Thursday, July 31, 2025

பணம் பேசுறேன் (224)

 


பணத்தின் தோற்றம் பத்திய பால் எயின்சிக்கின் அஞ்சாவது கோட்பாடு, ஒத்திவைக்கப்பட்ட கொடுப்பனவுகளின் தரஅளவுகோலிலிருந்து பணம் உருவாகியிருக்கலாம்னு சொல்லுது. ஒத்திவைக்கப்பட்ட கொடுப்பனவுகள்னா என்னன்னு கேக்குறீங்களா? நீங்க கடையில ஒரு பொருளை வாங்கும் போது அந்த பொருளோட விலையை உடனடியா பணமா கொடுக்குறீங்க, ஒரு பொருளை விக்கும் போதும் பணத்தை வாங்கிக்கிட்டுத் தான் பொருளைக் கொடுக்குறீங்க. அதே பண்டமாற்றுல நடந்துச்சுன்னா வாங்கவேண்டிய பொருளுக்கு சமமான பொருளை விக்கிறீங்க இல்ல விக்கிற பொருளுக்கு சமமான பொருளை வாங்கிக்கிறீங்க, மேல சொன்ன பரிமாற்றங்கள்ல பொருட்களோட விலை கால இடைவெளி இல்லாம உடனடியா கொடுக்கப்படுது. இப்புடி இல்லாம  வாங்குன  அல்லது வித்த பொருளுக்கான விலையை உடனே கொடுக்காம அல்லது வாங்காம, கால தாமதமா கொடுக்கும் போது அல்லது வாங்கும் போது அதை ஒத்திவைக்கப்பட்ட கொடுப்பனவுகள்ணு (deferred payments) சொல்றோம். இந்த கோட்பாட்டைப் பத்தி பால் எயின்சிக் சொல்றதை இப்ப கேப்போம்.

ஒத்திவைக்கப்பட்ட கொடுப்பனவுகளின் தரஅளவுகோலிலிருந்து பணத்தின் தோற்றம்:

“ரொம்ப ஆரம்ப கட்டத்திலிருந்தே பழமையான சமூகங்களோட வாழ்க்கையில் ஒத்திவைக்கப்பட்ட கொடுப்பனவுகள் ஒரு முக்கியப் பங்கு வகிச்சுருக்கு. ஹில்டெபிராண்டின் கருத்துப்படி பரிணாம வளர்ச்சியில் மூன்று நிலைகள் இருந்தன - இயற்கை பொருளாதாரம், பணப் பொருளாதாரம் மற்றும் கடன் பொருளாதாரம் - என்பது முற்றிலும் தவறானது.

பணப் பொருளாதாரத்தின் நிலை எட்டப்படுறதுக்கு நீண்ட காலத்துக்கு முன்னாடியே கடன் மிகவும் விரிவான அளவுல இருந்துருக்கு. எந்தவொரு பரிமாற்ற ஊடகத்தின் தடயமோ அல்லது மதிப்பின் தரஅளவுகோலுக்கான தடயமோ கூட கண்டுபிடிக்கப்படாத சமூகங்களில் கூட பொருட்களை/பண்டங்களைக் கடன் கொடுக்குற பல இனவியல் நிகழ்வுகள் இருக்கு.

பணத்திற்கு முந்தைய கட்டத்தில் ஒத்திவைக்கப்பட்ட கொடுப்பனவுகள் உருவாகுவதற்கான காரணங்கள் பின்வருமாறு:

1.      பண்டமாற்று செய்யப்பட்ட பொருட்கள் அல்லது சேவைகளின் மதிப்பில் உள்ள முரண்பாடுகள்:

 வாங்குன பொருட்களோட மதிப்புக்கு தோராயமாக சம மதிப்புள்ள பொருட்களை உடனடியாகத் திருப்பிக் கொடுப்பது எப்போதுமே சாத்தியமில்ல, அதோட கொடுக்கவேண்டிய மிச்ச மதிப்பு எதிர்காலத்துல ஏதேனும் ஒரு தேதியில் கொடுக்கப்பட்டுருக்கும். இத்தகைய ஒத்திவைக்கப்பட்ட விநியோகங்கள் பொருட்களில் கடன்களை உருவாக்குகின்றன. பண்டமாற்று செய்யப்பட்ட பொருட்களின் மதிப்பில் தவிர்க்க முடியாத முரண்பாடுகள் இருந்தபோதிலும், பண்டமாற்று முறையைச் செயல்படுத்துறதுக்கு இதுபோன்ற பரிவர்த்தனைகளின் சாத்தியக்கூறு நீண்ட காலம் இருந்திருக்கனும். அதிகமாக மேற்கோள் காட்டப்பட்ட ஜே.எஸ். மில்லின் கற்பனை உதாரணத்தை எடுத்துக்கிட்டா, தையல்காரர்களும் ரொட்டி சுடுபவர்களும் பண்டமாற்று முறையில் ஈடுபட இது உதவுது, இருந்தாலும் எந்த தையல்காரரும் ஒரு கோட்டுக்கு ஈடாக கொடுக்கப்பட்ட அனைத்து ரொட்டிகளையும் ஒரே நேரத்தில் சாப்பிட முடியாது.

2. இயற்கை நிலைமைகள் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட விநியோகங்கள்: விவசாய சமூகங்களில் விதைகள் பெரும்பாலும் கடனா கொடுக்கப்பட்டது, அதோட அடுத்த அறுவடை பயிரிலிருந்து கடன் திருப்பிச் செலுத்தப்பட்டது. கொல்லர்களுக்கும், பிற கைவினைஞர்களுக்கும் அறுவடைக்குப் பிறகு கட்டணம் செலுத்தப்பட்டுருக்கு. அறுவடைகளுக்கு இடையில உணவுக் கடன் கொடுக்கப்பட்டது. வேட்டைக்காரர்களும், மீனவர்களும் பொருட்களைக் கடன் வாங்கி, தங்களால எப்ப வேலை செஞ்சு பொருள் ஈட்டமுடியுமோ அப்போ அவற்றைத் திருப்பிக் கொடுத்துருக்காங்க.

