நாகரிகம், பண்பாடு ஆகிய இரண்டு சொற்களுமே ஒரே பொருளுடையதாக, ஒன்றுக்கொன்று மாற்றத்தக்கதாக பயன்படுத்தப்படுகிறது. நாகரிகமும், பண்பாடும் ஒன்றுக்கொன்று தொடர்புடையவை என்ற போதிலும் அவை இரண்டையும் ஒரே பொருள்படும் விதத்தில் பயன்படுத்துவது தவறான புரிதலுக்கே வழி வகுக்கும்.
ஒரு சமூகத்தின் நாகரிகம்
என்பது அந்த சமூகத்தின் பொருளாயதக் கட்டமைப்பு, உற்பத்தி- பொருளாக்க நிலை, உள்கட்டமைப்பு,
அறிவியல் தொழில் நுட்பம், வணிகமயம், நகரமயம், நவினமயம் ஆகியவற்றின் வளர்ச்சி நிலையைக்
குறிப்பிடுவதாக உள்ளது. நாகரிகம் என்பது உற்பத்தி சக்திகளின் வளர்ச்சி நிலையுடன் நேரடித்
தொடர்புடையதாக உள்ளது. உற்பத்தி சக்திகள் என்றால் என்ன? ஒரு சமூகம் தனது தேவைகளை உற்பத்தி
செய்வதற்குத் தேவையான நிலம், இயற்கைவளங்கள், உற்பத்திக் கருவிகள், எந்திரங்கள், உழைப்புச்சக்தி
ஆகியவற்றையே உற்பத்திச் சக்திகள் என்கிறோம்.
பண்பாடு என்பது ஒரு சமூகத்தில்
உள்ள மக்களின் உறவுமுறைகளான சமூக உறவுகள், குடும்ப உறவுகள், இயற்கையுடனான உறவுகள்,
பழக்கவழக்கம், மரபுகள், நம்பிக்கைகள், நன்னெறிகள், மொழி, சமூக ஒழுக்கம் கட்டுப்பாடுகள்,
ஆகியவற்றின் அடிப்படையில் பெறப்படும் சமூக மதிப்பீடுகள், அகம், புறம் சார்ந்த பகிரப்பட்ட
மதிப்பீடுகள், கூட்டு அடையாளங்கள், கூட்டுணர்வுநிலை இவற்றின் வளர்ச்சி நிலையைக் குறிப்பிடுவதாக
உள்ளது. பண்பாட்டு வெளிப்பாடுகளான உடை, உணவு, விருந்தோம்பல், கலை வெளிப்பாடுகளான இசை,
நடனம் போன்றவை கலாசாரத்தின் கூறுகளாக உள்ளன. பண்பாடு என்பது சமூகத்தின் உற்பத்தி உறவுகளின்
கட்டமைப்பின் அடிப்படையில் பெறப்பட்டவையாக
உள்ளன. உற்பத்தி உறவுகள் என்றால் என்ன? சமூகத்துக்கான உற்பத்தி, விநியோகத்தில் ஈடுபடும்போது
மனிதர்கள் ஒருவருக்கு ஒருவர் ஏற்கும் உறவுகளையே உற்பத்தி உறவுகள் என்கிறோம். எடுத்துக்காட்டாக
ஆதிப் பொதுவுடைமை சமூகத்தில் காணப்பட்ட கூட்டுறவுகள், அடிமை சமூகத்தின் உற்பத்தி உறவுகளான
எஜமானர், அடிமை உறவு, நிலப்பிரபுத்துவ சமூகத்தின்
உற்பத்தி உறவுகளான, நிலப்பிரபு, பண்ணையடிமை உறவு, முதலாளித்துவ சமூகத்தின் உற்பத்தி
உறவுகளான முதலாளி, தொழிலாளி உறவு ஆகியவற்றையே உற்பத்தி உறவுகள் என்கிறோம்.
