Thursday, October 30, 2025

பணம் பேசுறேன் (237)

 


ஆதிகாலத்துல அரசியல் கட்டணங்களுக்காகப் பயன்படுத்தப்பட்ட பொருட்கள் பரிமாற்ற ஊடகங்களாகவும், மதிப்புக்கான தர அளவுகோலாகவும் பயன்படுத்தப்பட்டுருக்கலாம்ணு பார்த்தோம். அரசியல் காரணிகளிலிருந்து பணம் தோன்றியதைப் பத்தி பொருளாதார அறிஞர் பால் எயின்சிக் இறுதியா என்ன சொல்றாருண்ணு இப்ப கேப்போம்.

9. அரசியலிலிருந்து பணத்தின் தோற்றம்:

“பெரும் எண்ணிக்கையிலான இனவியல் நிகழ்வுகள்ல, குறிப்பாக பசிபிக் பகுதியில, சில கட்டணம் செலுத்தும் வழிமுறைகள் நீண்ட காலமாக முக்கியமாக அரசியல் நோக்கங்களுக்காகப் பயன்பாட்டுல இருந்துருக்கு, ஆனால், அந்த கட்டணம் செலுத்தும் வழிமுறை வணிக நோக்கங்களுக்கும் ஏற்றதாக இருந்தாலும் கூட, வர்த்தகம் பெரும்பாலும் பண்டமாற்று மூலமா நடத்தப்படுது. இந்த உண்மையையும் மனசுல வெச்சுக்கனும். அதாவது, சம்பந்தப்பட்ட சமூகங்கள்ல வர்த்தகத்துக்கு பணப் பயன்பாடு தவிர்க்கமுடியாததாக மாறும் நிலையை இன்னும் எட்டவில்லை.

வணிகப் பரிவர்த்தனைகளில் பரிமாற்ற ஊடகம் அல்லது மதிப்பின் தர அளவுகோலுக்கானத் தேவை உணரப்படும் அளவுக்கு, அரசியல் கட்டணங்களுக்குப் பயன்படுத்தப்படும் அலகு குறைஞ்ச அளவுல பயன்படுத்தப்பட்டுருக்கு. அரசியல் கொடுப்பனவுக்கான அந்த அலகின் பயன்பாடு பொதுவானதாகவும் - அதன் வணிக பயன்பாடு குறைவாகவும் இருப்பது - அத்தகைய அலகுகளின் அரசியல் பயன்பாடு அவற்றின் வணிக பயன்பாட்டிற்கு முன்பே இருந்ததைக் குறிக்குது. எனவே, அரசியல் கட்டணங்களுக்குப் பயன்படுத்தப்படும் முறையில் வளர்ந்த பண அலகு இருந்தபோதிலும், வர்த்தகத்தின் பெரும்பகுதி பண்டமாற்று மூலம் நடத்தப்படும் சமூகங்களில், பணம் நிச்சயமாக அரசியல் தோற்றம் கொண்டது என்று கருதுவது நியாயமானது.

நாப்பின் கோட்பாடுல தெளிவற்ற முறையில் சுட்டிக்காட்டப்பட்டதிலிருந்து வேறுபட்ட வழியிலும் அரசியல் காரணி பணத்தின் தோற்றத்திற்கு பங்களிக்குது. சில சந்தர்ப்பங்களில், கட்டணம் செலுத்தும் அலகுகள், அரசியல் செல்வாக்கையும், கட்டுப்பாட்டையும் பாதுகாக்குறதுக்காக, அரசு அதிகாரத்தால் இல்லாம, தனியார் முயற்சியால் உருவாக்கப்பட்டதாகத் தெரியுது. நிச்சயமாக, அரசியலுக்கும், பிற காரணிகளுக்கும் இடையே ஒரு எல்லைக் கோட்டை வரைவது எளிதல்ல. ஆனால் ஓசியானியாவிலும், ஆஃப்ரிக்காவிலும் உள்ள சில சமூகங்களில் பணத்தின் தோற்றத்தில் முக்கிய பங்கு வகித்த ஆண்களின் சங்கங்கள் அல்லது ரகசிய சங்கங்களின் முதன்மை நோக்கம் அரசியல் அதிகாரத்தைப் பெறுவதாகும் என்று சொல்லமுடியும். அத்தகைய சமூகங்களில் தலைமைத்துவத்திற்கான தங்கள் வழியை வாங்குவதில் வெற்றிபெறும் உறுப்பினர்கள் அதன் மூலம் அரசியல் அதிகாரத்தை அடையுறாங்க.

நியூ ஹெப்ரைட்ஸ், வானிகோலோ-வுல, புகைபிடித்த இழை பாய்கள் முதன்மையாக ரகசிய சங்கங்களுக்கான சந்தா கட்டண வழிமுறையாக ஏற்றுக்கொள்ளப்பட்டன. அவற்றின் பிற பணச் செயல்பாடுகள், ஒப்புக்கொள்ளத்தக்க வகையில, குறைவாகவே உள்ளன. மறுபுறம், பேங்க்ஸ் தீவுகளின் கிளிஞ்சல்-பணம், முதலில் ரகசிய சங்கங்களுக்கான சந்தாவிற்காக மட்டுமே ஏற்றுக்கொள்ளப்பட்டது, பின்னர் அவை பரிமாற்ற ஊடகமாகவும் மதிப்பின் தர அளவுகோலாகவும் மாறியது.

நைஜீரியாவில் உள்ள ரகசிய சங்கங்கள் அம்பு போன்ற தலைகள் கொண்ட திருகாணி வடிவ இரும்புத் துண்டுகளை தங்கள் சொந்த செலவாணியாக (currency) ஏற்றுக்கொண்டன. இந்த செலவாணியும் ஓரளவுக்கு பரிமாற்ற ஊடகமாக மாறியது. ரகசிய சங்கங்கள் மிகவும் பழமையான நிறுவனமாக இருப்பதால், அவர்களின் சிறப்பு செலவாணிகள் (currencies)  சம்பந்தப்பட்ட சமூகங்களால் பயன்படுத்தப்பட்ட முதல் பண வடிவமாக இருக்கலாம்.”

(தொடரும்)

No comments:

Post a Comment

உலக சமத்துவமின்மை அறிக்கை 2026 (WIR 2026)

  உலக சமத்துவமின்மை ஆய்வகம் 2026ஆம் ஆண்டுக்கான உலக சமத்துவமின்மை அறிக்கையை வெளியிட்டுள்ளது. இதற்கு முன்  2018, 2022லும் உலக சமத்துவமின்மை அற...