இன்னைக்குள்ள முதலாளித்துவ அமைப்புக்குள்ளேயே எல்லாரும் பயனடையுற மாதிரியான ஒரு பொருளாதார மாதிரியா கூட்டுறவு முறையில் இயங்கும் நிறுவனங்கள் செயல்படுது. அது போல இன்னைக்குள்ள அநீதியான நிதியமைப்புக்குள்ளேயே நியாயத்தின் அடிப்படையில செயல்படுற ஒரு நிதியமைப்பா இஸ்லாமிய வங்கிகள் செயல்படுவது பாராட்டுக்குரியது. வட்டி வாங்காம கடன் கொடுத்து லாபத்தையும், நட்டத்தையும் பகிர்ந்துக்குற ஒரு நிதியமைப்பை கூட்டுறவு சார்ந்த ஒரு நிதியமைப்புன்னு தான சொல்லமுடியும்.
உலகளவுல முஸ்லிம் நாடுகள்ல தான் இஸ்லாமிய வங்கிகள் அதிகமா
காணப்படுது. 1963ல எகிப்துல நிறுவப்பட்ட
மிட்-கம்ர் சேமிப்பு வங்கி தான் முதல் இஸ்லாமிய வங்கி. இந்த வங்கி ரொம்ப
எச்சரிக்கையுடன் செயல்பட்டுருக்கு. கடன் விண்ணப்பங்கள்ல 40%க்கு மட்டுமே ஒப்புதல்
அளிச்சுருக்கு. பொருளாதார முனைப்பான காலங்களில், வங்கி கொடுத்த எல்லா கடன்களும்
அடைக்கப்பட்டுருக்கு, வங்கியோட வாராக் கடன் விகிதம் பூஜ்ஜியமாக இருந்துருக்கு.
அரசியல் காரணிகளால் மிட்-கம்ர் வங்கியை 1967ல மூடிட்டாங்க.
1975 ஆம் ஆண்டில், இஸ்லாமிய
வளர்ச்சி வங்கி, இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பைச் சேர்ந்த உறுப்பு நாடுகளின் வளர்ச்சித்
திட்டங்களுக்கு நிதி வழங்கும் நோக்கத்துடன் அமைக்கப்பட்டது. 1979 துபாய்ல
நிறுவப்பட்ட துபாய் இஸ்லாமிய வங்கியை முதல் நவீன வர்த்தக இஸ்லாமிய வங்கியாகக்
குறிப்பிடலாம். 1979ல சூடான்ல நிறுவப்பட்ட சூடானின் இஸ்லாமிய காப்பீட்டு நிறுவனம்
தான் முதல் இஸ்லாமிய காப்பீட்டு (அல்லது தக்காஃபுல்) நிறுவனம். உலகின் முதல்
இஸ்லாமிய பரஸ்பர நிதி (ஷரியா-இணக்கமான பங்குகளில் மட்டுமே முதலீடு செய்யும்) 1986ல
அமெரிக்காவின் இந்தியானாவில் உருவாக்கப்பட்ட அமானா வருமான நிதி தான்.
கிரீன்விச் அறிக்கையின்படி, உலகளாவிய இஸ்லாமிய நிதித் துறையின் சொத்து
மதிப்பு 2024 ஆம் ஆண்டில் சுமார் $5.4 டிரில்லியனாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுருக்கு. உலகளாவிய நிதி சொத்துக்களில் இஸ்லாமிய நிதிகளின்
பங்கு 1%ஆக இருக்கு.
மொத்த இஸ்லாமிய நிதி
சொத்துக்களில் 70% க்கும் அதிகமான பங்கைக் கொண்ட மிகப்பெரிய பிரிவாகவே இஸ்லாமிய
வங்கிகள் இருக்கு.
உலகளவில்
இஸ்லாமியக் கொள்கைகளைப் பின்பற்றும் 560க்கும் மேற்பட்ட வங்கிகள் உள்ளன. இதில் முழுமையான
இஸ்லாமிய வங்கிகளும், ஷரியா-இணக்க சேவைகளை வழங்கும் வழக்கமான வங்கிகளும் அடங்கும்.
வழக்கமான வர்த்தக வங்கிகள் இஸ்லாமிய ஜன்னல்கள் மூலமா இந்த நிதிச்சேவையை வழங்குது. உலகளவுல
80க்கும் மேற்பட்ட நாடுகளில் 1,500க்கும் மேற்பட்ட இஸ்லாமிய நிதி நிறுவனங்கள் செயல்பாட்டுல
இருக்கு. உலகளவில் 29 நாடுகளில்
345 இஸ்லாமிய நிதி நிறுவனங்களால் 1,508 இஸ்லாமிய பரஸ்பர நிதிகள் நிர்வகிக்கப்படுது.