3. மீட்புத் தொகை, கப்பம், இரத்தப் பணம், மணமகள் பணம் போன்றவற்றைச் செலுத்த கடன்கள் கொடுக்கப்பட்டுருக்கு.

4. நீண்ட காலத்துக்கு முன்கூட்டியே வாடகைகள் பண்டங்களில் நிர்ணயிக்கப்பட்டுருக்கு."

 (தொடரும்)


Wednesday, July 30, 2025

இந்திய சாதிய முதலாளித்துவத்தின் வர்க்கப்பகுப்பாய்வு (57)

 

சாதிய முதலாளி வர்க்கம்:

வெளி நாட்டுல அதிக அளவுக்கு நேரடி முதலீடுகள் செஞ்ச முதல் பத்து முதலாளிகள்/நிறுவனங்களை ஏற்கெனவே பாத்துட்டோம். பதினொன்னாவது எடத்துல இருக்குறது அதானி. அதானி போர்ட் அண்ட் ஸ்பெஷல் எகனாமிக் ஸோன் லிமிடெட் என்ற தன்னோட நிறுவனத்தின் மூலமா சிங்கப்பூர்ல அதானி இண்டர் நேஷனல் ஹோல்டிங்க் பிடி இ லிமிடெட் என்ற துணை நிறுவனத்தை வெச்சிருக்காரு அதானி. இந்த நிறுவனத்துல 290 லட்சம் டாலர் முதலீடு பண்ணிருக்காரு.

இஸ்லாமியரை வெறுக்குற சங்கி முதலாளிகளுக்கு இஸ்லாமியர்கள் மூலமா கெடைக்கிற லாபம் மட்டும் இனிக்கத்தான் செய்யுது. அதுனால தான் சங்கி முதலாளி பாபா ராம்தேவ் வரி கட்டாம ஏய்க்குறதுக்காக தன்னோட பதஞ்சலி ஆயுர்வேத் லிமிடெட் நிறுவனத்தின் மூலமா யுனைடெட் அராப் எமிரெட்ஸ்ல ஆர்த் இன்வெஸ்ட்மெண்ட்ஸ் டி.எம்.சி.சி என்ற நிதி நிறுவனத்தை துணை நிறுவனமா வெச்சுருக்காரு. இதுல 1.75 கோடி டாலர் முதலீடு செஞ்சுருக்காரு.

பிராமண முதலாளி என் ஸ்ரீனிவாசன் தனக்கு சொந்தமான சென்னை சூப்பர் கிங்க்ஸ் கிரிக்கெட் லிமிடெட் நிறுவனம் மூலமா அமெரிக்காவுல சூப்பர் கிங்க்ஸ் இண்டர் நேஷனல் இங்க் என்ற துணை நிறுவனத்தை சொந்தமா வெச்சிருக்காரு. இதுல 35 லட்சம் டாலர் முதலீடு செஞ்சுருக்காரு.

பிராமண முதலாளி டி.எஸ் கல்யாணராமன் அய்யர் தன்னோட கல்யாண் ஜுவல்லர்ஸ் இண்டியா பிரைவேட் லிமிடெட் நிறுவனம் மூலமா அமெரிக்காவுல கல்யாண் ஜுவல்லர்ஸ் இங்க் என்ற துணை நிறுவனத்தை வெச்சுருக்கு. இதுல 60 லட்சம் டாலர் முதலீடு பண்ணிருக்காரு.

பஜாஜ் குழுமத்தோட முதலாளிகள் தங்களோட அஞ்சு நிறுவனங்கள் மூலமா வியட்நாமில் மூணு துணை நிறுவனங்களையும், பிரேசிலில் ரெண்டு துணை நிறுவனங்களையும் சொந்தமா வெச்சிருக்காங்க. இந்த அஞ்சு நிறுவனங்கள்லயும் மொத்தமா 171,200  டாலர் முதலீடு செஞ்சுருக்காங்க.

கள்ளம் சதீஷ் ரெட்டி தனக்கு சொந்தமான டாக்டர் ரெட்டிஸ் லேபரட்டரீஸ் லிமிடெட் நிறுவனம் மூலமா ரஷ்யாவுல டாக்டர் ரெட்டிஸ் லேபரட்டரீஸ் எல் எல் சி என்ற துணை நிறுவனத்தை வெச்சிருக்காரு. இதுல 55.251 லட்சம் டாலர் முதலீடு பண்ணிருக்காரு.

கிரந்தி மல்லிகார்ஜுன ராவ் உருவாக்குன ஜி.எம்.ஆர் குழுமம் ரெண்டு நிறுவனங்கள் மூலமா நெதர்லாந்துலயும், மொரிசியஸ்லயும் ரெண்டு துணை நிறுவனங்களை வெச்சிருக்கு. இதுல 7.8374 கோடி டாலர் முதலீடு பண்ணிருக்காங்க.

கோத்ரேஜ் குழுமம் தனக்கு சொந்தமான கோத்ரேஜ் & பய்ஸ் மேனுஃபேக்சரிங்க் கம்பெனி லிமிடெட் என்ற நிறுவனம் மூலமா அமெரிக்காவுல அர்பன் எலக்ட்ரிக் பவர் இன்கார்பரேட்டட் என்ற  கூட்டு நிறுவனத்தை வெச்சிருக்கு. இதுல 50 லட்சம் டாலர் முதலீடு செஞ்சுருக்கு.

