Tuesday, January 28, 2025

சூதாடும் காட்டேரி (186)

 

பண்டைய கால மெசபடோமியா, கிரேக்கம், ரோம்ல இருந்த நிதியமைப்புகளைப் பத்தியெல்லாம் ஏற்கெனவே பாத்துட்டோம். இருந்தாலும் விடுபட்ட சில விசயங்களை மட்டும் இப்போ சொல்லிடுறேன். கிரேக்கத்துல கி.மு. நான்காம் நூற்றாண்டுல, தனியார் வங்கி ஒரு முக்கிய பங்கை வகிக்கத் தொடங்கிருக்கு. "ட்ரெபெசிடாய்" என அழைக்கப்பட்ட வங்கியாளர்கள், பணப் பரிவர்த்தனையில ஈடுபட்டுருக்காங்க.  வைப்புத்தொகைகளை வாங்கிருக்காங்க, அதுலேருந்து தனிநபர்களுக்கும், அரசுகளுக்கும் கடன்களை கொடுத்துருக்காங்க, வெளிநாட்டுக்கு பணத்தை அனுப்புச்சுருக்காங்க, வருவாய்களை சேகரிச்சிருக்காங்க, கடன்  கடிதங்களையும் (letters of credit) பண அஞ்சல்களையும் (money orders) வழங்கிருக்காங்க, காசோலைகளுக்கு பணம் வழங்கிருக்காங்க, வங்கிப் பரிவர்த்தனைகளின் முழுமையான கணக்குகளையும் பதிவுசெஞ்சு வெச்சுருக்காங்க. கப்பல் சரக்குகளுக்கு மேல கடன்களை கொடுத்துருக்காங்க, அடகுக்கடனும் கொடுத்துருக்காங்க, நிலக்கடனும் கொடுத்துருக்காங்க. பிணையமில்லாம கடன் கொடுக்குறது வழக்கமாயிடுச்சு. கி.மு. மூன்றாம் நூற்றாண்டுல கிரேக்கத்துல நிதியமைப்பு நல்லா வளர்ச்சியடைஞ்சு இருந்துச்சு. கடனைப் பயன்படுத்துறது பொதுவாக ஆயிடுச்சு. ஒரு காலத்துல நிலக்கடன் வாங்க பயந்தாங்க, ஆனா கி.மு. 200 வாக்குல, குறிப்பா சிறு விவசாயிகள் மிதமான வட்டி விகிதத்துல பணத்தைக் கடன் வாங்குவதற்கான வசதியான வழிமுறையா நிலக்கடன் கருதப்பட்டுச்சு.

