Friday, October 31, 2025

சூதாடும் காட்டேரி (216):

 


வங்காளதேசம் நுண் நிதிக்கடனால எப்புடி பாதிக்கப்பட்டுச்சுண்ணு பாத்தோம். அடுத்ததா தென் அமெரிக்க நாடான கொலம்பியாவில் நுண் நிதிக்கடன் என்ன விளைவுகளை ஏற்படுத்துனுச்சு என்பதைப் பத்தி பொருளாதார அறிஞர் எரிக் துசைண்ட் என்ன சொல்றாருண்ணு இப்ப கேப்போம்.

நுண்கடன்-மைக்ரோ ஃபைனான்ஸ் திட்டவட்டமான உதாரணங்கள்:

கொலம்பியா: அரசு நுண்கடன் திட்டத்திற்கு கட்டமைப்பு ஆதரவை வழங்குகிறது:

கொலம்பிய, அமெரிக்க அரசாங்கங்களும், உலக வங்கியும், இன்டர்-அமெரிக்க மேம்பாட்டு வங்கியும் நுண்கடனை தொடங்கிவைத்ததுடன் தீவிரமாக, ஆதரித்தும், விரிவுபடுத்தியும் வருகின்றன. கொலம்பியாவில், மிகப்பெரும் அளவில் வேலைவாய்ப்புகளைத் தரும் நுண் நிறுவனங்களே, நுண்கடன் நிறுவனங்களின் முக்கிய இலக்குகளாக இருந்தன. 2014 ஆம் ஆண்டில், ஐந்து நிறுவனங்கள் 72% கடன்களைக் கட்டுப்படுத்துவதன் மூலம் இந்தத் துறையில் ஆதிக்கம் செலுத்தின. தலைமை நுண்கடன் வங்கியான பான்காமியா, ஸ்பெயினின் இரண்டாவது பெரிய தனியார் வங்கியான “BBVA” உடன் தொடர்புடையது. அரசு அவர்களுக்கு செயல்பாட்டு ஆதரவை வழங்குகிறது.

1996 ஆம் ஆண்டில், நுண்கடன் நிறுவனங்களுக்கான புதிய கடன்களுக்கான சந்தையில் 40% ஐக் கட்டுப்படுத்திய கார்போசோல் / ஃபினான்சோல் நுண் நிதி நிறுவனத்தின், விரிவான அதிகப்படியான வர்த்தகம் காரணமாக பொது நிதியால் பிணையில் எடுக்க வேண்டியிருந்தது. நுண்கடன் வங்கிகளின் மூத்த நிர்வாகிகள் பெரிய தனியார் வங்கிகளிலிருந்து, குறிப்பாக அமெரிக்காவின் சிட்டிபேங்க் போன்ற வங்கிகளிலிருந்து பணிக்கு அமர்த்தப்படுகின்றனர். கொலம்பிய அரசாங்கத்தால் மேற்கொள்ளப்பட்ட அனைத்து ஆய்வுகளும் நுண்கடன் துறையை வெற்றியாகக் காட்டுகின்றன. காரணம் எளிமையானது: இந்த மதிப்பீடுகள், பொருளாதார நடவடிக்கைகளில் அதன் விளைவுகள் குறித்து எந்த கவலையும் இல்லாமல், நுண்-நிறுவனங்கள் அமைப்புசாரா துறையை விட்டு வெளியேறும் அமைப்புசார் துறைக்கு மேம்படும் திறனைப் பார்க்காமல், மைக்ரோ-நிதித் துறையின் வளர்ச்சியை மட்டுமே கருத்தில் கொள்கின்றன. உண்மையில், கொலம்பிய மைக்ரோஃபைனான்ஸ், அமைப்புசாரா துறையில் உள்ள நுண்-நிறுவனங்களைத் தக்க வைத்துக் கொண்டுள்ளது, இதனால் அவை அதிக கடன் சுமையை நோக்கித் தள்ளப்படுகின்றன, இதன் விளைவாக வாராக் கடன் அதிகரித்துள்ளது.

2000களில் இருந்து, அரசாங்கம் முக்கிய வங்கிகளை நுண் நிதியில்-மைக்ரோஃபைனான்ஸில் முதலீடு செய்ய வற்புறுத்தியது. 2002க்கும் 2006 க்கு இடையில், கடன் திருப்பிச் செலுத்தாமை அல்லது நொடிப்புநிலை ஏற்பட்டால் பெரும்பாலும் பொது உத்தரவாதத்துடன் அவர்கள் ஆண்டுக்கு 1300 லட்சம் டாலர் முதலீடு செய்தனர். 2001க்கும் 2005க்கும் இடையில் அரசு உத்தரவாதம் அளித்த கடன் தொகுப்பு ஐந்து மடங்கு அதிகரித்தது. பின்னர் அரசாங்கம் மேலும் நுண்கடன்களை வழங்க முடிவு செய்தது, மேலும் 2006க்கும் 2010 க்கும் இடையில் 50 லட்சம் நுண் நிதிக் -கடன்களை இலக்காக நிர்ணயித்தது. இலக்கை தாண்டி, 61 லட்சம் கடன்கள் வழங்கப்பட்டன. 2010-2014 காலகட்டத்தில், சாதனை மீண்டும் முறியடிக்கப்பட்டது: அரசாங்கம் 77 லட்சம் நுண் கடன்களை எதிர்பார்த்திருந்தாலும், உண்மையான புள்ளிவிவரங்கள் 102 லட்சத்தைத் தொட்டன. இருப்பினும், வணிக விரிவாக்கம் வேலைவாய்ப்பின் தரத்தை மேம்படுத்த உதவவில்லை. 2006 ஆம் ஆண்டில், நுண் கடன் வங்கிகள் கொடுத்த அழுத்தம் அரசாங்கத்தை வட்டி விகிதங்களை அதிகரிக்க ஒப்புதல் அளிக்க வழிவகுத்தது. அங்கீகரிக்கப்பட்ட வட்டி விகிதங்கள் 22.6% முதல் 33.9% வரை இருந்தன.