ஹிந்துஜா குழுமம் தனக்கு சொந்தமான ஹிந்துஜா டெக் லிமிடெட் என்ற நிறுவனத்தின் மூலமா அமெரிக்காவுல ஹிந்துஜா டெக் இங்க் என்ற நிதி நிறுவனத்தை துணை நிறுவனமா வெச்சிருக்கு. இதுல 10 லட்சம் டாலர் முதலீடு பண்ணிருக்கு.

பார்லே பிஸ்கட்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் நேபாளத்துலயும், சிங்கப்பூர்லயும் ரெண்டு துணை நிறுவனங்களை வெச்சிருக்கு. இந்த நிறுவனங்கள்ல 23.854 லட்சம் டாலர் முதலீடு செஞ்சுருக்கு.

பயோகான் பயலாஜிக்ஸ் லிமிடெட் நிறுவனம் மூலமா கிரண் மஜும்தார் பயோகான் பயாலஜிக்ஸ் யுகே லிமிடெட் என்ற துணை நிறுவனத்தை வெச்சிருக்காரு. இதுல 3 கோடி டாலர் முதலீடு பண்ணிருக்காரு.

பிராமண முதலாளி அய்யர் கணேஷ் ரங்கநாதன் ஐக்கியமுடியரசுல ஜி.ஏ மல்டிலென்ஸ் லிமிடெட் என்ற கூட்டு நிறுவனத்தை வெச்சுருக்காரு.

(தொடரும்)

 


Tuesday, July 29, 2025

சூதாடும் காட்டேரி (199)

 

சி.ஏ.டி.டி.எம்- CADTM (Committee for the Abolition of Illegitimate Debt) என அறியப்படும் அநீதியான கடனை ஒழிப்பதற்கான குழுவிற்கான சர்வதேச வலையமைப்பின் செய்தித் தொடர்பாளராக பணியாற்றும் பொருளாதார அறிஞர் எரிக் துசைன்ட். கடன் வரலாற்றைப் பற்றி சிறந்த ஆய்வுக் கட்டுரைகளை வெளியிட்டுருக்காங்க. அவர் கடன் வரலாறு பத்தி சொன்ன முக்கியமான விசயங்களை இப்ப கேப்போம்.

“பழங்காலத்திலிருந்தே, சமூக உறவுகளில் தனியார் கடன் ஒரு முக்கிய பங்கை வகித்துள்ளது. பணக்காரர்களுக்கும் ஏழைகளுக்கும் இடையிலான போராட்டம், சுரண்டுபவர்களுக்கும் சுரண்டப்படுபவர்களுக்கும் இடையிலான போராட்டம், பெரும்பாலும் கடன் கொடுப்பவர்களுக்கும் கடனாளிகளுக்கும் இடையிலான மோதலின் வடிவத்தை எடுத்துள்ளது. கடன் தொடர்பான ஆவணங்களை (சிலேட்டுகள், பாப்பிரஸ், காகிதத் தோல், கணக்கு புத்தகங்கள், வரி பதிவேடுகள் போன்றவை) சடங்கு முறையில் அழிப்பதுடன், மக்கள் கிளர்ச்சிகளும் குறிப்பிடத்தக்க அளவுக்குவழக்கமான தன்மையுடன், அதே வழியில் தொடங்கியுள்ளன.

ஐரோப்பாவில், இடைக்காலத்தின் பிற்பகுதியில் தனியார் கடன் பிரச்சனை தீவிரமடைந்தது:

13 முதல் 14 ஆம் நூற்றாண்டுகளில் தொடங்கிய உறவுகளின் பணமாக்குதலின் காரணமாக, தனியார் கடனின் பிரச்சனைகள் அதிகரித்தன. இதன் பொருள், கட்டாய உழைப்பினாலும், பொருளாகவும் செலுத்தப்பட்ட வரிகள் படிப்படியாக பணத் தொகைகளாகக் கோரப்பட்டன. இதன் விளைவாக, விவசாயிகள், கைவினைஞர்கள் போன்றோர் வரிகளைச் செலுத்த கடன்பட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. மேலும் மேலும் அதிக அளவில் விவசாயிகளும், கைவினைஞர்களும், தொழிலாளர்களும் கடனைத் திருப்பிச் செலுத்த முடியாததால், அவர்களின் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டன, அவர்கள் வெளியேற்றப்பட்டனர் மற்றும்/அல்லது சிறையில் அடைக்கப்பட்டனர், மேலும் பலர் ஊனமாக்கப்பட்டனர்.

1339 ஆம் ஆண்டில், சியனாவில் (இத்தாலி) கடன் சுமை மிகவும் அதிகரித்தது, நகராட்சி அரசாங்கம் கடனுக்கான சிறைத்தண்டனையை ஒழிக்க வேண்டும் என்று கவுன்சிலுக்கு அறிவித்தது, தவறினால் கிட்டத்தட்ட அனைத்து குடிமக்களும் சிறையில் அடைக்கப்பட வேண்டியிருக்கும். பதினாறு ஆண்டுகளுக்குப் பிறகு, 1355 ஆம் ஆண்டில், சியனா மக்கள் கிளர்ச்சி செய்து, கணக்கு புத்தகங்களை வைத்திருந்த நகராட்சி அரண்மனையில் உள்ள பதிவு அறைக்கு தீ வைத்தனர். கடன்களைத் திருப்பிச் செலுத்த வேண்டியிருந்த, அவர்கள் அநீதியானதாக கருதிய அனைத்துத் தடயங்களையும் அழிக்க விரும்பினர்.

