1.சாதிய முதலாளி வர்க்கம்:
உலகெங்கும் உள்ள முதலாளித்துவ அரசுகள்
உள்நாட்டு மக்களுக்கு விரோதமான புதுத் தாராளமயக் கொள்கைகளைத் தான்
நடைமுறைப்படுத்திவருது. இதன் படி அந்நிய முதலீடுகளால் மட்டுமே தொழில் துறை வளர்ச்சியை ஏற்படுத்தமுடியும்
என்று நம்பவைக்கப்படுது. மூன்றாம் உலக நாடுகள்ல புதிய காலனியாதிக்க சுரண்டல்
வடிவங்களாகவே பன்னாட்டு நிறுவனங்களும், அந்நிய முதலீடுகளும் எந்த கட்டுப்பாடும்
இல்லாம பெருகி வருது. மத்தியில ஆட்சியில இருக்குற பாஜக இது வரை இல்லாத
அளவுக்கு வெட்கங்கெட்ட முறையில அந்நிய முதலீடுகளுக்கான கட்டுப்பாடுகளை நீக்கி பல
துறைகள்ல 100% அந்நிய முதலீடுகளை ஆதரிச்சு
வருது. தமிழ்நாட்டுலயும் மாறி மாறி ஆட்சிக்கு வர்ற கழகங்களும் இதே புது தாராளமய
மாடலைத் தான் கடைபிடிக்குறாங்க, திமுக, அதிமுக ஆகிய இரண்டு திராவிட முன்னேற்றக்
கழகங்களுக்கும் உள்நாட்டுல தொழில் வளர்ச்சியைப் பெருக்கி, வேலைவாய்ப்பின்மையைக்
குறைப்பதற்கு எந்த தனித்துவமான பொருளாதாரக் கொள்கையும் இல்லை. அதுனால மாற்று
நடைமுறைகள் என்ற பேச்சுக்கே இடமில்லாம போயிடுச்சு. பேருல திராவிட மாடல் என
இருந்தாலும் அதன் உள்ளடக்கமாக இருக்கக் கூடியது புதிய தாராளமயக் கொள்கைகள் தான்.
இன்றைய சூழ்நிலையில அந்நிய முதலீடுகளை
தவிர்க்கமுடியாது தான், ஆனா அதுக்காக உலகமெல்லாம் சுத்தி அந்நிய முதலீடுகளை
ஈர்க்கவேண்டியது அவசியமா? 2015ல உலக முதலீட்டார் மாநாட்டை ஜெயலலிதா தொடங்கி
வெச்சாங்க, இப்போ முதல்வர் மு.க.ஸ்டாலின் அதை தொடர்ந்து நடத்தி வர்றார். ஆனையை வித்து
பூனைய வாங்குன கதையா, அரசு அந்நிய முதலீடுகளுக்கு இயற்கை வளங்களைத் தாரை வார்த்து எக்கச்சக்கமான
சலுகைகளைக் கொடுத்தாலும் கூட அதன் மூலம் சொற்பமான வேலைவாய்ப்புகளை மட்டும் தான்
உருவாக்கமுடிஞ்சுருக்கு. இங்க உள்ள பன்னாட்டு நிறுவனங்கள் மேல அரசு எந்த
கட்டுப்பாடும் இல்லாத அளவுக்கு நெலைமை கைமீறிப் போயிடுச்சு. பன்னாட்டு
நிறுவனங்கள்ல வேலைசெய்யுறவங்களுக்கு அடிப்படையான தொழிற்சங்க உரிமை கூட
பறிக்கப்பட்டுருக்கு.
இந்த புதுத்தாராளமய கொள்கை நடவடிக்கைகள்
எப்பேற்பட்ட விளைவுகளைத் தந்தாலும் அதை விமர்சனம் இல்லாம ஏற்றுக்கொள்ளும் கட்சிகளா
தான் திமுக, அதிமுகவும் இருக்கு. பாஜகவைப் பத்தி சொல்லவே வேண்டியதில்ல.