2010 முதல், அதிகாரப்பூர்வ விகிதங்கள் மேலும் உயர்ந்து, 30-50% வரை ஊசலாடின. மேலும், ஒவ்வொரு 3 மாதங்களுக்கும் விலைக் குறியீட்டுடன் (indexation) மாறுபடும் விகிதங்களை அறிமுகப்படுத்த அரசாங்கம் அங்கீகாரம் அளித்தது. கொலம்பியாவில், நுண்கடன் விரிவாக்கம் அதிவேகமானது, 2002 இல் 1,360 லட்சம் டாலரிலிருந்து 2016 இல் 38,000 லட்சம் டாலராக அதிகரித்து, 28.1% ஆண்டு வளர்ச்சியைக் கொண்டிருந்தது. 2015 இல் தனிநபர் கடன்களைப் பொறுத்தவரை, அத்தகைய நுண்கடன்களில் 72% சட்டப்பூர்வ குறைந்தபட்ச ஊதியத்தை விட 1 முதல் 25 மடங்கு ஆக இருந்தது மீதமுள்ள 28% 25 முதல் 120 மடங்கு வரை ஏற்ற இறக்கமாக இருந்தது. 2015 இல், பங்குகளின் மீதான வருமானம் (ROE) அசாதாரணமானது: பான்காமியா 11.7% ஐ எட்டியது, மகளிர் உலக வங்கி-WWB 9.1%ஆகவும், பாங்கோ முண்டோ முஜெர் 21%ஆகவும் உயர்ந்திருந்தது உலகளவில் மிகவும் இலாபகரமான வங்கிகளில் ஒன்றான கோல்ட்மேன் சாக்ஸ்-ஐ  கூட இதற்கு நிகராக சொல்லமுடியாது!

நுண்கடன் துறையில் நிபுணத்துவம் பெற்ற கொலம்பிய வங்கிகள் உறுதியான இடத்தைப் பிடித்துள்ளதாகத் தோன்றினாலும், இந்தக் கடன்களைப் பெறும் மக்களுக்கும் நுண் நிறுவனங்களுக்கும் இது வேறுபட்ட சூழ்நிலையாகும். 32% வாடிக்கையாளர்கள் அதிகக் கடனில் உள்ளனர், மேலும் அவர்கள் தங்கள் கடன்களை மறுசீரமைப்பதற்காக கோரிக்கையிட வேண்டியிருந்தது, இது அடிப்படையில் கடனைத் திருப்பிச் செலுத்தும் காலத்தை நீட்டிப்பதைக் குறிக்கிறது. 2016-2017 ஆம் ஆண்டில் கொலம்பியாவில் பொருளாதார நிலைமை மோசமடைந்து வருகிறது, மேலும் கடன் வாங்குபவர்கள் அதிகமான அளவில் கடனைத் திருப்பிச் செலுத்தத் தவறி வருகின்றனர்.

(தொடரும்)

Thursday, October 30, 2025

பணம் பேசுறேன் (237)

 


ஆதிகாலத்துல அரசியல் கட்டணங்களுக்காகப் பயன்படுத்தப்பட்ட பொருட்கள் பரிமாற்ற ஊடகங்களாகவும், மதிப்புக்கான தர அளவுகோலாகவும் பயன்படுத்தப்பட்டுருக்கலாம்ணு பார்த்தோம். அரசியல் காரணிகளிலிருந்து பணம் தோன்றியதைப் பத்தி பொருளாதார அறிஞர் பால் எயின்சிக் இறுதியா என்ன சொல்றாருண்ணு இப்ப கேப்போம்.

9. அரசியலிலிருந்து பணத்தின் தோற்றம்:

“பெரும் எண்ணிக்கையிலான இனவியல் நிகழ்வுகள்ல, குறிப்பாக பசிபிக் பகுதியில, சில கட்டணம் செலுத்தும் வழிமுறைகள் நீண்ட காலமாக முக்கியமாக அரசியல் நோக்கங்களுக்காகப் பயன்பாட்டுல இருந்துருக்கு, ஆனால், அந்த கட்டணம் செலுத்தும் வழிமுறை வணிக நோக்கங்களுக்கும் ஏற்றதாக இருந்தாலும் கூட, வர்த்தகம் பெரும்பாலும் பண்டமாற்று மூலமா நடத்தப்படுது. இந்த உண்மையையும் மனசுல வெச்சுக்கனும். அதாவது, சம்பந்தப்பட்ட சமூகங்கள்ல வர்த்தகத்துக்கு பணப் பயன்பாடு தவிர்க்கமுடியாததாக மாறும் நிலையை இன்னும் எட்டவில்லை.