கடன் மூலமான சுரண்டலை நிராகரிப்பதன் முக்கியத்துவத்தின் மற்றொரு அடையாளம்:

14 ஆம் நூற்றாண்டின் இறுதியில், சியோம்பி - ஜவுளித் தொழிலில் பகல்நேரக் கூலிகள்-, தலைமையில் உழைக்கும் வர்க்கங்கள் ஃபுளோரன்சில் சிறிது நேரத்தில் ஆட்சியைப் பிடித்தபோது, அவர்களின் கோரிக்கைகளில் கடன்களைச் செலுத்தாததற்கான தண்டனையாக ஒரு கையை வெட்டுவதை நீக்குவதும், செலுத்தப்படாத கடன்களுக்கு இடைக்காலத் தடை விதிக்கப்படுவதும் அடங்கும். அரசாங்கத்தில் பிரதிநிதித்துவம் வேண்டும் என்றும் செல்வந்தர்களுக்கு அதிக வரிகள் விதிக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரினர். இதேபோன்ற நிகழ்வுகள் ஃபிளாண்டர்ஸ், வாலோனியா, ஃபிரான்ஸ், இங்கிலாந்து மற்றும் பிற இடங்களில் இதே காலகட்டத்தில் நடந்தன."

(தொடரும்)

 


Monday, July 28, 2025

பணம் பேசுறேன் (223)

 


ஆதி காலத்துலயும் பொருட்களா சேமிச்சுருக்காங்க, அதுனால சேமிக்குற வடிவம் தான் வேற, சேமிப்பதற்கான நோக்கம் எல்லாம் ஒன்னு தான்னு தவறா புரிஞ்சுக்கக் கூடாது. அன்றைய சேமிப்பு, இன்றைய சேமிப்பிலிருந்து வடிவத்துல மட்டும் வேறுபடல, நோக்கத்திலும் வேறுபடுது. ஆதிகாலத்துல நேரடி தேவைகளுக்காகத் தான் (ஆபரணத் தேவை உட்பட) பொருட்களை சேமிச்சு வெச்சாங்களே தவிர, அந்த பொருட்கள் மதிப்பை சேமிக்கிது அதுனால சேர்த்துவைக்கனும் என்பதுக்காக என்பதுக்காகவோ இல்ல சொத்து சேர்த்துவைக்கனும் என்பதுக்காகவோ இல்ல. திரும்பவும் சொல்றேன் ஆதிகால சேமிப்பு, நவீன கால சேமிப்பிலிருந்து அதன் வடிவத்தில் மட்டுமல்லாம அதன் சாரத்திலும், அதன் நோக்கத்திலும் முற்றிலுமா வேறுபடுது. மதிப்பை சேமிக்கும் செயல்பாட்டிலிருந்து பணம் எப்படி உருவாகியிருக்கலாம் என்பதைப் பத்தி பால் எயின்சிக் முடிவா என்ன சொல்லிருக்காருன்னு இப்ப கேப்போம்.

5. மதிப்பின் சேமிப்பிலிருந்து பணத்தின் தோற்றம்:

ஒரு பொருளை மதிப்பின் சேமிப்பகமாகத் தேர்ந்தெடுப்பதற்கான சூழ்நிலைகள், கொடுக்கப்பட்ட சூழ்நிலைகள்ல, பரிமாற்ற ஊடகமாக அதன் தேர்வுக்கு எதிராக செயல்படக்கூடும். எடுத்துக்காட்டாக, பல கிழக்கு ஆஃப்ரிக்க சமூகங்களில் கால்நடைகள் முக்கிய மதிப்பு சேமிப்பகங்களாக இருந்துருக்கு. ஆனால், கால்நடைகள் மிக அதிகமாக மதிப்பிடப்படுவதால், அவற்றின் உரிமையாளர்கள் அவற்றை பிரிந்து செல்ல முற்றிலும் தயங்குனாங்க. இதன் விளைவாக, இந்த அணுகுமுறை இருந்தபோதிலும் கால்நடைகள் மதிப்பின் தரஅளவுகோலாக இருந்தாலும், அவை பெரும்பாலும் பரிமாற்ற ஊடகத்தின் செயல்பாடுகளை போதுமான அளவு நிறைவேற்ற முடியாது, ஏன்னா அவை போதுமான அளவு கட்டில்லாத புழக்கத்துல இல்லை.

ஒரு பொருள் மதிப்பின் சேமிப்பகமாக இருந்ததிலிருந்து பணப் பயன்பாடு தோன்றிய சந்தர்ப்பங்களில் கூட, அத்தகைய பயன்பாடு மத பலிகள், அரசியல் கொடுப்பனவுகள், அலங்கார பயன்பாடு, சடங்கு செயல்பாடுகள் அல்லது மணமகள் பணத்திற்கான அதன் பயன்பாட்டில் இருந்து தோன்றியதா என்பதை ஆராய வேண்டியது அவசியம். அத்தகைய நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்படும் பொருட்கள் எதிர்பார்க்கப்பட்ட அல்லது எதிர்பாராத எதிர்காலத் தேவைகளைப் பூர்த்தி செய்ய வசதியாக சேமித்து வைப்பதற்கு ஏற்றதாக இருந்துருக்கு.

இருந்தாலும், மத, அரசியல் அல்லது திருமணத்துக்காக பயன்படுத்தப்பட்ட சில கட்டணம் செலுத்துவதற்கான ஊடகங்கள் சில சந்தர்ப்பங்களில், மதிப்பின் சேமிப்பகமாக செயல்படும் இடைநிலையைக் கடந்து செல்லாமலேயே, பரிமாற்ற ஊடகமாக அல்லது மதிப்பின் தரஅளவுகோலாக அவற்றைப் பயன்படுத்த வழிவகுத்துருக்கும் என்றும் கருதமுடியும்.