உலகம் சுத்தி அந்நிய முதலீடுகளை
வரவேற்பதற்கு பதிலா உள்நாட்டுல கூட்டுறவு முதலீட்டு வடிவங்களில் புதிய நிறுவனங்களை
ஏற்படுத்துவதன் மூலம் தொழில்துறைகளை வளர்க்கமுடியும், இன்னும் கணிசமான
எண்ணிக்கையிலான நபர்களுக்கு வேலைவாய்ப்புகளை கொடுக்கமுடியும். இதன் பலன்கள்
அனைத்தும் உள்நாட்டு மக்களுக்கே கிடைக்கும். தமிழ்நாட்டுல விகிதாச்சார அடிப்படையில
3,327 மக்களுக்கு ஒரு கூட்டுறவு அமைப்பு செயல்படுது, கேராளாவில் 1,518 மக்களுக்கு
ஒரு கூட்டுறவு அமைப்பு செயல்படுது. தமிழ்நாட்டை விட கேரளாவுல கூட்டுறவு
அமைப்புகளின் எண்ணிக்கை கிட்டத்தட்ட 2.2 மடங்கு அதிகமா இருக்கு. தமிழ்நாட்டுலயும்
எல்லா துறைகளிலும், எல்லா இடங்களிலும் அதிக எண்ணிக்கையிலான கூட்டுறவு அமைப்புகளை
செயல்படுத்த ஆளும் கட்சிகள் முன் வரவேண்டும்.
கம்யூனிச ஆதரவாளராக இருந்ததால் தான் பெரியார் சோவியத் ரஷ்யாவுக்கு பயணம் மேற்கொண்டார். அதன் படி பெரியார் வழியில் நடந்திருந்தால் திராவிடக் கட்சிகள் சமூகநீதியின் பொருளை மேலும் விரிவுப்படுத்த முயற்சித்திருக்கவேண்டும். மக்களுக்கான பொருளாதாரக் கொள்கைகளுடன் சமூக நீதியின் பொருளை மேலும் விரிவுப்படுத்த முயற்சித்திருக்கவேண்டும். சரியான பொருளாதாரக் கொள்கைகள் இல்லாமல் சமூக நீதியை நடைமுறைப்படுத்தவே முடியாது. சரி சமூக நீதியின் பொருளை விரிவுபடுத்தலைனாலும் பரவாயில்ல, பெரியார் அளவுக்காவது சமூக நீதியை கடைபிடிச்சாங்களா, அதுவும் இல்லையே சமூக நீதியின் பொருளையே சுருக்கிட்டாங்களே. தங்களோட சந்தர்ப்பவாத அடையாள அரசியலுக்குத் தகுந்தாற் போல் சமூகநீதியை சுருக்குப்பையாக்கிட்டாங்களே. நானும் கம்யூனிஸ்டு தான், நான் மாஸ்கோவுக்குச் செல்வேன் மலென்கோவை சந்திப்பேண்ணு அண்ணா சொன்னாரு. ஆனா எல்லாம் பேச்சு மட்டும் தான் கொள்கை நடைமுறைகளுக்கு அவை வரவேயில்லை. அண்ணா ரெண்டு ஆண்டு தான் முதலமைச்சரா இருந்தாரு. அதுனால எல்லா பழியையும் அவர் மேல போடுறது அநியாயமாப் போயிடும். கலைஞரின் கம்யூனிச ஆதரவு என்பது தன் பிள்ளைக்கு ஸ்டாலின் என்று பேர் வைப்பதாகவும், கம்யூனிஸ்ட் கட்சிகளின் செல்வாக்கை ஒழிப்பதாகவும் தான் இருந்தது. மொத்தத்துல இடதுசாரி பொருளாதாரக் கொள்கைகளால் சமூக நீதியை முழுமையாக்காமல் ஊழல் மலிந்த முதலாளித்துவக் கட்சிகளாக வளர்ந்த திராவிட முன்னேற்றக் கழகங்களால் தமிழ்நாட்டு மக்களுக்கு சொல்லும் படியாகக் கெடைச்சது 69% இட ஒதுக்கீடு மட்டும் தான். அதையும் இல்லாமலடிக்கத் தான் பாஜக நாசவேலையில எறங்கியிருக்கு.
(தொடரும்)
No comments:
Post a Comment