வணிகப் பரிவர்த்தனைகளில் பரிமாற்ற ஊடகம் அல்லது மதிப்பின் தர அளவுகோலுக்கானத் தேவை உணரப்படும் அளவுக்கு, அரசியல் கட்டணங்களுக்குப் பயன்படுத்தப்படும் அலகு குறைஞ்ச அளவுல பயன்படுத்தப்பட்டுருக்கு. அரசியல் கொடுப்பனவுக்கான அந்த அலகின் பயன்பாடு பொதுவானதாகவும் - அதன் வணிக பயன்பாடு குறைவாகவும் இருப்பது - அத்தகைய அலகுகளின் அரசியல் பயன்பாடு அவற்றின் வணிக பயன்பாட்டிற்கு முன்பே இருந்ததைக் குறிக்குது. எனவே, அரசியல் கட்டணங்களுக்குப் பயன்படுத்தப்படும் முறையில் வளர்ந்த பண அலகு இருந்தபோதிலும், வர்த்தகத்தின் பெரும்பகுதி பண்டமாற்று மூலம் நடத்தப்படும் சமூகங்களில், பணம் நிச்சயமாக அரசியல் தோற்றம் கொண்டது என்று கருதுவது நியாயமானது.

நாப்பின் கோட்பாடுல தெளிவற்ற முறையில் சுட்டிக்காட்டப்பட்டதிலிருந்து வேறுபட்ட வழியிலும் அரசியல் காரணி பணத்தின் தோற்றத்திற்கு பங்களிக்குது. சில சந்தர்ப்பங்களில், கட்டணம் செலுத்தும் அலகுகள், அரசியல் செல்வாக்கையும், கட்டுப்பாட்டையும் பாதுகாக்குறதுக்காக, அரசு அதிகாரத்தால் இல்லாம, தனியார் முயற்சியால் உருவாக்கப்பட்டதாகத் தெரியுது. நிச்சயமாக, அரசியலுக்கும், பிற காரணிகளுக்கும் இடையே ஒரு எல்லைக் கோட்டை வரைவது எளிதல்ல. ஆனால் ஓசியானியாவிலும், ஆஃப்ரிக்காவிலும் உள்ள சில சமூகங்களில் பணத்தின் தோற்றத்தில் முக்கிய பங்கு வகித்த ஆண்களின் சங்கங்கள் அல்லது ரகசிய சங்கங்களின் முதன்மை நோக்கம் அரசியல் அதிகாரத்தைப் பெறுவதாகும் என்று சொல்லமுடியும். அத்தகைய சமூகங்களில் தலைமைத்துவத்திற்கான தங்கள் வழியை வாங்குவதில் வெற்றிபெறும் உறுப்பினர்கள் அதன் மூலம் அரசியல் அதிகாரத்தை அடையுறாங்க.

நியூ ஹெப்ரைட்ஸ், வானிகோலோ-வுல, புகைபிடித்த இழை பாய்கள் முதன்மையாக ரகசிய சங்கங்களுக்கான சந்தா கட்டண வழிமுறையாக ஏற்றுக்கொள்ளப்பட்டன. அவற்றின் பிற பணச் செயல்பாடுகள், ஒப்புக்கொள்ளத்தக்க வகையில, குறைவாகவே உள்ளன. மறுபுறம், பேங்க்ஸ் தீவுகளின் கிளிஞ்சல்-பணம், முதலில் ரகசிய சங்கங்களுக்கான சந்தாவிற்காக மட்டுமே ஏற்றுக்கொள்ளப்பட்டது, பின்னர் அவை பரிமாற்ற ஊடகமாகவும் மதிப்பின் தர அளவுகோலாகவும் மாறியது.

நைஜீரியாவில் உள்ள ரகசிய சங்கங்கள் அம்பு போன்ற தலைகள் கொண்ட திருகாணி வடிவ இரும்புத் துண்டுகளை தங்கள் சொந்த செலவாணியாக (currency) ஏற்றுக்கொண்டன. இந்த செலவாணியும் ஓரளவுக்கு பரிமாற்ற ஊடகமாக மாறியது. ரகசிய சங்கங்கள் மிகவும் பழமையான நிறுவனமாக இருப்பதால், அவர்களின் சிறப்பு செலவாணிகள் (currencies)  சம்பந்தப்பட்ட சமூகங்களால் பயன்படுத்தப்பட்ட முதல் பண வடிவமாக இருக்கலாம்.”

