Saturday, November 18, 2023

சூதாடும் காட்டேரி (76):

 

சில சந்தர்ப்பங்களில் சிறைப்படுத்துவதற்கு தடை:

கடனை ஒப்புக்கொள்ளாதபோது பலவந்தமான முறைகளை பிரயோகிப்பதைத் தடுக்கும் விதி பலவந்தமான முறைக்கு கடனாளி உள்ளாகவேண்டுமா என தேர்வுசெய்யவேண்டியதை கடனாளியிடமே விட்டுவிடுகிறது. கடனாளி கடனை ஒப்புக்கொள்ளமறுக்கலாம் அல்லது நீதிமன்ற விசாரணையைக் கோரி கடனளித்தவர் சட்டபூர்வமாக பலவந்தமான முறையைக் கையாளுவதற்கான உரிமையை இழக்கச்செய்யலாம்.

மேற்கூறிய விதி கடனைத்திரும்பப் பெறுவதற்கான ரோமானிய XII அட்டவணைகளின் சட்டத்திலிருந்து முரண்படுகிறது. ரோமானிய XII அட்டவணைகளின் சட்டத்தின்படி ரோமில் கடனளித்தவர் கடனாளியை சாகடிக்கலாம், அல்லது திபெர் நதியின் எல்லைக்கு அப்பால் உள்ள முன்பின் தெரியாதவரிடம் கூட விற்கலாம் அல்லது கடன் கொடுத்தவர்கள் பலராக இருந்தால் மூன்றாம் சந்தைநாளில் அவர்கள் கடனாளியின் உடலைத் தங்களுக்குள் பிரித்துக்கொள்ளலாம்.

சிறையில் அடைப்பதிலிருந்து காப்பு அளிக்கும் நாரதர் மற்றும் கௌடில்யரின் விதியானது தன்நலத்துக்கு முன் பொதுநலனுக்கு முன்னுரிமை அளிக்கிறது. ஒரு விவசாயியை அறுவடைப் பருவத்தில் சிறைப்படுத்தி தன்னுடைய நிலங்களில் அவர் விவசாயம் செய்வதைத் தடுக்கும்போது, இயல்பாகவே உணவு தானியங்களின் உற்பத்தியில் இழப்பு ஏற்படும். அது அந்த விவசாயியின் சுய இழப்பு மட்டுமல்ல, அது அரசுக்கு ஏற்பட்ட இழப்புமாகும். அதே போல் அரசுப் பணியாளர்களை அவர்கள் தங்களின் அலுவலகக் கடமைகளில் ஈடுபட்டுள்ளபோது சிறைப்படுத்தும்போது பொதுநலன் பாதிக்கப்படும். கடன் கொடுத்தவரின் சுயநலனை விட மனிதாபிமானமே முக்கியம் என சட்டமியற்றுபவர்கள் கருதியதால் அந்த அடிப்படையில் மற்ற சந்தர்ப்பங்களிலும் சிறையில் அடைப்பதிலிருந்து காப்பு அளிக்கப்பட்டுள்ளது. பிரதிவாதிக்கு எதிர்வழக்கு அல்லது உரிமைகோரல் இருந்தால் அவரை சிறைபடுத்தக்கூடாது என்பதையே இன்னொருவரால் குற்றம்சாட்டப்பட்டவரை சிறைபடுத்தக்கூடாது என்பது குறிக்கிறது. கடனாளி நிதிநெருக்கடியில் இருக்கும்போது தவணைமுறையில் கடனை அடைப்பதை அனுமதிப்பதை சட்டம் கட்டாயமாக்கியுள்ளது. இந்த தத்துவம் குற்றப்பிரிவு சட்டநெறியின் இருபதாவது ஆணையின் இரண்டாவது விதியில் சேர்க்கப்பட்டுள்ளது. 

 கடன்களின் முன்னுரிமை குறித்த விதி:

ஓரு நபர் பல கடன்களை வாங்கியிருக்கும்போது அவற்றைத் திரும்பப்பெறுவதில் அல்லது வசூலிப்பதில் முன்னுரிமையை முடிவுசெய்வதற்கான வழிமுறையை ஸ்மிரிதிகளில் உள்ள உரைகள் வழங்கியுள்ளன. பல கடன்கள் எழுத்துப்படி ஒரே நாளிலே அளிக்கப்பட்டிருந்தால் அதற்கான, பாதுகாப்பு, பிணையம், அனுபவிப்பது ஆகியவற்றை கருதும்போது அரசன் அனைத்துக் கடன்களையும் சமமாக நடத்தவேண்டும். கடன்கள் ஒரே நாளிலேயே அளிக்கப்படாத மற்ற சந்தர்ப்பங்களில் கடன்கள் அளிக்கப்பட்ட நாட்களின் வரிசைக்கிரமப்படி கட்டப்படவேண்டும். கடன்கள் பலவாக இருக்கும் போது முதலில் பெற்றக் கடனையே முதலில் அடைக்கவேண்டும்.

(தொடரும்)

 

No comments:

Post a Comment

உலக சமத்துவமின்மை அறிக்கை 2026 (WIR 2026) (2)

  பிரதேசங்களுக்கு இடையிலான சமத்துவமின்மை: உலகளாவிய சராசரிகள் பிரதேசங்களுக்கு இடையிலான மிகப்பெரிய பிளவுகளை மறைக்கின்றன . உலகம் தெளிவ...