பொம்மைகளின்
புரட்சி (39)
குக்கு: ஆமாம்பா அது தான் சரி, ஹும்… நீ என்னமோ ஆந்தைய காதலிச்சதா
சொன்னியே… அந்த கதையை இப்ப சொல்லு கேப்போம்…
குக்குவோட அப்பா: சொல்லிடுவோம்… அப்போ குக்குவோட அப்பா குக்கு மாதிரி குட்டிப்
புள்ளையா கொழந்தையா இருந்துருக்கான்… அந்த கட்ட பைய வீட்டுல ரொம்ப சேட்ட
பண்றானேன்னு அம்மா அப்பா அவன பால்வாடில சேத்துவுட்டாக… வீட்டுல பண்ற ரகளையெல்லாம்
பால்வாடில பண்ணமுடியாது இல்லையா அதுனால கட்ட பைய மொதல்ல புடிக்காமத் தான்
பால்வாடிக்கு போனான்… அங்க அனா, ஆவனா; ஏ, பி, சி,டி எல்லாம் சொல்லிக் குடுத்தாக.
செவத்துல ஒட்டியிருந்த பெரிய படத்தைக் காட்டித் தான் அம்மா, ஆடு எல்லாம் சொல்லிக்
கொடுத்தாக… இங்கிலீஷுல ஏ, பி, சி, டி சொல்லிக்கொடுக்கும் போது ஒ ஃபார் அவ்ல்-னு
சொல்லிக் கொடுத்தாக… அவ்ல்னா ஆந்தை. அவுக ஆந்தைய சொல்லிக் கொடுக்குறதுக்கு
முன்னாடியே கட்டப்பைய ஆந்தைய பாத்துட்டான். ஏன்னா அங்க இருந்த படங்கள்ல ஆந்தைய
தவுர வேற எதுவுமே அவன் கண்ணுக்குத் தெரியல… ஆந்தைய பாத்ததுமே அவன் தலையிலயும்,
கண்ணுலயும் பிரகாசமா பல்பு எரிஞ்சுது… “பார்த்த விழி பார்த்தபடி பூத்து இருக்க; காத்திருந்த
காட்சி இங்கு காணக் கிடைக்க” அவனும் ஆந்தை மாதிரி முழி, முழின்னு முழிச்சு பக்கு
மாதிரி ஆந்தைய பாத்துக்கிட்டுருந்தான்… அப்புறம் தெனமும் ஆந்தைய பாக்குறதுக்காகவே
பால்வாடிக்குப் போனான்… இப்புடித்தான் எல்லாம் ஆரம்பிச்சுது…
அப்புறம் அவனுக்கு ஒரு 10 வயசு இருக்கும் போது அம்மா, அப்பா அவனுக்கு
ஒரு கதைப்புத்தகம் வாங்கிக் கொடுத்தாங்க. அந்த புத்தகத்தோட தலைப்பு என்ன தெரியுமா?
பாடும் சிறகுகள்… தலைப்பே என்ன அழகா இருக்கு பாத்தியா… பாடும் சிறகுகள்
புத்தகத்துல குழந்தைகளுக்கான ரஷ்ய கதைகள தமிழ்ல மொழிபெயர்த்து போட்டுருந்தாங்க,
அந்த புத்தகம் ராதுகா முன்னேற்றப் பதிப்பகத்தால வெளியிடப்பட்டுருந்துச்சு… அந்த புக்கத்துல
உள்ள குட்டி குட்டி கதைகளுக்கு ரொம்ப அருமையா படங்கள் வரைஞ்சுருப்பாங்க… அந்த புத்தகத்துல நட்ட நடுப்பக்கத்துல தான்
அந்த கதை இருந்துச்சு… அந்த கதையில ஒரு ஆந்தைக் குஞ்சு பகல்ல கண்ணு தெரியாம அவுங்க
அம்மாவை காணோம்னு தேடிக்கிட்டுருக்கும், யாராச்சும் எங்க அம்மாவ பாத்தீங்களான்னு
கேக்கும்… ஒங்க அம்மா யாரு, அவுங்க எப்புடி இருப்பாங்கன்னு சொல்லுன்னு ஒரு காக்கா
கேக்கும்… அதுக்கு அந்த ஆந்தைக்குஞ்சு எங்கம்மா ரொம்ப அழகா இருப்பாங்க… இந்த
உலகத்துலே எங்கம்மா தான் ரொம்ப ரொம்ப அழகானவங்க, அவுங்க கண்கள் ரொம்ப பெருசா அழகா
இருக்கும்னு பதில் சொல்லிருக்கும்… அதுக்கு பொருத்தமா நடுப்பக்கத்துல நடு நாயகமா அழகா