 பணத்தின் தோற்றம் பற்றிய மதிப்பின் சேமிப்புக் கோட்பாட்டில் குறைபாடுகள் இருந்தபோதிலும், அது சந்தேகத்திற்கு இடமின்றி உண்மையின் பெரும்பகுதியைக் கொண்டுள்ளது, மேலும் பணத்தின் பரிணாம வளர்ச்சியைப் புரிந்துகொள்வதற்கு இது இன்றியமையாதது. பணத்தின் சுற்றோட்ட செயல்பாடு மதிப்பின் சேமிப்பு செயல்பாட்டைக் குறிக்கிறது என்று ரிஸ்ட் கூறும்போது அது சரியானதுதான், "இரண்டும் ஒரு பதக்கத்தின் முன்பக்கத்தையும் பின்பக்கத்தையும் போலவே பிரிக்க முடியாதவை".ணு சொல்றாரு பால் எயின்சிக்.

 (தொடரும்)


Sunday, July 27, 2025

பொம்மைகளின் புரட்சி (108)

 


அட்லு தாத்தா: மஞ்சா, பிம்பா, பெப்போவுக்கு புது கூட்டாளி கெடைச்சிருக்குல்ல… தெனம் தெனம் விதம் விதமா வெளையாடுறாங்களே…

குக்குவோட அம்மா: குக்குவுக்கும் தான் புது கூட்டாளிகள் கெடைச்சிருக்காங்க, அவளுக்கு அங்க வெளையாட ஆளே இல்ல, நாங்க அவ கூட வெளையாடாம, நெறையா கதை சொல்லாம எப்ப பார்த்தாலும் வேலை பாத்துக்குட்டே இருக்கோம்னு எங்க மேல வருத்தமா இருந்தா….

யம்மு பாட்டி: அவங்க கூட வெளையாடி வெளையாடி நானும் அவரும் கூட விளையாட்டுப் பிள்ளைகளா ஆயிட்டோம்…

அட்லு தாத்தா: எல்லாத்துக்கும் மேல, தீபாவளி கொண்டாடிக்கிட்டு இருந்த இந்த வீட்டை புத்த பூர்ணிமா கொண்டாட வெச்சிங்க பாருங்க அதுக்கு நான் தான் ரொம்ப நன்றி சொல்லனும்…

குக்குவோட அப்பா: நாங்க தான் நன்றி சொல்லனும், ஒங்களை மாதிரி இவ்வளவு நல்லவங்க, இப்படி ஒரு புது சொந்தம் கெடைக்கும்னு நான் கனவுல கூட நெனைச்சுப் பாக்கல. அதான் நம்ம எல்லாரும் ஒன்னாயிட்டோமேப்பா, அதுனால நீங்க நன்றி எல்லாம் சொல்லக்கூடாது…

அட்லு தாத்தா: பேசிக்கிட்டே இருங்க டீ போட்டுட்டு வர்றேன்…

குக்குவோட அம்மா: கொழந்தைங்களா பறக்கும் பரிசை மறந்துடாதிங்க, அத தாத்தாவுக்கும், பாட்டிக்கும் சேர்த்து தான் கொடுத்துருக்கேன்… அவங்களும் படிக்கட்டும் சரியா….

மஞ்சா: சரி அத்தை

குக்குவோட அம்மா: வீட்டுக்குப் போலமா குக்கு

யம்மு பாட்டி: இருந்துட்டு போகட்டுமே, பெப்போ, மஞ்சாவுக்கு லீவு முடியுற வரைக்குமாவது இருக்கட்டும், அப்புறம் நாங்களே அவளை கொண்டு வந்து விடுறோம்…

குக்குவோட அம்மா: ஒருவேளை அவ வரனும்னு நெனைப்பாளோன்னு தான் கேட்டேன்… குக்கு நீ என்ன சொல்ற…

குக்கு: இருந்து வெளையாடிட்டு வர்றேம்மா

அட்லு தாத்தா: இந்தாங்க எல்லாரும் டீ குடிச்சிக்கிட்டே பேசலாம், கண்ணுங்களா வாங்க நீங்களும் குடிங்க…

குக்கு: அம்மா… இன்னைக்கு மட்டும் எங்க கூட வெளையாடிட்டுப் போங்களேன்…

குக்குவோட அம்மா: சரி, டீ குடிச்சுட்டு வெளையாடலாம் குக்கும்மா…

மஞ்சா, பெப்போ: வாங்க எல்லாரும் மொட்டைமாடிக்கு வெளையாட போகலாம்…

பிம்பா: இந்த வாட்டி எல்லாரும் ஒரே அணி தான், எல்லாரும் ரவுண்டா நின்னுங்க, இப்ப பாடி ஆடுவோம் சரியா…

லாலலா லாலலா லால லாலா

ஊரு சுத்தி பாக்கப்போறோம் ஏலோ ஏலேலோ

கட்டு சாதம் கட்டிப் போறோம் ஏலே ஏலேலோ

பசிக்கும் போது சாப்பிடுவோம் ஏலே ஏலேலோ

காடு, மலை பாக்கப்போறோம் ஏலே ஏலேலோ

ஏழு கடல் தாண்டிப் போவோம் ஏலே ஏலேலோ

பறவையோட பறந்துப் போவோம் ஏலே ஏலேலோ

மேகம் மேல மிதந்து போவோம் ஏலே ஏலேலோ

சூரியனை சுத்திப் பாப்போம் ஏலே ஏலேலோ

தாகம் வந்து தண்ணி தவிக்குமே ஏலே ஏலேலோ

மேகத்துல தண்ணி குடிப்போம் ஏலே ஏலேலோ

காத்துல மிதந்து கீழ வந்தோம் ஏலே ஏலேலோ

காட்டுக்குள்ள வந்து சேந்தோம் ஏலே ஏலேலோ

கரடிகளோட கதை கேட்டோம் ஏலே ஏலேலோ

குரங்குகளோட ஆட்டம் போட்டோம் ஏலே ஏலேலோ

பறவைகளோட பாட்டு பாடுனோம் ஏலே ஏலேலோ

அணில்களோட மரம் ஏறுனோம் ஏலே ஏலேலோ

பழங்கள் பறிச்சு கொறிச்சு திண்ணோம் ஏலே ஏலேலோ

முயல்களோட தாவிக் குதிச்சோம் ஏலே ஏலேலோ

மான்களோட ஓடி விளையாண்டோம் ஏலே ஏலேலோ

காட்டு சொந்தங்களை செல்லம் கொஞ்சுனோம் ஏலே ஏலேலோ

மின்மினிகள் கண் சிமுட்டுதே ஏலே ஏலேலோ

நட்சத்திரங்கள் கண்ணடிக்குதே ஏலே ஏலேலோ

காத்து, மரம் தாலாட்டுதே ஏலே ஏலேலோ

காட்டுத் தூக்கம் தூங்குறோமே ஏலே ஏலேலோ

(தொடரும்)