(தொடரும்)

Wednesday, October 29, 2025

இந்திய சாதிய முதலாளித்துவத்தின் வர்க்கப்பகுப்பாய்வு (73)

 


1.சாதிய முதலாளி வர்க்கம்:

உலகெங்கும் உள்ள முதலாளித்துவ அரசுகள் உள்நாட்டு மக்களுக்கு விரோதமான புதுத் தாராளமயக் கொள்கைகளைத் தான் நடைமுறைப்படுத்திவருது. இதன் படி அந்நிய முதலீடுகளால் மட்டுமே  தொழில் துறை வளர்ச்சியை ஏற்படுத்தமுடியும் என்று நம்பவைக்கப்படுது. மூன்றாம் உலக நாடுகள்ல புதிய காலனியாதிக்க சுரண்டல் வடிவங்களாகவே பன்னாட்டு நிறுவனங்களும், அந்நிய முதலீடுகளும் எந்த கட்டுப்பாடும் இல்லாம பெருகி வருது. மத்தியில ஆட்சியில இருக்குற பாஜக இது வரை இல்லாத அளவுக்கு வெட்கங்கெட்ட முறையில அந்நிய முதலீடுகளுக்கான கட்டுப்பாடுகளை நீக்கி பல துறைகள்ல 100%  அந்நிய முதலீடுகளை ஆதரிச்சு வருது. தமிழ்நாட்டுலயும் மாறி மாறி ஆட்சிக்கு வர்ற கழகங்களும் இதே புது தாராளமய மாடலைத் தான் கடைபிடிக்குறாங்க, திமுக, அதிமுக ஆகிய இரண்டு திராவிட முன்னேற்றக் கழகங்களுக்கும் உள்நாட்டுல தொழில் வளர்ச்சியைப் பெருக்கி, வேலைவாய்ப்பின்மையைக் குறைப்பதற்கு எந்த தனித்துவமான பொருளாதாரக் கொள்கையும் இல்லை. அதுனால மாற்று நடைமுறைகள் என்ற பேச்சுக்கே இடமில்லாம போயிடுச்சு. பேருல திராவிட மாடல் என இருந்தாலும் அதன் உள்ளடக்கமாக இருக்கக் கூடியது புதிய தாராளமயக் கொள்கைகள் தான்.

இன்றைய சூழ்நிலையில அந்நிய முதலீடுகளை தவிர்க்கமுடியாது தான், ஆனா அதுக்காக உலகமெல்லாம் சுத்தி அந்நிய முதலீடுகளை ஈர்க்கவேண்டியது அவசியமா? 2015ல உலக முதலீட்டார் மாநாட்டை ஜெயலலிதா தொடங்கி வெச்சாங்க, இப்போ முதல்வர் மு.க.ஸ்டாலின் அதை தொடர்ந்து நடத்தி வர்றார். ஆனையை வித்து பூனைய வாங்குன கதையா, அரசு அந்நிய முதலீடுகளுக்கு இயற்கை வளங்களைத் தாரை வார்த்து எக்கச்சக்கமான சலுகைகளைக் கொடுத்தாலும் கூட அதன் மூலம் சொற்பமான வேலைவாய்ப்புகளை மட்டும் தான் உருவாக்கமுடிஞ்சுருக்கு. இங்க உள்ள பன்னாட்டு நிறுவனங்கள் மேல அரசு எந்த கட்டுப்பாடும் இல்லாத அளவுக்கு நெலைமை கைமீறிப் போயிடுச்சு. பன்னாட்டு நிறுவனங்கள்ல வேலைசெய்யுறவங்களுக்கு அடிப்படையான தொழிற்சங்க உரிமை கூட பறிக்கப்பட்டுருக்கு.

இந்த புதுத்தாராளமய கொள்கை நடவடிக்கைகள் எப்பேற்பட்ட விளைவுகளைத் தந்தாலும் அதை விமர்சனம் இல்லாம ஏற்றுக்கொள்ளும் கட்சிகளா தான் திமுக, அதிமுகவும் இருக்கு. பாஜகவைப் பத்தி சொல்லவே வேண்டியதில்ல.

உலகம் சுத்தி அந்நிய முதலீடுகளை வரவேற்பதற்கு பதிலா உள்நாட்டுல கூட்டுறவு முதலீட்டு வடிவங்களில் புதிய நிறுவனங்களை ஏற்படுத்துவதன் மூலம் தொழில்துறைகளை வளர்க்கமுடியும், இன்னும் கணிசமான எண்ணிக்கையிலான நபர்களுக்கு வேலைவாய்ப்புகளை கொடுக்கமுடியும். இதன் பலன்கள் அனைத்தும் உள்நாட்டு மக்களுக்கே கிடைக்கும். தமிழ்நாட்டுல விகிதாச்சார அடிப்படையில 3,327 மக்களுக்கு ஒரு கூட்டுறவு அமைப்பு செயல்படுது, கேராளாவில் 1,518 மக்களுக்கு ஒரு கூட்டுறவு அமைப்பு செயல்படுது. தமிழ்நாட்டை விட கேரளாவுல கூட்டுறவு அமைப்புகளின் எண்ணிக்கை கிட்டத்தட்ட 2.2 மடங்கு அதிகமா இருக்கு. தமிழ்நாட்டுலயும் எல்லா துறைகளிலும், எல்லா இடங்களிலும் அதிக எண்ணிக்கையிலான கூட்டுறவு அமைப்புகளை செயல்படுத்த ஆளும் கட்சிகள் முன் வரவேண்டும்.

