சமத்துவமின்மை என்பது வருமானம், சொத்து அல்லது சுற்றுச்சூழல் மாசுபாடு தொடர்பான ஒரு கேள்வி மட்டுமல்ல. அது அன்றாட வாழ்வின் கட்டமைப்புகளிலும் ஆழமாகப் பதிந்துள்ளது; யாருடைய உழைப்பு அங்கீகரிக்கப்படுகிறது, யாருடைய பங்களிப்புகளுக்குப் பலன் அளிக்கப்படுகிறது, யாருடைய வாய்ப்புகள் கட்டுப்படுத்தப்படுகின்றன என்பதை இது வடிவமைக்கிறது.மிகவும் பரவலானதாகவும், நீடித்தும் காணப்படுகின்ற ஏற்றத்தாழ்வுகளில் ஒன்று ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையிலான இடைவெளி ஆகும்.
உலக
அளவில், மொத்த தொழிலாளர் வருமானத்தில் பெண்களின் பங்கு கால் பகுதிக்கும் சற்று அதிகமாகவே
உள்ளது; 1990-ஆம் ஆண்டிலிருந்து இந்த விகிதத்தில் பெரிய மாற்றம் ஏற்படவில்லை. பிராந்தியங்களின்
அடிப்படையில் பகுப்பாய்வு செய்யும்போது, மத்திய கிழக்கு, வட ஆஃப்ரிக்காவில் பெண்களின்
பங்கு வெறும் 16% ஆக உள்ளது; தெற்கு, தென்கிழக்கு ஆசியாவில் இது 20%; சகாரா, சஹாரா
சார் ஆஃப்ரிக்காவில் 28%; கிழக்கு ஆசியாவில் 34% ஆக உள்ளது. ஐரோப்பா, வட அமெரிக்கா,
ஓசியானியா, ரஷ்யா, மத்திய ஆசியா ஆகிய பகுதிகள் சிறப்பாகச் செயல்பட்டாலும், அங்கும்கூட
பெண்கள் தொழிலாளர் வருமானத்தில் சுமார் 40% மட்டுமே பெறுகின்றனர்.
பெண்கள் ஆண்களை விடத் தொடர்ந்து
அதிகமாக உழைக்கிறார்கள், ஆனால் குறைவாகவே சம்பாதிக்கிறார்கள். வீட்டு வேலைகளையும்,
பராமரிப்புப் பணிகளையும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும்போது, பெண்கள் ஆண்களை விட
அதிக நேரம் வேலை செய்கிறார்கள்; சராசரியாக ஆண்களின் 43 மணி வேலைநேரத்துடன் ஒப்பிடும்போது, பெண்கள் வாரத்திற்கு
53 மணி நேரம் வேலை செய்கிறார்கள். இருப்பினும், அவர்களின் உழைப்பு தொடர்ந்து குறைவாகவே
மதிக்கப்படுகிறது. ஊதியம் பெறாத வேலைகளைத் தவிர்த்துப் பார்த்தால், பெண்கள் ஆண்களின்
ஒரு மணிநேர வருமானத்தில் 61% மட்டுமே சம்பாதிக்கிறார்கள்; ஊதியம் பெறாத உழைப்பையும்
சேர்த்தால், இதன் அளவு வெறும் 32% ஆகக் குறைகிறது. இந்தச் சமமற்ற பொறுப்புகள் தொழிலில்
ஈடுபடுவதற்கான பெண்களின் வாய்ப்புகளைக் கட்டுப்படுத்துகின்றன,
அரசியல் பங்கேற்பைக் குறைக்கின்றன, சொத்துக் குவிப்பைக் குறைக்கின்றன. எனவே, பாலின
சமத்துவமின்மை என்பது நீதிக்கான ஒரு கேள்வி மட்டுமல்ல, ஒரு கட்டமைப்பு ரீதியான திறனின்மையும்
கூட: தங்கள் மக்கள்தொகையில் பாதியினரின் உழைப்பைக் குறைத்து மதிப்பிடும் பொருளாதாரங்கள்,
தங்கள் சொந்த வளர்ச்சியையும், மீள்திறனுக்கான திறனையும் பலவீனப்படுத்துகின்றன.
பெண்களால்
விகிதாசாரமற்ற முறையில் மேற்கொள்ளப்படும் கண்ணுக்குத் தெரியாத, ஊதியம் பெறாத
உழைப்பை நாம் கணக்கில் எடுத்துக் கொண்டால் பாலின சமத்துவமின்மையும் முற்றிலும்
வேறுபட்டதாகத் தெரிகிறது. ஊதியம் பெறாத வீட்டு வேலை, பராமரிப்பு வேலை
சேர்க்கப்படும்போது, இடைவெளி கூர்மையாக விரிவடைகிறது. ஊதியம் பெறாத மற்றும் ஊதியம்
பெறும் வேலைகள் இரண்டையுமே கணக்கில் கொள்ளும் போது சராசரியாக, பெண்கள் ஒரு மணி நேரத்தில்
ஆண்கள் சம்பாதிப்பதில் 32% மட்டுமே சம்பாதிக்கிறார்கள்; ஊதியம் பெறாத வீட்டு
வேலைகளைக் கணக்கிடாதபோது ஆண்கள் சம்பாதிப்பதில் 61% மட்டுமே சம்பாதிக்கின்றனர்.
இந்த கண்டுபிடிப்புகள் தொடர்ச்சியான பாகுபாட்டை மட்டுமல்லாது, சமூகங்கள் உழைப்பை
எவ்வாறு மதிப்பிடுகின்றன, ஒதுக்குகின்றன என்பதில் ஆழமான திறனின்மையையும்
வெளிப்படுத்துகின்றன.
பாலின சமத்துவத்தை முன்னேற்றுவதன்
மூலமும் வளர்ச்சி ஏற்படலாம். பாலின இடைவெளிகளைக் குறைப்பதற்கு, வேலை எவ்வாறு மதிப்பிடப்படுகிறது
, விநியோகிக்கப்படுகிறது என்பதை வடிவமைக்கும் கட்டமைப்புத் தடைகளை அகற்ற வேண்டும்.
மலிவு விலையில் குழந்தை பராமரிப்பு, தந்தையர்களை உள்ளடக்கிய பெற்றோர் விடுப்பு, பராமரிப்பாளர்களுக்கான
ஓய்வூதியக் கடன்கள் மூலம் ஊதியம் இல்லாத பராமரிப்புப் பணியை அங்கீகரித்து மறுபகிர்வு
செய்யும் கொள்கைகள், களத்தை சமன் செய்வதற்கு அவசியம். சம ஊதியத்தை கடுமையாக அமல்படுத்துவதும்,
பணியிட பாகுபாட்டிற்கு எதிராக வலுவான பாதுகாப்புகளும் சமமாக முக்கியம். இந்த ஏற்றத்தாழ்வுகளை
நிவர்த்தி செய்வதானது, வாய்ப்புகளும், வெகுமதிகளும் பாலினத்தால் அல்லாமல், பங்களிப்பாலும்,
திறனாலும் தீர்மானிக்கப்படுகின்றன என்பதை உறுதி செய்கிறது.
(தொடரும்)
No comments:
Post a Comment