Saturday, July 26, 2025

இந்திய சாதிய முதலாளித்துவத்தின் வர்க்கப்பகுப்பாய்வு (56)

 

சாதிய முதலாளி வர்க்கம்:

ஜூன் மாத நிலவரப்படி இந்திய முதலாளிகள் வெளிநாடுகள்ல செஞ்ச நேரடி முதலீடுகளோட விவரங்களை தொடர்ந்து பாப்போம்.

 அதிக அளவுல நேரடி வெளிநாட்டு முதலீடுகளை செஞ்ச இந்திய நிறுவனங்கள்/முதலாளிகள் பட்டியலில் முதலிடத்தில் இருக்குறது கேரளாவைச் சேர்ந்த ஆஸாத் மூப்பன்ணு ஏற்கெனவே சொல்லியிருந்தோம்.

ரெண்டாவது எடத்துல குர்மித் சிங் சுக், புனிதா சர்மா இருக்காங்க. இந்த முதலாளிகள் தங்களுக்கு சொந்தமான இண்டெக்ரிஸ் ஹெல்த் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் மூலமா  எவர் லைஃப் ஹோல்டிங்க் பிடிஇ லிமிடெட் என்ற நிதி நிறுவனத்தை துணை நிறுவனமா சிங்கப்பூர்ல வெச்சிருக்காங்க. இதுல 3,714.705 லட்சம் டாலர் முதலீடு பண்ணிருக்காங்க.

மூணாவது எடத்துல அனில் அகர்வால் இருக்காரு. இவர் தன்னோட வேதாந்தா லிமிடெட் நிறுவனம் மூலமா ஸிங்க் வெஞ்சர்ஸ் லிமிடெட் என்ற நிதி நிறுவனத்தை துணை நிறுவனமா மொரிசியஸ்ல வெச்சுருக்காரு. இந்த நிறுவனத்துல 3,690 லட்சம் டாலர் முதலீடு பண்ணிருக்காரு.

எசமான் இனிமே வரி மோசடி பண்ணுறதுக்கு சிங்கப்பூர், மொரிசியஸுக்கெல்லாம் போகவே வேணாம். உங்களுக்காகத்தான் இந்தியாவுக்குள்ளயே வரிமோசடி பண்ணுற மாதிரி குஜராத் கிஃப்ட் சிட்டியை தொறந்துவெச்சுருக்கேன், அங்க நீங்க என்ன வேணாலும் பண்ணிக்கலாம்னு சொல்லிருக்காரு ந.மோடி. அதுனால இந்தியாவின் நிதிமுதலையான தேசிய பங்குச் சந்தை இந்தியா லிமிடெட் நிறுவனம் என்.எஸ்.இ ஐ.எஃப்.எஸ்.சி லிமிடெட் என்ற துணை நிறுவனத்தை குஜராத்ல உள்ள வரி மோசடிக்கான வரிப் புகலிடமான குஜராத் கிஃப்ட் சிட்டியில வெச்சிருக்கு. இதுல 3,292.306 லட்சம் டாலர் முதலீடு செஞ்சுருக்கு.

அஞ்சாவது எடத்துல இருக்குறது டாட்டா மோட்டர்ஸ் லிமிடெட். இந்த நிறுவனம் சிங்கப்பூர்ல டிஎம்எல் சிவி ஹோல்டிங்க்ஸ் பிடிஇ லிமிடெட் என்ற நிதி நிறுவனத்தை துணை நிறுவனமா வெச்சிருக்கு. இதுல 3288.189 லட்சம் டாலர் முதலீடு செஞ்சுருக்கு.

ஆறாவது எடத்துல இருக்குறது இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் லிமிடெட். இந்த நிறுவனம் நெதர்லாந்துல இண்டாயில் குளோபல் பி.வி என்ற விவசாயம் & சுரங்கத்துறை நிறுவனத்தை துணை நிறுவனமா வெச்சுருக்கு. இதுல 2949.956 லட்சம் டாலர் முதலீடு பண்ணிருக்கு.

ஏழாவது எடத்துல இருக்குறது அஸிம் பிரேம்ஜி. இவர் தனக்கு சொந்தமான விப்ரோ லிமிடெட் மூலமா அமெரிக்காவுல விப்ரோ எல்.எல்.சி என்ற நிதி நிறுவனத்தை  துணை நிறுவனமா வெச்சிருக்காரு. இதுல 2,400 லட்சம் டாலரை முதலீடு செஞ்சுருக்காரு.

எட்டாவது எடத்துல ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா இருக்கு. இது ஐக்கிய முடியரசுல ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (யுகே) லிமிடெட் என்ற துணை நிறுவனத்தை வெச்சுருக்கு. இதுல 2,277.445 லட்சம் டாலர் முதலீடு பண்ணிருக்கு.