கம்யூனிச ஆதரவாளராக இருந்ததால் தான் பெரியார் சோவியத் ரஷ்யாவுக்கு பயணம் மேற்கொண்டார். அதன் படி பெரியார் வழியில் நடந்திருந்தால் திராவிடக் கட்சிகள் சமூகநீதியின் பொருளை மேலும் விரிவுப்படுத்த முயற்சித்திருக்கவேண்டும். மக்களுக்கான பொருளாதாரக் கொள்கைகளுடன் சமூக நீதியின் பொருளை மேலும் விரிவுப்படுத்த முயற்சித்திருக்கவேண்டும். சரியான பொருளாதாரக் கொள்கைகள் இல்லாமல் சமூக நீதியை நடைமுறைப்படுத்தவே முடியாது. சரி சமூக நீதியின் பொருளை விரிவுபடுத்தலைனாலும் பரவாயில்ல, பெரியார் அளவுக்காவது சமூக நீதியை கடைபிடிச்சாங்களா, அதுவும் இல்லையே சமூக நீதியின் பொருளையே சுருக்கிட்டாங்களே. தங்களோட சந்தர்ப்பவாத அடையாள அரசியலுக்குத் தகுந்தாற் போல் சமூகநீதியை சுருக்குப்பையாக்கிட்டாங்களே. நானும் கம்யூனிஸ்டு தான், நான் மாஸ்கோவுக்குச் செல்வேன் மலென்கோவை சந்திப்பேண்ணு அண்ணா சொன்னாரு. ஆனா எல்லாம் பேச்சு மட்டும் தான் கொள்கை நடைமுறைகளுக்கு அவை வரவேயில்லை. அண்ணா ரெண்டு ஆண்டு தான் முதலமைச்சரா இருந்தாரு. அதுனால எல்லா பழியையும் அவர் மேல போடுறது அநியாயமாப் போயிடும். கலைஞரின் கம்யூனிச ஆதரவு என்பது தன் பிள்ளைக்கு ஸ்டாலின் என்று பேர் வைப்பதாகவும், கம்யூனிஸ்ட் கட்சிகளின் செல்வாக்கை ஒழிப்பதாகவும் தான் இருந்தது. மொத்தத்துல இடதுசாரி பொருளாதாரக் கொள்கைகளால் சமூக நீதியை முழுமையாக்காமல் ஊழல் மலிந்த முதலாளித்துவக் கட்சிகளாக வளர்ந்த திராவிட முன்னேற்றக் கழகங்களால் தமிழ்நாட்டு மக்களுக்கு சொல்லும் படியாகக் கெடைச்சது 69% இட ஒதுக்கீடு மட்டும் தான். அதையும் இல்லாமலடிக்கத் தான் பாஜக நாசவேலையில எறங்கியிருக்கு.

(தொடரும்)

Tuesday, October 28, 2025

சூதாடும் காட்டேரி (215)

 


உலக அளவுல மக்கள் நுண்கடன் வலையில எப்புடி சிக்கவைக்கப்படுறாங்க என்பதைப் பத்தியும் குறிப்பாக பங்களாதேசத்தைச் சேர்ந்த மக்கள் நுண்கடன் வலையில் மாட்டிக் கொண்டதைப் பத்தியும் பொருளாதார அறிஞர் எரிக் துசைண்ட் என்ன சொல்றாருண்ணு இப்ப கேப்போம்.

நுண்கடன் கட்டுக்கதை:

நுண்கடன் குறித்த ஏராளமான அனுபவ ஆய்வுகள், அது உண்மையில் அதன் வாடிக்கையாளர்களை வறுமையின் பிடியிலிருந்து விடுவிக்கவில்லை என்பதையேக் காட்டுகின்றன. நுண்கடன் அதன் பல பயனர்களை கடனில் தள்ளுகிறது, அதிக கடனில் கூட தள்ளுகிறது. இது நிறுவனங்கள் அமைப்புசார் துறையில் நுழைவதற்கான பாதையைத் திறக்காது. நுண்கடன் நிறுவனங்களிடமிருந்து கடன் வாங்கும் நுண் நிறுவனங்கள் அமைப்புசாரா துறையிலேயே உள்ளன. அரசு புதிய தாராளமயக் கொள்கைகளைப் நடைமுறைப்படுத்தும்போது, ​​உள்ளூர் கூட்டு நிறுவனங்கள் செழிக்க அனுமதிக்கவோ அல்லது சீரழிந்து வரும் அல்லது மறைந்து வரும் பொது சேவைகளுக்கு எந்த மாற்றையும் ஆதரிக்கவோ நுண்கடன் அனுமதிக்காது. உண்மையில், நுண்கடன் வறுமையை வளர்க்கும் வழிமுறைகளையே மீண்டும் உருவாக்குகிறது.

கடன்பட்டவுடன், மக்கள், பெரும்பாலும் பெண்கள், எளிதாக அப்புறப்படுத்தப்படலாம், தொழிலாளர் சந்தைக்குள் தள்ளப்பட்டு ஊதியம் பெறும் வேலையைத் தேட வேண்டிய கட்டாயத்துக்கு உட்படுத்தப்படலாம். இதனால் அவை வேலையில்லாத மக்களின் வளர்ச்சிக்கும், ஊதியத்தைக் குறைக்க அழுத்தம் கொடுப்பதற்கும் பங்களிக்கின்றன. பல சூழ்நிலைகளில், திருப்பிச் செலுத்துவதில் சிக்கல்களை எதிர்கொள்ளும் நுண்கடன் நிறுவனங்களின் வாடிக்கையாளர்கள் பாரம்பரியமாக வட்டிக்குக் கடன் கொடுப்பவர்களை நோக்கிச் செல்கின்றனர். இவர்கள் குறைவான நிபந்தனைகளை விதிக்கின்றனர், ஆனால் இன்னும் அதிக வட்டி விகிதங்களை வசூலிக்கின்றனர்.