அம்சமா அந்த ஆந்தை ரெக்கை ரெண்டையும்
விரிச்சுகிட்டு நம்மள வசீகரமா பாத்துக்கிட்டுருக்கும்… அந்த ஆந்தைய பாக்கும் போது
என் மனசெல்லாம் நெறைஞ்சுருச்சு… நேரம் கெடைக்கும் போதெல்லாம் அந்த கதைய திரும்ப
திரும்ப படிப்பேன்… அந்த ஆந்தைய திரும்ப திரும்ப பாப்பேன்… அப்போ எல்லாம் எனக்கு
வேற எதுவுமே வேணாம்… அந்த ஆந்தைய பாத்துக்கிட்டுருந்தாளே போதும்னு தான் தோணும்…
அது என்னமோ தெரியலை “கண்ணன்
முகம் கண்ட கண்கள் மன்னன் முகம் காண்பதில்லை”னு ஒரு பாட்டு வரி
இருக்கு பாத்தியா அந்த மாதிரி தான் எனக்கு ஆந்தைய பாத்த பிறகு வேற யாரையும்
ஏறெடுத்து பாக்கணும்னே தோணலை…
அப்பொறம் கொஞ்ச காலம் கழிச்சு நான் ஒரு காதல் கவிதை எழுதுனேன்
ஆந்தை:
அழகின் அழகான என்னவளை நீங்கள் பார்த்ததுண்டா...
அவளைக் கண்ணோடு கண்நோக்கிக் கண்டதுண்டா...
இரவு பகலெனக் காலமெலாம் நீளும் அவள் பார்வையை உணர்ந்ததுண்டா...
வான்விரிந்த ஆழ்கடலென எல்லையற்று மயக்கி
வசியம் செய்யும் அந்த காந்தக் கண்கள் உங்களைக் கவர்ந்ததுண்டா...
அந்த நிலவும் ஜொலிக்கிறாள் அவள் கண்களைக் கண்டே....
அந்த ஆதவனும் சிவக்கிறான் அவள் கண்களைக் கண்டே....
அழகின் அழகான அவள் கண்கள் என் கண்களை நோக்கும்
ஒவ்வொரு முறையும் நான் உறைந்து உறைந்து உயிர்க்கிறேன் தெரியுமா...
அவளைப் பார்த்தாலே பரவசம் பரவுதே
பார்வை ஒன்றே போதுமே என்று அவளைப் பார்த்தல்லவா பாட வேண்டும்...
மீண்டும் மீண்டும் மனம் ஏங்குதே அவள் பார்வைக்காக...
அவள் மணித் தலை 270 பாகையில் சுற்றும் போது
இந்த பூமியும் நானும் சேர்ந்தல்லவா அவளைச் சுற்றுகிறோம்...
காலமெல்லாம் அவள் கண்களைக் கண்ணாரக் காணவே
நான் காத்து காத்துக் கிடக்கிறேன்... என்ன புதுமை…
அவளின் பஞ்சிறகை, பந்தெனும் பட்டுடலைக்
கோதிக் கொடுக்கவே இந்தக் கைகளைக் கொண்டிருக்கிறேன்...
ஆனால் அவளோ என்னைக் கண்டும் காணதது போல்
பறந்து செல்கிறாளே... என்ன கொடுமை…
நிலவொளியில் மட்டுமே அவள் காணக் கிடைப்பாள்...
எங்களிருவருக்கும் இரவு பகல் வேறு வேறு...
என்னவளுக்கு இரவே பகலாம், பகலே இரவாம்...
நான் இரவெல்லாம் வெளியில் விழித்திருப்பேன் அவளைக் காண...
இருட்டில் எனக்குக் கண்கள் தெரியாது...
என்னவளுக்கோ பகலில் கண்கள் தெரியாது...
அவள் கண்களைக் கூசச் செய்யும் ஆதவன் மீது எனக்குத் தீராத கோபம்...
அய்யோ கொடிதினும் கொடிதடா எங்கள் காதல்...
இரவும் பகலுமே எம் காதலுக்குத் தடையானதே...
இது என்ன நியாயம்..என்னவளை நீங்கள் பார்த்தீர்களானால்...
உங்களை நான் எச்சரிக்கிறேன்...
அவள் கண்கள் உங்களைக் கொள்ளை கொள்ளும்..
.பிறகு உங்களுக்கும் என் கதி தான் ஜாக்கிரதை....
(தொடரும்)
No comments:
Post a Comment