ரோமை பொருத்தவரைக்கும் அதன் ஆரம்ப காலகட்டத்துல நிலத்தைப் பிணையமா வெச்சு கொடுக்குற கடனைத் தவிர ஒழுங்கமைக்கப்பட்ட நிதி செயல்பாடு அல்லது கடன் பத்தி ரொம்ப கொறைஞ்ச ஆதாரங்கள் தான் நமக்கு கெடைச்சிருக்கு. ரோமுல பெரிய வங்கி நிறுவனங்கள் காணப்படல. இருந்தாலும்கூட, வெளிநாட்டு வணிகர்களின் செயல்பாட்டை அரசு ஊக்குவிச்சுருக்கு, அவங்களோட வசதிக்காக பணச் சாவடிகளை வாடகைக்கு எடுத்துருக்கு. வங்கியாளர்கள் கிரேக்கப் பெயரால "டிரேப்சிடா"னு அழைக்கப்பட்டாங்க, அவங்க பெரும்பாலும் கிரேக்கர்களாக இருந்துருக்கலாம். அவங்க நம்பிக்கையோட பெரிய தொகைகளையெல்லாம் வட்டிக்குக் கடன் கொடுத்துருக்காங்க, வைப்புத் தொகைக்கு வட்டி கொடுத்துருக்காங்க, பணத்தை மாத்திருக்காங்க, ஏஜெண்டுகளாக பணத்தை வாங்கி வித்துருக்காங்க, அப்பொறம் மாகாணங்கள்ல முகவர்களை வெச்சு வெளிநாட்டு வரைவோலைகளை வெளியிட்டுருக்காங்க. மன்னர் சிசரோ எக்னேஷியஸ் வங்கியில் ஒரு கணக்கை வெச்சிருந்தாரு, அவரது வங்கியாளர்களுக்கு வரைவோலை மூலமா பணம் செலுத்தியிருக்காரு. கிமு முதல் நூற்றாண்டுல, ரோம் உலகின் நிதி மையமாக இருந்துச்சு. ஆனாலும்கூட, வங்கி நிறுவனங்கள் இன்னும் பெருசா வளரவும் இல்ல, அறியப்படவும் இல்லை. ரோமானிய சட்டம் வணிக, நிதி நோக்கங்களுக்காக வரையறுக்கப்பட்ட பொறுப்பு நிறுவனங்களை (LLC) கட்டுப்படுத்தியதால் இப்புடி நடந்திருக்கலாம். இருந்தாலும் கூட, வரையறுக்கப்பட்ட பொறுப்பு கொண்ட கூட்டு பங்கு நிறுவனங்கள் பொது திட்டங்களுக்கு நிதியளிக்க அனுமதிக்கப்பட்டுருக்கு. கிமு 179 க்குப் பிறகு "படைவீரர்களால்" உருவாக்கப்பட்ட இத்தகைய நிறுவனங்கள் வரி வசூலிக்கிறதுக்கும், பொதுப் பணிகளை நிர்மாணிப்பதுக்கும் ஒப்பந்தம் செஞ்சுருக்கு. கிமு இரண்டாம் நூற்றாண்டின் பிற்பகுதியில, ஆசிய வரி வசூல் செய்யப்பட்டபோது அவை முக்கியத்துவம் பெற்றுருக்கு. அதுக்கப்புறம் கைப்பத்தப்பட்ட மாகாணங்கள்ல இலாபகரமான வணிகத்திற்கான விரிவான வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுருக்கு, குறிப்பாக நிலத்து மேல கடன்களை கொடுக்கப்பட்டுருக்கு அப்புறம் நகரங்களுக்கு அல்லது வரி செலுத்தாத தனிநபர்களுக்கு கடன் கொடுபக்கப்பட்டுருக்கு. இத்தகைய மாகாண முதலீடுகள்ல பரந்த விரிவாக்க காலம் கிமு முதல் நூற்றாண்டுலயும் தொடர்ந்துருக்கு. "பேரம்பேசுற" இத்தாலிக்காரங்க எல்லா இடத்துலயும் இருந்துருக்காங்க, அநேகமா அதுல கொஞ்ச பேரு தான் ரோமானியர்களா இருந்துருக்காங்க. இந்த காலகட்டத்துல பணக்கார ரோமானியர்கள் அடிக்கடி கடன் வாங்கி ஆசிய கடன்களில் முதலீடு செஞ்சுருக்காங்க, ஆனால் இதை பொதுவா முகவர்கள் மூலம் கமுக்கமா செஞ்சுருக்காங்க. ஆசியாவுல ஏற்பட்ட எந்தவொரு கடுமையான பேரழிவும் ரோமில் பீதியை ஏற்படுத்துச்சுன்னு சிசரோ சொன்னது இங்க குறிப்பிடத்தக்கது. இந்த தகவல்கள் எல்லாம் சிட்னி ஹோமரின் “A History of interest rates” புத்தகத்துலேருந்து கெடைச்சுச்சு.

(தொடரும்)

 

No comments:

Post a Comment

உலக சமத்துவமின்மை அறிக்கை 2026 (WIR 2026)

  உலக சமத்துவமின்மை ஆய்வகம் 2026ஆம் ஆண்டுக்கான உலக சமத்துவமின்மை அறிக்கையை வெளியிட்டுள்ளது. இதற்கு முன்  2018, 2022லும் உலக சமத்துவமின்மை அற...