நுண்கடன் திட்டவட்டமான உதாரணங்கள்:

வங்காளதேசம்: நுண்கடன் திட்டத்திற்கான முன்மாதிரியான உதாரணம்:

நுண்கடன் பரவலாகக் கிடைக்கும் நாடுகளில் ஒன்றான பங்களாதேஷ், 16 கோடி மக்கள்தொகையைக் கொண்டுள்ளது. 2015 ஆம் ஆண்டில், பங்களாதேஷில் 2.9 கோடி மக்கள் நுண்கடன் திட்டத்தை நாடினர், சராசரியாக €200 (17,000 டாக்கா, பங்களாதேஷின் நாணயம்) கடன் பெற்றனர். கடன் வாங்கியவர்களில் 80% க்கும் அதிகமானோர் பெண்கள். பங்களாதேசத்தின் டாக்காவில் உள்ள ஆக்‌ஷன் எய்டு நிறுவனத்தில் பணிபுரியும், “CADTM” இன் உறுப்பினராகவும் இருக்கும் அபுல் கலாம் ஆசாத் அளித்த சாட்சியம் பின்வருமாறு:

“நுண்கடன், அதன் “செவ்வியல்” அர்த்தத்தில், பல கடன் வாங்குபவர்களைக் கொண்ட ஒரு குழுவிற்கு சிறிய கடன்களை வழங்குவதைக் குறிக்கிறது. ஒரு கடனாளி குழுவில் 16 கொள்கைகளுக்கு உறுதியளிக்கப்பட்ட சுமார் 25-30 பேர் உள்ளனர் (கடன் வாங்குபவர்கள் கூட்டாகவும், அனைவரையும் உள்ளடக்கியதாகவும் ஒரு குழுவாக செயல்படுவதை உறுதிசெய்யும் நோக்கம் கொண்டது). ஒரு குழுவின் உறுப்பினர்கள் முதலில் ஒரு கூட்டு சேமிப்பு நிதியை உருவாக்கி, பின்னர் அந்த நிதியின் பலத்தின் அடிப்படையில் கடனுக்காக ஒரு நுண் நிதி நிறுவனத்திடம் விண்ணப்பிக்கிறார்கள். சமீபத்தில், நுண் நிதி நிறுவனங்கள் தனிநபர்களுக்கு கடன் கொடுக்கத் தொடங்கியுள்ளன. ஒரு தனிநபர் கடனுக்கு, கடன் வாங்குபவர் “ஒப்பந்தம் செய்யப்பட்ட தொகையில் 30% தொகைக்கு ஏஜென்சிக்கு உத்தரவாதம் வழங்க வேண்டும்.”

உண்மையான வட்டி விகிதங்கள் 35-50% வரை வேறுபடுகின்றன (அதிகாரப்பூர்வ கமிஷன்கள் உட்பட). இதன் விளைவாக, அத்தகைய விகிதங்களை செலுத்துவதில் உள்ள சிரமங்களைக் கருத்தில் கொண்டு, நுண்நிதி வாடிக்கையாளர்கள் சராசரியாக 3 நுண்கடன் நிறுவனங்களுக்குக் கடனாளிகளாக மாறுகிறார்கள். ஒரு கற்பனையான ஆனால் முற்றிலும் நம்பத்தகுந்த உதாரணத்தை எடுத்துக் கொள்வோம். அவர் (நுண்கடன் கடன் வாங்குபவர்களில் பெரும்பாலோர் பெண்கள்) கிராமீன் வங்கியிலிருந்து (தற்போது, ​​வங்கதேசத்தில் மூன்றாவது இடத்தில் உள்ள நுண்கடன் வங்கி) கடன் வாங்குவதன் மூலம் தொடங்குகிறார். அவர் சரியான நேரத்தில் திருப்பிச் செலுத்தத் தவறினால், கிராமீன் வங்கியிடம் கடனைத் திருப்பிச் செலுத்த “BRAC” (இது முதன்மையான நுண்கடன் அமைப்பு) யிலிருந்து கடன் வாங்குகிறார். “BRAC” அல்லது கிராமீண் கடனைத் திருப்பிச் செலுத்த முடியாமல், அவர் பின்னர் “ASA” (இரண்டாவது இடத்தில் உள்ள நுண்கடன் வங்கி) க்கு திரும்புகிறார். அவரால் மீண்டும் பணம் செலுத்த முடியாவிட்டால், அவர் தன் குடும்பத்துடன் தலைமறைவாகப் போக முடிவு செய்கிறார். குடும்பம் ஒரு கிராமத்தில் வாழ்ந்தால், யாருக்கும் முகவரியைக் கூட விட்டுவைக்காமல் வெளியேறிவிட்டு, குற்ற உணர்ச்சியுடன், பெரிய நகரத்தின் பெயர் தெரியாத இடத்திற்குச் செல்கிறார்கள். தலைநகரான டாக்காவில் 14.5 மில்லியன் குடியிருப்பாளர்கள் உள்ளனர், மேலும் பிற நகரங்களும் பெருகி வருகின்றன.