ஒன்பதாவது எடத்துல இருக்குறது டாட்டா ஸ்டீல் லிமிடெட். இது சிங்கப்பூர்ல டி ஸ்டீல் ஹோல்டிங்க் பிடிஇ லிமிடெட் என்ற நிதி நிறுவனத்தைத் துணை நிறுவனமா வெச்சிருக்கு. இதுல 1,800 லட்சம் டாலர் முதலீடு செஞ்சுருக்கு.

பத்தாவது எடத்துல இருக்குறது ஹாங்காங்கைச் சேர்ந்த தி எக்சிக்யூடிவ் செண்டர் என்ற தாய் நிறுவனத்தோட துணை நிறுவனமான எக்சிகியூடிவ் செண்டர் ஆஃப் இண்டியா லிமிடெட். இந்த பன்னாட்டு துணை நிறுவனம் ஐக்கிய அரபு எமிரேட்ஸ்ல டெக் மேனேஜுட் சொலுயூசன்ஸ் ஹோல்டிங்க் லிமிடெட் என்ற நிதி நிறுவனத்தை துணை நிறுவனமா வெச்சிருக்கு. இதுல 827.852 லட்சம் டாலர் முதலீடு செஞ்சுருக்கு.

இதுவரைக்கும் இந்திய முதலாளிகள் அதிக அளவுல நேரடி வெளிநாட்டு முதலீடுகளை செஞ்ச முதல் பத்து துணை நிறுவனங்களை பாத்தோம். நாம பாத்ததுல, வெளிநாட்டுல உள்ள 10 துணை நிறுவனங்கள்ல 9 துணை நிறுவனங்கள் நிதி நிறுவனங்களா இருக்கு. துணை நிறுவனங்களா இருக்குற 7 நிதி நிறுவனங்களோட தாய் நிறுவனங்கள் நிதி நிறுவனங்களா இல்லை. வெவ்வேற தொழிலில் ஈடுபடுற 7 தாய்நிறுவனங்கள் வெளிநாடுகள்ல நிதிநிறுவனங்களை துணை நிறுவனங்களா வெச்சுருக்கு. இவை எல்லாமே இந்திய அரசுக்கு வரி கொடுக்காம ஏய்க்குறதுக்காக, வரி மோசடிக்காக உருவாக்கப்பட்ட துணை நிறுவனங்கள் தான்.

(தொடரும்)


Friday, July 25, 2025

சூதாடும் காட்டேரி (198)

 



இன்னைக்குள்ள முதலாளித்துவ அமைப்புக்குள்ளேயே எல்லாரும் பயனடையுற மாதிரியான ஒரு பொருளாதார மாதிரியா கூட்டுறவு முறையில் இயங்கும் நிறுவனங்கள் செயல்படுது. அது போல இன்னைக்குள்ள அநீதியான நிதியமைப்புக்குள்ளேயே நியாயத்தின் அடிப்படையில செயல்படுற ஒரு நிதியமைப்பா இஸ்லாமிய வங்கிகள் செயல்படுவது பாராட்டுக்குரியது. வட்டி வாங்காம கடன் கொடுத்து லாபத்தையும், நட்டத்தையும் பகிர்ந்துக்குற ஒரு நிதியமைப்பை கூட்டுறவு சார்ந்த ஒரு நிதியமைப்புன்னு தான சொல்லமுடியும்.

உலகளவுல முஸ்லிம் நாடுகள்ல தான் இஸ்லாமிய வங்கிகள் அதிகமா காணப்படுது. 1963ல எகிப்துல நிறுவப்பட்ட மிட்-கம்ர் சேமிப்பு வங்கி தான் முதல் இஸ்லாமிய வங்கி. இந்த வங்கி ரொம்ப எச்சரிக்கையுடன் செயல்பட்டுருக்கு. கடன் விண்ணப்பங்கள்ல 40%க்கு மட்டுமே ஒப்புதல் அளிச்சுருக்கு. பொருளாதார முனைப்பான காலங்களில், வங்கி கொடுத்த எல்லா கடன்களும் அடைக்கப்பட்டுருக்கு, வங்கியோட வாராக் கடன் விகிதம் பூஜ்ஜியமாக இருந்துருக்கு. அரசியல் காரணிகளால் மிட்-கம்ர் வங்கியை 1967ல மூடிட்டாங்க.

1975 ஆம் ஆண்டில், இஸ்லாமிய வளர்ச்சி வங்கி, இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பைச் சேர்ந்த உறுப்பு நாடுகளின் வளர்ச்சித் திட்டங்களுக்கு நிதி வழங்கும் நோக்கத்துடன் அமைக்கப்பட்டது. 1979 துபாய்ல நிறுவப்பட்ட துபாய் இஸ்லாமிய வங்கியை முதல் நவீன வர்த்தக இஸ்லாமிய வங்கியாகக் குறிப்பிடலாம். 1979ல சூடான்ல நிறுவப்பட்ட சூடானின் இஸ்லாமிய காப்பீட்டு நிறுவனம் தான் முதல் இஸ்லாமிய காப்பீட்டு (அல்லது தக்காஃபுல்) நிறுவனம். உலகின் முதல் இஸ்லாமிய பரஸ்பர நிதி (ஷரியா-இணக்கமான பங்குகளில் மட்டுமே முதலீடு செய்யும்) 1986ல அமெரிக்காவின் இந்தியானாவில் உருவாக்கப்பட்ட அமானா வருமான நிதி தான்.

கிரீன்விச் அறிக்கையின்படி, உலகளாவிய இஸ்லாமிய நிதித் துறையின் சொத்து மதிப்பு 2024 ஆம் ஆண்டில் சுமார் $5.4 டிரில்லியனாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுருக்கு. உலகளாவிய நிதி சொத்துக்களில் இஸ்லாமிய நிதிகளின் பங்கு 1%ஆக இருக்கு.

மொத்த இஸ்லாமிய நிதி சொத்துக்களில் 70% க்கும் அதிகமான பங்கைக் கொண்ட மிகப்பெரிய பிரிவாகவே இஸ்லாமிய வங்கிகள் இருக்கு.

