண்டமாற்று இருந்தது. அந்த இந்தியர்களுக்கு "வாங்குவது அல்லது விற்பது பற்றி எதுவும் தெரியாது, பணம் இல்லாததால், அவர்கள் ஒரு உணவை இன்னொரு பொருளுக்கு மாத்துனாங்க.

ஸ்பானிஷ் வெற்றியின் போது இன்கா நாகரிகம் அடைந்த உயர் நிலையைக் கருத்தில் கொண்டு, பணம் இல்லாதது நிச்சயமாக முன்னேற்றத்திற்கு ஒரு தடையாக இருக்கவில்லை. உண்மையில், வெற்றியாளர்களால் கண்டுபிடிக்கப்பட்ட கட்டிடங்கள், சாலைகள், பாலங்கள் போன்றவை பொருளாதார, தொழில்நுட்ப முன்னேற்றத்தின் மிகவும் முன்னேறிய கட்டத்தைக் குறிக்கின்றன. திட்டமிடப்பட்ட பணமில்லா பொருளாதாரம் இதற்கு முன்னோ அல்லது பின்னரோ வேறு எந்த நிகழ்விலும் இவ்வளவு முன்னேறிய நிலைக்கு கொண்டு செல்லப்பட்டதாக அறியப்படவில்லை”

 

 

(தொடரும்)

 

 

 

 

 

 

No comments:

Post a Comment

உலக சமத்துவமின்மை அறிக்கை 2026 (WIR 2026)

  உலக சமத்துவமின்மை ஆய்வகம் 2026ஆம் ஆண்டுக்கான உலக சமத்துவமின்மை அறிக்கையை வெளியிட்டுள்ளது. இதற்கு முன்  2018, 2022லும் உலக சமத்துவமின்மை அற...