1999ல டவ் ஜோன்ஸ் ஷரியா-இணக்க திட்டங்களில்
ஆர்வமுள்ள முதலீட்டாளர்களுக்காக அதன் இஸ்லாமிய சந்தை குறியீட்டை நிறுவியபோது, அது
ஒரு புதிய வங்கிப் பிரிவின் வளர்ச்சியைக் குறிப்பதாக இருந்துச்சு. அமெரிக்காவுல “LARIBA” எனப்படும் ஷரியா-இணக்க நிதி
நிறுவனம் உள்ளது. ஐக்கிய முடியரசும் இஸ்லாமிய வங்கியை நிறுவி, அதன் நிதிச்
சந்தைகளில் இஸ்லாமிய கடன் பத்திரங்களை (சுகுக்) வெளியிட்டுறுக்கு.
சீனா,
ஆஸ்திரேலியா, ஜெர்மனி, லக்சம்பர்க் மற்றும் சுவிட்சர்லாந்து போன்ற பல நாடுகள் இஸ்லாமிய
ஜன்னல்களைத் திறப்பதன் மூலமோ அல்லது ஷரியா-இணக்கமான நிதிகள், மற்றும் பத்திரங்களை அறிமுகப்படுத்துவதன்
மூலமோ இஸ்லாமிய நிதிச்சேவையை வழங்குது.
இந்தியாவுல முஸ்லிம்களால் நடத்தப்படும் பல
வட்டியில்லா நிதி நிறுவனங்கள் செயல்பாட்டுல இருக்கு. இவை கூட்டுறவு சங்கங்கள் அல்லது பைதுல்-மால்கள்
(பொது கருவூலங்கள்), சிறிய, பதிவு செய்யப்படாத, பரஸ்பர உதவி சங்கங்களாகவோ செயல்படுது.
நகரங்களிலும் கிராமங்களிலும் பல பைதுல் மால் நிறுவனங்கள் செயல்படுது. தமீம் இம்பெக்ஸ்,
அசோசியேட்டட் இண்டஸ்ட்ரியல் கிரெடிட் சொசைட்டி, அல்-சிராத் முதலீடு & வங்கி, பைத்துன்
நாசர் நகர்ப்புற கூட்டுறவு சங்கம் ஆகியவற்றை இஸ்லாமிய நிதி நிறுவனங்களுக்கு உதாராணங்களா
குறிப்பிடலாம்.
1986ல
பெங்களூருல தொடங்கப்பட்ட அல்-அமீன் இஸ்லாமிய நிதி, முதலீட்டு நிறுவனம் (இந்தியா) லிமிடெட்
தான் இந்தியாவின் முதல் இஸ்லாமிய வங்கியா கூறப்படுது. இந்தியாவின் மத்திய வங்கியான
ரிசர்வ் வங்கி வட்டி வசூலிக்காத வங்கிகளை அனுமதிப்பதில்லை. அதுனால நிறுவனங்கள் சட்டத்தின்
கீழ நிதி நிறுவனமா இந்த இஸ்லாமிய வங்கி பதிவுசெய்யப்பட்டுருக்கு. இந்த வங்கி வாடிக்கையாளர்களிடமிருந்து
வைப்புத்தொகையை சேகரித்து அதிலிருந்து கடன் கொடுக்குது. ஆனா இந்த வங்கியும் மத்த இஸ்லாமிய
வங்கிகளைப் போலவே வட்டியை வாங்குறதும் இல்ல, கொடுக்குறதும் இல்ல.
இந்தியாவுல
கேரளாவில் மட்டும் 200 சிறிய இஸ்லாமிய வங்கி நிறுவனங்கள் இருப்பதாகக் கூறப்படுது. இவை
முஸ்லிம்களுக்கு மட்டும் இல்லாம எல்லாருக்கும் கடன் கொடுப்பவையா இருக்கு.
இந்தியா
முழுவதும் பல மாநிலங்கள்ல சுமார் ரூ.75 கோடி வைப்புத்தொகை கொண்ட 10 முதல் 15 இஸ்லாமிய
வங்கிகள் இயங்கி வருது. அவை உண்மையில் லாபம்/நஷ்ட அடிப்படையில் செயல்படும் வங்கி சாரா
நிதி நிறுவனங்கள் (NBFC) தான். இஸ்லாமிய வங்கிகள் பெரும்பாலும் உள்ளூர் மக்களின்
தேவைகளைப் பூர்த்தி செய்பவையா இருக்கு.
(தொடரும்)

No comments:
Post a Comment