நுண்கடன் திருப்பிச் செலுத்தல்கள் பல சிரமங்களை உள்ளடக்கியது, கடனாளிகள் மிகுந்த மன அழுத்தத்திலும், அவமானத்திலும் வாழ்கின்றனர். அபுல் கலாம் ஆசாத்தின் கூற்றுப்படி: "திருப்பிச் செலுத்துவதில் உள்ள சிரமங்கள் கடன் வாங்குபவர்களின் குடும்பங்களுக்குள் பெரும் மன அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளன." பெரும்பாலான கடன் வாங்குபவர்களுக்கு நிலம் இல்லாததால், சொத்துக்களை அபகரித்தல் என்பது நிலம் அல்லது வீட்டை உள்ளடக்குவதில்லை: இது கடன் வாங்குபவர் நுண்கடன் நிறுவனத்துடன் அடமானம் வைக்க வேண்டிய 30% உத்தரவாதத்தைச் சுற்றி வருகிறது. நுண்கடன் நிறுவனங்கள் ஏன் 98%க்கும் அதிகமான மீட்பு விகிதத்தைக் கொண்டுள்ளன என்பதைப் புரிந்துகொள்வதில் இந்த மிக முக்கியமான காரணியை கவனிக்காமல் விடக்கூடாது. ஒரு சாத்தியமான கடன் வாங்குபவர் கடனில் 30% ஐ பிணையமாக டெபாசிட் செய்ய வேண்டும். திருப்பிச் செலுத்தத் தவறினால் நுண்கடன் அமைப்பு உத்தரவாதத்தின் மீதான உரிமையைப் பறிமுதல் செய்துவிடும் என்பதைக் குறிக்கிறது. உண்மையில், திருப்பிச் செலுத்தத் தவறினால் தங்கள் பிணையத்தை இழக்கும் ஏராளமான மக்களை வெளியேற்றுவதற்கான ஒரு தந்திரம் இது. இதன் விளைவாக, அவர்கள் அவதூறுகளிலிருந்து தப்பிக்க தங்கள் கிராமத்தை விட்டு வெளியேறுகிறார்கள்.

மேலும் ஒரு தெளிவுபடுத்தல்: பங்களாதேஷில், மூன்று பெரிய நுண்கடன் வங்கிகள் சந்தையில் 61%ஐக் கட்டுப்படுத்துகின்றன. நீங்கள் தலைநகரான டாக்காவிற்குச் சென்றால், பெரும்பாலான ஏடிஎம்கள் (தானியங்கி பணம் செலுத்தும் இயந்திரங்கள்) மூன்று முக்கிய வங்கிகளுக்குச் சொந்தமானவை என்பதை உங்களால் கவனிக்கமுடியும்.

(தொடரும்)

 

Monday, October 27, 2025

பணம் பேசுறேன் (236)

 


லாபத்தை எல்லாம் முதலாளிகளுக்கு அள்ளிக் கொடுக்குறதும், நட்டத்தையும், எல்லா இழப்புகளையும் சமூகத்தோட, மக்களோட தலையில கட்டுறதும் தான் முதலாளித்துவத்தின் எழுதப்படாத விதியா இருக்கு. ஆனா பழங்குடியின சமூகங்கள்ல இழப்பு  ஏற்படும் போது அதை மக்கள் எல்லாரும் சமமா பகிர்ந்துக்குறது தான் வழக்கமா இருந்துருக்கு. அரசியல் கட்டணங்களை செலுத்துறதுக்கான ஊடகங்களையே பின்னர் வணிகர்கள் பரிமாற்ற ஊடகமாகவும் பணமாகவும் பயன்படுத்திருக்கவும் வாய்ப்பு இருக்கு என்பதைப் பத்தி பொருளாதார அறிஞர் பால் எயின்சிக் சொல்றதை இப்ப கேப்போம்.

9. அரசியலிலிருந்து பணத்தின் தோற்றம்:

 “வேறொரு பழங்குடியினருக்கு கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும் போது, ​​அந்த  பழங்குடியினரால பரிந்துரைக்கப்பட்ட ஒரு குறிப்பிட்ட வடிவத்துல கட்டப்பட வேண்டியிருந்தது. இதுக்கு கட்டணம் செலுத்துறதுக்கான தரப்படுத்தப்பட்ட ஊடகங்கள் அல்லது குறைந்தபட்சம் ஒரு மதிப்பின் தர அளவுகோலுக்கு வழிவகுக்கும் மதிப்பீட்டுமுறையும், வசூலும் தேவையாக இருந்தது. ஒரு தலைவர் கொள்ளைப் பொருள் அல்லது கப்பத்தொகை அல்லது பிற பழங்குடியினரிடமிருந்து சேகரிக்கப்பட்ட மீட்கும் தொகையை விநியோகிக்கும்போது, ​​சமமான விநியோகத்தை உறுதி செய்யுறதுக்காக அவர் ஒரு மதிப்பின் தர அளவுகோலைப் பயன்படுத்த வேண்டியிருந்தது.