சமூகத்தின் பரிணாமத்தில்
உற்பத்திச் சக்திகளின் வளர்ச்சியின் போது சமூகத்தின் சொத்துடைமை அமைப்பிலும் மாற்றம்
ஏற்படுகிறது. பொதுவுடைமை சமூகம் வர்க்கப் படி நிலைகளால் பிளவுண்ட தனியுடைமை ஆணாதிக்க
சமூகமாக மாறுவதே நாகரிக சமூகத்தின் தோற்றுவாயாக
உள்ளது. பல்வேறு இனக்குழுக்களைச் சேர்ந்த மக்கள் ஒரு மொழி வழி தேசிய இனமாக தங்களை இனங்காண
நாகரிக வளர்ச்சி உதவியுள்ளது. ஆனாலும் கூட நாகரிக சமூகத்தின் வளர்ச்சி என்பது தனிச்
சொத்துடைமையின் வளர்ச்சியாகவே உள்ளது. சமூக நலன்களுக்கு முரணான விதத்தில் சுயநலன்களுக்கு
மட்டுமே முன்னுரிமை அளிக்கும் தனிநபர்களின் கூட்டங்களாகவே நாகரிக சமூகங்கள் வளர்ந்துள்ளன.
வர்க்கங்களாக பிளவுபட்ட நாகரிக சமூகத்தின் பண்பாடும் பிளவுபட்டதாக பிறழ்ந்த நிலையில் உள்ளது. ஆதிப் பொதுவுடைமை சமூகத்தில் கூட்டுயிரிகளாக வாழ்ந்த மனிதர்களின் கூட்டுணர்வு நிலை என்பது உள்ளார்ந்ததாகவும், முழுமையானதாகவும் உள்ளது. நாகரிகமடையாத காட்டுமிராண்டிகள் வாழ்ந்த ஆதிப் பொதுவுடைமை சமூகங்களில் சிலர் அல்லது பலரை பட்டினி போட்டுவிட்டு பலர் அல்லது சிலர் விருந்தாடும் வழக்கத்தைப் பார்க்கவே முடியாது. கிடைத்ததை அனைவரும் பகிர்ந்துண்ணும் வழக்கம் தான் இருந்தது. ஆனால் நவின நாகரிக சமூகம் அவனவன் பட்டினி கிடப்பது அவனவன் தலைவிதி என்று நலுவி கூட்டுப் பொறுப்பை கைகழுவி மக்கள் பட்டினி கிடப்பதை மனசாட்சியே இல்லாமல் வேடிக்கை பார்க்கிறது, இல்லை மனிதர்களின் தன்மானத்தை கொலை செய்யும் விதமாக பிச்சை போட்டு மனிதர்களை பிச்சைக் காரர்களாக்கி அதை மனித நேயம் என்ற பேரில் வீடியோ எடுத்துபோட்டுக் காட்டி ஈனத்தனமாகக் கொடை வள்ளல் பட்டத்தை வாங்கிக் கொள்கிறது. தனி நபர்களின் தன்னலப் போட்டியின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்ட நவின முதலாளித்துவ சமூகத்தில், பிளவுப்பட்ட வர்க்கங்களின் சமூக உணர்வானது உள்ளார்ந்ததாக இல்லை, மேம்போக்கானதாக வெறும் மேற்பூச்சாக, உள்ளதே ஒழிய முழுமையான கூட்டுணர்வாக இல்லை. நாகரிக முதலாளித்துவத்தை நிலை மறுத்து அதன் வாயிலாக வர்க்கப் பிளவிற்கும், ஆணாதிக்கத்திற்கும்பொது நலனுக்கு இணக்கமான தன்னலத்துடன் கட்டமைக்கப்படும் சோசலிசத்தைக் மூலமே சமூகத்தின் முழுமையான கூட்டணர்விற்கான பண்பாடு மலர்ச்சியடையும். நாகரிகத்தால் சிதைந்த சமூகப் பண்பாட்டை சோசலிசத்தால் செழிப்பாக்குவோம்.

No comments:
Post a Comment