உலகளவில் இஸ்லாமியக் கொள்கைகளைப் பின்பற்றும் 560க்கும் மேற்பட்ட வங்கிகள் உள்ளன. இதில் முழுமையான இஸ்லாமிய வங்கிகளும், ஷரியா-இணக்க சேவைகளை வழங்கும் வழக்கமான வங்கிகளும் அடங்கும். வழக்கமான வர்த்தக வங்கிகள் இஸ்லாமிய ஜன்னல்கள் மூலமா இந்த நிதிச்சேவையை வழங்குது. உலகளவுல 80க்கும் மேற்பட்ட நாடுகளில் 1,500க்கும் மேற்பட்ட இஸ்லாமிய நிதி நிறுவனங்கள் செயல்பாட்டுல இருக்கு. உலகளவில் 29 நாடுகளில் 345 இஸ்லாமிய நிதி நிறுவனங்களால் 1,508 இஸ்லாமிய பரஸ்பர நிதிகள் நிர்வகிக்கப்படுது.

1999 டவ் ஜோன்ஸ் ஷரியா-இணக்க திட்டங்களில் ஆர்வமுள்ள முதலீட்டாளர்களுக்காக அதன் இஸ்லாமிய சந்தை குறியீட்டை நிறுவியபோது, அது ஒரு புதிய வங்கிப் பிரிவின் வளர்ச்சியைக் குறிப்பதாக இருந்துச்சு. அமெரிக்காவுல LARIBA எனப்படும் ஷரியா-இணக்க நிதி நிறுவனம் உள்ளது. ஐக்கிய முடியரசும் இஸ்லாமிய வங்கியை நிறுவி, அதன் நிதிச் சந்தைகளில் இஸ்லாமிய கடன் பத்திரங்களை (சுகுக்)  வெளியிட்டுறுக்கு.

சீனா, ஆஸ்திரேலியா, ஜெர்மனி, லக்சம்பர்க் மற்றும் சுவிட்சர்லாந்து போன்ற பல நாடுகள் இஸ்லாமிய ஜன்னல்களைத் திறப்பதன் மூலமோ அல்லது ஷரியா-இணக்கமான நிதிகள், மற்றும் பத்திரங்களை அறிமுகப்படுத்துவதன் மூலமோ இஸ்லாமிய நிதிச்சேவையை வழங்குது.

இந்தியாவுல முஸ்லிம்களால் நடத்தப்படும் பல வட்டியில்லா நிதி நிறுவனங்கள் செயல்பாட்டுல இருக்கு.  இவை கூட்டுறவு சங்கங்கள் அல்லது பைதுல்-மால்கள் (பொது கருவூலங்கள்), சிறிய, பதிவு செய்யப்படாத, பரஸ்பர உதவி சங்கங்களாகவோ செயல்படுது. நகரங்களிலும் கிராமங்களிலும் பல பைதுல் மால் நிறுவனங்கள் செயல்படுது. தமீம் இம்பெக்ஸ், அசோசியேட்டட் இண்டஸ்ட்ரியல் கிரெடிட் சொசைட்டி, அல்-சிராத் முதலீடு & வங்கி, பைத்துன் நாசர் நகர்ப்புற கூட்டுறவு சங்கம் ஆகியவற்றை இஸ்லாமிய நிதி நிறுவனங்களுக்கு உதாராணங்களா குறிப்பிடலாம்.

1986ல பெங்களூருல தொடங்கப்பட்ட அல்-அமீன் இஸ்லாமிய நிதி, முதலீட்டு நிறுவனம் (இந்தியா) லிமிடெட் தான் இந்தியாவின் முதல் இஸ்லாமிய வங்கியா கூறப்படுது. இந்தியாவின் மத்திய வங்கியான ரிசர்வ் வங்கி வட்டி வசூலிக்காத வங்கிகளை அனுமதிப்பதில்லை. அதுனால நிறுவனங்கள் சட்டத்தின் கீழ நிதி நிறுவனமா இந்த இஸ்லாமிய வங்கி பதிவுசெய்யப்பட்டுருக்கு. இந்த வங்கி வாடிக்கையாளர்களிடமிருந்து வைப்புத்தொகையை சேகரித்து அதிலிருந்து கடன் கொடுக்குது. ஆனா இந்த வங்கியும் மத்த இஸ்லாமிய வங்கிகளைப் போலவே வட்டியை வாங்குறதும் இல்ல, கொடுக்குறதும் இல்ல.

இந்தியாவுல கேரளாவில் மட்டும் 200 சிறிய இஸ்லாமிய வங்கி நிறுவனங்கள் இருப்பதாகக் கூறப்படுது. இவை முஸ்லிம்களுக்கு மட்டும் இல்லாம எல்லாருக்கும் கடன் கொடுப்பவையா இருக்கு.

இந்தியா முழுவதும் பல மாநிலங்கள்ல சுமார் ரூ.75 கோடி வைப்புத்தொகை கொண்ட 10 முதல் 15 இஸ்லாமிய வங்கிகள் இயங்கி வருது. அவை உண்மையில் லாபம்/நஷ்ட அடிப்படையில் செயல்படும் வங்கி சாரா நிதி நிறுவனங்கள் (NBFC) தான். இஸ்லாமிய வங்கிகள் பெரும்பாலும் உள்ளூர் மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்பவையா இருக்கு.

(தொடரும்)

 


பொம்மைகளின் புரட்சி (123)

  காலையில எல்லாருமே லேட்டா தான் எந்திரிச்சாங்க… இன்னிக்கு தாத்தா தான் பழக்கடைக்கு போகனும், அதுனால யம்மு பாட்டிக்கு உதவி பண்ணிக்கிட்டே   தாத்...