தலைவர்கள் தங்களோட சொந்த குடிமக்களுக்கு இடையிலும் அல்லது சொந்த குடிமக்களுக்கும் மற்றொரு பழங்குடியினக்கும் இடையிலும் கட்டணம் செலுத்துறதுக்கான பல்வேறு வகையான ஊடகங்களைப் பரிந்துரைச்சிருக்கலாம். மீட்கும் பணத்துக்காக நிர்ணயிக்கப்பட்ட பணம் செலுத்தும் வழிமுறைகள், குறிப்பாக இரத்தப் பணத்திற்காக நிர்ணயிக்கப்பட்ட பணம் செலுத்தும் வழிமுறைகள், பணத்தின் பரிணாமத்திற்கு ஒரு முக்கிய பங்களிப்பை வழங்குயிருக்கு என்பதை ஏற்கெனவே பார்த்தோம். மத்த பழங்குடியினரின் விரோத நடவடிக்கைகளால இழப்பைச் சந்திக்கிற பழங்குடியினருக்கு வழங்கப்படும் இழப்பீட்டை மதிப்பிடுறதுக்கான அவசியமும் இருந்துருக்கு.

டௌட்டியின் அரேபியா டெசர்ட்டா, ஒரு தாக்குதலில் ஒட்டகங்களை இழந்த பழங்குடியினருக்கு பழங்குடியினர் எவ்வாறு இழப்பீடு வழங்கினர் என்பதை விவரிக்கிறது. சேதம் எல்லா பழங்குடியினருக்கும் அவங்களோட உடைமைகளுக்கு விகிதாசாரமாக பரவியது, உடைமைகளில் மற்ற விலங்குகளும் இருந்திருக்கலாம் அதோட அது ஒட்டகங்கள்ல மதிப்பிடப்பட்டது.

இந்த எல்லா வகையான அரசியல் கட்டணங்களும் அல்லது அரசியல் ரீதியாக ஒழுங்குபடுத்தப்பட்ட ஒருதலைப்பட்ச கொடுப்பனவுகளும், ஒரு பண அலகின் பரிணாமத்திற்கு  கொஞ்சமும் குறையாத அளவுக்குப் பங்களிச்சருக்கனும். கட்டணம் செலுத்தும் வழிமுறைகள் தரப்படுத்தப்பட்டவுடன், பரிந்துரைக்கப்பட்ட பொருட்களைப் பெறுவதற்கான அல்லது அவற்றை கொடுப்பதற்கான தேவை, பண்டமாற்று பரிணாமத்திற்கு பெருமளவுல பங்களிச்சருக்கனும். வர்த்தகத்தில் ஈடுபடுறவங்க, பரிமாற்ற ஊடகம் அல்லது மதிப்பின் தர அளவுகோலுக்கான தேவையை உணர்ந்தால், அரசியல் கட்டணங்களின் நோக்கங்களுக்காக ஏற்கனவே பயன்பாட்டுல இருந்த பணத்தை மட்டுமே தங்கள் தேவைகளுக்குப் பயன்படுத்த வேண்டியிருந்தது.

தென்மேற்கு ஆஃப்ரிக்காவில், பெர்க்டாமா பழங்குடியினர், போதை தரும் மூலிகைகளால் செய்யப்பட்ட டக்கா கேக்குகளின் வடிவத்துல சான் பழங்குடியினருக்கு வருசா வருசம் கப்பம் கட்டியிருக்காங்க. இந்த நடைமுறையின் விளைவா, பெர்க்டா மாக்களிடையே பரிமாற்ற ஊடகமாக டக்கா கேக் மாறுனுச்சு. இதே போல பல நிகழ்வுகள் இருந்திருக்கனும். சில சந்தர்ப்பங்கள்ல, வணிகர்கள் தங்களோட சொந்த பயன்பாட்டுக்காக ஒன்றை உருவாக்குறதுக்கு ரொம்ப காலத்துக்கு முன்பே, பழங்குடி தலைமை வர்த்தக பரிவர்த்தனைகளுக்கான ஒரு கட்டண ஊடகத்தை நிர்ணயித்தது என்பது கருதக்கூடியது தான். ஒத்திவைக்கப்பட்ட விநியோகங்கள் ஏற்பட்டால், பயிர் விளைச்சல் பொய்க்கும் போதோ அல்லது பிற விபத்துகளின் விளைவாக, விநியோகம் சாத்தியமில்லைணா, கடப்பாடுகளை (liabilities) நிறைவேத்துறதுக்கான மாற்று வழியை சரிசெய்வது அவசியமாகக் கருதப்பட்டிருக்கலாம். இந்த கட்டத்துல அரசியல் கட்டணங்களுக்கான தரப்படுத்தப்பட்ட ஊடகங்கள் இருந்திருந்தா, அதுவே அரசியல் தலைமை வணிக கட்டணங்களுக்காக சமூகத்துல அதை ஏத்துக்கவெச்சதுக்குக் காரணமாக இருந்துருக்கலாம்.”

(தொடரும்)

பொம்மைகளின் புரட்சி (123)

  காலையில எல்லாருமே லேட்டா தான் எந்திரிச்சாங்க… இன்னிக்கு தாத்தா தான் பழக்கடைக்கு போகனும், அதுனால யம்மு பாட்டிக்கு உதவி பண்ணிக்கிட்டே   தாத்...